செவ்வாய், 27 ஜனவரி, 2015

கூடு விட்டு கூடு


 முன்னுரை 
  
இது கதையா நிஜமா !!
நடக்குமா நடக்காதா !! நடப்பதற்கு சாத்தியமா !!
எல்லாமே படிப்பவர் கற்பனைக்கு யூகத்திற்கு விட்டு விடுகிறேன் 
என்றாலும் ஒரு எச்சரிக்கை.

இது முதிர்ந்தவர்களுக்கான பதிவு என்று சொல்லாவிட்டாலும் கூட 
தத்தம் மனதை திறந்து வைத்திருப்பவருக்கான பதிவு. (for readers with an open mind)

மேலே தொடருமுன் இறுதியில் உள்ள சிறு குறிப்பு
இப்பவே படிக்கலாம். கடைசியிலும் படிக்கலாம்.  **************************************************************************

************************************************************************** 



ய ஏவம் வேத

என்னது?
என்றாள் என் மனைவி.

வேதம் அப்படித்தான் சொல்கிறது
 என்று அர்த்தம்.

எது. ?

அதான் வேதம்..

அது இருக்கட்டும்.
நாளைக்கு காப்பி பொடி இல்லை  என்று நான் காலைலேந்து சொல்லிக்கிட்டு இருக்கேன்.
அத முதல்லே கேளுங்க..

இதோ ..வாங்கிண்டு வர்றேன்...
என்று பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பினேன்.

ஐம்பது  மீட்டர் கூட எங்கள் ரோடில் சென்று இருக்க மாட்டேன். எங்கள் வீதியிலேயே நேற்றைக்கு  பார்க்லே பார்த்த அதே பெரியவர் ( ஆமாம், என்னைவிட பெரியவர்) என்னைப் பார்த்து விட்டார்.

அடடா.. நேத்திக்கே உங்க கிட்ட பேசணும் அப்படின்னு இருந்தேன். டைம் இல்ல அப்படின்னு சொல்லிட்டு போயிட்டீங்க..
வாங்கோ..ஒரு அஞ்சே நிமிஷம் என்கிட்டே அவசியம் பேசணும்...

சரி
என்று  பார்க் பெஞ்சில் அமர்ந்தேன்.

சொல்லுங்க....என்றேன்.

நேரடியா டாபிக் வந்துட்டுமா ?

வாங்க.

கூடு விட்டு கூடு பாயறது அப்படிங்கற வித்தை சித்தர்களுக்குத் தெரியும் என்று சொல்கிறார்களே...அது பத்தி எதுனாச்சும் சொல்லுங்களேன்.

சித்தர்கள் என்ன செய்தாங்க..என்ன செய்வதற்கான திறமை படைத்தவங்க என்பதை எல்லாம் எனக்கு முழுமையா தெரியாது.  எனது வலை நண்பர் ஒருவர் வலையில் வேணும்னா படிங்க... ஆருடம் பற்றி கூட படிக்கலாம்.

ஆனா நான் ஒண்ணு சொல்லட்டுமா ?

என்ன?

சித்தர்கள் என்ன ?  நாமே கூடு விட்டு கூடு தானே பாய்ந்து கொண்டு இருக்கிறோம் .!!

புரியல்லையே...

நாமா..?

 சந்தேஹத்துடன் என்னைப் பார்த்தார். தன்னையும்  பார்த்துக்கொண்டார்.பார்க்கில் பல வகையான உடற்பயிற்சிகள் செய்யும் அனைத்து ஆயுள் விரும்பிகளையும் பார்த்தார்.    தம்மைச் சுற்றி ஏதேனும் கூடுகள், வலைகள் தென்படுகின்றதோ என்று பார்த்திருப்பார் போலும் !!!

அந்த மாலை வேளையில் பூங்காவின்  நடக்கும் பாதையில் சாரி சாரியாக மக்கள் வேக வேகமாக நடக்கிறார்கள். சிலர் கையில் ஸ்டாப் வாச் வைத்துக்கொண்டு ஓடுகின்றனர். சிலர் ஜாக் செய்கிரார்கள். சிலர் யோகா ப்ராக்டிஸ் செய்கிரார்கள். சில சின்னஞ்சிறுசுகள்  இனம்புரியாத கற்பனை உலகில் சஞ்சரிக்க, அந்த ஸ்டேஜைத் தாண்டி வந்த சில  அம்மாக்கள் ஓடும் தன்  குழந்தைகள் பின்னே மூச்சிரைக்க  ஓடுகிறார்கள். சில பாட்டிகளும் தாத்தாக்களும் ஆங்காங்கே பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு
பழைய கதை பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்

மற்றும் பலர்,, வல்லாரை சூப், இஞ்சி சூப், தூதுவளை சூப், கொள்ளு சூப், வேப்பிலை சூப், நெல்லிக்காய் ஜூஸ், வெந்தயக்கீரை ஜூஸ், வெந்தயம் ஜூஸ், கீழா நெல்லி ஜூஸ், முருங்கக்காய் ஜூஸ்,மனத்தக்காளி  சூப்,என்று பல தினுசான வியாதிகளுக்கு பல தினுசான சூப் களை கப் ஒன்றுக்கு ரூபா 20 வீதம் வாங்கி  குடிக்கின்றனர். 

தொடர்ந்து மார்க்கண்டேயன் ஆ இருக்க வேண்டுமா ?
 தொடர்ந்து எங்கள் லேகியத்தை 90 நாள் சாப்பிடுங்கள்
விலை 900 ரூபாய் மட்டுமே.. என்றால், இன்னிக்கு அறுபது வயதுக்கும்  மேற்பட்ட காளைகளில் நூத்துக்கு 99.99 பேர் எஸ் அப்படின்னு சொல்லுவார்கள்.

நிலைமை அப்படி  இருக்கிறபோது, இருக்கும் கூடு விட்டு இன்னொரு கூடு எதுக்கு ? இதையே அப்பப்ப தச்சு ஓட்டுபோட்டு வைத்துக்கொள்ளலாம் . எத்த்தனையோ லேகியம், சூர்ணம், பஸ்பம் இல்லையா.?

பெரியவர் மனசில் ஓடிய சிந்தனைகள் எனக்குத் தெரியாமல் இல்லை.

பெரியவர் என்னைப் பார்த்தார்.

எதுக்கு இந்த டாபிக் அப்படின்னா, சும்மாவே இருக்க முடியல்ல. பணம் காசு நிறையவே இருக்கு. .  பழைய வீடு போய் , புத்தம் புதிசா பிளாட் லே குடி வந்தாச்சு. ஆனா எது வேணுமோ அது இல்லை.

அப்படித்தான் எல்லோருக்கும் என்றேன்.

வீடு பழசா இருந்தப்போ வராத சொந்த பந்தம் எல்லாம் இப்ப புத்தம் புதிசா இருக்கிற வீட்டிலே அஞ்சு நாள் பத்து நாள் விருந்தாளியா வர ஆரம்பிச்சுட்டாங்க..

அப்படியா...என்றேன்.

அவங்களோட எப்படி மனசு ஓட்டும் சொல்லுங்க. 
அதான் உங்களோட கொஞ்ச நேரம் பொதுவா, ஆத்மார்த்தமா, மனச் சாந்திக்கு எதுனாச்சும் பேசுவோம் என்று கூப்பிட்டேன்.

பேசுவோமே...என்றேன்.

எது உங்க ஊர் ? எங்கே இருந்து வர்ராப்பல ?

தெரியல்ல என்றேன்.

இப்ப எங்கே போகறதா கிளம்பி இருக்கீக.. என்றார்..விடாமல்.

தெரியல்ல என்றேன் அதற்கும்.

அதற்கும் தெரியல்லையா.  ரொம்ப பிலசாபிகல் ஆ பேசறீக..
என்னை கேளுங்க. நான் சொல்றேன்.

சொல்லுங்க என்றேன்.

பக்கத்திலே புதுசா அபார்ட்மெண்ட் வந்து இருக்கே அதுலே பிளாட் ஒன் ஜி. ஓனர் . நான்.

அப்படியா அதுக்கு முன்னாடி ?

அதே இடத்திலே பழசு அபார்ட்மெண்ட் இருந்தது. 1960 லே கட்டினேன். 3000 சதுர அடி. தனி வீடு. தோட்டம் எல்லாம். 

ம்..

அம்பது வருசத்திலே சிதிலமாயிடுத்து. ரிபேர் பண்ணி மாளல்ல. 

சரிதான்.

போன வருஷம் அதாவது நான் சொல்றது 2013.  ஒரு ஜாயிண்ட் டெவல்ட்பண்ட்பண்ணலாமே அப்படின்னு ஒரு ஐடியா வந்தது. 
ஒரு ரியல் எஸ்டேட் ப்ரோமொடர்  வந்தார். மொத்தம் 8 பிளாட் கட்டுவோம். உங்களுக்கு 2 தர்றேன். என்றார். சரின்னு சொல்லிட்டேன். 
பழசு வீடு போயி புதுசா பிளாட் 2 கிடைச்சுடுத்து. அபார்ட்மெண்ட் வந்துடுத்து. கையிலே கொஞ்சம் காஷும் வந்தது.

பலே என்று சொல்வதுடன் நிற்காமல்,

 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.


என்றேன்.

புரியல்லையே...
என்றார்.

நீரே தான் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறீர்கள் ,  இல்லையா...என்றேன்.

அப்படியா...
 
ஒரு வீடு பழசா போயிடுத்து அப்படின்னா, அத இடிச்சுட்டு புது வீடு கட்டி குடி போய் இருக்கீங்க..இல்லையா...

அப்படித்தான் நம்ம  உடம்பினுள்ளே உயிர் இருக்கு. அது இந்த உடம்பு பழசாய் போய்நம்ம சொல்ற பேச்சை கேட்பதில்லை. நமக்கு நம்ம கை கால்களே சொந்தம் இருக்கோ இல்லையோ என்ற சந்தேஹம் வந்து விடுத்து. அப்ப, இத இன்னும் ஒட்டு போட முடியாது அப்படிங்கற நிலையிலே இன்னொரு உடம்பை நாடி போயிடரது நம்ம உயிரு ....அப்படின்னு வள்ளுவன் சொல்றார்.

எக்சாக்ட் லி.  
நல்ல தத்துவம் பேசறீக.. என்றவர், தொடர்ந்து, ஆனா என்னதான் இருந்தாலும் பழைய வீட்டை இடிச்சு தள்ளுடா அப்படின்னு கன்ட்ராக்டர் கிட்ட சொல்வது போல, டாக்டர் கிட்ட இந்த உடம்பை காலி பண்ணுங்க அப்படின்னு சொல்ல முடியுமா என்ன ?  சொன்னாலும் தான், எஞ்சினீயர் கேட்பார். டாக்டர் கெட்கமுடியுமோ?

ஆனா உண்மை அதுதானே !! என்றேன், விடாப்பிடியா...

போகட்டும். .நான் இன்னும் புது வீட்டுலே ஒரு பத்து இல்ல, ஒரு பதினைந்து வருசமாவது இருக்கணும். கந்தன்  கோவிந்தன் துணை இருப்பான். 


சரி.

என்ன சரி ? எப்ப வரீக  ?? பெரியவர் டாப்பிக்கை மாற்ற பார்த்தார்.

இல்ல, நம்ம எல்லாருமே ஒரு நோக்கிலே பார்த்தா புது வீடு நோக்கித்தான் போய்க்கொண்டு இருக்கிறோம் .
என்று சொல்லியபடியே எழுந்து கொண்டேன்.

நாளைக்கு வாங்க...

என்றார்.

பார்க் வாசலை கடந்து எதிர்த்த தெருவுக்கு செல்லவேண்டி,  எந்த வண்டியும் , பைக், மோட்டார் வரவில்லை என்று உறுதி செய்து கொண்டு தான் நான் கடந்து செல்ல நினைக்கையில்
............
...............................
.............................................


 நடு மார்பிலோ என்னவோ பளிச் என்று ஒரு வலி

மஸ்குலர் பைன்  என்று மனசுக்குள்ளே தைரியம் சொல்லிக்கொண்டு நடந்தேன்.

அடுத்த அஞ்சு ஸ்டெப் குள்ளாகவே இன்னும் பளீர் பளீர் ...?

இது சாதாரண வலி இல்லை...

உலகம் இருட்டா போகிறது.

என்னது டோட்டலா இருட்டிண்டு வருது ? !!

எங்கே போயிட்டு இருக்கேன் ?????????????????????????????????????
................................................................................................................................
 ..............................................................................................பாதை எல்லாம்...இருட்டு..

கண்ணை திறக்க பார்க்கறேன். முடியல்ல..
லேசா குரல் ஒண்ணு கேட்கறது. யாரோ யாரிடமோ சொல்றாங்க.

"தாத்தா செமி கோமா விலே இருக்கார். மாசிவ் ஹார்ட் அட்டாக்.
வி கான்ட் டல் எனி திங் அட் த மூமன்ட். "

நான் செமி தான் . ஆனா கோமா இல்ல டாக்டர். எனக்கு நீங்க பேசறது லேசா கேட்கறதே அப்படின்னு சொல்லணும் னு  தோணறது. சொல்ல முடியல்ல..

தூங்கறேனோ ...... 

ஆ....ஆ....ஆ....ழ்ந்த உறக்கம்.

தூங்குவது போலும் சாக்காடு.
 .அப்படின்னு சொல்வாகளே !!

.இதானோ அது !!!
இஸ் இட் த பிகின்னிங் ஆப் த எண்ட் ?
இது முடிவின் துவக்கமோ !!

எங்கேயோ போவது போல ஒரு பீலிங்..

.குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.


முட்டையை உடைச்சுக்கிட்டு குஞ்சு வெளிலே போவுது போல இருக்கிறதோ !!

வெளிலே ஒரு சில வினாடிகளில், திடுக்..திடுக்..

என்னது ??
 என் உடம்பு மட்டும் தனியா போயிக்கிட்டு இருக்குது ?
 யாரோ இரண்டு மூன்று பேர் ஒரு ஸ்ட்ரெச்சர் லே என்னை தூக்கிக்கிட்டு..........................

"'நான்"
மட்டும் தனியா இங்கே  இருக்கேன் !!!!

ஓடாதே...நில் நில்.. என்று உடம்பு கிட்ட சத்தம் போடலாம் என்று நினைக்கிறேன். சத்தம் வரவில்லை.


அதன் பின்னே நானும் ஒடறேனோ ....   இல்ல.. நிக்கிறேனோ .....
ஒன்னும் புரியல்ல..

உடம்புக்கும் "எனக்கும்" இருந்த கனெக்ஷன் முடிஞ்சு போச்சோ ???

எல்லாம் முடிஞ்சு போச்சு

நத்திங் லாஸ்ட்ஸ். Nothing lasts.
அப்படிங்கறது எப்பவும் தெரிஞ்ச விஷயம் தானே.

ஸோ , நத்திங் இஸ் லாஸ்ட் ஆல்சோ. Nothing is lost also.

வேதாந்தம் அறிவுறுத்திய சொல்லிகொடுத்த புத்தி சொன்னது.

இந்த பிலாசபி எல்லாம் இப்ப வேணாம் . என்ன ஆவுது அப்படின்னு பார்ப்போம் என்று தொடர்ந்து நடப்பதை கவனித்தேன்.

வீட்டுக்குள்ளே படுக்க வச்ச என் உடம்பு மேல குடம் குடமா தண்ணி ஊத்துறாங்க..

.நான் தான் தினம் குளிக்கிறேனே ...என்னை ஏன் ட்ரபிள் பண்றீங்க..!!!
அப்படின்னு சொல்ல முடியல்ல..

ஒரு நீள் சதுர கண்ணாடி கிளாஸ் கேஸ் லே என்னை  வச்சு,ஏ .சி. போட்டு, மேல இரண்டு மாலையும் போடறாங்க.

வருசக்கணக்கா பார்க்காத சில உறவுகள் வருது.
என் சம்சாரம் பார்க்குதா அப்படின்னு பார்த்தப்பறம் கண்ணைக் கசக்குது.

அத்திம்பேர் மாதிரி ஒரு நல்ல உள்ளத்தை பார்க்க முடியாது...
ஆத்துக்காரி மேல இருந்த கரிசனம் பார்த்தியா ? சொல்றது மச்சினன்.

எதுக்கு அப்படி சொல்றீங்க...இது அவர் பத்னி.

கரெக்டா ஒண்ணாம் தேதி வாங்க வேண்டிய பென்சனையும் வாங்கி கொடுத்தப்பறம்  தான் கிளம்பினார்  பாத்தியா...!!

யூனியன் லீடர் ஒருவர் வர்றார்.  அவரோட பத்து இருபது பேர் திமு திமு.

ஒரு மாலையை போட்டு விட்டு, என் மகனைப் பார்த்து " அவர் மாதிரி ஒரு ஹெச். ஆர். மேனேஜர் பார்க்க முடியாது. மோஸ்ட் பாபுலர். அமாங் வொர்கேர்ஸ். "

சாஸ்த்ரிகள் வர்றார்: சிக்னல் தருகிறார்
குளிகனுக்கு  முன்னாடி கிளம்பனும்.

இன்னும் சற்று நேரத்திலே, என்னை , இல்ல என் உடம்பை தூக்கிகிட்டு ஒரு டாக்சி வான் போவுது.பக்கத்திலே நாலஞ்சு பேரு என்னெனவோ கையில் சுமந்துண்டு.

என்னதான் நடக்கும், நடக்கட்டுமே என்று நானும் தொடர்ந்து வேடிக்கை பார்க்க முற்பட்டேன்.

வீடு வரை உறவு. வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை. கடைசி வரை யாரோ.....



கண்ணதாசா... நீ வெறும் பாடகன் அல்ல. த்ரி கால ஞானி.
எனக்கு என்ன நடக்கும் என்பதை ஒரு நாற்பது  வருஷம் முன்னாடியே பாடி இருக்கிறாய்.

இந்த அஞ்சடி மூன்றங்குலம் 64 கிலோ பஸ்மம் ஆகிறது.
அத ஒரு பானைக்குள் அடைச்சு , அத கடல் லே கரைச்சு, ...

பின்னே, 

ஒன்னு இரண்டு மூணு நாலு என்று பத்து நாள் .

நான் பக்கத்திலே இருப்பதை கவனிக்காமலேயே என்னை ஒரு கல் ஆக பாவித்து என் தாகத்தை தீர்த்து,

பத்தாம் நாள் என் அசுர பசியை தீர்ப்பதாக , அண்டா அண்டா வா, சாதம் பல விதமான சாம்பார், பொரியல் கூட்டு, எல்லாம் வடிச்சு, அதுவும் உப்பு போடாம, நட்ட நடுவிலே கொட்டி,
எல்லோரும் சேர்ந்து அழுது, ...



பதினொன்று, பதினிரண்டாம் நாள் பல பல தானங்கள், இரும்பு லேந்து தங்கம் வரை, அரிசி லேந்து பசு மாடு வரை, பல பல வைதீக வல்லுனர்கள்,    அவரவர்களுக்கு வேண்டியது எல்லாம் கட் அண்ட் ரைட் ஆ வாங்கிக்கொண்டு, இனிமே கறப்பதற்கு இவர்களிடம் ஒன்றும் இல்லை என்று முடிவானப்பின் பை பை சொல்லிட்டு போனதும்,


பதிமூன்றாம் நாள், இனிமே யாரும் அழக்கூடாது என்று வாத்யார் சொல்லி, கீதை லேந்து ஸ்லோகம் படிச்சு,


எல்லாரும் புதுசு கட்டிண்டு ,

அவரவர்கள் அவங்கவங்க ஊருக்கு கிளம்ப,

இனிமேயும் , எனக்கு இங்கே நோ ரூம் என்று ஸ்பஷ்டமா தெரிஞ்சு போயி,

நானும் எங்கே போறது அப்படின்னு தெரியாமலேயே கிளம்பினேன்.




அப்பாடி, !!!
 பிரபஞ்சம் இருக்கே... ரொம்ப பெரிசு.ரொம்ப ரொம்ப பெரிசு.
நம்ம வீடு, ஊர், நாடு, உலகம் , பூமி எல்லாத்தையும் பின்னாடி விட்டுட்டு,

இந்த அண்டத்துக்குளே நுழைஞ்சா, அப்பாடி, என்ன அங்கே அங்கே சின்ன சின்ன லைட் லைட்டா மின்னும் மீடியார்ஸ்.... பிளானெட் ...எல்லாமே எதோ ஒரு ட்ராக் லே போவுது. ...

பெரிய பெரிய ஸ்டார் எல்லாம் ...வர்றது.. அத சுத்தி சின்ன சின்ன பிளானெட்

இரண்டு பெரிய காலக்சி ஒண்ணோடு ஒன்னு உரசிக்கொண்டு நடுவிலே இருக்கும் கருப்பு துளைக்குள்ளே  எப்ப விழுவோம் என்று காத்திருப்பது போல் இருந்தன.

அடே...இதான் மில்கி வே யா... .சூப்பர் . ரொம்ப க்ராண்ட் ஆ இருக்கே என்று வாயைப் பிளந்தேன். அப்ப தான் நினைவு வருது. உனக்குத் தான் உடம்பு கிடையாதே...வாயை எப்படி பிளப்பாய். சும்மா பீல் பண்ணிக்கிட்டு வா..என்று எதுவோ ஒன்னு சொல்லுது.

இன்னாது.. நம்ம,   அஸ்ட்ரானமி,ப்ரொபசர் கால்குலஸ் ஸ்ரீனிவாசன் சார் விவரித்த  பிரபஞ்சத்தை விட்டும் நான் போவது போல இருக்கிறதே !!

பிரபஞ்சத்துக்கும் அப்பாலா !!!

2000 ம் ஆண்டிலே வேதாந்தம் கிளாஸ் டி.நகர் லே  போயிகிட்டு இருந்தபோது, ஸ்வாமினி ப்ருஹத் ஆரண்யகம் உப நிஷத் லே இருந்த அத்தனை அத்தியாயமும் விலா வாரியா வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லித் தந்தார்களே.!!

அது எல்லாம் நினைவுக்கு வர்ற,

ஸ்வர்க லோகம், கந்தர்வ லோகம் , பிதுரு லோகம், மட்டும் அல்ல, சத்ய லோகம் சூர்ய லோகம், சந்திர லோகம், நக்ஷத்திர லோகம் அப்படின்னு ஏகப்பட்ட லோகங்கள், 

யார் யாருக்கு,  எது எது இறக்கும்போது நினைவுக்கு வருதோ, அங்க அங்க, அவங்கவங்க பாவ புண்ணியத்திற்கு  தகுந்தபடி போவாங்க என்றார்கள்.ஸ்வாமினி.

அவை தான் வர்றது போல என்று எண்ணி,

சரிதான்.  அதுலே எங்கனாச்சும் நானும்  போய் இறங்குவேன் என்று ...

யோசிச்சுக்கொண்டு இருக்கேன்... ..ஆனா எங்கேயும் பிளைட் லேன்டிங் ஆகிற மாதிரி தெரியல்ல.

"நான் " ஒரு இடத்திலே நிக்கிற மாதிரியும் தெரியல்ல. .போயிகிட்டே இருக்கேன்.

 பூமி லே இருந்தபோது தான் வேலை லே எப்ப பார்த்தாலும் டூரிங்...
 இப்பவுமா என்று சற்று சலித்துக்கொண்டேன். 


  அமெரிக்காவிலே எல்லாம் ஹை வேஸ் லே நடு நடுவிலே ரெஸ்ட் ரூம் வருமே ...அது மாதிரி எதுனாச்சும்......???

ஊஹும்...ஒண்ணுமே காணோம் ....

லுப்தான்சா பிளைட் லே அப்பப்ப லஞ்ச், டின்னர், தருவாங்க..அது மாதிரி இங்கேயும்..... ..  நோ. நோ..
டீ , காபி, பிஸ்கட், வேண்டாம் !! கொறிக்க கொஞ்சம் கடலை எங்கனாச்சும் தரக்கூடாதா..   

அன்ன பூரணி அம்மா !!1 நீங்க இங்கன எல்லாம் பார்க்கலையா..!! என்னது ?! நீங்க எர்த் க்கு மட்டும் தான் இன் சார்ஜா !!!

பரவாயில்ல.
ஆனா, சும்மா சொல்லகூடாது..
தாகம், பசி அப்படின்னு ஒன்னுமே தெரியல்ல...

இன்னும் எத்தனை நாளோ...எத்தனை மாசமோ, இல்லை எத்தனை வருசமோ.

இல்ல இன்னும் எத்தனை யுகம் இந்த ஜர்னி இருக்கும்.  ..  தெரியல்ல...
   பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]
இந்த முடிவில்லா பயணம் அனந்தம் ஆ இருக்கும்போல, முடிவில்லாம...
ஆனா இதுலேயும் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்யுது.
 
பிறப்பும் இறப்பும் அற்று, மூச்சும் அற்று, பேச்சும் அற்று, 
மறப்பும் நினைப்பும் அற்று, மாண்டிருப்பது எக்காலம் 

என்று அத்திரிகிரியார் பாடினாரே... அது தானோ இது. !!!

ஞானப் புலம்பல்]
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]

என்ன மாதிரி இந்த அண்டத்திலே  இன்னமும் லட்சக் கணக்கான கோடிக்கணக்கானவை இருக்குமோ ?
இவற்றிக்குத்தான் ஆன்மா என்று பெயரிட்டார்களோ !!
இல்ல அது வேறயா...

அது இது எது ??



இந்த நிலையே  தொடருமா.. தெரியல்ல...

ஒண்ணு மட்டும் நிதர்சனமா தெரியுது. எனக்குன்னு எந்த வித உருவமும் இல்லாம எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாத ஒரு சுக வாழ்க்கையை அனுபவிக்க முடியுது. பிறப்பு இறப்பு,   இன்பம்,துன்பம்,   காய்தல், உவத்தல்,  கருப்பு, சிகப்பு, இருட்டு வெளிச்சம் , எதுவுமே இல்லை.

ஒளி , சுவை, ஊரு, ஓசை, நாற்றம் எதுவுமே எனக்கு இல்லை.

 .சுருக்கமா சொல்லப்போனால்,
  மனித வாழ்வின் 0 வும் இல்லை. 1 ம்.இல்லை. 0 முதல் 1 வரையும் எதுவும் இல்லை.

என்ன ஆச்சரியம் அப்படின்னா, இத்தனை இல்லைக்கு மத்தியிலும் எதுவோ ஒண்ணு  தொடர்ந்து இருந்து கொண்டு வருது.


இந்த முடிவில்லா பயணம் அனந்தம் ..
இதுலே ஒரு ஆனந்தம்
அந்த ஆனந்தத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கும்போது,

இட் ஹாப்பண்ட்.  ஆமாம். அது நடந்தது.

பெரிசா மழை..வெள்ளம் ..என்னை எதுவோ ஒரு அலை  அடிச்சுக்கொண்டு போவுது. பிரளயம் மாதிரி இருக்கு.  அதுலே எங்கேயோ எதனுடையோ கலந்து, பூமிக்கு நான் திரும்பி வந்து சங்கமம் ஆவது போன்று பிரமை. தோற்றம்.


மண்ணிலேந்து மரத்துக்கு போகிறேன். மரத்தில் இலையாகிறேன் . காயாகி, பழம் ஆகிறேன். அதை எதோ ஒரு பறவை கொத்தி கொத்தி சாப்பிட, அந்த பட்சியை யாரோ அம்பால் எய்து கொன்று, அவித்து கொண்டு வந்து சமைத்து, உணவாக்க , அதை எடுத்து ஆஹா, என்ன ருசி என்று  அவனும் அவனது மனைவியும்  சாப்பிடுகிறார்கள். .

{சர்வேஷாம் பூதானாம் ப்ராநேணிவிஷ்டக. 
(எல்லா உயிரனங்களுமே பிராணனை பிரதானமாக் கொண்டவை. அந்த பிராணன் அன்னம் தான் என்கிறது பிருஹத் ஆரண்யகம் ஒரு இடத்தில். ) அன்னம் ச ப்ரும்ம, அஹம் ச ப்ரும்ம, போக்தா ச ப்ரும்ம -  யானும் பிரும்மன். எனக்கு உனவளித்தவனும் பிரும்மன். எனக்கு அளிக்கப்பட உணவும் பிரும்மனே. 

இப்ப புரிஞ்சுபோச்சு. 
இதத்தான் " உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே!!" சொல்லி இருக்காக.}

ஐ ஹாவ் நோ ரோல் டு  ப்ளே .
எல்லாமே எனக்கு அப்பாற்பட்டு நடக்கிறது.

இன்னமும் நான் எங்கெங்கே போவேன்... ?
என்று தெரியாத சூழ்நிலை. 

எதிர்பாராம.....  

ஒரு இருட்டு குகை... அதுக்குள்ளே ஒரு நீர்த்துளி போல ஒரு நீர்த்திவலை ஆக ,நான்  நுழையராப்போல ஒரு உணர்வு. 

[கையிலே அந்த சாம்சுங் ஐ பாட் இருந்தா ஒரு போடோ புடிச்சு இருக்கலாம்.
வாட்  எ பண்டாஸ்டிக் மூமெண்ட்.]

சுற்றி வர எல்லாப் பக்கமும் ஜலம் ஜலம் ..
என்னெனவோ  அதுலே மிதக்க  ...
நான் மட்டும் விறு விறுப்பா என் வாலை நீட்டிகிட்டு ஓடிகிட்டு இருக்கேன்.
சட் னு ஒரு கணம் எதோ ஒன்னு டக் னு என்னை கெட்டியா புடிச்சுக்குது.

உன்னை விடமாட்டேன்.. உன்னிடம் நானே
என்று அந்தக் காலத்து பானுமதி பாடுவாளே அந்த மாதிரி.

அந்த பிடிப்பு சுகம்.


இது நடந்து
ஒரு அஞ்சு ஆறு வாரம் இருக்கும்.  டக் டக் அப்படின்னு ஒரு துடிப்பு என்கிட்டேந்து வருது....

இன்னும் அஞ்சு ஆறு வாரம்  .. அட எனக்கொரு தல .!!!!

இன்னும் இரண்டு மூணு மாதம்   அதற்குள்ளேயே
எனக்குன்னு ஒரு உருவம் வருது... அட, கால், கை, எல்லாம் ...  எங்கே இருந்தோ ஒரு   குழாய் என் தொப்புளுக்கு கனெக்ஷன் தருது.

இன்னும் ஆறு, எட்டு, மாதமா நாட்கள் ஓடுகின்றன. .  நான் பெரிசு ஆகிகிட்டே வர்றேன். இருந்தாலும் நான் இருக்கும் இடத்தை சுத்தி சுத்தி அதே  இடத்திலேயே உருண்டுண்டு வர்றேன்.

ஒன்பது முடிஞ்சுடுத்து. ஆனா பத்திலே பத்து நாள் கூட ஆகியிருக்காது.

ஒரு கணம், இனிமே இங்கே இருக்க முடியாது..ஓடி விடணும் அப்படின்னு ஒரு வெறி. எங்கேந்து தான் அத்தன எனர்ஜி எனக்கு வருதோ ??!!!

தலைய முண்டி முண்டி பார்க்கிறேன். வெளிலே போவதற்கு வழி இருக்கான்னு தேடறேன்...  முண்டி முண்டி முன்னே போக முயலவும் செய்கிறேன்.

அதே சமயம்,
தலைப் பக்கம் ஒரு சின்ன வலி.

யோவ்..!
.யாருய்யா. என் தலைய புடிச்சு இழுக்கிறீங்க...?

கத்த முயல்கிறேன்.

ஆனா, அதற்குள், .....

ஆஹா.. வந்தாச்சு....
ஒரு விடுதலை உணர்வு என் உடல் முழுவதும் பரிணமிக்கிறது.
ஆடுவோமே..பள்ளி பாடுவோமே..ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என..

க்வா ...கவா....
யார் கத்துவது ?
நான் தான்.
புதுசா பிறந்து இருக்கிறேன்
 பூரிப்பில் கத்துகிறேன்.

புதிய வானம்...புதிய பூமி, எங்கும் பனி மழை பொழிகிறது....

யாரோ ஒரு அசுரன் ஒரு கத்திரிகோல் வைத்து என் தொப்புளை வெட்டி, பாண்டேஜ் போடுறான். .
இன்னொருவன் சுடு தண்ணியினால் என்னை குளித்து விடுகிறான்.

ஆஹா..அன்னிக்கு போகும்போது ஒரு குளியல்.
இன்னிக்கு வரும்போது ஒரு குளியலா !!

ஆனந்தம் பிரும்மானந்தம்...

சந்தோஷத்தில் திரும்பி திரும்பி, .... க்வா ..  .கா...கா....

சுற்றி உள்ளவர்கள் புன்னகை..  ஆங்காங்கே குரல்கள்.

பையன் புறந்திருக்கான் . பரணி நக்ஷத்திரம். தரணி ஆளப்போறான் . 

குரு உச்சத்திலே இருக்கான் ஒய்..!  குருசந்திர யோகமாக்கும் !!

ஆஹா. நான் பிறந்துவிட்டேனா மறுபடியும் !!!

தூங்கி விழிப்பது போலும் பிறப்பு'



என்ன ஒரே தூக்கா தூக்கி அணைத்து , என் வாயில்  ஒரு பஞ்சு மிட்டாய் மெத்தையை  அடைக்கிறாள் யாரோ...

ஆஹா...என்ன ஊற்று..!! என்ன அம்ருதம் !!

சுகம். சுகம். அந்த சுகத்திலே கண்கள் சுற்ற, தூங்கிபோகிறேன்.

இருந்தாலும், சுற்றி வர நடப்பதை உணர முடிகிறது.
வீடு முழுவதும் கல கல சிரிப்பு, கல்கண்டு வாரி இரைகிறது.
கொண்டாட்டம். புரிகிறது.பலருக்கு பல வகை தானங்கள்.

திண்ணையில் ஒரு தொண்டு  கிழவரிடம் வந்து யாரோ .

தாத்தா...உங்களுக்கு கொள்ளுப்பேரன் புறந்தாச்சு ...இந்தா கல்கண்டு. வாயைத் தொற ...


 புனரபி ஜனனம். புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்


தாத்தா... ஏ தாத்தா... எந்திரு தாத்தா...

என்ன தாத்தா எழுந்திரிக்கவே மாட்டேங்கறாரு !!!


*******************************************************88

குறிப்பு;
(ராபர்ட் லான்சா என்று ஒரு நார்வே பயோ சயின்சஸ் பார்டிகில் பிசிக்ஸ் விஞ்ஞானி , அவர், தனது ஆராய்ச்சியின் முடிவில், மனுஷன் இறந்து புதைக்கப்பட்டாலும், எரிக்கப்பட்டாலும் ஒரு 20 வோல்ட் எனெர்ஜி மீதம் உள்ளது  என்றும் ஆனால் அந்த சக்தி  எங்க போகிறது என்று ஆராய இயலவில்லை என்றார். அவருடைய ஆராய்ச்சியைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதியும் இருந்தேன். )

அவரது ஆராய்ச்சியின் உட்கருத்தையும் விவரத்தையும் எனது பல க்வாண்டம் பிசிக்ஸ் , பார்டிகில் பிசிக்ஸ் , பி.ஹெச்.டி. வரை படித்த நண்பர்களுக்கு அனுப்பித்து கேட்டதில், அவர்களும் இந்த ஆராய்ச்சியின்  செயல் முறையிலோ அல்லது முடிவிலே எதுவும் முரணானது இல்லை. (.No inconsistency in the process of evaluation or description of the objects of the paper.)

ஈன்ஸ்டீன் சொல்லியது போல ஒரு பொருள் தனக்குப் புலப்படவில்லை அல்லது புரியவில்லை என்பதனால் அது இல்லை என்று அர்த்தம் இல்லை. 

இந்த "கதை" இந்த கருத்தினால் உந்தப்பட்ட ஒன்றே. 

















சனி, 17 ஜனவரி, 2015

உறவு.



உறவு.

எனது இசை ஆசிரியர் திரு ஜெய்கீ இயற்றிய, மெட்டு அமைத்த ஒரு பாடல் இதோ.

கீ போர்டு மற்றும் பியானோ, ட்ரம்ஸ், வயலின், வாய்ப்பாட்டு, கற்றுத்தரும்
இவரது பீதோவன் இசைப் பள்ளி,  வளசரவாக்கம் ராதாக்ருஷ்ணன் சாலை, கல்யாணி கல்யாண மண்டபம் அருகே உள்ளது.



.

வியாழன், 1 ஜனவரி, 2015

ஆண்டவனே ! இவ்வருடம் எமக்கோர் பார்வை தா.

ஆண்டவனே !  இவ்வருடம் எமக்கோர் 
அகண்ட பார்வை தா. 
அடுத்தவர் குறைகளை யான்  நின் 
அருள் விழி ஊடே  நோக்கிடவே  
ஒரு துளி அன்புள்ளம்  தா. 

பரிவும் பெருந்தன்மையும்  தா. நின்னைப்
 பிரியா வலிவும் நம்பிக்கையும் தா. 


மேலே கேட்க : சுட்டியை தட்டுங்கள்.

எல்லோருக்கும் சுப்பு தாத்தா,மீனாட்சி பாட்டியின்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  Courtesy:
http://llerrah.com/aprayerfornewyear.htm

 HAPPY NEW YEAR SONG 
FROM ILERRAH.COM

God grant us this year a wider view,
So we see others' faults through the eyes of You.
Teach us to judge not with hasty tongue,
Neither the adult ... nor the young.

Give us patience and grace to endure
And a stronger faith so we feel secure.
Instead of remembering, help us forget
The irritations that caused us to fret.
 


Freely forgiving for some offence
And finding each day a rich recompense.
In offering a friendly, helping hand
And trying in all ways to understand;



That all of us whoever we are ...
Are trying to reach an unreachable star.
For the great and small ... the good and bad,
The young and old ... the sad and glad
 
Are asking today; Is life worth living?
The answer is only in, loving and giving.
For only Love can make man kind
And Kindness of Heart brings Peace of Mind.

By giving love, we can help this year
To lift the clouds of hate and fear.


by Helen Steiner Rice