செவ்வாய், 15 அக்டோபர், 2013

ஏதோ எழுதுகிறேன்.
    நவராத்திரி நவ ராத்திரி மட்டுமல்ல, நவ பகல்லேயும் சுப்பு தாத்தா பிஸி.

    பிஸி அப்படின்னா கன்னட பிஸி இல்லை. கன்னடத்துலே பிஸி அப்படின்னா சூடா என்று அர்த்தம்.

    பிஸி பேளா ஹூளீ..  சூடான சாம்பார் சாதம்.

   சுப்பு தாத்தா எதுலே பிஸி அப்படின்னா,  எல்லா வலைகளிலும் பாடல்கள்.  எதைப் பாடறது, எதை விடறது
   அப்படின்னு திகைச்சுப்போய் இருந்துட்டாரு.
*****************************************************************************
    ஒரு பத்து வருசமா தமிழ் வலை உலகிலே நல்ல கவிதைகள், குறிப்பாக,  மரபுக் கவிதைகள் அதுவும் பொருள் சார்ந்த கவிதைகள் தென்படும்போது பாடாமல் இருக்க முடியாது.   இதுவரை சுமார் ஆயிரம் கவிதைகளுக்கு மேல் மெட்டு போட்டு எனது யூ ட்யூபில் இணைத்திருக்கிறேன் என்றால், அது எனது சாதனை இல்லை.  இந்தக் கவிதைகளை எழுதி என்னைப் பாட வைத்த கவிஞர்களையே அந்த பெருமை சாரும்.   தமிழ் வலையில் இதுவரை எனக்கு ஞாபகம் உள்ளவரை ஒரு இருபது முதல் இருபத்தி ஐந்து வலைப்பதிவாளர்கள் கவிதைகளும் இதில் அடக்கம்.

    அதற்காக, எங்கே பார்த்தாலும் என்ன புலவர் இராமானுசம் அல்லது கவிஞர் பாரதிதாசன் போல எல்லாரும் கவிதைகள் எழுத இயலுமா என்ன ?  இல்லை. அந்த அழகான தமிழ்ச் சொற்களுக்கென்றே ஒரு சுரங்கம் வைத்திருக்கும் சிவ குமாரன் போல் எழுத இயலுமா என்ன ?   
இன்று காலை வலைச்சரத்தில் நான் பாடி  ஒரு வினாயகன் பாடல் அவர் வலையில் ஈர்க்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. நான் எதிர்பாராத ஒரு பாராட்டு. ஈர்ப்பதற்கு காரணம் அப்பாடலின் பொருட்செறிவு.  கொஞ்சம் அந்த சிந்து பைரவி ராகம். அவ்வளவே.

    பாடல்கள், ஒரு சந்தம், எதுகை மோனை இவற்றிற்கு கட்டுப்பட்டு இருந்தால்,  மெட்டு போடுவது கொஞ்சம் சுலபம் தான்.  இருப்பினும் மரபு சாரா கவிதைகள் என்னவோ மனதை ஒரு பக்கம் இழுக்கத்தான் செய்கிறது.  இந்தக் கவிதைகளை சும்மா வார்த்தை ஜாலம் என்று ஒதுக்கித் தள்ள இயலுமா என்ன ?  சொல்ல வந்ததை ஒரு சுவையுடன் சொல் அலங்காரத்துடன் சொல்லும்
இக்கவிதைகளுக்கு பல உதாரணங்கள் சொல்ல இயலும் என்றாலும் மனதில் வருவது ரிஷபன் கவிதைகள், கிரேஸ், இளமதி, ஹேமா மற்றும் வேதா இளங்கா திலகம்,   ஒரு தடவை மகேந்திரன் என்று நினைக்கிறேன்.  அவரது கவிதைக்கு மெட்டு போட்டு விட்டு பாடிய பிறகு அதையே ஒரு வாரம் ஹம்மிங் செய்து கொண்டு இருந்தேன்.  தூத்துகுடியில் பிறந்து அமெரிக்காவில் ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி புரியும் திருமதி காட்டாறு அன்பு அவர்கள் கவிதை நான் அதற்கு இட்ட மெட்டு அது தான் தனக்குப் பிடித்தது இன்று வரை என்று என் மனைவி சொல்கிறாள். 

     இத்தனை கவிஞர்களில் ஓர் இருவரைத் தவிர வேறு எவர் முகமும் நான் அறியேன். நான் அறிவதெல்லாம் அவர் தம் கவிதைகள் தான். அவர் தம் தமிழ் உணர்வு தான்.

    இவற்றையெல்லாம் விட ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் தொடர்ந்து கடந்த பத்து வருடங்களாக பக்தி பாடல்கள், கவிதைகள்  எழுதும் கவி நயா அவர்கள் வலை என்னைப் பொருத்த அளவில் மதுரை மீனாட்சி கோவில் நடுவே அமைந்த பொற்றாமரை குளம் போல் .   1961 ம் வருடம் நான் வேலையில் சேர்ந்த போது மாலை வேளைகளை அந்தக் கோவில் தடாகப் படிகளிலே உட்கார்ந்து எனக்குத் தெரிந்த அம்மன் தோத்திரங்களை பாடி மகிழ்வேன். அப்போதெல்லாம் இப்போதைய கூட்டம் கிடையாது.    தினமும் நான் பாடும்பொழுது என்னைச் சுற்றி ஒரு பத்து பேர் உட்கார்ந்திருப்பர்.  அதுவே எனக்கு அந்த இறைவி அருள் போல புல்லரிக்கச் செய்துவிடும்.

    கவி நயா அவர்கள்  எழுதும் கவிதைகள் படிப்போர் நெஞ்சில் ஒரு ஆழ்ந்த ஆன்மீக உணர்வுகளை எதிரொலிக்கச் செய்வதில் சிறந்து விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது.  இவரது ஒரு எழு நூறு பாடல்களுக்கு மேல் நான் மெட்டு இட்டிருப்பேன் என நினைக்கிறேன்.  ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதத்தில் ஒரு புதுமையை ஒரு ஆன்மீக கருத்தினை,  உலகமெல்லாம் விரவிக்கிடக்கும் அவ்விறைவியின் சான்னித்தியத்தை வெளிப்படுத்துகின்றன.

ஒவ்வொரு நாளும் காலை எழுந்த உடன் கணினியைத் திறந்த உடனே நான் பார்ப்பது திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வலைதான்.  அதில் நான் கண்ணுறும் பல தோத்திரங்கள் நான் படித்தவை என்றாலும் அவைகள் என்னவோ என்னை உடனேயே அவற்றினைப் பாடிட என்னை உந்துகின்றன. அதுவும் அந்த இறைவன் கருணையே.இன்று கோவிந்தராஜ பெருமாள்  தரிசனம்.சீக்கிரம்  செல்லுங்கள்.


     அண்மையில் திருமதி பார்வதி இராமச்சந்திரன் கவிதைகளை நவராத்திரி சமயத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய இரு வலைகளுமே ஆலோசனை, தொகுப்பு என்ற பெயர் கொண்டவை.   அவற்றினைப்பார்த்த உடனேயே பாடவேண்டும் என்ற ஒரு உந்துதல் ஏற்பட்டது.  பாடிவிட்டேன்.

      மாரியம்மனைப் பற்றி ஒரு கிராமீய கவிதை நேற்று எழுதியிருக்கிறார்கள். 

     அதை நான் பாட நீங்கள் கேளுங்கள்.

    
   ஏதோ பாடுகிறேன்.  நான் ஒரு பாடகன் அல்ல.  எனக்கு நிறைவாக ஸ்ருதியோ, லயமோ, தாளமோ தெரியாது என ஒப்புக்கொள்வதில் ஒரு தயக்கமும் இல்லை.  இருந்தாலும் பாடுகிறேன்.

     என் பாட்டுக்களையும் யூ ட்யூபிலே இதுவரை ஒரு லட்சத்து அம்பதாயிரம் பேர் கண்டு இருக்கிறார்கள்.  அதை பெருமையை இந்த கவிதை எழுதியவர்களுக்கே நான் சமர்ப்பிக்கிறேன். 

7 கருத்துகள்:

 1. ரொம்ப நன்றி தாத்தா.. எவ்வளவு அருமையாகப் பாடி இணைத்திருக்கிறீர்கள்... இது என் கவிதைகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சிறந்த அங்கீகாரமாக நினைக்கிறேன்.

  தாங்கள் குறிப்பிட்ட கவிஞர்கள் அனைவரின் கவிதைகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். அவர்களது கவிதைகள் குறித்தும், திருமதி.கவிநயா அவர்களின் கவிதைகள் குறித்தும் தாங்கள் குறிப்பிட்டிருந்ததைப் படிக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, திருமதி.கவிநயா அவர்களின் ஆன்மீக கவிதைகள் குறித்து,

  //// கவி நயா அவர்கள் வலை என்னைப் பொருத்த அளவில் மதுரை மீனாட்சி கோவில் நடுவே அமைந்த பொற்றாமரை குளம் போல்//// என்றும்,

  ////கவி நயா அவர்கள் எழுதும் கவிதைகள் படிப்போர் நெஞ்சில் ஒரு ஆழ்ந்த ஆன்மீக உணர்வுகளை எதிரொலிக்கச் செய்வதில் சிறந்து விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது/// என்றும்

  குறிப்பிட்டிருப்பது அட்சர லக்ஷம் பெறும். பலமுறை இதை நான் உணர்ந்திருக்கிறேன். திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்களின் வலை குறித்து தாங்கள் சொன்னதையும் மகிழ்வாக ஆமோதிக்கிறேன்.

  மற்றவரை மனம் திறந்து பாராட்டுவது என்பது லேசுப்பட்ட காரியமில்லை. உங்களின் ஈடு இணையற்ற பெருந்தன்மை போற்றத்தக்கது. மிக்க நன்றி தாத்தா..

  பதிலளிநீக்கு
 2. ஐயா... வணக்கம்!

  உங்கள் திறமையை அறியாதார் உளரோ... இந்த வயதிலும் என்னமாதிரிப் பாடுகின்றீர்கள்...
  யூடியூப்பில் பெரும் சாதனையை நிகழ்த்திவிட்டீகளே!...
  அருமை! அருமை ஐயா!!..

  உங்களை நினைக்கையில் உள்ளம் பூரிக்கின்றது!.. உங்கள் மனங்களில் விற்றிருக்கும் இத்தனை ஜாம்பவான்களாகிய கவிஞர்களுடன் என்னையும் இணைத்து இங்கு குறிப்பிட்டதைப் பார்த்ததும் என் கண்கள் என்னும் குளம் அணைக்கட்டை உடைத்து வெள்ளம் பிரவாகமாக பெருக்கெடுத்துவிட்டது...

  உங்கள் குரலில் என் பாடல்களும் அமையப் பெற நான் என்ன தவம் செய்தேனோ...

  நீங்கள் என் கவிதைகளைப் பாடத்தொடங்கிய பின்னர் நான் எழுதும் ஒவ்வொரு தடவையும் உங்கள் நினைவும் வந்து என் மனதில் ஒட்டிக்கொள்ளும். கூடவே இந்தப் பாடலையும் எங்கள் சுப்பு ஐயா பாடுவாரோ என்று நினைக்கத் தவறுவதும் இல்லை...
  என் கவிதைகளைப் பாடலாக்கிய அத்தனையும் எனக்கு அந்த மெட்டும் பாடலும் மனதில் அப்படியே பதிவாகிவிட்டதையா... தனிமையில் என் ஹம்மிங்கில் உங்கள் குரலில் பாடிய இப்பாடல்கள் எப்பவும் இருக்கும்...

  நீங்கள் கூறிய கவிநயாவின் பாடல்கள் உண்மையில் அற்புதமானவைதான்! நானும் அவர் பக்கம் பார்த்திருக்கின்றேன்...
  இப்படி இன்று இந்த அருமையான பதிவில் ஏனைய பதிவர்களையும் ஊக்குவித்து புகழ்மாலை சூட்டியுள்ளீர்கள்.. உங்கள் பெருந்தன்மை கண்டு மகிழ்கின்றேன் ஐயா!

  அனைத்துக் கவிஞர்களும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  உங்களுக்கு என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கு என்றும் பணிவான வணக்கங்கள் ஐயா!..

  பதிலளிநீக்கு
 4. அன்பினிய தாத்தா, உங்கள் பதிவைப் படித்து எனக்குக் கண்ணீர்தான் வந்தது. இது வரையில் எழுதிய, கிட்டத்தட்ட எல்லாக் கவிதைகளுக்குமே நீங்கள் மெட்டமைத்துப் பாடித் தந்திருக்கிறீர்கள். முதன் முதலாக நீங்கள் பாடித் தந்த போது கிடைத்த மகிழ்ச்சியும், பெருமிதமும், இப்போதும் ஒவ்வொரு முறையும் கிடைக்கிறது. சில சமயம் நீங்கள் ஏதோ உடல் நலமின்மையால் பாடா விட்டால் கூட, அதை அறியாமல், 'அடடா, இந்தப் பாடல் தாத்தாவிற்குப் பிடிக்கவில்லை போல' என்ற ஏக்கம் ஏற்பட்டு விடும். கவிதைகளாக வாசிப்பதைக் காட்டிலும், அதே சொற்கள் பாடல் வடிவம் பெறும் போது அதன் தோற்றமே மாறி விடுவதை நன்கு உணர்ந்திருக்கிறேன். அதுவும் நீங்கள் பொருளுக்குத் தகுந்தாற் போல ராகம் அமைத்து, உங்கள் குரலிலும் அதற்கான உணர்வுகளைக் குழைத்து, அனுபவித்துப் பாடும் அழகே தனிதான். ஆயிரம் பாடல்கள் மெட்டமைத்துப் பாடுவது என்பது சாதாரண விஷயமில்லை. பலப்பல கவிஞர்களும் சுப்பு தாத்தா என்னுடைய பாடலைப் பாட மாட்டாரா என்று ஏங்கும் அளவிற்கு உங்கள் பணியைச் செய்து வருகிறீர்கள். நீங்கள் பாடுவதும், எழுதுவதும் எங்கள் அனைவருக்கும் உற்சாக டானிக் மாதிரி மேலும் எழுத ஊக்கம் தருகிறது. என்னுடைய புலம்பல்களையெல்லாம் அழகான பாடல்களாக்கித் தரும் உங்கள் அன்பிற்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய முடியும்? நீங்களும் பாட்டியும் இன்னும் நீண்ட நெடுங்காலம் ஆரோக்கியத்துடன் ஆனந்தத்துடன் வாழ நான் எப்போதும் வணங்குபவளை வேண்டிக் கொள்கிறேன். பாட்டிக்கும் உங்களுக்கும் என் பணிவன்பான வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் பாடித் தந்திருக்கும் பிற கவிஞர்களின் பாடல்களையும் (இப்போது பார்வதியின் மாரியம்மன் பாடலையும்) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேட்டு மகிழ்கிறேன். தாத்தா குறிப்பிட்ட அனைத்து கவிஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் அம்மன் பாடல் கேட்டேன். நன்றாக உள்ளது கேட்க.
  இத்தனை கவிஞ்சர்கள் வலைக்கு சென்று கவிதைக்கு மெட்டு போட்டு, பாடி, அப்லோட் செய்து.......மலைக்க வைக்கிறது உங்கள் திறமை......

  பதிலளிநீக்கு
 7. கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள். தங்களின் குரல் உலகெங்கும் பரவட்டும்

  பதிலளிநீக்கு