எல்லாமே சங்கீதம் தான் அப்படின்னு ஒரு சினிமா பாட்டு கேட்டு இருப்போம் இல்லையா.? சிந்து பைரவி படத்துலே...
அந்த எல்லாமே என்பது எதை குறிக்கிறது ?
கர்நாடக சங்கீதமா, கிராமியப் பாடல்களா, ஐரோப்பிய இசையா, ஆப்ரிகன் ம்யூசிக்கா, ராப்பா, பாப் ஆ ? குத்து பாட்டா ?
அப்படின்னு ஒரு பக்கம் சுவையான விவாதம் இருக்கிறபோது,
இன்னொரு கோணத்திலே பார்த்தேன்.
எல்லாமே அப்படின்னா,
வாழ்க்கையிலே , நமது அன்றாட வாழ்க்கையிலே நடக்கிற ஓடுகிற, உட்கார்ந்திருக்கிற விஷயம் எல்லாமே சங்கீதம் தான் அப்படின்னு நினைக்கிறேன்.
சங்கீதம் என்கிற சொல்லைப் பிரித்துப் பார்த்தா, சங் + கீதம் என்று பொருளாகும்.
சங் என்ற சொல்லுக்கு சேர்ந்து என்று பொருள்.
கீதம் என்ற சொல் பாட்டு
ஒருவரை ஒருவர் சேரும்போது வருவது சுகம். அது
தருவதெல்லாம் இன்பமயம். மன்னவன் வந்தானடி என மனதில் எழும் மின்னல்களை தோழியிடம் சொல்லும் காட்சி
இன்பத்திலே தான் சுகம் உண்டு என்பதில்லை. நம்மை உற்றவர் சார்ந்தவர் துயர் உறும்போது அவர்தம் துயரிலே பங்கு கொண்டு அவருக்கு உறுதுணையாய் இருப்பதும் சுகம் தான். வாழ்வின் பொருள் அது தான்.
ஒரு இரண்டு நாட்கள் முன்பு, மதிய வேளையில், மயிலையில் மாட வீதியில் இருபக்கமும் வண்ண வண்ண பொம்மைகள் நவ ராத்திரி விழா முடிந்தபின்னும் நூற்றுக்கணக்கில் ஜொலித்துக்கொண்டு இருந்தன. காந்தி, நேரு, பாபா மட்டுமன்றி, வாமணர், நரசிம்மர்,பரசுராமர், இராமர், கிருஷ்ணர், பரசுராமர், உள்ளிட்ட தசாவதாரமும் எந்த திசையில் எந்த வீட்டிற்கு போக வேண்டும், இனி தாம் அவதாரம் செய்யப் போகிறோம் என்று காத்திருந்தன.
கொலஸ்ட்ரால் பற்றி கவலையே படாத பானை வயிறு பாபுலர் செட்டியார் சின்னதாக பெரிதாக பல சைசுகளில் இருந்தார்.
ஒரு கணம் ஏதாவது வாங்கலாம் என்று நினைத்த நான் சரவணா பவன் போர்டு பார்த்த உடன் உள்ளே போய் சூடா ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டு பிறகு யோசிப்போம் என்று ஹோட்டல் படிகள் ஏறி உள்ளே நுழைந்தேன்.
மணி மூன்றை நெருங்கிய போதிலும் இன்னும் சாப்பாடு மேசைகளில் ஆங்காங்கே ஓரிருவர் இருந்தனர். இடது பக்கமாக டிபன் மேசைகள். மேசையின் ஒரு பக்கத்தில் இரண்டு பேர் என நாலு நபர் உட்காரும் அமைப்பு.
ஒன்றிண்டு மேசைகள் காலியாக இருந்தாலும், அதோ.. ஒரு வயதான தம்பதியர் ஒரு மேசையின் பக்கத்தில். என்னை வசீகரித்தனர். அவர்கள் எதிரே நானும் உட்கார்ந்தேன்.
எதிரே உட்கார்ந்து இருந்த வைஷ்ணவர். அதிக பட்சம் ஒரு அறுபது வயது இருக்கலாம். திவ்யமாய் நெத்தியில் தீர்க்கமாய் திருமண் . பக்கத்தில் அவர் பார்யாள். சாக்ஷாத் தாயாரைப் பார்ப்பது போல் அழகு, அமைதி, அடக்கம், அருள் அத்தனையும் ஒருமித்து அந்த அம்மா முகம்.
ஒரு விதமாக அந்த இருக்கையில் நான் செட்டில் ஆகும் நேரம்.
அதற்குள் எனக்கு என்ன வேண்டும் என்று ஆர்டர் எடுப்பவர் கேட்க ஒரு காபி கொடுங்கள், சக்கரை பாதி போடுங்கள் என்று சொன்னேன். அவர்களிடம் அந்த ஆர்டர் எடுப்பவர் எதுவும் கேட்கவில்லை. முன்னமேயே ஆர்டர் பண்ணி இருப்பார்கள் போலும்.
அப்பொழுது தான் கவனித்தேன். அந்த பெரியவரின் வலது கை நடுங்கி கொண்டு இருப்பதை பார்த்தேன். பார்க்கின்சன் சின்றோம் என்று உடனே புலப்பட்டது. மாமிக்கு நான் அவரை உற்று கவனிப்பது உறுத்தியது போலும் .
சட் என்று அவர் வலது கையை பிடித்து ஒரு நிலைக்கு கொண்டு வந்தார்.
சுப்பு தாத்தா சும்மா இருந்திருக்கலாம். ஏதோ அவர்கள் எனக்குத் தெரியாதவர்கள். நான் காபி சாப்பிட்டேனா, கிளம்பினேனா என்று என் காரியத்தைக் கவனித்து இருக்கலாம்.
என்ன மாமி, மாமாவுக்கு பார்கின்சனா, டோபா சாப்பிடுகிறாரா என்றேன். அப்பொழுது தான் அந்த மாமி என்னை ஒரு தீர்க்கமாக பார்த்தாள்.
எனது பார்வை மூலம் அவர்கள் என்ன புரிந்துகொண்டார்களோ, தெரியவில்லை. நல்ல வேளை. உங்களுக்கென்ன என்று பேச்சை முறிக்கவில்லை.
ம் என்று ஒரு எழுத்தில் மாமி பதில் சொல்ல, மாமா என்னைப் பார்த்தார். நான் அவரைப்பார்த்தேன்.
அவர் வலது கை கொஞ்சம் அதிகமாகவே நடுங்கியது. மாமி கைப்பையை திறந்து ஒரு டாப்லேட்டை எடுத்து அவர் வாயில் போட்டார். இத சாப்பிட்டு விடுங்கோ . கொஞ்சம் அஞ்சு நிமிஷம் கழிச்சு வடை வந்தப்பறம் கூட சாப்பிடலாம் என்கிறார்.
திஸ் இஸ் கில்லிங் மி என்று அவர் என்னிடம் அந்த நோயின் உபாதை பற்றி சொல்ல, நானோ, ப்ளீஸ் டோண்ட் ஒர்ரி. டென்சன் வில் அக்ரவேட் என்று எனக்குத் தெரிஞ்ச மெடிகல் ஞானத்தை வெளிப்படுத்த ...
உன்மையைச் சொல்லப்போனா....
.. எனக்கும் கொஞ்சம் டெந்சன் ஆனது. எழுந்து அந்த சர்வர் வரும் திசையை பார்க்கிறேன்.
ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி, எனக்கும் இது வரும்போல சில சிம்டம்ஸ் இருந்தது. டாக்டர் ஏ .வி. சீனிவாசனை விழ்ந்து அடிச்சுண்டு ஓடிப்பார்த்தது நினைவுக்கு வந்தது. இந்த பார்கின்சன் வருமோ என்பதற்கு ஒரு அஞ்சு அறிகுறிகள் . அதிலே மூன்றாவது இருந்தால் தான் பார்க்கின்சன். மத்ததெல்லாம் வெறும் ஆன்சைடி ப்ராப்ளம். என்று அவர் சொன்னதும் நினைவுக்கு வந்தது.
ம் என்றார் மாமா மாமியிடம். உருமினாரோ ??
சர்வர் ஏன் டயமாக்கிரார் என்று அந்த ம் க்கு அர்த்தம்.
இப்போது வந்துடுவா. பொறுத்துக்கோங்க. என்றாள் மாமி.
சர்வர் இப்போது வந்தார். மாமி முன்னால் சப்பாத்தி , மாமா முன்னால் ஒரு சாம்பார் வடை வைத்துவிட்டு போய் விட்டார்.
மாமி சப்பாத்தியை பிட்டு சாப்பிட ஆரம்பிக்க, மாமா, தன் வலது கையில் ஸ்பூனால் வடையை பிட்டு எடுக்கப் பார்க்கிறார். சிறிய துண்டு வடை ஸ்பூனில் நில்லாது தட்டில் விழுகிறது. திரும்பவும் எடுக்க பார்க்கிறார். கை நடுக்கத்தில் வடை ஸ்பூனில் வர முடியவில்லை.
யு கட் அனதர் ஸ்பூன். இன்னொரு ஸ்பூன் அந்த கையிலே வைத்து அதை தட்டில் அழுத்திக்கொண்டு , இந்த ஸ்பூ னால் எடுங்கள். என்றேன்.
மாமி என்னைப் பார்த்து விட்டு, அங்கு வந்த சர்வரிடம் இன்னொரு ஸ்பூன் என்றார்.
வந்த சர்வர் என்னிடம் காபியை வைத்துவிட்டு, ஸ்பூன் எடுக்க போனார்.
யாரிடம் வைத்தியம் பார்க்கிறீர்கள் என்று நான் தொடர்ந்தேன்.
அபாலோவில்..
யார் டாக்டர்... என்ன மருந்து...?
சொன்னார்கள். சரியான மருந்து தான். அவர்கள் சொன்ன மருத்துவரும் பிரபல நரம்பியல் நிபுணர் தான்.
இன்னொரு ஸ்பூன் வந்தது. ஒன்றை இடது கையில் வைத்து, அந்த கையால் வடையை எடுக்க முயற்சித்தார்.
இப்ப பரவா இல்லை. இருந்தாலும் அந்த துண்டு வடை வாயில் போவதற்கு அவர் பிரும்ம பிரயத்னம் செய்ய வேண்டி இருந்தது.
இந்த பக்கம் தான் இருக்கிறீர்களா... ? ஒரு சிநேக பாவத்துடன் வினவினேன்.
ஆமாம். இங்க அடுத்த வீதி தான்.
வேற யாரும் துணைக்கு இல்லையா... நீங்களே இரண்டு பேரும் வந்து சாப்பிடுகிறீர்கள்?
எல்லாம் இருக்கா. ஆனா வேணும்கறதை நேரத்துக்கு கொடுக்கணும் இல்லையா..
புரிந்தது. ஒரு கணம் மௌனித்தேன்.
இப்ப ஒரு வடை துண்டு அவர் கை நழுவி கீழே விழுந்தது. நல்ல வேளை . தட்டிலேயே விழுந்தது.
நீங்க அந்த ஸ்பூனை எங்கிட்டே கொடுங்கோ, என்று சொல்லி கணவரிடமிருந்து அந்த ஸ்பூனை வாங்கினார்.
அடுத்தடுத்து ஒரு இரண்டு மூன்று வில்லைகளாக, அந்த வடையை சாம்பாரில் நனைத்து அவர் வாயில் ஊட்டினார் மனைவி.
மாமா நான் என்ன சொல்லப்போகிறேன் என்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார் போல் தோன்றியது.
"மாமா. ஒண்ணும் பயப்படாதீங்க.. இது லைப் த்ரெட்டெனிங்க் கிடையாது. தொந்தரவு தான் ஜாஸ்தி. என்னோட மாமா ஒத்தர் , அவரே மைசூர்லே டாக்டர். அவருக்கே இது வந்து விட்டது. ஒரு இருபது வருஷம் அதோடயே தான் வாழ்ந்தார்." என்றேன்.
ஏன் இருக்கோம் அப்படின்னு தோணறது . இருந்தால் நன்னா இருக்கணும். இரண்டாம் தடவையா பேசினார் மாமா.
மாமா, அப்படி நீங்க பேசக்கூடாது .நான் உங்களை விட பெரியவன் . ஒன்னு சொல்ரேன் கேளுங்கோ. நீங்க உங்களோட நினைப்ப கொஞ்சம் டிபரண்டா மாத்திக்கோங்க. இப்படி நினைச்சுப்பாருங்கோ." நான் புண்யம் பண்ணி இருக்கேன் . அதுனாலே தான் இந்த மாதிரி பார்யாள் கிடைச்சிருக்கா. ராமனுக்கு சீதா பிராட்டி மாதிரி . அவ இருக்கும்போது எனக்கென்ன கவலை ?ஐ ஆம் ஒ கே என்று ஆடோ சஜஷன் சொல்லிக்கொள்ளுங்கள். "?
எங்க டாக்டர் மாதிரி நீங்களும் பேசறீர்.. அவஸ்தைப் படறது பொறுக்கமுடியவில்லையே..ஸ்வாமி...
"தட் இஸ் ஹிஸ் கன்செர்ன் . நான் மேலே கையை உசத்தி காமிச்சேன்."எல்லாம் பெருமாள் பார்த்துப்பார். கவலைப் படாதீர்கள். ."
உங்க ஆசிர்வாதத்திலே தான் அது நடக்கணும். ஆனா எனக்கு ஒரே கவலை தான்.. இப்ப அந்த அம்மா பேசினாள்.
நான் அந்த அம்மா முகத்தை பார்த்தேன்.
நீங்க சொல்ற பெருமாள் என்னை முன்னாடி கொண்டு போயிடக்கூடாது.
இவர் இருக்கற வரைக்குமாவது நான் இருக்கணும். நீங்க அந்த ஆசிர்வாதம் பண்ணுங்கோ என்றாள்.
நம்ம தர்மத்திலே அது மாதிரி ஆசிர்வாதம் பண்ண முடியுமோ..யோசனை ஆயிடுத்து.
இரண்டு பேருமே நூறு வயசு இருப்பேள். பெருமாள் அனுக்ரஹம். என்றேன்.
என்ஆசிர்வாதத்தை காதில் வாங்கிகொண்டாளா எனத் தெரியவில்லை. அந்த மாமி தொடர்ந்தாள்.
ஆத்திலே புள்ளை, மாட்டுப்பொண் எல்லாம் இருக்கா. வேலைக்கு போறா இரண்டு பேரும்.
இதே சப்பாத்தி, வடை எல்லாமே ஆத்திலேயும் பண்ண முடியும் . ஆனா நேரத்துக்கு கிடைக்கணும் ஏதாவது சாப்பிட்ட பின் தான் டாப்லட் . இந்த சிச்ரூஷை நான் தான் செய்யணும். இங்கே வந்தால் தான் அது முடியும். .
சட சட அப்படி மாமி வார்த்தைகளை உதிர்த்தபோது அவர் கண்கள் பனித்தன. ஒரு க்ஷணத்தில் புடவைத் தலைப்பை எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டார்.
நாராயணா. நாராயணா.. என்றேன்.
அப்பாதுரை சார் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி எழுதிய கதை இங்கே கண் முன்னாடி வந்து நின்றது. அது டிபரண்ட் டைமன்சன்.
இன்னிக்கு கா லை லே சுந்தர்ஜி எழுதிய சுபாஷிதானிலே வால்மீகி எழுதிய இராமாயணம் அயோத்யா காண்டம் ஒரு ஸ்லோகம்.. அதைப் படிச்சேன்.
ஒரு ஸ்திரீக்கு கணவன் தான் எல்லாமே அப்படின்னு. அவனை உத்தேசித்துத் தான் எல்லாமே ..
அவர் மேற்கோள் காட்டிய ஸ்லோகமும் அர்த்தமும் இங்கே.
அந்த யுக தர்மம் வேற. இந்த யுகம் வேற தர்மம் வேற .யதார்த்தம் இன்னமும் வேற.
ஒரு மனைவிதான் தன் கணவனை ஆஸ்ரயிச்சு எப்போதும் இருந்தாகணும் என்று தான் இல்லை. ஒரு கணவனும் தன் இல்லாளின் உதவிகளை நம்பித்தான் இருக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் பலர் வாழ்க்கையில் உண்டாகின்றன.
ஆனா மனித நேயம் ஒன்று தான். அது யுகங்களுக்கு அப்பாலும் சத்யம்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அது தான் சங்கீதம்.
சேர்ந்து பாடும் கீதம்.
சுகமோ சோகமோ, சேர்ந்து அனுபவிப்பது.
அந்த சோகத்தின் சுகத்தை அதை உணர்ந்தவர் மட்டுமே எழுதமுடியும்.
படிக்கமுடியும். உணரமுடியும்.
சொன்னது கதை அல்ல. உண்மை சம்பவம்.
பின் வரும் இது வேறல்ல.
லதா மங்கேஷ்கர் பாடும் இந்த பாடலில் நடுவில் வரும் ஒரு சில வரிகள் படத்தில் வரும் இல்லாளின் மன நிலையை இந்த மண்ணின் பண்பினை பிரதி பலிக்கிறது.
chodke thuje koyee jannath na loom
there badhlE mein dhuniyaan ki daulath na loon.
உன்னைப் பிரிந்து எனக்கு ஒரு ச்வர்க்கமும் வேண்டாம்.
உனக்கு பதிலாக உலகின் எந்த செல்வமும் வேண்டாம்.
உன்னால் கிடைத்த இந்த உலகு.
இதில் கிடைக்கும் சுகம் எனக்கு சிருங்காரம் ஸ்வர்க்கம்.
ஐயா... உங்கள் பதிவு இன்று என்னை ஒருகணம் நிறுத்தி,... இருக்கின்றனர் இப்படியும் ......... போல் என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குஎன்ன ஒன்று.. வயது அவர்களைப்போல் இல்லை இங்கு... மிகக் குறைவுதான்..
நோய், மற்றும் பல விடயங்கள் இங்கு யாவும் வேறுவிதம்...
//ஒரு மனைவிதான் தன் கணவனை ஆஸ்ரயிச்சு எப்போதும் இருந்தாகணும் என்று தான் இல்லை. ஒரு கணவனும் தன் இல்லாளின் உதவிகளை நம்பித்தான் இருக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் பலர் வாழ்க்கையில் உண்டாகின்றன.//...
உண்மையான வரிகள் ஐயா... உன்னைபோல பலர் என எனக்கு உணர்த்திய சம்பவப் பகிர்வு.. நோய்வாய்ப் பட்ட துணையொடு அதன் துணை படும் துயரம்... சொல்லிலடங்காது...
எல்லாவற்றையும் இயக்குபவன் அங்கிருக்கும் (மேலே) அவனே!...
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்தும் என்ன!..
பதிலளிநீக்குவேர் என நீ இருந்தாய்!.. அதில் நான் வீழ்ந்து விடாமல் இருந்தேன்!..
- கவியரசர் கண்ணதாசன்.
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்!.. இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்!..
- வைரமுத்து
அன்பின் வழியது உயிர்நிலை!.. நல்ல பதிவு!..
பார்கின்சன் இருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அவஸ்தை அது. நீங்கள் அவருக்குச் சொல்லியது பாஸிட்டிவ் அப்ரோச். எல்லாமே சங்கீதம்தான் என்று ஆரம்பித்ததும் எனக்கு ஒரு வடிவேலு ஜோக் நினைவு வந்தது. பதிவு முழுதும் படித்தபின் அதைச் சொல்ல எனக்கு மனம் வரவில்லை.
பதிலளிநீக்குஅந்த சோகத்தின் சுகத்தை அதை உணர்ந்தவர் மட்டுமே எழுதமுடியும்.
பதிலளிநீக்குபடிக்கமுடியும். உணரமுடியும்.
உண்மையை உரக்க இசைக்கும் சங்கீத வரிகள்...!
மிகவும் அருமையான பதிவு... மக்களுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லை இது பற்றி இங்கே என்பதால் வெறும் நரம்புத் தளர்ச்சி தான் என்று உபசாந்திக்கு வைத்தியம் பார்த்துக் கொள்பவர்களே இங்கு அதிகம். சர்க்கரையும் ரெத்தக் கொதிப்பும் பரவலாக அறியப் படுவது போல் இன்னும் பார்க்கின்ஸன்ஸ் பிரபலம் ஆகவில்லை. என்ன செய்வது? அதுதான் அடினாதம் இந்த மாமாவை ஒத்தவர்களுக்கு!
பதிலளிநீக்குபதிவில் கொஞ்சம் நடுவில் மனதை நெகிழ வைத்தது என்பது உண்மை.
பதிலளிநீக்குஆனால் இறுதியில் ஒரு ரொமாண்டிக் பாடலுடன் முடித்து விட்டீர்கள்.
பார்க்கின்சன் உள்ளவர்களுக்கான வரப்ரசாதமாக வந்த இந்த கருவியை பார்த்தீர்களா? இந்த கம்பெனியின் சி இ ஓ ஒரு இந்தியர் என்பது நமக்குப் பெருமை!
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?v=fS01kn6YJ94
நான் அறிந்தவரை இந்த ஸ்பூனின் விலை $300 வரை என நினைக்கிறேன்.