வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

அவ்வை பிராட்டியார் Kovai ஆவி பஸ்ஸுக்காக காத்துக்கொண்டு இருக்கும் காட்சி.

பொதிகை மலையில் இன்று காலை....


முருகா....

 பழனி மலை ஆண்டவா ...   கால் ரொம்பவே கடுக்குதடா...

இன்னும் ஒன்னாம் தேதி புறக்க இன்னும் ஒரு நாள் தான் கீது.

அந்த கோவை ஆவிக்காரன் பஸ் புடிச்சு வாரேன்.  அங்கனேயே இரு கிழவி
அப்படின்னு செல்லுலே சொன்னானே...

நம்ம போய் ரீச் ஆறதுக்கு முன்னாடி மா நாடு முடிந்து விடும் போல இருக்கே ..
சசிகலா அம்மாவுக்கு ஒரு போட்டியே இருக்காது போல இருக்கே...

(முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார்.)

அவ்வை பிராட்டியே  ..  தமிழ் பதிவர் மா நாட்டுக்கு தாங்கள் செல்ல நினைத்தது குறித்து எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

இதோ...இந்த மயில் வாகனத்தில் ஏறிக்கொள்ளுங்கள்.  அரை நொடியிலே வட பழனி சென்று விடுவோம். 


அங்கு தானே எம் உறைவிடம் உள்ளது .  அந்த கர்பகிருஹத்திற்குள்ளே சென்று ஒரு மணி நேரம் அமர்ந்து விட்டு செல்வோம். வாரு ங்கள். 

பதிவர் விழா துவங்குமுன்  அருகே உள்ள வட பழனி   சரவண பவனில் சூடான ஒரு டிக்ரீ காபி குடித்து விடலாம். 
துளசி மேடம் மலேசிய பயணத்தில் இருந்து அங்கு இருக்கும் சரவணா பவனில் பஜ்ஜி போண்டா வாங்கி அனுப்பி இருக்கிறார்கள். அதையும் ஒரு கை பார்க்கலாம்.  நீங்கள் போவதுற்க்குள்ளே அத்தனியும் காலியாகாம இருக்கணும். சுப்பு தாத்தா ஒன்டியாவே அத்தனையும் தின்னுடுவார்.  அத்தனை டேஸ்ட் , ஐ மீன் சுவை அவ்வை அன்னையே ....


முருகா.. ஆனந்த விஜய ராகவன் ஆவி  போன்ற தமிழ் அன்பர் பஸ் எடுத்து வருவதாகச் சொல்லியிருக்கிறாரே  ...  

அவரை ஏமாறச் செய்வது தகுமோ தகுமோ ?

வந்துகொண்டே இருப்பாரே  . கோவை லேந்து   வரவேண்டும் இல்லையா. நாம் இல்லை இன்றால் மனம் உடைந்து போய்விடுவாரே  பெட்ரோல் பங்கிலே ஏதேனும் க்யூவிலே .நிற்கிறாரோ ? 

நாமோ பொதிகை மலையில் உள்ளோம். 

வரேன் சொன்னா கண்டிப்பாக   வருவார். . இல்லையா..

அது சரி, தாங்கள் எங்கே இருக்கிறீர்கள்  அப்படின்னு ஒரு வார்த்தை சொன்னீர்களா ?   

ஆஹா...பொதிகை  மலை உச்சியிலே அப்படின்னு திருப்பி திருப்பி சொன்னேனே...

ஆவி புரிஞ்சுகிட்டேன் அப்படின்னு சொன்னாரே ....ஒரு வேளை அந்த ஆனந்த விஜய ராகவன் நடுவில் ஏதேனும் டிராபிக் ஜாமில் அகப்பட்டுக் கொண்டாரோ ??  

அவ்வையே  தமிழ் அன்னையே 
எத்தனை நேரம் நீங்கள் கால் கடுக்க காத்திருப்பது ?
நீங்கள் என்னுடன் வாருங்கள், பழனி மலைக்கே சென்று விடலாம்.

மன்னிக்கவேண்டும் முருகா.  எனக்கு பதிவர் மா நாடு செல்வது ஒரு தமிழ் தொண்டு. அது என் கடமையும் கூட.  

ஆக, என்னை விட உனக்கு தமிழ் தான் முக்கியமா அவ்வையே ..

இல்லையா முருகா..  தமிழ் தானே என் உயிர்... அதற்காகத்தானே இந்த தமிழ் பதிவர் மா நாட்டுக்கு கால் கடுக்கச் சென்று கொண்டு இருக்கிறேன்.
தமிழ் தமிழ் என்று ஒரு ஐந்து கோடி உலகத் தமிழினமே அந்த மா நாட்டினை சிறப்புற நடத்த செயல்பட்டு கொண்டுள்ளதே ..

அப்ப வைட் பண்ணு அவ்வையே...  அது வரைக்கும்

 சுட்ட பழமா சுடாத பழமா அப்படின்னு ஒரு பாட்டு போட்டிலே  அந்த காலத்துலே , அதை எடுத்து விடு. 


பஸ்  வர்ற வரைக்கும் அந்த ஞானப்பழத்தை எடுத்து போடு...


நானும் இன்னொரு தரம் கேட்கறேன்.    புதன், 28 ஆகஸ்ட், 2013

செப்டம்பர் ஒண்ணாம் தேதி நடக்க இருக்கும் பதிவர் விழாவில் ...........??????????????

பதிமூணும் பதிமூணும் எத்தனை?
இருபத்தி ஆறா ??
சரியாத்தான் இருக்கணும்.
1987ம் வருஷம் அப்படின்னு நினைவு.

அப்ப எனக்கு ஊர் சுத்தற வேலை. அப்படி சுத்திகினே இருக்கும்போ எதுனாச்சும் ஒரு ஆபீஸுக்குள்ளே போயி இன்னாடா பண்ணிகிட்டு இருக்கீக அப்படின்னு கேட்கணும், பார்கணும், பார்த்ததை ரிபோர்டா எழுதி மேலிடத்திற்கு அனுப்பணும்.

தகவல் ஏதும் தராம, திடீர் அப்படின்னு விசிட் செஞ்சு, என்ன தப்பு நடக்குது, ( உண்மையிலே சரியா ஏதும் நடக்குதா ) அப்படின்னு கண்டுபிடிக்கறது எங்க வேலைல ஒண்ணு.   இதுக்கு சர்ப்ரைஸ் விசிட் அப்படின்னு பேரு.

இதுலே சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்.  தகவல் கொடுத்துட்டு போகும்போது எங்க தங்குவது, எங்க சாப்பிடுவது அப்படி எல்லா விவரங்களும் முன்னமேயே முடிவா இருக்கும்.  நாங்க போற  டீம்லே யாரு வெஜ், யாரு நான் வெஜ் அப்படின்னு சொல்லிடுவோம் , அதற்கு தகுந்தாற்போல, எது நல்ல ஹோட்டல் அப்படின்னு பார்த்து வச்சுருப்பாங்க, எங்களுக்கு, கஷ்டம் ஒண்ணும் இருக்காது.

ஆனா,நாங்க போனது கேரளா மாநிலத்திற்கு. திரூர் அப்படின்னு ஒரு ஊர்.அந்த ஊர் அலுவலகத்திற்குத்தான் சர்ப்ரைசா போகணும் அப்படின்னு முடிவெடுத்தாக எங்க மத்திய அலுவலகத்திலே...


 என்னதான்  திரூர் திருச்சூர் பக்கத்துலே இருந்தாலும், இது திருச்சூர் மாதிரி இல்லைங்க.

 திருச்சூர்லே நல்ல ஹோட்டல் எல்லாம் கீது.
ஆமாங்க, அந்த பூர திருவிழா அன்னிக்கு எல்லா யானையும் ஒரு இருபது சேர்ந்து நின்னு பஞ்ச வாத்தியம் ஒரு நாலு மணி நேரத்திற்கு ஊரே திருவிழா வா இருக்குமே...அதே திருச்சூர் தான்.

 ஆனா, பக்கத்திலே இருக்கிற திரூர் லே சுத்தம். பேருக்குக் கூட அந்த நாட்களிலே சுத்த சைவம் அப்படின்னு ஒரு ஹோட்டல் கூட கிடையாது.

நாங்க போன நேரமும் ரம்ஜான் மாதம்.  ஹோட்டல் எல்லாமே பகல்லே கிடையாது. இப்ப எப்படியோ தெரியல்ல.

நாங்க மங்களூர் எக்ச்ப்ரஸ்ஸிலே திரூர் ஒரு வழியா ஸ்டேசனில் இறங்கி, ரிக்க்ஷா பிடிச்சு, அலுவலகம் எங்கே இருக்கு அப்படின்னு கண்டுபிடிச்சு, ஒரு வழியா 11 மணிக்கு போய் சேர்ந்தோம்.  சாதாரண ஆடிட் விசிட்டுக்கு எல்லாம் ஸ்டேசனுக்கே கூட்டிட்டு போக அந்த ஊர் மானேஜர் வந்திருப்பார்.  இது சர்ப்ரைஸ் இல்லையா ? ஓருவரும் இல்லை.  மழை வேற.

அலுவலகத்துக்கு போய், நாங்க யார் அப்படின்னு சொல்லி, ஐ.டி. எல்லாம் காண்பிச்சு, எங்க வேலையைத் துவங்கினோம்.  ஒரு இரண்டு அல்லது மூணு நாள் ஆகும் சாதாரணமா, எங்க வேலைய முடிக்க.

ஒரு இரண்டு மணி இருக்கும். பசி வயிற்றை கிள்ளியது. லஞ்ச் க்கு போக வேண்டும் என்று சொன்ன போது,  அந்த அலுவலக மானேஜர் பக்கத்தில் வந்து, ரம்ஜான் மாதம், பக்கத்தில் ஹோட்டல் கிடையாது. ஆக, கொஞ்சம் 20 அல்லது 20 மைல் போய் தான் சாப்பிடனும். வாங்க, சீக்கிரம் போகலாம் என்றார்.

சரி அப்படின்னு கிளம்பினோம். கார் போயிட்டே இருக்குது. ஆனா ஹோட்டல் வந்த பாடில்லே....

கூட வந்த மானேஜர் கொஞ்சம் அப்செட்டா போயிட்டார். எதிர்பார்த்து வந்த ஹோட்டல் கூட மூடி இருக்குதே..  இனி மாலை தான் திறக்கும்போல...
என்றார்.

எங்களுக்கு என்ன செய்வது ? என தெரியவில்லை. பட்டினி கிடக்க முடியாது.  சரி, சுமாராச்சும் எதுவாச்சும், ஹோட்டலுக்கு போங்க.. அப்படின்னு சொன்ன உடனே பக்கத்துலே ஒரு கீத்து கொட்டகை போட்ட ஒரு விடுதி முன்னால் காரை நிறுத்தினார்.

அதை பார்த்த உடனேயே கூட வந்த சங்கரன் சார் பயந்து போய்விட்டார்.  சூரி சார் , இது பார்த்தா வெஜ் ஹோட்டல் மாதிரி தோணல்லை. என்றார்.

விசாரிப்போம்.  என்று கல்லாவில் உட்கார்ந்து இருப்பவரிடம் கேட்டோம்.
veg OR non-veg ? என்றோம்.
அவர் எங்களை நன்றாக ஒரு தரம் பார்த்து விட்டு,
வெஜ் தான் என்றார்.சரி, என்று, அந்த நீளமான பெஞ்சில் நானும், சங்கரனும், இன்னொருவர் அவர் பெயர் நினைவில் இல்லை.  உட்கார்ந்தோம்.  பக்கத்திலே , பிராஞ்ச் மானேஜர். அவர் கண்களில் இருந்த சந்தேகம் ஏனோ நாங்கள் கவனிக்க வில்லை.

பெரிய வாழை இலை. அதை பார்த்தபோதே வயிறு பாதி நிறைந்துவிட்டது.


முதலில், அங்கு வழக்கப்படி பருப்பு, போரியல், கூட்டு, வைத்துவிட்டு, சாதம் ஒரு வண்டி நிறைய போட்டார்கள்.   இத்தனை எதுக்கு என்று கேட்டபோது, இது சாம்பார் சாதத்துக்கு மட்டும்.  ரசத்துக்கு, இன்னொரு தரம் போடுவோம் என்று மலையாளத்தில்  பயமுறுத்தினார். பிறகு சாம்பார் வாளி வந்தது.
அவர் வாளியில் இருந்து தாராளமாக மூன்று கரண்டி ஊற்றினார். என்ன காயே காணில்லா என்று கேட்டு தனக்கும் மலையாளம் சொற்பம் அறியாம் என்று சிரித்துக்கொண்டே கேட்டார்  சங்கரன்.

 ஒரு வேளை தீர்ந்து போய் இருக்கும், நம்ம லேட்டாய் வந்து இருக்கிறோம் இல்லையா.. என்றேன்.

ஒரு ஐந்து நிமிட நேரம் கழிந்திருக்கும்.  ரசம் முடித்து, மோர் சாதம் சாப்பிடும் நேரம்.

எதிர்த்த பெஞ்சில் மூன்று பேர் உட்கார்ந்தார்கள்.  அவர்களுக்கும் பரிமாறப்பட்டது.   அவர்களைப் பார்த்தே என் நண்பர் சங்கரன் என் சஞ்சலப்பட்டார் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

அவர்களுக்கும் சாம்பார் வாளி வந்தது.  எங்களுக்கு கரண்டியால் ஊற்றிய சர்வர் அவர்களுக்கோ சொம்பால் மொண்டு ஊற்றியது போல் இருந்தது. விரும்பி சாப்பிட்ட அவர்கள், இன்னும் இரண்டு பீஸ் போடுங்க...என்று கத்தி
சொல்லும்போது தான் என் நண்பர் அவர்கள் இலையை கவனித்தார்.


அய்யய்யோ ?  நான் வெஜ் ஐடம் அல்லவா ?
என்ன சார், வெஜ் ஹோடல் என்று சொன்னீர்களே ? என்று அந்த சர்வரைக்
கேட்டார்.

உங்களுக்கு வெஜ் தான் சாரே... மேலே இருந்து சாம்பாரைப் போட்டால் வெஜ். கலக்கி போட்டால் தான் சார் நான் வெஜ் ஐடம் வரும்.  எங்க முதலாளி முன்னாடியே சொல்லிட்டார் இல்லையா, நீங்க வெஜ் தான் அப்படின்னு, மாத்தி உங்களுக்கு போட மாட்டோம் சாரே... என்றார் சர்வர்.

குபீர் என்று வாந்தி எடுத்தார் சங்கரன்.
தான் நான் வெஜ் இருக்கும் வாளியில் இருந்து சாப்பிட்டோம் என்ற நினைப்பே அவருக்கு வாந்தி வரச் செய்து விட்டது.

பாவம், அதற்கு அடுத்த இரண்டு நாட்களும், வெறும் நேந்திரம் பழம், பிஸ்கட் , டீ லேயே கழித்தார் எனது நண்பர்.

ஆமாம்.
இது ஏன் எனக்கு இருபத்தி ஆறு வருஷங்களுக்குப் பின் நினைவுக்கு வந்து இருக்கிறது ?

ஒன்றுமில்லை....
செப்டம்பர் ஒண்ணாம் தேதி நடக்க இருக்கும்
பதிவர் விழாவில் வெஜ் , நான் வெஜ் இரண்டுமே என்று போட்டு இருக்கிறதே.

சுத்த சைவம் எல்லாம் என்ன செய்வார்கள் பாவம் ... அப்படின்னு சில பேரு மனசுக்குள்ளே கவலைப்படுவாங்க அப்படின்னு மா நாட்டு உணவு குழுவிலே  பங்கு வகிக்கும் திரு பட்டிக்காட்டான், மதுமதி, பால கணேஷ் அவங்களுக்கெல்லாம் தெரியாதா என்ன ?

இருந்தாலும், கவலைபடாதீங்க.. அதற்காகத்தான் திருமதி  ராஜி அவங்க எலுமிச்சை சாதம் கட்டு சோரு கட்டிகிட்டு வாரேன் அப்படின்னு எழுதி இருக்காங்க... 

நானும் முடிஞ்சா தயிர் சோறு கட்டிக்கிட்டு வாரேன். ஆவக்காய் ஊறுகாய் .தொட்டுக்க.


ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

பூக்களைத் தான் பறிக்காதீகசுப்பு தாத்தாவுக்கு மறதி மிகவும் அதிகமாக போய்விட்டது என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு சாட்சி.

அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும் ஒன்றுமே இரண்டு வாரங்களுக்கு பிடி படவில்லை.  ஜெட் லாக் என்பது ரொம்பவே லாகிங்.

விடிந்தபிறகு செய்ய வேண்டிய சமாசாரங்கள் எல்லாம் இரவு ஏழு மணிக்கு பிறகு தான் ஆரம்பிக்கின்றன.  காலை 12 மணிக்கு கண்ணை சுழற்றிக்கொண்டு தூக்கம் வருகிறது.  ஜெட் லாக் இருந்த பத்து பதினைந்து நாட்களுமே நான் அம்போ ....

வந்த அடுத்த நாளே சனிக்கிழமை.  ஒவ்வொரு சனிக்கிழமை வழக்கம் போல  ஹனுமார் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யவேண்டும்.

அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை தட்டை வாங்கிகொண்டு உள்ளே நுழைந்தேன்.  கோவிலுக்குள்  செல்லுமுன்பு அங்கே செருப்புகளை அதற்கான இடம் என்று ஒன்றும் இல்லை. எல்லாம் பரவலாக கிடக்கும். நானும் அதில் என் செருப்புகளை விட்டு உள்ளே சென்றேன்.

அனுமாரை உளாமாற துதித்தேன்.

அசாத்திய சாதக ஸ்வாமின் அசாத்திய தவ கிம் வத.

அனுமனை பற்றி துதிக்ராஜேஸ்வரி அவர்கள் வலைக்கு சென்றால் என்ன
ஸ்லோகம் சொல்லவேண்டுமோ அத்தனையுமே அள்ளி அள்ளி கிடைக்கும்.
அது ஒரு திருப்பதி பெருமாள் கோவில் பிரசாதம் போல.  கை நிறைய மனம் நிறைய கிடைக்கும்.

அர்ச்சனை முடிந்து தீபாராதனை முடிந்தபின், கோவிலை வலம் வந்துவிட்டு வீடு திரும்பினேன்.
கோவிலில் ரொம்பவே கூட்டம்.  நானும் ஏதோ பாதி தூக்கத்தில் இருந்தேன். உடம்பு அசதியாக இருந்ததால் ஒரு ஆடோ பிடித்துகொண்டு வீடு திரும்பினேன்.

காலனியில் எங்கள் பிளாட்  லிப்டில் ஏறும்போது தான் கவனித்தேன்.  கையில் அர்ச்சனை தட்டு கோவில் வாசற்கடையில் திருப்பி தர வேண்டியது கையிலேயே இருந்தது.

அடடா   .....கடைக்காரர் என்ன சொல்வாரோ தெரியவில்லையே என நினைத்துக்கொண்டு அடுத்த வாரம் செல்லும்போது திருப்பி தந்து விடலாம் என்று எனக்கு நானே ஒரு சமாதானம் செய்துகொண்டு வீட்டுக்கு உள்ளே நுழையும்போது இன்னொன்றும் கவனித்தேன்.

கால்களில் செருப்பு ஏதோ தொந்தரவு செய்தாற்போல் இருந்தது.

அடியே  .... என்னவென்று பாரு ...என்று சக தர்மினியை அழைத்தேன்.

என்னது...ஒரு செருப்பு உங்களோடது.  இன்னொன்று வேறு யாரோடதோ ?

ஆமாம். இரண்டும் ஒரே பாட்டர்ன் ஆக இருந்தாலும் ஒன்று பிங்க், இன்னொன்று கருப்பு.  இரவு நேரத்தில் அது கூட கவனிக்க வில்லையே...

என்ன செய்வது..  இதற்காக இன்னொரு தரம் போக முடியுமா...போனாலும், என்னுடைய இன்னொரு செருப்பு அங்கு இருக்கும் என்பது என்ன நிச்சயம்
போய்ட்டு வர ஒரு ஐம்பதும் ஐம்பதும் நூறு ரூபாய் ஆடோ செலவு ஆகும்.
உடம்பும் ஏகத்துக்கு அசதி . உடனே இன்னொரு தரம் செல்ல உடம்பு இடம் கொடுக்காது.

என்ன செய்யலாம் ?

அடுத்த சனிக்கிழமை இதையும் போய் திருப்பி வைத்து விடலாம் என்று யோசித்தேன். சாதாரணமாக, நான் சொல்வதற்கெல்லாம் எதிர் வாதம் புரிந்து வரும் இல்லை, என் கால்களை வாறும்  வாழ்க்கைத் துணைவியும் உடம்பு ரொம்ப சோர்ந்து இருக்கீக. அடுத்த வாரம் போகும்போது இந்த இரண்டு செருப்புகளையுமே வைத்துவிட்டு வந்து விடுங்கள். என்றாள்.

 ஆனால் பாவம், அந்த இன்னொரு செருப்புக்கு சொந்தக்காரர்
அவர் என்னைத் திட்டுவதை மானசீகமாக உணர்ந்து பார்த்தேன்.

அவருக்கும் அனேகமாக என் வயசு இருக்குமோ ? இல்லாவிடினும், கஷ்டம். அவர் என்ன செய்வார், என்னிடம் பணம் இருக்கிறது, உடனடியாக புது செருப்பு வாங்க.அவரிடம் தேவையான பணம் இருக்குமோ , இல்லை என்றால் என்ன செய்வார் ?என்று நினைத்துக்கொண்டே தூங்கிபோனேன்.

அடுத்த ஏழு நாட்கள் சென்று முடிந்தன.

சென்ற சனிக்கிழமை அன்று திரும்பவும் கோவிலுக்குள் நுழையுமுன், அந்த கடைக்கு சென்று தட்டை கொடுத்தேன். கடைக்காரருக்கு ஒரே ஆச்சரியம்.

ரொம்ப சாரி சார், என்று வருத்தப்பட்டு கொடுத்தேனா, அவரோ, நீங்க திருப்பி கொடுத்ததே போதும் சார் என்றார். ஒரு தட்டு இருபத்தி ஐந்து ரூபாய் சார் என்றார்.  எனினும் நான் திருப்பி தந்தது அவருக்கு திருப்தி.

கோவிலில் செருப்புகள் வைக்கும் இடத்தில் நான் போட்டு வந்திருந்த இரண்டு செருப்புகள், ஒன்று என்னுடையது, இன்னொன்று இன்னொருவருடையது.
இரண்டையும் போடப்போனால்...

அங்கே......

அதே போல், .....

என்னுடைய அந்த இடது கால் செருப்பும், (நான் போடாமல் விட்டு விட்டு வந்தது ) இன்னொரு வலது கால் செருப்பும் இருந்தன.

நன்றாக உற்று பார்த்தேன்.  சந்தேகமே இல்லை.  கூட துணைக்கு வந்த மனைவி என் காதுக்கு பக்கத்தில் வந்து இரைந்தாள்.  சீக்கிரம் அந்த இரண்டையும் போட்டுட்டு வாங்க... எங்கனாச்சும் அந்த செருப்புக்கு சொந்தக்காரர் காத்துட்டு இருந்து , உங்களை பாத்துட்டு, வந்து இரண்டு
தர்ம அடி போடப்போறார் என்றார்.

அனிச்சையாக, அக்கம் பக்கம் எல்லா திசைகளிலும் பார்த்தேன். எனக்குள் ஒரு திகில் கலந்த எதிர்பார்ப்பு.  சொன்னால் சிரிக்கத்தான் செய்வார்கள். இருந்தாலும் நிஜம்.

ஏதாவது ஒரு திசையிலிருந்து விவேக் மாதிரி ஒரு ஆஜானுபாக ஒரு ஆள் முதுகுப்பக்கத்திலேந்து ஒரு வீச்சு அருவாள் எடுத்து ...டேய்.. அப்படின்னு என்னை நோக்கி பாய்வது போல ஒரு கற்பனை.....

மனசுக்குள்ளே எனக்கும் உள்ளூர பயம் தான்.    இருந்தாலும் பரவா இல்லை என்று அந்த இரண்டு ஜோடிகளையும் சரியாக சேர்த்து வைத்தேன்.

இதெல்லாம் தேவையா என்று ஒரு பார்வை பார்த்தாள் பார்யாள்.

செருப்புகளை போட்டு விட்டு உள்ளே கோவிலுக்கு சென்று அனுமார் சன்னதிக்கு சென்று அர்ச்சனை முடித்து விட்டு கோவிலை சுற்றி விட்டு திரும்பினேன்.

திரும்பி, செருப்புகள்  இருக்கும் இடத்துக்கு செல்ல என் மனைவி அனுமதிக்கவில்லை.

அவை என்னவேணா ஆகிவிட்டு போகிறது.  நீங்க பேசாம வீட்டுக்கு வாங்க..
என்றாள்.  நீங்க தான் புதுசு வாங்கியாச்சு இல்லையா... 

நானும் பேசாது வந்து விட்டேன்.

இன்று திரும்பவும் அந்த கோவிலுக்கு பிரதோஷம் நிகழ்ச்சிக்காக சென்றேன்.
ஒரு இன்டூயிஷன் ...அந்த செருப்பு என்ன ஆகி இருக்கும் என்று மனசிலே ?
சொந்தக்காரர் வந்து எடுத்து சென்று இருப்பாரா ...  இல்லை, இரண்டு ஜோடிகளுமே அங்கு இருக்குமா என்று பார்த்தேன்.

இரண்டு ஜோடிகளுமே அங்கு இல்லை.   இறக்கை முளைத்து போய் விட்டனவா ?

அந்த செருப்புக்கு சொந்தக்காரர் எனக்கு பனிஷ்மெண்டாக  என்னுடைய இரண்டு செருப்புகளையும் எடுத்து சென்று விட்டாரோ ?

எனக்கு அந்த என்னுடைய செருப்புகள் தேவை இல்லை தான் . இருந்தாலும்,

டேய் சூரி, லைப்லே உனக்கு ஓட்டுவது தாண்டா ஓட்டும்.  எப்பவோ அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.

   பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகாதம

உபரி தகவல்.  பழைய நினைவு.  அப்பாதுரை சாருக்கு கணினியைப் பற்றி எழுதும்போது  வந்தது போல.

பல ஆண்டுகளுக்கு முன்பாக , 1991 லே என நினைக்கிறேன். பர்சானல் மேனேஜர் ஆக இருந்தபோது எனது டிவிஷனில்

எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்கள் திருமணமான பின் தனது கணவர்கள் வேலை பார்க்கும் இடத்துக்கு டிரான்ஸ்பர் கேட்பது வழக்கம். எங்களது நிறுவனத்தில் இதை பொதுவாக அனுமதிப்பதும் வழக்கம்

ஒரு குறிப்பிட்ட ஆண்டு முடிவு நேரம்.
இந்த மாதிரி டிரான்ஸ்பர் கோரிக்கைகள்  ஒன்றல்ல,இரண்டல்ல, பத்துக்கு மேலே வெவ்வேறு கிளைகளில்  வந்து விட்டன.

உடனடியாக அவர்களை டிரான்ஸ்பர் செய்தால், அவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் உடனடியாக வருவதற்கும் வாய்ப்பும் இல்லை.  மேலும் அந்த அந்த பிரிவுகளின் மானேஜர்கள் அவர்களை சப்ஸ்டிட்யூட்  இல்லாமல் விடுவிக்கவும் தயாராக இல்லை.

 யூனியன் பிரஷர் அதிகம்.        மேலே இருந்தும் இந்த பெண்களுக்கு   ஏகத்துக்கு  சிபாரிசு வருகிறது.

அந்த பதினாறு ஜஸ்ட் திருமணமான பெண்களிலே ஒருத்தி என்னிடம் வந்து நேரடியாக கேட்கிறாள்.  

  சார் யூ ப்ளீஸ் அண்டர் ஸ்டாண்ட் த சிசுவேஷன். 
ஒரு மாசம் டிலே ஆச்சுன்னா அடுத்தது வேற ஆடி மாசம் சார்.....

இந்த தர்ம சங்கடமான சூழ்நிலையில் எனது தலைமை அதிகாரியான எனது
பாஸ் அவர்களை அணுகி, என்ன செய்யட்டும் சார் என்றேன்.

பூக்களைத் தான் பறிக்காதீக ... காதலைத் தான் முறிக்காதீக ..
...   என்று பாட ஆரம்பித்தார்.என்ன சொல்றீக சார் என்றேன்.

மெண்டலி தே ஆர் ஆல்ரெடி அவுட்.  அவங்க ஆபீஸ்லே  என்ன வேலை செய்யமுடியும், செய்வாங்க அப்படின்னு எதிர் பார்க்கிறீங்க ?

பட்சிகளை பிரிக்காதீக..  மஹா பாபம் என்றார்.

கண்களை மூடிக்கொண்டு அத்தனை பெண்களுக்கும் (பாவம் இளம் பெண்கள் JUST MARRIED) உடனடி டிரான்ஸ்பார் மற்றும் ரெலீவ் செய்ய சொல்லி ஆர்டர் போட்டேன்.

ஜோடிகளை பிரிப்பது பாவம் என்றார் என் பாஸ் அன்றே.

******************************

அது எத்தனை பாவம் என்பது இன்னொருவரின் செருப்பு ஜோடிகளை  பிரிக்கும்போதும் உணர முடிந்தது.

அந்த செருப்பின் சொந்தக்காரர், அவர் எங்கே இருந்தாலும்.....

சார்... எக்ஸ்யூஸ் மீ.
ஐ நெவர் மெண்ட் டு டூ  இட்.

செருப்புகளை பிரித்தாலும்  பாவம் தான்.

பாவம். சென்ற பத்து நாட்கள் எத்தனை கஷ்டப்பட்டீர்களோ ??

சாரி சார்...

இட் இஸ் ஷியர் நெக்லிஜென்ஸ் .

Negligence is 
to do something which is not to be done, and also
not to do something which is to be done. 

வள்ளுவர் சொல்லி இருக்காரு இல்லையா.


செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.
செய்தக்க அல்ல செயக்கெடும். செயதக்க 
செய்யாமை யானும் கெடும்.
புதன், 14 ஆகஸ்ட், 2013

சுப்பு தாத்தாவுக்கு புரியாத சமாசாரம்.

சுப்பு தாத்தா தெரு ஓரமாக போய்க்கொண்டு  இருந்தார்.

அங்கே ஒரு வீட்டு வாசலில் ஒரு கிழட்டு நாய் ரோடில் ஏதோ விபத்தில் அடிபட்டு கிடந்தது.  பார்த்தால் நல்ல ஜாதி நாய் போலும் .

துடி துடிக்கிறதா என்று அருகில் சென்று பார்க்க முடியவில்லை. கண்கள் திறந்து தான்  .இருந்தன

அப்பப்ப நாய் சத்தம் போட்டது. என்ன வென்று நின்று பார்த்தேன்.

ஒரு தூரத்தில் இருந்து இருவர் அதை கல்லால் அடித்துக் கொண்டு இருந்தார்கள்.

Courtesy: google.
நான் சும்மா எனது வழியை பார்த்துக்கொண்டு போயிருக்கலாம்.  பல சமயங்களில் சும்மா இரு என்ற உபதேசம் ஞாபகத்துக்கு  வருவதில்லை.

முதலில் கண்ணில் பட்ட ஒருவனிடம் சென்று கேட்டேன்

"  அந்த நாய் தான் அடிபட்டு கிடக்கிறதே  ஏன் அதை அடித்துக் கொல்கிறாய் ?"

அவன் என்னைப்  பார்த்தான். நாயைப் பார்த்தான்.
நாயைப் பார்த்தீகள்லே ? என்றான்.
பார்த்துக்கொண்டு தானே இருக்கிறேன். என்றேன்.
துடிக்கிறது தெரியவில்லையா என்றான்.

ஆமாம். ஆமாம். அதற்காகத் தான் கேட்டேன். நீங்களும் அதை ஏன் அடிக்கிறீர்கள் என்று."

"ஒரு ஜீவ காருண்ய அடிப்படையில் தான். இதற்கு மெர்சி கில்லிங் அப்படின்னு பெயரு. .  உனக்கு  புரியாது. போயிடு சீக்கிரம் என்றான்

அவனை விட்டு  நகர்ந்தாலும்,இன்னொருவனும் பக்கத்தில் இருந்து கொண்டு அதை அடிக்கிறானே . அவனை கேட்போம் என்று அவன் பக்கம்  போனேன். இது எனக்கு வேண்டாத வேலை தானே எனக்கு  தோன்றவில்லை.

சார் ... நாயை ஏன் அடிக்கிறீர்கள்.  ?  அதுவே செத்துப்போய்கொண்டு தானே இருக்கிறது ?    துணிந்து நிதானமாகத்தான் கேட்டேன்.

யோவ் பெரிசு ..  உனக்குத் தெரியாது.. "

"ஆமாம். எனக்குத் தெரியாததால் தானே கேட்கிறேன்."

ஒரு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னை கடித்து  விட்டது.எனக்கு  ஊசி,ஆபரேஷன் என்று ஏகப்பட்ட செலவு, டென்சன் வேற .செமத்தியா. ஒரு வருஷம் மன உளைச்சல் .."

அப்ப, அப்பவே அடித்து கொன்று இருக்கலாமே என்று அப்பாவியாய் கேட்டேன்.

அப்ப அந்த நாய் ஓனர் இருந்தார்.  இதுக்கு ஊசி எல்லாம் போட்டு இருக்கேன். அதனாலே உனக்கு ஒண்ணும் ஆகாது.  உனக்கு பயம் ஆ இருந்தா நீ ஊசி போட்டுக்கோ என்று என்னை உதறித் தள்ளிவிட்டார்.

இப்ப அவர் இல்லையா ?

(மேலே தன் கையை உசத்திக் காட்டிக்கொண்டே )

அவர்கிட்டே தான் இந்த நாயை நான் அனுப்பிச்சிட்டு இருக்கேன்.


இந்த தாத்தாவுக்கு அவன் ( சாரி, அவர் ) சொன்னது புரியவில்லை. புரியும் என்ற நம்பிக்கையும் இல்லை.

மேற்கொண்டு நடந்து போனபோது அவரே மனசுக்குள்ளே அசை போட்டார்.


இந்த சுப்பு தாத்தா ஒரு அச மஞ்சம்.

யாருக்காவது புரிந்தால், தாத்தாவுக்கு புரிய வையுங்களேன்.
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

பங்காரு காமாக்ஷி அம்மனை பாட எனக்கு வாய்ப்பு அளித்த திரு துரை செல்வராஜ்

இன்று காலை விடிந்ததுமே கணினியைத் திறந்தேன்.


.

வழக்கம்போல திருமதி ராஜேஸ்வரி அவர்களின் கருட பஞ்சமி பற்றிய தகவல்கள் பல உள்ளன. பெருமாளுக்கு மேலே கொடியிலும் வாகனமாகவும் வீற்றிருக்கும் கருடாழ்வாரின் பதிகம் படித்து மனமகிழ்ந்தேன்.

அடுத்து கண்ணில் பட்டது தஞ்சையம்பதியாக தஞ்சை மா நகரில் இருந்து பதிவுகள் எழுதி வரும் திரு துரை செல்வராஜ் அவர்கள் தஞ்சை மேல வீதியில் அருள் பாலிக்கும் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவிலின் வரலாற்றினை மிக சிறப்பாக வர்ணித்தது மட்டுமன்றி சியாமா சாஸ்த்ரிகள் பாடிய பதிகம் ஒன்றையும் அவர்கள் இட்டு இருந்தார்கள்.

தஞ்சை காமாக்ஷி அம்மன் கோவில் சரித்திரமும் சியாமா சாஸ்த்ரி அவர்கள் கிருதியையும் படிக்க அவர்கள் வலைக்கு செல்ல இங்கே கிளிக்கவும்.

இன்று நான் அடைந்த ஆனந்தத்துக்கு இணையே இல்லை.  தஞ்சையில் பங்காரு காமாக்ஷி அம்மனை தரிசிக்க, அவள் புகழ் பாடும் சியாமா சாஸ்த்ரிகள் அவர்களின் கிருதியைப் பாடவும் எனக்கு பணிக்கப்பட்டு இருந்தது போலும்.

எனக்கே உரித்த வகையில் பாடி விட்டேன்.


நான் பாடகன் அல்ல. இருப்பினும் மனதிலே ஒரு வேகம். ஒரு உத்சாகம்.
ஆதலால், ஸ்ருதியில் தாளத்தில் சுத்தம் இருக்கிறது என்று நான் சொல்ல முடியாது.

காவிரி ஆற்றில் வெள்ளம் அலை மோதுகிறது.  கிராமங்களுக்கு எல்லாம் நீர் வந்து வயல்கள் செழிப்பாக ஆகும் நிலை இன்று.

தஞ்சையைச் சார்ந்த என் மனதிலும் பக்தி வெள்ளம்.
பங்காரு காமாக்ஷி அம்மனை பாட  எனக்கு வாய்ப்பு அளித்த
திரு துரை செல்வராஜ் அவர்கட்கு மனமார்ந்த நன்றி.