ஞாயிறு, 11 மே, 2014

உனக்கென்ன மேலே நின்றாய்


எதைச் செய்தாலும் செய்யப்போகுமுன், இதை செஞ்சு தான் ஆகணுமா என்று நாம் நினைக்கிறோமா தெரியல்ல. 

இன்னிக்கு ஒரு ஆங்கில டி.விலே தலைமை தேர்தல் அதிகாரி திருவள்ளுவர் சொன்னதிலேந்து ஒரு குறள் எடுத்து நம்ம முன்னாடி வைக்கிறார்.

எண்ணித்துணிக கருமம், துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு. 

அவர் எதுக்காக இந்த குறளை சொன்னார் ? அந்த பாயிண்டுக்கு நான் போக வில்லை. அது இப்ப சப்ஜெக்ட் இல்லை. 

காரியம் மட்டும் இல்லை. ஒரு வார்த்தை, ஒரு பேச்சு சொல்லுமுன்னே இது சொல்லனுமா அப்படின்னு கொஞ்சம் நிதானிச்சு பார்க்கணும் இல்லையா. 

சொல்லாத வார்த்தைக்கு நம்ம எசமான். 
சொல்லிய வார்த்தை நமக்கு எசமான் 

அப்படின்னும் வள்ளுவர் விளாசி இருக்காரு .அப்படின்னு தெரிஞ்சுமா இப்படி ???!!

+Chellappa Yagyaswamy
செல்லப்பா யக்ஞசாமி அவர்கள் கிட்டே கேட்கணும் அப்படின்னு நினைச்சுக்கொண்டு இருக்கும்போதே ....

ஒரு நிகழ்வு .

அதை எல்லோரிடமும் பங்கிட்டுக் கொள்ளவில்லை என்றால் எனக்கு  தலை வெடித்து விடும் ரிஸ்க் ..

ஒரு அஞ்சு  நாட்கள் முன்னாடி ஆழ்வார் திருநகர் மெயின் ரோடுலே மெகா மார்ட் லப்ட்லே கட் பண்ணி காந்தி ரோடுலே நுழைந்தேன்.

ரோடு ஓரக்கடை  ஒன்றில்,எலுமிச்சம்பழம் சின்னச் சின்னதா அழகா இருந்தது. கிலோ எத்தனை என்று  கேட்டேன். நூறு ரூபாய்  என்றார்.எத்தனை ஒரு கிலோவில் இருக்கும் என்று கேட்டேன். 

அது திராசையும்  எடைக்கல்லையும்,நீங்கள் நிறுவையின் போது கவனிப்பீர்களா என்பதையும் பொறுத்தது என்று அவர் சொல்வார் என்று  எதிர்பார்த்தேன்.

அவரோ போட்டு பாத்துடலாங்க என்று நிறுத்தார். ஒரு ஐம்பது கிட்டத்தட்ட இருந்தது. ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தந்தார் அந்த பிளாட்பாரம் கடை உரிமை யாளர். 

பணத்துக்கு பர்சைத்   திறந்தேன்.அடடா. மறந்தே  விட்டேன். ஏ . டி.எம்மில் பணம் எடுக்க மறந்துவிட்டேனே என ...

அவரிடம் ஒரு நிமிஷம் இருங்க ..வந்துடறேன்.என்று எதிர்த்தாற்போல் இருந்த ஆக்சிஸ் வங்கி ஏ .டி. எம்மில் அவசர அவசரமாக பணம் எடுத்து பாண்ட் பாக்கெட்டில் திணித்துக்கொண்டு, 

அடுத்த நிமிஷம், கடைக்கு வந்து, பையில் கையை விட்டு ஒரு நூறு ரூபாய் எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு ..

நடக்கும்போது பல யோசனைகள் .  போன தடவை மாதிரி வாங்கிண்டு போய், பிரிட்ஜில்  வைத்துவிட்டு மறந்து  விடக்கூடாது, பத்து நாள் கழிச்சு பார்க்கும்போது எல்லா பழங்களும் மரத்துப்போய் கல் ஆகியிருந்தது நினைவுக்கு  வர,

இந்த  தடவை,போன உடனே நறுக்கி, உப்பு போட்டு ஊற  வைத்துவிட வேண்டும் என தீர்மானம் போட்டுக்கொண்டு,

மேலே  நடந்தபோது,சிந்தாமணி விநாயகர் கோவில் பக்கம் வந்துவிட்டேன். 

வெகு தூரத்தில் இருந்தே   பார்த்துவிட்டேன். எனக்குப் பரிச்சயமான அதே நபர் கோவில் பக்கத்தில், நடு ரோட்டில் நின்று கொண்டு, துண்டை விரித்துப் பிடித்து, வருபவர் போகிறவர் எல்லோரிடமும் , 

திருப்பதிக்கு  போகி றேன்.என்று கிளிப்பிள்ளை மாதிரி அதே  வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு  இருந்தார்.

இவரைப் பற்றி முன்னமேயே எழுதியிருக்கும் பதிவை பார்க்க இங்கே  சொடுக்குங்கள்.

அன்று சஷ்டி . சற்று கூட்டம்  அதிகம்.பக்தர் கூட்டமும் அதிகம். 
பக்தர் மடியிலே தாராளமாக பல பத்து ரூபாய் நோட்டுகள் பிரகாசித்துக்கொண்டு இருந்தன. 

எப்படி எல்லாம் மக்களின் பக்தியையும் அவர்களது கருணை உள்ளத்தையும் வெகு சுலபமாக தனக்குச் சாதகமாக இப்படிப்பட்டவர்கள் எல்லாம் மாற்றிக்கொள்கிறார்கள் என்று தோன்றியது. 

சுப்பு தாத்தா தனக்கெதுக்கு  வம்பு,யார் எப்படி சம்பாதித்தால் என்ன என்று தன வழி போய்  இருக்கலாம். 
அப்படி போய் இருந்தால் ஒரு வேளை இந்த பதிவு வந்து இருக்காதோ என்னவோ ?

பக்கத்தில்  போனேன்.அவருக்கு காதுக்கு என் குரல் எட்டும் பக்கத்தில்  சென்று, " நானும் ஒரு வருடமாக வாரா வாரம் உங்களை ஏதாவது ஒரு கோவிலில்  பார்க்கிறேன். இன்னமுமா திருப்பதிக்குப் போகவில்லை ?"
என்று  கேட்டு விட்டேன். 
கேட்டபின்பு தான் என் குரலில் பதில் தெரிந்துகொள்ளும் அவாவை விட, ஒரு ஏளனம் தான் இருந்தது என்று உடனடி ஆக உணர்ந்தேன் .

அவரோ என்னைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் கவனம் முற்றிலும் வரும் பக்தர்கள் நோக்கியே இருந்தது.  அவருக்கு என் குரல் கேட்காமல் இருந்து இருக்காது.  இருந்தாலும் என் பக்கம் திரும்பாது, அவர் தன காரியத்தில் முனைந்து இருந்தார். 

போன தடவை அவரை என் செல்லில் படம் எடுக்க முயன்ற போது அவர் அங்கிருந்து சட் என்று ஓடிப்போனது எனக்கு நினைவில் இருந்தது.  இந்த தடவை நான் படம் எடுக்க முயலவில்லை. 

அவர் என்னை இக்னோர் செய்துவிட்டார். என்னை , என் கமெண்டை அவர் பொருட்படுத்தவில்லை.  

நானும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து மேலே சென்றேனே தவிர, 
என் மனம் நான் செய்த செயலை விட்டு நகர வில்லை. 

உனக்கு எதுக்கு இந்த வீண் காரியம்.?
யாரோ எதுவோ செய்துவிட்டு போகிறார்கள். அவர்கள் செய்வதில் நீ ஏன் தலை இடுகிறாய். ?

அவர் உண்மையிலேயே திருப்பதிக்கு செல்வதற்குத்தான் பணம் சேர்த்து க்கொண்டிருக்கிராரோ என்னவோ?
அவர் ஏமாற்றுகிறார் என்பது உனக்கு நிச்சயம் ?
யார் தான்  யாரைத் தான் ஏமாற்றவில்லை?

உண்மையிலே வாழ்க்கையிலே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலே எல்லோருமே ஒருவரை இன்னொருவர் சிறிதோ பெரிதோ ஏமாற்றிக்கொண்டு தானே இருக்கிறோம். ?போன வாரம் அந்த டாக்டர் தேவை இல்லாமல் உன்னை சி.டி. ஸ்கானுக்கு அனுப்பித்து,போய், உன்னை ரூபாய் 9000 அழ வைத்தாரே, அது ஏமாற்றுவது இல்லையா ?

இரண்டு வாங்கினால் இன்னொன்று இனாம் என்று சொல்லி, எக்ஸ்பையர் ஆன டேட்ஸ் சிரப்பை உன் தலையில் கட்டின அந்த மால் உன்னை ஏமாற்ற வில்லையா ?அந்த பரிகாரம் செய்தால் நல்லது, இந்த கல் பதிச்ச மோதிரம் போட்டுக்கங்க, இந்தக் கடைலே போய் வாங்கினா அசல் கல் கிடைக்கும் என்று நம்மை குறிப்பிட்ட கடைகளுக்கு அனுப்பி, நாமும் அந்தக் கல், இந்தக் கல் என்று வான வில்லில் இருக்கும் எல்லாக் கலர்களிலும் மோதிரங்கள், வளையங்கள், தாயத்துக்கள் மாட்டிக்கொண்டு இருக்கிறோமே, அவை எல்லாமே ஒரு கணம் பார்த்தால் நம்மை நாமே ஏமாற்றிகொள்வது தானே. !!

எது நடக்குமோ அது நடந்து தான் தீரும் என்று கீதாசார்யன் சொல்லி இருக்கான் என்று நன்றாகத் தெரிந்தும்,  

இது செய்யலாமா அது செய்யலாமா என்று ஜோதிடர் வீடுகளுக்கு நடை நடையாய் நடக்க வைக்கிறார்களே !! அதெல்ல்லாம் ?????

சே.. சே.. என்ன காரியம் செஞ்சு விட்டோம். 
அப்படி என்று மனம் வெகுவாக உறுத்த துவங்கி விட்டது. 

மற்றதில் கவனம் செல்லாது, வரும் வழி எல்லாமே, மனசு டேய் சூரி, தப்புடா ..என்றது. 
நான் நடந்து கொண்டு இருந்தேன். வேற எண்ணங்கள் வரவில்லை. 
ஒரு டர்னிங் வந்தது. லப்ட்லே திரும்ப, அங்கே ப்லாட்பார்ம்லே ஒரு நடுத்தர வயதினராக இருந்தார். பக்கத்தில் அவர் மனைவியாக இருக்கும். ஏதோ கடு கடு என்று இருவரும் பேசிக்கொண்டு இருப்பது முதலில் ஏதோ சன்னமாக கேட்டது.  பக்கத்தில் போன போது கொஞ்சம் தெளிவாக கேட்டது. 

அவர்களைக் கடக்கும்போது, அவர் தன அருகில் இருக்கும் மனைவியிடம் சொல்கிறார்.

" நீ சொன்னது தப்புன்னா தப்பு தான். வேற ஒன்னும் நான் சொல்றதுக்கு இல்லை."

என்ற வாசகம் என் காதுகளில் தெளிவாக கேட்டது. 

திடுக்கிட்டேன். எனக்காகவே சொன்ன அசரீரி யோ இது ?

பெருமாளே !! என்னை மன்னித்து விடு. 

ஒரு நிமிஷத்துலே மனசுலே தோன்றிய ஆணவம், ஏதோ நான் தான் தர்மத்துக்கு எல்லாம் வாச்மேன் என்ற நினைப்பு எல்லாமே.. எனது தவறு தான். 

அழவில்லை.  ஆனால் என் கண்கள் பார்க்க இயலவில்லை. என் மனம் அழுததை நிறுத்த முடியவில்லை. 

வயசு 73 ஆகிவிட்டது. இன்னமும் வேகம் இருக்கிற அளவுக்கு விவேகம் இல்லையே..

ஒரு சாட்டை அடி யாரோ அடிக்கிறாரோ என்ற உணர்வு. 

வீட்டுக்குப்போய் கதவைத் தட்டினேன்.  நடந்ததை சொல்வோமா வேண்டாமா என்று ஒரு நிமிஷம் யோசனை. 
முதலில் கை கால் கழுவிக்கொண்டு, சாப்பிட்டு விட்டு பிறகு மற்றதை கவனிப்போம் என்று முடிவு செய்து கொண்டு.
போட்டு இருந்த 
பாண்ட் சர்டைக் கழற்றி விட்டு, பின்  பர்சை எடுத்து மேசையில் வைக்க, பாண்ட் பாக்கேட்டில் கையை விட்டேன். 

திடுக்கிட்டேன்.   என் பரபரப்பைப் பார்த்த என் அகமுடையாள் கேட்டாள் 

என்ன என்ன ????


ஆக்சிஸ் ஏ .டி.எம்.  ..  பணம்.. 

மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை. 

உனக்கென்ன மேலே நின்றாய்.  ஓ நந்தலாலா 

இவங்க கிட்டே ஒரு செல் அடிச்சு பார்ப்போமா ?
+Geetha Sambasivam +Durai A 
+kg gouthaman +Balu Sriram 
+Madhu Sridharan +Adhi Venkat 
+Ranjani Narayanan 
+In Ar
என்ன சொல்வாங்க அப்படின்னு கேட்போமா ?
*************************************************************************88

Knowledge cleanses our mind and brings peace. 

Be happy, and 

don't keep finding faults in others.

 - Sri Sri Ravi Shankar