ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

மயக்கமா வருதோ !!

ஒரு இரண்டு மணி நேரம் மனசுக்கு ஒய்வு கொடுக்கணும், உபயோகமா எதுனாச்சும் கத்துக்கணும் அப்படின்னு நினைத்த உடனே எனக்கு ஸ்வாமினி சொற்பொழிவு இன்று தான் என்று ஞாபகம் வந்தது.

அவசர அவசரமாக ஆடோ பிடித்துக்கொண்டு சரியான நேரத்துக்கு போய் சேர்ந்து விட்டேன்.

ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா அவர்களின் உபன்யாசம் நடந்து கொண்டு இருந்தது.  இடம்; பாண்டி பஜார் கேசரி பள்ளி.

உபதேச சஹஸ்ரீ என்னும் ஆதி சங்கரரின் அற்புத இலக்கிய படைப்பில் இருந்து மக்கள் உள நலம் அடைய , உள்ள அமைதி பெற என்ன வழி என்பதை சொல்லும் சொற்பொழிவு.

"ஆன்மா சூட்சுமம் ஆனது. ஆகையால் அது மனதுக்கும் சொல்லுக்கும்  அப்பாற்ப்பட்டது"

sookshmaikaagocharebhyascha na lipyatha ithi sruthe:(16-58)

உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த போது ,
பூஜை வேளையில் கரடி போல, செல் பெல் அடித்தது.
செல்லை ஆப் பண்ணி வைக்க மறந்து போய் விட்டேனே என்று என்னை நானே நொந்து கொண்டு
யார் எனப் பார்த்தால் என் இல்லத்தரசி தான்.

என்ன இருக்கும்? சாதராணமாக, நான் வெளியில் சென்றால், திரும்பி எப்போது வருவேன் என்றோ, சென்ற பின், எங்கே இருக்கிறீர்கள், எப்ப வருவீர்கள் என்று என்றுமே செல் அடித்து பேசாதவள்,

இப்போது செல் அடிக்கிறாள் என்றால் ஏதாவது மிக முக்கியமாக இருக்கும் என்று செல்லை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு  வெளியே சென்று,

என்ன விஷயம் !! என்று சன்னமா கேட்டேன்.

பெரிசா ஒண்ணும் இல்ல. நான் இப்ப சாப்பிடவேண்டிய பிளட் ப்ளசர் மாத்திரை ஒண்ணு கூட இல்ல. தீர்ந்து போச்சு. வாங்கிண்டு வாங்க..

சரி.. என்ன பேரு ?

தெரியாதே !

அந்த டாக்டர் சீட்ட எடுத்துப் பாரேன்.

டாக்டர் சீட்டா ? அப்படி ஒன்னு நான் பார்க்கவே இல்லையே...

எந்த டாக்டர் ன்னாவது நினைவு இருக்கா?

தெரியலையே !!  சித்ராவா, ஜெயச்சந்திரனா, ரங்கராஜனா ???

சரியாப்போச்சு.. உனக்கு இதெல்லாம் ஞாபகம் வெச்சுக்க முடியாதா ?
என்ன தான் அப்ப உனக்கு ஞாபகம் இருக்கு. சொல்லு..

நிசமாவே, எதோ நீங்க கொடுக்கறீங்க..நான் சாப்பிடறேன். அதத் தவித்து
மத்த எதுவுமே எனக்குத் தெரியாது.

அப்ப உனக்கு எது தான் நினைவு இருக்கு ?

தெரியல்லே..

நான் கேட்கறேன். சொல்லு.

சரி.

சூப்பர் சிங்கர்லே வைல்ட் கார்டு லே யாருக்கு ஒட் போட்டே ?


சௌம்யா, லதா, ஆனந்த், அரவிந்த், லக்ஷ்மி,

மண் வாசனை லே யாரு முதல் ஹீரோயின் ? கதா நாயகி ?

ஆனந்தி.

சரவணன் மீனாச்சி லே மீனாச்சி யா நடிக்கிறது யார்?

ரக்ஷிதா மகாலட்சுமி தினேஷ்.    இப்பதாங்க அவங்களுக்கு ரியல் லைப் லேயும் கல்யாணம் நடந்துச்சாம்.

விஜய் சேதுபதி நடிச்ச லேட்டஸ்ட் படம் என்ன ?

சேதுபதி.  

நயனதாரா, த்ரிஷா இப்ப வயசுலே  யாரு மூத்தவரு?

த்ரிஷா தான். 32 . சந்தேகம் இருந்துச்சுன்னா இங்கே பாருங்க. 

விஜய் டி.வி லே இப்ப ஒரு ஆங்கர் நடிகர் ஆராரு . அது யாரு ?

என்னங்க..இது கூட தெரியாதா...ம.க.ப .  நவரச திலகம் அப்படின்னு ஒரு படத்துலே . இங்கே பாருங்க.6  மணிலேந்து 11 மணி வரைக்கும் இந்த டி வில் அப்படி என்ன தான் சீரியல் பார்க்கிறே?

முதல்லே மண் வாசனை. அப்பப்ப பூவிழி வாசலிலே. அப்பறம் கல்யாணம் முதல் காதல் வரை. பின்னே சரவணன் மீனாக்ஷி, அதுக்குப்பறம் சூப்பர் சிங்கர்.
அதுக்கப்பறம் சீதையின் ராமன்.  

நடு நடுவே அட்வர்டைஸ்மென்ட் வருதே !!

அது வரும்போது தான் நான் பூஜை அறைக்கு போயி, ஸ்ரீ ராம ஜெயம் சாமிக்கு மணி அடிக்கிறது, 

மாத்திரை சாப்பிடறது,     ராத்திரி இட்லி, இல்லேன்னா  சப்பாத்தி அதெல்லாம்.நீங்க செஞ்சு கொடுக்கறது தானே !!

இதெல்லாம் தெரியுது. நீ சாப்பிடற B,P  மாத்திரை என்னனு தெரியாதா ?

அது உங்களுக்குத் தானே நினைவு இருக்கணும் !! உங்க டிபார்ட்மெண்ட் வேலைய என் தலைலே எதுக்காவ கட்டரீங்க...???

தலை சுற்றியது. கீழே விழுந்துவுடுவோமோ...!!
பக்கத்தில் இருந்த ஒருவர் பிடித்துக்கொண்டார்.

"உட்கார்ந்து பேசுங்க சார் ! மயக்கமா வருதோ !!" என்றார்.

மயக்கம் வந்தது.  ஆனால் இப்போ, தெளிந்து விட்டது 
கணவனின் கடமை என்ன என்று புரிந்தது.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் அளித்த வரம்.

கண்ணதாசன் எழுதிய அர்த்தம் புரிந்தது.
கண்ணதாசா !  யூ ஆர் ரியலி க்ரேட்.
****************************
************************
*****************
திடீர் என்று ஆஹா ! உபன்யாசம் கேட்க வந்ததை மறந்து போனோமே ! என்று ஹாலுக்கு உள்ளே நுழைந்தேன்.

ஸ்வாமினி அதே ஸ்லோகத்தில் தான் இன்னமும் வியாக்யானம் அளித்துக் கொண்டு இருக்கிரார்கள்.

:எது பரிசுத்த ஆன்மா வோ அது மனம், சொல், இவற்றிக்கெல்லாம் அப்பாற்பட்டது "என சொல்வதை 

மறுத்துப் பேசும் தர்க்க வாதிகள்  சொல்வர்: 

அப்படியானால், தளை என்று ஒன்றுமே இல்லாதபோது ஆன்மாவுக்கு விடுதலை என்பதே பொருள் அற்றுப்போகிறதே !!

அதற்கு பதில் சொல்லும் ஆதி சங்கரர்: 
"இந்த தளை என்பதே புத்தியின் பிரமை தான். இந்த பிரமை தனை விட்டு விலகுவதே ஆன்மாவுக்கு விடுதலை. 

saasthraanarthakyameva syanna budhdha bhranthirishyathe 
bandho mOkshas cha thannaasaha sa yathokthO na chaanyathaa. (16-59)

யூரேகா ! யூரேகா என்று சத்தம் போட்டுவிடுவேனோ என்று நினைத்தேன்.

அதற்குள் சொற்பொழிவு முடிந்து போக, எல்லோரும் கலைந்து போகத் துவங்கினர்.

எனது அருகில் ஒரு பெரியவர் இன்னொருவரிடம் சத்தமாக பேசிக்கொண்டு செல்கிறார்.

அசரீரி போல என் காதுகளில் பளிச் என்று விழுகிறது.

இந்த உடம்பு, வூடு, எல்லாமே தளை  அல்லது பிரமை என்று நிதர்சனமா தெரிந்தபின்னும் அது நோக்கித் தானே போய்க்கொண்டு இருக்கிறோம்.
இல்ல, அதுக்குள்ளே தானே உழன்று கொண்டு இருக்கிறோம் !!!

செல் அடித்தது.

வந்துகிட்டே இருக்கேன் என்றேன் சகதர்மிணியிடம்.

பந்தம், தளை இவற்றில் இருந்தெல்லாம்  விடுதலை ஆவது என்பதெல்லாம் !!! ஊஹூம். சான்சே இல்லை.    புதன், 17 பிப்ரவரி, 2016

சர்வ ரோக நிவாரணி

லொக் , லொக் என்ற இருமல் சத்தம் .

எங்கள் ஊர் பெரியார்  பூங்காவில் மாலை நேரத்தில்  வழக்கமாக நான் உட்காரும் என்  பெஞ்சுக்கு சற்று தூரத்தில் நான் வரும்போதே  கேட்டது. 

அந்த தொண்ணூறை த்தாண்டியவர் தான் வந்திருப்பார் என்று நினைத்தேன். 
சரிதான் ! அவர்தான். 

என்னைப் பார்த்த உடனே, இருமலைக் கட்டுப்படுத்திக்கொண்டு, 
"உங்களைத் தான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்" என்றார்.


"எதற்கு? இருமல் வைத்தியத்திற்கா ? " என்று கேள்வி கேட்க, 

"அதற்கும் தான்." என்று அவர் தொடருமுன், இன்னொரு நண்பர் எண்பதைக்  கடந்தவர், 

"உங்க வீட்டு எதிரிலேயே ஆயுர்வேத எக்ஸ்பர்ட் ஒருவர் இருக்கிறாரே " என்றார்.

"நான் அவர்கிட்டே கடந்த ஆறு மாசமா, தாளிசாதி, கதிராதி குடிகா, பங்கஜ கஸ்தூரி, ச்யவனப்ரகசாம் என்று பலதினுசா சாப்பிட்டு விட்டேன். இன்னும் தீர்ந்த பாடில்லை. ராத்திரி வந்தா ரொம்ப சிரமப் படுத்துறது !"

"ராத்திரி லே ஸ்ரமப்படுத்தறது வேற விஷயம் இல்லயோ ? !" என்றது பக்கத்தில், அறுபதை எட்டிப் பார்க்கும் இளவயசு .

"நீரும் உம ஜோக்கும் ! சற்று சும்மா கிடும். நீங்கள் சொல்லுங்கள் சார் " என்று என்னிடம் அவர் பிரார்த்திக்க, 

"சார் ! நீங்கள் எதற்கும் என் நண்பர் டாக்டர் விஸ்வநாதா அவர்களிடம் காண்பிக்கலாம். அவர் செஸ்ட் சம்பந்தமான் எல்லாத்துக்கும் அவர் அதாரிட்டி." 

"போன மாசம் அவர் கிட்ட போனேனே ! கொஞ்சம் சரியானப் போல இருந்த உடனே அவர் கொடுத்த மருந்தை எல்லாம் நிறுத்திட்டேன். "

"ஏன் நிறுத்தினீங்க?"

"முழங்கால் லே வலி . அதுக்காவ டாக்டர் ராமமூர்த்தி சார் கிட்ட போனேன்."

" போய் ?"

" அவரும் எக்ஸ் ரே.ப்ளட் ரிபோர்ட் எல்லாம் எடுத்தப்பறம் உங்களுக்கு ஆஸ்டியோ போரோசிஸ் மாதிரி . வைட்டமின் டி கால்சியம் குறைவா இருக்கு. அதுக்கு டாப்லெட் தர்றேன். ஒரு மாசம் சாப்பிட்டு பாருங்கோ என்றார்."

"சரியாச்சா? "

"சரியானப் போல தான் இருந்தது. அதுக்குள்ளே பாருங்க.?

" என்னாச்சு !"

"என்னையே அறியாம, ஒரு நாளைக்கு லேசா மயக்கமா வந்துடுத்து. என்னெனே புரியல்லே. எல்லோரும் என்னை தூக்காத குறையா விஜயா ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போனாக.அங்கே..."

"அங்கே?"

"நாலு நாளைக்கு அது இது அப்படின்னு பதினெட்டு டெஸ்டு பண்ணிட்டு ஒரு லட்ச ரூபாய் பிடிங்கிட்டு பின்னே சொல்றாங்க:   பெரிய ப்ராப்ளம் ஒன்னும் இல்ல. மைல்ட் டயாபிடிஸ். அதுவும் டயாபெடிக் ஆவர அறிகுறி தான். டயட் லே அரிசி வேண்டாம். கோதுமை சாப்பிடுங்கோ சரியா ஆகிடும் அப்படின்னாங்க.."

"கரெக்ட் அட்வைஸ் தானே தந்தாங்க.."

"அன்னிலேந்து..சப்பாத்தி."

"சப்பாத்தியோட தொட்டுகரதுக்கு..?

"அதான் க்ராண்ட் ஸ்வீட்ஸ் லே தாரானே. குருமா.."

"என்னமா ரோல் பண்ணித் தரான் !! தினம் முப்பது சாப்பிடலாம். அத்தனை ருசி. அதைப் போல வருமா" என்றார் விட்டல் .

"காலைலே, 2 நடுப்பகல்லே 4, ராத்திரி 3 எல்லாமே சப்பாத்தி தான். குருமா, வெங்காயம், பச்சடி, கொஞ்சமா தயிர். அவ்வ்வளவு தான். 

"பேஷ்..சூப்பர் சார். "

"திடிர்னு ஒரு நாளைக்கு கடமுடா, கடமுடா அப்படின்னு வயிறு ட்ரபிள் பண்றது !. இத்தனைக்கும் டயரியா இல்லை, மலச்சிக்கல் இல்ல. வாயுத் தொந்தரவு ...!!"

"வாயுபுத்திரன் அனுமாரைப் பாத்துட்டு வந்திருக்கலாமே !! வேலூர் பக்கம். பஞ்ச முக அனுமான் " என்றார் பக்கத்தில் இருந்த பார்ட் டைம் பட்டாச்சாரியார். 

"பார்க்கணும் தான். ஆசைதான். ஆனா, அதுக்கெல்லாம் டயம் இல்ல சுவாமி."

"அப்ப என்ன செஞ்சீங்க..ஜெலூசில் .மாதிரி எதுனாச்சும் ...?"

"நான் டாக்டரைக் கேட்காம எதுவுமே ரிஸ்க் எடுத்துக்க மாட்டேன்.  அதுனாலே 
உங்க ப்ரெண்ட் டாக்டர் சீனிவாசன் கிட்ட தான் போனேன்."

"அவர் ரொம்ப சின்சியர் கேஸ்ட்ரோ என்டேராலஜிஸ்ட்  சர்ஜன் டாக்டர் ஆச்சே ! என்ன சொன்னார் ?"

" ஒன்னும் பெரிசா இல்ல. இது ஐ.பி. எஸ்." என்றார்.

"ஐ. பி.எஸ்.அப்படின்னா?"

"இரிடேடிங்க் பவல் சின்றோம் என்றார். ஸ்ட்ரெஸ் உள்ளவாளுக்கு எல்லோருக்கும் வரும் என்கிறார்."

"உமக்கென்ன ஸ்ட்ரெஸ் ? உம்மாலே தான் மத்தவர்களுக்கெல்லாம் ஸ்ட்ரெஸ்! "
என்று சொல்லி சிரித்தார் மாதவன் . 

"அதான் எனக்கும் தெரியல. சரின்னு, ஸ்ட்ரெஸ் கண்ட்ரோல் பண்ணனும் எப்படின்னு தெரிஞ்சுக்க, .....

ஆர்ட் ஆப் லிவிங் கிளாஸ் போங்க அப்படின்னு வூட்டிலே சொன்னாங்க..நான் தான் டாக்டர் கிட்டே போவோம் அப்படின்னு சொன்னேன். 

யார் டாக்டர் ? 

"அதான். டி.நகர் லே இருக்கார். டாக்டர் ரங்கராஜன் சைகையாற்றிஸ்ட் ஆம். சரின்னு அங்கே போய் பார்த்தா...

என்ன ஆச்சு..!!

என்னைப்போல ஒரு இருபது பேர் க்யூ விலே எனக்கு முன்னாலே . என் டர்ன் வரதுக்கு சாயந்திரம் நாலு மணி ஆயிடும் என்றார் அந்த ரிசப்நிஸ்ட் ."

"லோகத்துலே பாதி  பேர்  இன்னிக்கு சைகயாற்றிஸ்ட் கிளினிக் லே இருக்காங்க. இந்த செல்பீயும் ஸ்மார்ட் போனும் வந்ததுலே அடிக்ஷன் ரொம்பவே ஜாஸ்தி ஆகிடுத்து. " ரிடயர்டு மெடிகல் டிபார்ட்மெண்ட் காரர் இடை மறித்தார் . 

அதுலேந்து வெளிலே வர முடியல்லயே !! எத்தனை அப்பா அம்மா கதர றாங்க பாக்கறோமே !" என்றேன் நான். 

"கரண்ட் வேற இல்ல. காத்துண்டு இருந்தேன். " தொடர்ந்தார் தொன்பதைத் தாண்டியவர். 

"வேற வழி !! . நமக்கும் குணமாகணும் . அவருக்கும் வருமானம் வரணும்."

"கரெக்டா எனக்கு 5 மணி நேரம் கழிச்சு 5.20க்கு அவரைப் பார்க்க பேச என்னோட உபாதைய சொல்ல முடிஞ்சது. "

"மருந்தெல்லாம் வாங்கிட்டீகளா?"

"அதான் ப்யூட்டி.."

"ப்யூட்டியா ? அங்க அவர் ப்யூட்டி பார்லர் கா போகச் சொன்னா ?"

"கிண்டல் பண்ணக் கூடாது. " 

" பின்னே என்ன?"

"உங்களுக்கு ஒரு சைக்கிக் ப்ராப்ளம் கூட கிடையாது. லேசா கொஞ்சம் ஹியரிங் ப்ராப்ளம் இருக்கு. அதுவும் மோஸ்ட் லி நியூராலஜிகல் " அதுனாலே நீங்க எதுக்கும் என்னோட பிரான்ட் டாக்டர் சீனிவாசன் சார் இருக்கார் அவரை கன்சல்ட் செய்யுங்க..என்றார்."

யாரு சீனிவாசன். ? சாயி பக்தராச்சே ! வியாழக்கிழமை எல்லாம் ப்ரீயா வைத்தியம் பார்ப்பாரே அவரா ?

ஆமாம். சாதாரண நாட்கள் லே அவர் பீஸ் ரூபா 300. ஆனா வியாழக்கிழமை அன்னிக்கு வைத்தியம் ப்ரீ. மருந்தெல்லாம் ப்ரீ. 

"அது மட்டும் இல்ல, பக்கத்திலே இருக்கிறவா, சாய் பாபா போடோ விபூதி எல்லாமே தர்ரா அதெல்லாம் ப்ரீ. "

"அவரேதான். நான் போய் பார்த்து என் கஷ்டத்தை எல்லாம் சொன்னேன். 

"அவர் என்ன சொன்னார்."

"உங்களுக்கு மேஜர் ஆ ஒரு கம்ப்ளைண்டும் இல்ல." எல்லாமே வயசாயிகிட்டு இல்லையா. ஒரிஸ் தான் " என்கிறார்.

"எதுனாச்சும் மருந்து ????"

"எதுவும்  வேண்டாம். தூங்க படுத்துக்கும்போது நமச்சிவாய  ..ஓம் என்று கண் களுக்குள்ளே முழிகளைச் சுற்றி சொல்லுங்கள் " என்கிறார்.

"கண் முழிகளைச் சுற்றியா?"

"ஆமாம். அது ஒரு நியூராலஜிகல் எக்சர்சைஸ் . ஓம் என்று கண்களாலே முழிகளுக்குள்ளே  ஒரு 25 தரம் போட்டுக்கொண்டு இருங்கள். அதற்குள்ளே , தானே தூக்கம் வரும் "
என்கிறார். 

" ஓம் போட்டால் தூக்கம் வருமா ? அப்பறம்?" என்றேன் ஒரு ஆச்சரியத்துடன். 

(எனக்குத் தெரிந்த பயிற்ச்சிகள் எல்லாம் இவைகள் தான். )

"எனக்கு வந்ததே !! ஆனால் தூங்கும்போது  இந்த  தொந்தரவு இருமல் திரும்பவும் வந்துடுத்து."'

"இப்ப என்ன செய்யப்போகிறீர்கள் ?" 

"அதானே உங்க கிட்ட கேட்கிறேன் "

"நான் ஒன்று சொல்வேன். கேட்பீர்களா என்றேன். "

"நீங்க எந்த மருந்து சொன்னாலும் சாப்பிடுகிறேன். சாப்பாட்டுக்கு முன்னாலா, பின்னாடியா என்று மட்டும் சொல்லி விடுங்கள் " 

"முன்னாடி, பின்னாடி என்றெல்லாம் இல்லை."

"பின்னே !"

"சாப்பாடே அதுதான்."

ஓ ஆர் எஸ் மாதிரி இருக்குமோ ! சரி சொல்லுங்கள் "


இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே


" என்னது ! நான் மருந்து கேட்டால் , திருப்புகழ் மாதிரி ஏதோன்னு சொல்லறீக..?"

"மாதிரி இல்ல. திருப்புகழே தான். அருணகிரிநாதர் அருளியது. 

"படிச்சா சரியா ஆகிடுமா?

"ஒரு 48 நாள் படிச்சுப்பாரும். செலவில்லாத மருந்து." என்றேன். ***************************************************************************************************************************
****************************************************************************************************************************

இன்று காலை 
எனது வலை நண்பர் திரு ஜி.ராகவன் அவர்கள் தளத்தில் படித்த பதிகம். 
அங்கே சென்று முழுவதும் படிக்க இங்கே  திருப்புகழை க்ளிக்கவும்.
இந்த பதிகத்தில்  இல்லாத வியாதியே இல்லை போலும் !!
அத்தனைக்கும் இந்த திருப்புகழ் ஒரு 
சர்வ ரோக நிவாரணி போலும். !!! 

மருந்து தருவது மருத்துவன் தொழில் 
ஆரோக்கியம் தருவது ஆண்டவன் அருள் 

நன்றி: 
gragavanblog.wordpress.com/2016/02/16/irumalu-roga-muyalagan/யா !!!