செவ்வாய், 29 அக்டோபர், 2013

தீபாவளிக்கு உனக்கு என்ன வேண்டும் ?இன்னிக்கு மேடம் ராம லக்ஷ்மி  லைக்கு சென்றேன். மிகவும் அசத்தலான போடோ ஒன்று. கல்கி தீபாவளி மலர் லே வந்திருக்கு.  

எனக்கு இதெல்லாம் வேண்டாம் என்றது செல்லம். 
அம்மாவுக்கு புரியவில்லை. 

எனக்குப் புரிந்தது. இப்படி இருக்குமோ ?  என்று யோசித்தேன்.  ஒரு add-on செய்தேன்.   
அப்பறம் தான் பார்த்தேன். இது கர்ல் பாப்பா இல்லையா ?  தப்பு தப்பு ..என்று கன்னத்தில் போட்டுக்கொண்டேன். 
அடுத்து ஆதி வெங்கட் வலையில் தீபாவளி பக்ஷணம் தன் செல்லத்துக்காக பண்ணி இருக்கிறாள். 
சுப்பு தாத்தாவுக்கும் மீனாச்சி பாட்டிக்கும் முறுக்கும் தேன்குழல், காரசேவு ரொம்ப பிடிக்கும்.
அந்த செல்லமோ வேறு எதோ வேண்டும் என கேட்பது போல க்யூட் ஆக இருக்கிறது.  அதுவும் ஒரு வேளை அப்பா டில்லியிலிருந்து ரசகுல்லா  கொண்டு வருவார என்று அடம் பிடிக்கிறதோ ?
ஸ்ரவாணி வலை தளத்தில் திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் பின்னூட்டத்தை அந்த குழந்த படித்து விட்டதோ ??  இன்னிக்கு பாதாம் அல்வா அப்பறம் டைமண்ட் பிஸ்கட். சூப்பர். சீக்கிரம் எல்லோரும் அங்கே போங்க..தீர்ந்து விடப்போகிறது.  

ஸோ க்யூட்.  

 வெங்கட் நாகராஜ் சார்...வரும்போது கண்டிப்பாக ரச குல்லா உங்க ராசாத்திக்காக வாங்கி வாருங்கள்.

அமெரிக்காவில் உள்ள என் பேரனிடம் உனக்கு தீபாவளிக்கு என்ன வெடி வாங்கபோறே..என்றேன். 
இதெல்லாமே வேஸ்ட். என்றான்.
ஏண்டா ?
நீயும் பாட்டியும் போடற சண்டையே பெரிய வெடியா இருக்கு. 
அப்ப உனக்கு என்னதான் வேண்டும் ..? 
Battlefield 4 அப்படின்னு ஒரு game வந்திருக்கு. 100 டாலர் தான். அது. அப்பா கிட்டே சொல்லி வாங்கி கொடு என்கிறான். 
அது என்ன என்று பார்த்தேன். 


என் வீட்டுக்காரியை பார்த்தேன். 

"இப்ப எல்லாம் குழந்தைங்க நம்ப காலம் மாதிரி இல்ல .

அவகளுக்கு என்ன புடிக்கும் அப்படின்னு சொல்லவே முடியாது. "

அதுவும் சரிதான். 

நம்ம காலத்துலே 

பிடிச்சதெல்லாம்  
இது தான். 

நம்ம ஆடக் கத்துக்கொடுப்போம். அந்த செல்லங்கள் என்னமா ஆடும் ?
ஒரு சாம்பிளுக்கு இங்கே பாருங்க.

நாட்டியத்தை கடைசி வரை முழுமையாக பார்க்கவும். கன்க்ராட்ஸ். இந்த செல்லத்தின்  அப்பா அம்மா கொடுத்து வைத்தவர்கள் இல்லையா .


DEEPAVALI GREETINGS  TO ONE AND ALL OF WEB FRIENDS.

எங்கள் நண்பர்கள், உறவினர் எல்லோருக்கும் எங்களது 
உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

சனி, 19 அக்டோபர், 2013

எல்லாமே சங்கீதம் தான்எல்லாமே சங்கீதம் தான் அப்படின்னு ஒரு சினிமா பாட்டு கேட்டு இருப்போம் இல்லையா.? சிந்து பைரவி படத்துலே...

அந்த எல்லாமே என்பது எதை குறிக்கிறது ?

கர்நாடக சங்கீதமா, கிராமியப் பாடல்களா, ஐரோப்பிய இசையா, ஆப்ரிகன் ம்யூசிக்கா, ராப்பா, பாப் ஆ ? குத்து பாட்டா ?

அப்படின்னு ஒரு பக்கம் சுவையான விவாதம் இருக்கிறபோது,

இன்னொரு கோணத்திலே பார்த்தேன்.
எல்லாமே அப்படின்னா,
வாழ்க்கையிலே , நமது அன்றாட வாழ்க்கையிலே நடக்கிற ஓடுகிற, உட்கார்ந்திருக்கிற விஷயம் எல்லாமே சங்கீதம் தான் அப்படின்னு நினைக்கிறேன்.

சங்கீதம் என்கிற சொல்லைப் பிரித்துப் பார்த்தா, சங் + கீதம் என்று பொருளாகும்.

சங் என்ற சொல்லுக்கு  சேர்ந்து என்று  பொருள்.
கீதம் என்ற சொல் பாட்டு

ஒருவரை ஒருவர் சேரும்போது வருவது  சுகம். அது
தருவதெல்லாம் இன்பமயம். மன்னவன் வந்தானடி என மனதில் எழும் மின்னல்களை தோழியிடம் சொல்லும் காட்சி

இன்பத்திலே தான் சுகம் உண்டு என்பதில்லை. நம்மை உற்றவர் சார்ந்தவர் துயர் உறும்போது அவர்தம் துயரிலே பங்கு கொண்டு அவருக்கு உறுதுணையாய் இருப்பதும் சுகம் தான். வாழ்வின் பொருள் அது தான்.

ஒரு இரண்டு நாட்கள் முன்பு, மதிய வேளையில், மயிலையில் மாட வீதியில் இருபக்கமும்  வண்ண வண்ண பொம்மைகள் நவ ராத்திரி விழா முடிந்தபின்னும் நூற்றுக்கணக்கில் ஜொலித்துக்கொண்டு இருந்தன. காந்தி, நேரு, பாபா  மட்டுமன்றி, வாமணர், நரசிம்மர்,பரசுராமர், இராமர், கிருஷ்ணர், பரசுராமர், உள்ளிட்ட  தசாவதாரமும் எந்த திசையில் எந்த வீட்டிற்கு போக வேண்டும், இனி தாம்  அவதாரம் செய்யப் போகிறோம் என்று காத்திருந்தன.
கொலஸ்ட்ரால் பற்றி கவலையே படாத பானை வயிறு பாபுலர் செட்டியார் சின்னதாக பெரிதாக பல சைசுகளில் இருந்தார்.

ஒரு கணம் ஏதாவது வாங்கலாம் என்று நினைத்த நான் சரவணா பவன் போர்டு பார்த்த உடன் உள்ளே போய் சூடா ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டு பிறகு யோசிப்போம் என்று ஹோட்டல் படிகள் ஏறி உள்ளே நுழைந்தேன்.

மணி மூன்றை நெருங்கிய போதிலும் இன்னும் சாப்பாடு மேசைகளில் ஆங்காங்கே ஓரிருவர் இருந்தனர்.  இடது பக்கமாக டிபன் மேசைகள்.  மேசையின் ஒரு பக்கத்தில் இரண்டு பேர் என நாலு நபர் உட்காரும் அமைப்பு.

ஒன்றிண்டு மேசைகள் காலியாக இருந்தாலும்,  அதோ.. ஒரு வயதான தம்பதியர் ஒரு மேசையின் பக்கத்தில். என்னை வசீகரித்தனர்.  அவர்கள் எதிரே நானும் உட்கார்ந்தேன்.

எதிரே உட்கார்ந்து இருந்த  வைஷ்ணவர். அதிக பட்சம்  ஒரு அறுபது  வயது இருக்கலாம்.  திவ்யமாய் நெத்தியில் தீர்க்கமாய்  திருமண் . பக்கத்தில் அவர் பார்யாள். சாக்ஷாத் தாயாரைப் பார்ப்பது போல்  அழகு, அமைதி, அடக்கம், அருள் அத்தனையும் ஒருமித்து  அந்த அம்மா  முகம்.

ஒரு விதமாக அந்த இருக்கையில் நான் செட்டில் ஆகும் நேரம்.

அதற்குள் எனக்கு என்ன வேண்டும் என்று ஆர்டர் எடுப்பவர் கேட்க ஒரு காபி கொடுங்கள், சக்கரை பாதி போடுங்கள் என்று சொன்னேன். அவர்களிடம் அந்த ஆர்டர் எடுப்பவர் எதுவும் கேட்கவில்லை.  முன்னமேயே ஆர்டர் பண்ணி இருப்பார்கள் போலும்.

அப்பொழுது தான் கவனித்தேன்.  அந்த பெரியவரின் வலது கை நடுங்கி கொண்டு இருப்பதை பார்த்தேன். பார்க்கின்சன் சின்றோம்  என்று உடனே புலப்பட்டது. மாமிக்கு நான் அவரை உற்று கவனிப்பது உறுத்தியது போலும் .
சட் என்று அவர் வலது கையை பிடித்து ஒரு நிலைக்கு கொண்டு வந்தார்.

சுப்பு தாத்தா சும்மா இருந்திருக்கலாம். ஏதோ அவர்கள் எனக்குத் தெரியாதவர்கள். நான் காபி சாப்பிட்டேனா, கிளம்பினேனா என்று என் காரியத்தைக் கவனித்து இருக்கலாம்.

என்ன மாமி, மாமாவுக்கு பார்கின்சனா, டோபா சாப்பிடுகிறாரா என்றேன். அப்பொழுது தான் அந்த மாமி என்னை ஒரு தீர்க்கமாக பார்த்தாள்.
எனது பார்வை மூலம் அவர்கள் என்ன புரிந்துகொண்டார்களோ, தெரியவில்லை.  நல்ல வேளை. உங்களுக்கென்ன என்று பேச்சை முறிக்கவில்லை.

ம் என்று ஒரு எழுத்தில் மாமி பதில் சொல்ல,  மாமா என்னைப் பார்த்தார்.  நான் அவரைப்பார்த்தேன்.

அவர் வலது கை கொஞ்சம் அதிகமாகவே நடுங்கியது. மாமி கைப்பையை திறந்து ஒரு டாப்லேட்டை எடுத்து அவர் வாயில் போட்டார். இத சாப்பிட்டு விடுங்கோ . கொஞ்சம் அஞ்சு நிமிஷம் கழிச்சு வடை வந்தப்பறம் கூட சாப்பிடலாம் என்கிறார்.

திஸ் இஸ் கில்லிங் மி என்று அவர் என்னிடம் அந்த நோயின் உபாதை பற்றி சொல்ல, நானோ, ப்ளீஸ் டோண்ட் ஒர்ரி. டென்சன் வில் அக்ரவேட் என்று எனக்குத் தெரிஞ்ச மெடிகல் ஞானத்தை வெளிப்படுத்த ...

உன்மையைச் சொல்லப்போனா....

..  எனக்கும் கொஞ்சம் டெந்சன் ஆனது. எழுந்து அந்த சர்வர் வரும் திசையை பார்க்கிறேன்.

ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி, எனக்கும் இது வரும்போல சில சிம்டம்ஸ் இருந்தது.  டாக்டர் ஏ .வி. சீனிவாசனை விழ்ந்து அடிச்சுண்டு ஓடிப்பார்த்தது நினைவுக்கு வந்தது. இந்த பார்கின்சன் வருமோ என்பதற்கு ஒரு அஞ்சு அறிகுறிகள் . அதிலே மூன்றாவது இருந்தால் தான் பார்க்கின்சன். மத்ததெல்லாம் வெறும் ஆன்சைடி ப்ராப்ளம். என்று அவர் சொன்னதும் நினைவுக்கு வந்தது. 

ம் என்றார் மாமா  மாமியிடம்.  உருமினாரோ ??
சர்வர் ஏன் டயமாக்கிரார் என்று அந்த ம் க்கு அர்த்தம்.
இப்போது வந்துடுவா. பொறுத்துக்கோங்க. என்றாள் மாமி.

சர்வர் இப்போது வந்தார். மாமி முன்னால் சப்பாத்தி , மாமா முன்னால் ஒரு சாம்பார் வடை வைத்துவிட்டு போய் விட்டார்.

மாமி சப்பாத்தியை பிட்டு சாப்பிட ஆரம்பிக்க, மாமா, தன் வலது கையில் ஸ்பூனால் வடையை பிட்டு எடுக்கப் பார்க்கிறார். சிறிய துண்டு வடை ஸ்பூனில் நில்லாது தட்டில் விழுகிறது. திரும்பவும் எடுக்க பார்க்கிறார். கை நடுக்கத்தில் வடை ஸ்பூனில் வர முடியவில்லை.

யு கட் அனதர் ஸ்பூன். இன்னொரு ஸ்பூன் அந்த கையிலே வைத்து அதை தட்டில் அழுத்திக்கொண்டு , இந்த ஸ்பூ னால் எடுங்கள். என்றேன்.

மாமி என்னைப் பார்த்து விட்டு, அங்கு வந்த சர்வரிடம் இன்னொரு ஸ்பூன் என்றார்.

வந்த சர்வர் என்னிடம் காபியை வைத்துவிட்டு, ஸ்பூன் எடுக்க போனார்.

யாரிடம் வைத்தியம் பார்க்கிறீர்கள் என்று நான் தொடர்ந்தேன்.

அபாலோவில்..

யார் டாக்டர்... என்ன மருந்து...?

சொன்னார்கள். சரியான மருந்து தான். அவர்கள் சொன்ன மருத்துவரும் பிரபல நரம்பியல் நிபுணர் தான்.

இன்னொரு ஸ்பூன் வந்தது.  ஒன்றை இடது கையில் வைத்து, அந்த கையால் வடையை எடுக்க முயற்சித்தார்.

இப்ப பரவா இல்லை. இருந்தாலும் அந்த துண்டு வடை வாயில் போவதற்கு அவர் பிரும்ம பிரயத்னம் செய்ய வேண்டி இருந்தது.

இந்த பக்கம் தான் இருக்கிறீர்களா...  ?  ஒரு சிநேக பாவத்துடன் வினவினேன்.

ஆமாம்.  இங்க அடுத்த வீதி தான்.

வேற யாரும் துணைக்கு இல்லையா... நீங்களே இரண்டு பேரும் வந்து சாப்பிடுகிறீர்கள்?

எல்லாம் இருக்கா.  ஆனா வேணும்கறதை நேரத்துக்கு கொடுக்கணும் இல்லையா..   

புரிந்தது. ஒரு கணம் மௌனித்தேன்.

இப்ப ஒரு வடை  துண்டு அவர் கை நழுவி கீழே விழுந்தது. நல்ல வேளை . தட்டிலேயே விழுந்தது.

நீங்க அந்த ஸ்பூனை எங்கிட்டே கொடுங்கோ,ன்று சொல்லி கணவரிடமிருந்து அந்த ஸ்பூனை வாங்கினார்.

அடுத்தடுத்து ஒரு இரண்டு மூன்று வில்லைகளாக, அந்த வடையை சாம்பாரில் நனைத்து அவர் வாயில் ஊட்டினார் மனைவி.

மாமா நான் என்ன சொல்லப்போகிறேன் என்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார் போல் தோன்றியது.
"மாமா. ஒண்ணும் பயப்படாதீங்க.. இது லைப் த்ரெட்டெனிங்க்  கிடையாது. தொந்தரவு தான் ஜாஸ்தி.  என்னோட மாமா ஒத்தர் , அவரே மைசூர்லே டாக்டர். அவருக்கே இது வந்து விட்டது. ஒரு இருபது வருஷம் அதோடயே தான் வாழ்ந்தார்." என்றேன். 

ஏன் இருக்கோம் அப்படின்னு தோணறது . இருந்தால் நன்னா இருக்கணும். இரண்டாம்  தடவையா  பேசினார் மாமா.

மாமா, அப்படி நீங்க பேசக்கூடாது .நான் உங்களை விட பெரியவன் . ஒன்னு சொல்ரேன் கேளுங்கோ. நீங்க உங்களோட நினைப்ப கொஞ்சம் டிபரண்டா மாத்திக்கோங்க.  இப்படி நினைச்சுப்பாருங்கோ." நான்  புண்யம் பண்ணி இருக்கேன் . அதுனாலே தான் இந்த மாதிரி பார்யாள் கிடைச்சிருக்கா. ராமனுக்கு  சீதா பிராட்டி மாதிரி . அவ இருக்கும்போது எனக்கென்ன  கவலை ?ஐ ஆம் ஒ கே என்று  ஆடோ சஜஷன் சொல்லிக்கொள்ளுங்கள். "? 

எங்க டாக்டர் மாதிரி நீங்களும் பேசறீர்..  அவஸ்தைப் படறது பொறுக்கமுடியவில்லையே..ஸ்வாமி...   

 "தட்  இஸ் ஹிஸ் கன்செர்ன் . நான் மேலே கையை உசத்தி  காமிச்சேன்."எல்லாம் பெருமாள் பார்த்துப்பார். கவலைப் படாதீர்கள். ."

உங்க ஆசிர்வாதத்திலே தான் அது நடக்கணும். ஆனா எனக்கு ஒரே கவலை தான்..  இப்ப அந்த அம்மா பேசினாள்.

நான் அந்த அம்மா முகத்தை பார்த்தேன்.

நீங்க சொல்ற பெருமாள் என்னை முன்னாடி கொண்டு போயிடக்கூடாது.
இவர் இருக்கற வரைக்குமாவது நான் இருக்கணும்.  நீங்க அந்த ஆசிர்வாதம் பண்ணுங்கோ என்றாள்.

நம்ம தர்மத்திலே அது மாதிரி ஆசிர்வாதம் பண்ண முடியுமோ..யோசனை ஆயிடுத்து.

இரண்டு பேருமே நூறு வயசு இருப்பேள். பெருமாள் அனுக்ரஹம். என்றேன்.

என்ஆசிர்வாதத்தை காதில் வாங்கிகொண்டாளா எனத் தெரியவில்லை. அந்த மாமி தொடர்ந்தாள். 

ஆத்திலே புள்ளை, மாட்டுப்பொண் எல்லாம் இருக்கா. வேலைக்கு போறா இரண்டு பேரும். 

இதே சப்பாத்தி, வடை எல்லாமே ஆத்திலேயும் பண்ண முடியும் . ஆனா  நேரத்துக்கு கிடைக்கணும் ஏதாவது சாப்பிட்ட பின் தான்  டாப்லட் . இந்த சிச்ரூஷை நான் தான் செய்யணும். இங்கே வந்தால் தான் அது முடியும்.  .  


சட சட அப்படி மாமி வார்த்தைகளை உதிர்த்தபோது அவர் கண்கள் பனித்தன. ஒரு க்ஷணத்தில் புடவைத் தலைப்பை எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டார்.


நாராயணா. நாராயணா.. என்றேன்.

அப்பாதுரை   சார் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி எழுதிய கதை இங்கே கண் முன்னாடி வந்து நின்றது.  அது டிபரண்ட் டைமன்சன்.

இன்னிக்கு கா லை லே சுந்தர்ஜி எழுதிய சுபாஷிதானிலே வால்மீகி எழுதிய இராமாயணம் அயோத்யா காண்டம் ஒரு ஸ்லோகம்.. அதைப் படிச்சேன்.

 ஒரு ஸ்திரீக்கு கணவன் தான் எல்லாமே அப்படின்னு.  அவனை உத்தேசித்துத் தான் எல்லாமே ..  

அவர் மேற்கோள் காட்டிய ஸ்லோகமும் அர்த்தமும் இங்கே.

அந்த யுக தர்மம் வேற.  இந்த யுகம் வேற தர்மம் வேற .யதார்த்தம் இன்னமும் வேற.

ஒரு மனைவிதான் தன்  கணவனை ஆஸ்ரயிச்சு எப்போதும் இருந்தாகணும் என்று தான் இல்லை. ஒரு கணவனும் தன் இல்லாளின் உதவிகளை நம்பித்தான் இருக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் பலர்  வாழ்க்கையில் உண்டாகின்றன.

ஆனா மனித நேயம் ஒன்று தான். அது யுகங்களுக்கு அப்பாலும் சத்யம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அது தான் சங்கீதம்.
சேர்ந்து பாடும் கீதம்.
சுகமோ சோகமோ, சேர்ந்து அனுபவிப்பது.

அந்த சோகத்தின் சுகத்தை அதை உணர்ந்தவர் மட்டுமே எழுதமுடியும்.
படிக்கமுடியும். உணரமுடியும்.

சொன்னது கதை அல்ல. உண்மை சம்பவம்.

பின் வரும் இது வேறல்ல. 


லதா மங்கேஷ்கர் பாடும் இந்த பாடலில் நடுவில் வரும்  ஒரு சில வரிகள் படத்தில் வரும் இல்லாளின்  மன நிலையை இந்த மண்ணின் பண்பினை பிரதி பலிக்கிறது.


chodke thuje koyee jannath na loom
there badhlE mein dhuniyaan ki daulath na loon.

உன்னைப் பிரிந்து எனக்கு ஒரு ச்வர்க்கமும் வேண்டாம்.
உனக்கு பதிலாக உலகின் எந்த செல்வமும் வேண்டாம்.
உன்னால் கிடைத்த இந்த உலகு.
இதில் கிடைக்கும் சுகம் எனக்கு சிருங்காரம்  ஸ்வர்க்கம்.


செவ்வாய், 15 அக்டோபர், 2013

ஏதோ எழுதுகிறேன்.
    நவராத்திரி நவ ராத்திரி மட்டுமல்ல, நவ பகல்லேயும் சுப்பு தாத்தா பிஸி.

    பிஸி அப்படின்னா கன்னட பிஸி இல்லை. கன்னடத்துலே பிஸி அப்படின்னா சூடா என்று அர்த்தம்.

    பிஸி பேளா ஹூளீ..  சூடான சாம்பார் சாதம்.

   சுப்பு தாத்தா எதுலே பிஸி அப்படின்னா,  எல்லா வலைகளிலும் பாடல்கள்.  எதைப் பாடறது, எதை விடறது
   அப்படின்னு திகைச்சுப்போய் இருந்துட்டாரு.
*****************************************************************************
    ஒரு பத்து வருசமா தமிழ் வலை உலகிலே நல்ல கவிதைகள், குறிப்பாக,  மரபுக் கவிதைகள் அதுவும் பொருள் சார்ந்த கவிதைகள் தென்படும்போது பாடாமல் இருக்க முடியாது.   இதுவரை சுமார் ஆயிரம் கவிதைகளுக்கு மேல் மெட்டு போட்டு எனது யூ ட்யூபில் இணைத்திருக்கிறேன் என்றால், அது எனது சாதனை இல்லை.  இந்தக் கவிதைகளை எழுதி என்னைப் பாட வைத்த கவிஞர்களையே அந்த பெருமை சாரும்.   தமிழ் வலையில் இதுவரை எனக்கு ஞாபகம் உள்ளவரை ஒரு இருபது முதல் இருபத்தி ஐந்து வலைப்பதிவாளர்கள் கவிதைகளும் இதில் அடக்கம்.

    அதற்காக, எங்கே பார்த்தாலும் என்ன புலவர் இராமானுசம் அல்லது கவிஞர் பாரதிதாசன் போல எல்லாரும் கவிதைகள் எழுத இயலுமா என்ன ?  இல்லை. அந்த அழகான தமிழ்ச் சொற்களுக்கென்றே ஒரு சுரங்கம் வைத்திருக்கும் சிவ குமாரன் போல் எழுத இயலுமா என்ன ?   
இன்று காலை வலைச்சரத்தில் நான் பாடி  ஒரு வினாயகன் பாடல் அவர் வலையில் ஈர்க்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. நான் எதிர்பாராத ஒரு பாராட்டு. ஈர்ப்பதற்கு காரணம் அப்பாடலின் பொருட்செறிவு.  கொஞ்சம் அந்த சிந்து பைரவி ராகம். அவ்வளவே.

    பாடல்கள், ஒரு சந்தம், எதுகை மோனை இவற்றிற்கு கட்டுப்பட்டு இருந்தால்,  மெட்டு போடுவது கொஞ்சம் சுலபம் தான்.  இருப்பினும் மரபு சாரா கவிதைகள் என்னவோ மனதை ஒரு பக்கம் இழுக்கத்தான் செய்கிறது.  இந்தக் கவிதைகளை சும்மா வார்த்தை ஜாலம் என்று ஒதுக்கித் தள்ள இயலுமா என்ன ?  சொல்ல வந்ததை ஒரு சுவையுடன் சொல் அலங்காரத்துடன் சொல்லும்
இக்கவிதைகளுக்கு பல உதாரணங்கள் சொல்ல இயலும் என்றாலும் மனதில் வருவது ரிஷபன் கவிதைகள், கிரேஸ், இளமதி, ஹேமா மற்றும் வேதா இளங்கா திலகம்,   ஒரு தடவை மகேந்திரன் என்று நினைக்கிறேன்.  அவரது கவிதைக்கு மெட்டு போட்டு விட்டு பாடிய பிறகு அதையே ஒரு வாரம் ஹம்மிங் செய்து கொண்டு இருந்தேன்.  தூத்துகுடியில் பிறந்து அமெரிக்காவில் ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி புரியும் திருமதி காட்டாறு அன்பு அவர்கள் கவிதை நான் அதற்கு இட்ட மெட்டு அது தான் தனக்குப் பிடித்தது இன்று வரை என்று என் மனைவி சொல்கிறாள். 

     இத்தனை கவிஞர்களில் ஓர் இருவரைத் தவிர வேறு எவர் முகமும் நான் அறியேன். நான் அறிவதெல்லாம் அவர் தம் கவிதைகள் தான். அவர் தம் தமிழ் உணர்வு தான்.

    இவற்றையெல்லாம் விட ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் தொடர்ந்து கடந்த பத்து வருடங்களாக பக்தி பாடல்கள், கவிதைகள்  எழுதும் கவி நயா அவர்கள் வலை என்னைப் பொருத்த அளவில் மதுரை மீனாட்சி கோவில் நடுவே அமைந்த பொற்றாமரை குளம் போல் .   1961 ம் வருடம் நான் வேலையில் சேர்ந்த போது மாலை வேளைகளை அந்தக் கோவில் தடாகப் படிகளிலே உட்கார்ந்து எனக்குத் தெரிந்த அம்மன் தோத்திரங்களை பாடி மகிழ்வேன். அப்போதெல்லாம் இப்போதைய கூட்டம் கிடையாது.    தினமும் நான் பாடும்பொழுது என்னைச் சுற்றி ஒரு பத்து பேர் உட்கார்ந்திருப்பர்.  அதுவே எனக்கு அந்த இறைவி அருள் போல புல்லரிக்கச் செய்துவிடும்.

    கவி நயா அவர்கள்  எழுதும் கவிதைகள் படிப்போர் நெஞ்சில் ஒரு ஆழ்ந்த ஆன்மீக உணர்வுகளை எதிரொலிக்கச் செய்வதில் சிறந்து விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது.  இவரது ஒரு எழு நூறு பாடல்களுக்கு மேல் நான் மெட்டு இட்டிருப்பேன் என நினைக்கிறேன்.  ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதத்தில் ஒரு புதுமையை ஒரு ஆன்மீக கருத்தினை,  உலகமெல்லாம் விரவிக்கிடக்கும் அவ்விறைவியின் சான்னித்தியத்தை வெளிப்படுத்துகின்றன.

ஒவ்வொரு நாளும் காலை எழுந்த உடன் கணினியைத் திறந்த உடனே நான் பார்ப்பது திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வலைதான்.  அதில் நான் கண்ணுறும் பல தோத்திரங்கள் நான் படித்தவை என்றாலும் அவைகள் என்னவோ என்னை உடனேயே அவற்றினைப் பாடிட என்னை உந்துகின்றன. அதுவும் அந்த இறைவன் கருணையே.இன்று கோவிந்தராஜ பெருமாள்  தரிசனம்.சீக்கிரம்  செல்லுங்கள்.


     அண்மையில் திருமதி பார்வதி இராமச்சந்திரன் கவிதைகளை நவராத்திரி சமயத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய இரு வலைகளுமே ஆலோசனை, தொகுப்பு என்ற பெயர் கொண்டவை.   அவற்றினைப்பார்த்த உடனேயே பாடவேண்டும் என்ற ஒரு உந்துதல் ஏற்பட்டது.  பாடிவிட்டேன்.

      மாரியம்மனைப் பற்றி ஒரு கிராமீய கவிதை நேற்று எழுதியிருக்கிறார்கள். 

     அதை நான் பாட நீங்கள் கேளுங்கள்.

    
   ஏதோ பாடுகிறேன்.  நான் ஒரு பாடகன் அல்ல.  எனக்கு நிறைவாக ஸ்ருதியோ, லயமோ, தாளமோ தெரியாது என ஒப்புக்கொள்வதில் ஒரு தயக்கமும் இல்லை.  இருந்தாலும் பாடுகிறேன்.

     என் பாட்டுக்களையும் யூ ட்யூபிலே இதுவரை ஒரு லட்சத்து அம்பதாயிரம் பேர் கண்டு இருக்கிறார்கள்.  அதை பெருமையை இந்த கவிதை எழுதியவர்களுக்கே நான் சமர்ப்பிக்கிறேன். 

செவ்வாய், 1 அக்டோபர், 2013

யாருனாச்சும் கேக்கறீங்களா ?


   இனிமேலும் இந்த 17 ஈ பஸ்ஸுக்காக காத்திருக்கமுடியாது என்று கால்கள் திட்ட வட்டமாக சொன்னபின்னே    சுப்பு தாத்தா வட பழனி பஸ் ஸ்டான்ட் வாசலுக்கு வந்தார்.

    அந்த ஷேர் டாக்ஸி வட பழனிலேந்து மௌன்ட் ரோடு வரைக்கும் போறானே... அவன் ஏன் வரக்காணோம்.

    என்று ஏதாவது ஒரு ஷேர் டாக்ஸி வராதா என்ற சபலம் வேற மனசை itching .    இத்தனைக்கும் மத்தியிலே அப்பப்ப ஆடோக்கள் பக்கத்தில் வந்து என் முகத்தை பார்த்து Red signal ஒரு நிமிஷம் நின்று விட்டு    green signal  ஏதோ க்ரீன் சிக்னல் கிடைத்து விட்டது போல சென்றன.


    பக்கத்தில் ஒரு போலீஸ் காரர் அவரிடம் கேட்டேன்.  இந்த ஷேர் கார் அதான் டாக்ஸி அண்ணா சாலைக்கு போகுமே..    ஏன் ஒண்ணு கூட வரலை ?

    அவர் என்னைப்பார்க்கும் பார்வையிலேயே ஒரு பரிதாபம் இருந்தது.  அவுக இப்ப எல்லாம் அந்த முருகன் கோவில் பஸ் ஸ்டாப் தான் ஸ்டார்ட் பண்றாக என்றார்.

    என்ன செய்வது என்று யோசிக்கு முன்னாலே இன்னொரு ஆடோ காரர் ... சார் ஏறுங்க ...

    எங்கே என்று நான் கேட்க, அவர் எங்க வேணாலும் முருகன் போவான் ஸார். என்றார்.

    முருகன் போவார் . ரைட் தான். ஆனா இந்த கிழவன் கூட வரணும்னா எத்தன கொடுக்கணும் ? விளம்பினேன்.

    எங்க..?    அப்படின்னு ஆடோகாரர் கேட்குமுன்னே ...

 நான் சைல்டு ட்ரஸ்டு ஹாஸ்பிடல், நுங்கம்பாக்கம் வரைக்கும்.. என்று இழுத்தேன்.

     நீங்க கொடுக்கறத கொடுங்க ...  எத்தன வழக்கமா கொடுப்பீக...

     நௌ பால் இஸ் இன் மை கோர்ட் என்று உணர்ந்து,  

ஏன்ப்பா, மீட்டர் போடல்லையா...

     போட்டிருக்கேன்.  பாருங்க... என்றார்.   

  சரிதான் என்று சொல்லி, உட்கார்ந்து ஒரு பத்து அடி தூரம் கூட செல்லவில்லை.

ஆடோ மீடர் இப்போது 26.2 என்று காட்டியது.

     என்னப்பா இது... இன்னும் பத்து மீட்டர் தாண்டல்ல..  அதுக்குள்ளே மினிமம் காலியாயிடுச்சே...

     அது கிடக்கட்டும் சார்.  நீங்க.  ஒரு நூறு ரூபா கொடுங்க...

என்ற அந்த ஆடோ ட்ரைவர் முகத்தை அப்பொழுதுதான்
ஒரு தீர்க்க பார்வையாக பார்த்தேன். அம்பது வயசு தாண்டியவர் என்று அவர் முகம் சொல்லியது.  நடு நெத்தியிலே ஒரு குங்குமப்பொட்டு . கழுத்திலே ஒரு உத்திராட்ச மாலை.

    ஒரு பத்து செகன்டுக்குள்ளே மனசுக்குள்ளே போட்ட கணக்கில் 25 ப்ளஸ் 5 * 12 ... 85 வர்ரது.  என்ன ஒரு பதினைஞ்சு கூட என்று சுதாரித்துக்கொண்டாலும்,

    அது சரி, இந்த மீடர் கடைசிலே நூத்தைம்பது, அப்படின்ன்னு காட்ட்டிடுச்சுன்னா...????

     சார்.. நான் தான் சொல்லிட்டேன் இல்லயா...  அது நடுவிலே நிக்கறாங்களே... அவுங்களுக்காக போடரது.... நான்
ஒரு தரம் சொன்னா சொன்னது தான்

      அப்படியா...?

      ஆமாம் சார்.  என் ஆடோ மீடர் அப்பப்பே ரிபேர் ஆகும்.. ஆனா முருகன் சொன்ன சொல்ல மாத்தினதா சரித்திரமே கிடையாது சார்....

       அது சரி.. ஆனா.. இந்த மீட்டர் போட்டப்பறம் கூட ஏன் அத ஃபாலோ பண்ணாம, ஒரு ரேட் கேட்கறீக...

       சார்... ஒரு நாளைக்கு 500 ரூபா வூட்டுக்கு இத்தன நாள் கொண்டு போய் கொடுத்தேன்....  இந்த மீட்டர் போட்ட இந்த அஞ்சு நாளா எத்தனை தான் ஓட்டினாலும் ராவு பத்து மணிக்கு கூட முன்னூறு தான் தேறுது சார்.

        ஏன் போதாதா...

       நேத்திக்கு 300 கொடுத்தப்போ என் ஊட்டுக்காரி, இந்தாபா, 500 இல்லாட்டி, வர்ராதே...இந்த அஞ்சையும் எங்கனாச்சும் அனுப்பிச்சுடு அப்படின்ன்னு சொல்றா..    நாலு பொட்ட புள்ளைங்க ஒரு பையன் அவளும் எப்படிங்க இந்த காலத்துலே சமாளிக்க முடியும் ?

        நான் பேச வில்லை.

        பொண்ணுக 10 படிக்குது மூத்தது.  இரண்டாவதும் அடுத்ததும் 7 வது படிக்குது.   பையன் நாலாவது படிக்கான். அவனுக்கு ட்யூசனுக்கே மாசம் 700 கட்ட வேண்டியிருக்கு.

        கடைசி பொண்ணா  ?

        க்ரெக்டா சொல்லிட்டீக..

என்று ரோட்டிலிருந்த பார்வையை திரும்பி என்னைப் பார்க்கவும், பக்கத்தில் வந்த இன்னொரு ஆடோ க்ரீச் என்று பக்கத்தில் உரசவும் ...

        யோவ்...பாத்து ஓட்டுய்யா... என்றார் பக்கத்தில் வந்த ஆட்டோகாரர்.

         முருகன் வண்டியை ஓரம் கட்டினார். .

என்னவோ ப்ரேக் சரியில்ல போல,... நான் ஸ்லோ பண்ணி திருப்பினேன்.  அட்ஜஸ்ட் ஆவல்ல..
மெகானிக் கிட்டே எடுத்துட்டு போனா அவன் ஆயிரம் கொடு என்பான். நானே ஏதோ அட்ஜஸ்ட் பண்ண்ணி ஓட்டிட்டு இருக்கேன்.

          இரண்டு தரம் ட்ருருரு....ட்ரூரூ...ரூ....என்று கீதா சாம்பசிவம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்  அப்படிங்கற மாதிரி
        க்ள்ட்சையோ வேறு எதையோ 2. 3 தரம் இழுத்தார்.

         வண்டி திரும்பவும் ஓடத்துவங்கியது.

         எங்கே நிறுத்தினேன்.. என்றார்.

         கடைசி பொண்ணு  அங்கே தான் நிறுத்தினீங்க.. என்றேன்.

         நான் நிறுத்தலேங்க... பொண்டாட்டி, நிறுத்திட்டா..  உன்னோட வரும்படிக்கு இனி கட்டுபடியாவாது அப்படின்னு சொல்லிப்பிட்டா...

         அது தான் உத்திராட்சமா என்றேன்..

         ஹே...அது வேற கதைங்க..  நீங்க சொல்லுங்க...  இந்த முன்னூரு ருபாய்லே என்ன்னையும் சேத்து ஆறு பேரு.சாப்பிடமுடியுமா சொல்லுங்க...
வூட்டு வாடவையே 1500 தர்றோம்.

           சற்று நேரம் மௌனம்.

          அவரே தொடர்ந்தார்.

ஏங்க..  அம்மாவே எங்களுக்கெல்லாம் ஒரு வேலை போட்டு கொடுத்தா என்னாங்க.. ???

எல்லா ஆடோவையும் கவர்ன்மென்ட்  எடுத்துக்கட்டும்.  நாங்க தினம் எட்டு மணி நேரம் ஓட்டறோம். எஙகளுக்கு மாசத்துக்கு சம்பளமா  ஒரு பதினஞ்சு கொடுத்தா என்னங்க குறைஞ்சு போயிடும் ?

       நல்ல யோசனை தான்...

        யாருனாச்சும் கேக்கறீங்களா ?