சனி, 8 ஆகஸ்ட், 2015

கள்ளுண் ஆமை.

எச்சரிக்கை:
பின் குறிப்பைப் படித்து விட்டுத்தான் மேற்கொண்டு படிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 
 ******************************************************************************

வெய்யில் கடுமை. இருந்தாலும் அங்கு சென்று தான் ஆக வேண்டும் என்ற நிலை.
வீதி கோடியில் ஒரு வங்கி. அரசு வங்கி. அங்கு காலை 9.45 மணிக்கே சென்று அடைந்தேன். இன்னமும் வாசல் கதவு திறக்கப்படவில்லை.
படிக்கட்டுகளில் உட்கார்ந்தேன்.  பத்து நிமிடம் நேரமாயிற்று. இன்னமும் கதவு திறக்கப்படவில்லை.

எதிர் வீடு ஒன்று, என் கவனத்தை இழுத்தது.
பிரும்மாண்டமாக இருந்த அந்த வீட்டில் யாரோ இறந்திருப்பார்போலும். சாவுக்கோலம்.  மரணம் அடைந்தபின் சங்கு ஊதும் சத்தம். தப்பறை கொட்டும் சத்தம். திடீர் திடீர் எனத் துவங்கி ஒரு திகில் ஐ ஏற்படுத்திக்கொண்டும் இருந்தது.

வங்கிப படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்த எனக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணி போல் தோன்றியது  வியப்பில்லை. வங்கி இன்றைக்கு விடுமுறையாக இருக்குமோ என்ற ஐயமும் எழுந்தது.

இந்த சங்கு ஊதும் சத்தம் அவ்வப்போது பெரிதாக ஒலிக்க இன்று போய் நாளை வரலாமா என்றும் எண்ணினேன்.

அதே சமயம் ஒருவர் தனது யமஹா பைக்கில் இறங்கினார். அவர் என்னைப்போல் ஒரு வாடிக்கையாளர் என நினைத்து,

என்ன சார் ! இன்று லீவா ? என்று கேட்டுவிட்டேன்.

என்னை ஒரு முறை முறைத்துவிட்டு, பக்க வாட்டில் சென்று மறைந்தார். சில வினாடிகளில் அவரே,

வங்கி ஊழியர் உடுப்பில் வந்து அந்த ரோலிங் ஷட்டர்ஸ் ஐ மேல் வாட்டில் காட்ரேஜ் பூட்டுகளை திறந்தபின் தூக்கினார்.

வங்கி கதவு திறந்தது.

அதற்குள், எங்கிருந்தோ என்னைப்போல, ஏழெட்டு பேர் திமு திமு என்று உள் நுழைந்தோம்.

உள்ளே சென்றால் எனக்கு ஒரே ஆச்சரியம். இப்பொழுது தானே கதவுகள் திறந்தன. அதற்குள் உள்ளே எப்படி வங்கி மேனேஜர், மற்ற ஊழியர்கள் எல்லாருமே அவரவர் இடத்தில் இருந்தனர்.

வங்கி மேனேஜர் எனக்கு நண்பர்.
என்னைப்பார்த்து முறுவலித்தார்.
நான் அந்த அறைக்குள் சென்றேன்.
"எப்படி சார் ! நீங்கள் கதவு திறக்காமலே உள்ளே வந்து விட்டீர்கள் ! " என்றேன்.
"அது ஒன்றுமில்லை. பக்க வாட்டில் இன்னொரு கதவு இருக்கிறது. அது வழியாக நாங்கள் முன்னமே வந்து விடுவோம். "
"அப்ப, வங்கிக் கதவைத் திறப்பவர் மட்டும் 10 மணிக்குத் தான் திறப்பாரா ?"

"அது 50 பர செண்ட் தான் சரி. அவரை கொஞ்சம் 10 மணிக்குத் திறந்தால் போதும் என்று சொல்லி இருக்கிறோம். முன்னமே திறந்துவிட்டால், துவக்க வேலைகளை செய்ய முடிவதில்லை. அதற்குள் கஸ்டமர்ஸ் கேள்விகள் போட்டு துளைக்க துவங்கி விடுவார்கள் '"

அவர் சொல்வதிலும் உண்மை இருந்தது. அல்லது இருக்கும்போல் தான் தோன்றியது.

"இருந்தாலும் பாருங்கள். வாசலில் அந்த மரண கொட்டு தாளங்கள், என்னால் ரொம்ப நேரம் கேட்க முடியவில்லை"

"ஓ ! அதைச் சொல்கிறீர்களா !! " எனக்கே மனசு கஷ்டம் ஆகத் தான் இருந்தது அந்த நபர் இறந்துவிட்டார் என்று தெரிந்தபின்னே "

"உங்களுக்கு என்ன மனக்கஷ்டம் ? உங்கள் நண்பரா? சொந்தமா? இல்லை, வங்கி ஏதேனும் கடன் கொடுத்து, இனிமே வருமா வராதா என்ற நிலையா ?"

"எதுவுமே இல்லை. நேற்று நடந்த நிகழ்ச்சி தான் மனதை உறுத்துகிறது. நான் செய்தது தப்போ சரியோ என்றே தெரியவில்லை."

நான் எதற்கு வங்கிக்கு வந்தேன் என்பதை அதற்குள் மறந்து விட்டேன். இங்கே ஒரு நல்ல கதை இருக்கிறதே என்று நினைத்து,
"என்ன அது ! சொல்லுங்கள் சார் ! " என்று மிக ஆர்வத்துடன் கேட்க,

"அந்த இறந்து போனவர் எனக்குத் தெரிந்தவர் தான் . ரொம்ப வயசும் ஆகிவிடவில்லை. ஒரு 60.அல்லது 62 இருக்கலாம் " என்று துவங்கினார்.

ம் ....

"நேற்று இதே நேரம். வந்தார். ஒரு வித்ட்ராயல் ஸ்லிப் எடுத்து ரூபாய் இருநூறு என்று எழுதி தாருங்கள் பணம் என்று கேஷியரிடம் கேட்டார்.

"சரி. அதில் என்ன தவறு ?"

"கேஷியர் பாஸ் புக் தரச் சொல்ல, அவர் பாஸ் புக் இல்லை , நீங்கள் பணம் தாருங்கள், என்று அடம் பிடித்தார். சாதாரணமாக, வித்ட்ராயல் ஸ்லிப் பாஸ் புக்கோடு வந்தால் தான் நாங்கள் பணம் கொடுப்பது வழக்கம். "

"போனால் போகிறது என்று நீங்கள் கொடுத்து இருக்கலாமே !! உங்களுக்குத்தான் அவரைத் தெரியுமே !"

"அங்கே தான் வந்தது கான்ஷியன்ஸ் ப்ராப்ளம். "

வித்ட்ராயல் ஸ்லிப்பில் என்ன மனச் சாட்சி பிரச்னை ?

"வந்தவர் எனக்குத் தெரிந்தவர் தான். எதிர்த்த விட்டு சொந்தக்காரர். அவர் மட்டும் இல்லை. அவர் மனைவியும் எங்கள் வங்கி கஸ்டமர் தான். "

" பின்னே என்ன?"

"வந்தவர் ரொம்பவே குடித்து இருந்தார். தள்ளாடிக்கொண்டு வந்தார். . மேலும் அவர் தனியா வந்து பணம் கேட்டால், கொடுக்க வேண்டாம் என்று அவரோட...
......வேணாம்..டீடைல்ஸ் வேண்டாம் சார்....." என்றார்.

தொடர்ந்து, குறள் ஒன்றும் சொன்னார்

.கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
    மெய்யறி யாமை கொளல்.


அதன் பொருள் என்ன என்பதை நான் நினைவு படுத்திக் கொள்வதற்கு முன் அவரே ஒரு பிரபல உரைதனை மேற்கோள் காட்டினார்.

 ஒருவன்   தன்னிலை   மறந்து   மயங்கியிருப்பதற்காகப்,   போதைப்
பொருளை   விலை   கொடுத்து    வாங்குதல்   விவரிக்கவே   முடியாத
மூடத்தனமாகும்.


 இந்த உரை யார்  எழுதியது கேட்டேன். அவர் தந்த  லிங்க் இதோ.


நான் அவரை விடவில்லை. என்ன சார் சுவாரஸ்யமான கட்டத்தில்  சரவணன் மீனாச்சி சீரியல் தொடரும் என்று போடுவது போல், நீங்கள் ஒரு கமா போடுகிறீர்கள்..?  தொடர்ந்து சொல்லுங்கள் சார். ப்ளீஸ் கண்டின்யூ..என்றேன்.

"நான் அவருக்குத் தரவும் முடியவில்லை. தராமல் இருக்கவும் முடியவில்லை.
அவரிடம், நான் உங்கள் வீட்டுக்கு எங்கள் ஊழியரை அனுப்பி பாஸ் புக்கை வாங்கி வரச் சொல்கிறேன். நீங்கள் அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூட சொல்லிப்பார்த்தேன்."

அப்படியா ..
 

"அவருக்கு அதைக் கேட்டபின் இன்னும் கோபம். "  "என்ன உங்களிட்டையும்
பணம் தராதே என்று சொல்லிவிட்டாளா ? என்று இறைந்து கொண்டே சென்று விட்டார்.

அடடா !!

"நானும் அதை சற்று நேரத்தில் அதை மறந்து விட்டேன். மாலையில் தான் தெரிந்தது.  அவர் எப்படியோ இன்னமும் பணம் எங்கிருந்தோ பெற்று, டாஸ்மாக சென்று நன்றாகக் குடித்து விட்டு வரும் வழியில் நடு ரோடில், ஒரு கார் அவர் மேல் மோத, ஆன் த ஸ்பாட் இறந்து விட்டாராம். "

பாவம் ..என்றேன்.

மனிதனுக்கு இந்த மாதிரி அன் நேச்சுரல் சாவு வரக்கூடாது சார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?  மனிதன் பிறந்தவிட்டால், எப்படியும் இறக்கத்தான் வேண்டும் என்றாலும், இப்படி ஒரு மரணம் வரவேண்டுமா "
அவர் குரலில் உண்மையான வருத்தம் இருந்தது.

அது சரி, உங்களுக்கு என்ன மனச் சாட்சி பிரச்னை?

கடைசியாக அவர் என்னிடம் கேட்டதை நான் நிறைவேற்ற முடியவில்லையே என்று நினைக்கிறேன். ஆனால் , அதே சமயம், நான் பணம் கொடுத்து இருந்தால், உடனே டாஸ்மாக் சென்று இருப்பார்.  ஆனால் , அவர் மனைவி என்னிடம் சொல்லி வைத்து இருந்ததையும்  என்னால் தட்டவும் முடியவில்லை.

சரியான தர்ம சங்கடம் தான் என நினைத்துக்கொண்டேன்.

நீங்கள் வருத்தப்படுவதில் ஒன்றும் இல்லை சார். யார் யார் எப்படி எப்படி எப்ப எப்ப போகவேண்டும் என்பதை மேலே இருப்பவன் தானே நிர்ணயிக்கிறான்.
இவருக்கு இப்படித்தான் போகவேண்டும் என்று இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் ..? என்று ஒரு ஆதங்கத்துடன் பேசி , எழுந்தேன்.

 என்னுடைய வங்கி வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிட்டேன்.
மேலாளரிடம் பேசியது மறந்து போய் இருந்தது என நினைத்து இருந்தேன்.

இருந்தாலும், மாலை, அதே தெருவுக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பம்.

சாலைக்கு வந்த உடனேயே கண்ணில் பட்டது அந்த பிரும்மாண்ட ஊர்வலம்.
ஆமாம். இறுதி ஊர்வலம்.

ஒரு லட்சத்திற்கும் மேலாக பூக்களுக்கு செலவிட்டு இருப்பார்கள் போல் தோன்றியது. போகும் வழி எல்லாம் சவந்தி, ரோஜா மலர்கள் பூச்செண்டுகள்
சிதறிக்கிடந்தன.

கொட்டிய கொட்டும் மழையில் அத்தனை பூக்களும் நசுங்கி காணப்பட்டன.

இறந்தவர் வேறு யாருமில்லை. காலையில் வங்கி மேலாளர் குறிப்பிட்டவர் ஆக இருக்கக் கூடும்  என்று ஊர்வலத்தில் வந்து கொண்டு இருந்த சிலர் பேசிக்கொண்டதில்  இருந்து புரிந்தது.

இறந்தவர் வங்கிக்கு எதிர்த்த வீட்டு சொந்தக்காரரோ ??

ஊர்வலத்தில் பல பேர் நான் பார்க்கில் பார்க்கும் நபர்கள். இறந்தவர் நடுத்தர வர்க்கம் இல்லை, அதற்கும் கொஞ்சம் மேலே இருப்பவர் என்று தோன்றியது.

குடித்தார். கீழே விழுந்தார். கார் மோதியது. இறந்தார். ..ஒருவர் சொல்கிறார்.
குடித்தார். கார் மோதியது. கீழே தள்ளப்பட்டார். இறந்தார். இன்னொருவர் சொல்கிறார்.
வெறும் கார் ஆக்சிடெண்ட் சார். அனாவசிய மா குடித்தார் என்ற பழி !! இது இன்னொருவர். 

நீத்தாரை இகழேல். நமது பண்பு. இன்னொருவர்.


எப்படியோ !!
ஊர்வலம் வந்த வீதியில் மேலும் சில நிமிடங்கள் சென்று இருப்பேன்.

அந்த வீட்டுக்கு பக்கத்தில் சென்றபோது, கவனித்தேன்.
வயதான ஒரு பெண்மணியைச் சுற்றி பலர் நின்று கொண்டு இருந்தனர்.
இறந்தவரின் மனைவி என்பது அவரைப்பார்த்தாலே தெரிந்தது.
இன்னமும் அவர்கள் வீட்டுக்குள் செல்லவில்லை போலும்.

நான் அந்த பெண்மணியின் கண்களை பார்த்தேன்.
அந்த கண்களில் வருத்தம் இல்லை. துக்கம் இல்லை !!
ஆச்சரியமாக இருந்தது.
ஒரு நிம்மதி தெரிந்ததோ !!!

நான்  யோசித்துப்பார்த்தேன்.

ஒரு குடிகாரனோடு காலம் முழுவதும் வாழ்ந்த ஒரு பெண்மணி.
குடி வெறியினால் அவன் தந்த தந்து இருக்ககூடிய அத்தனை துன்பங்களையும் தாங்கிக்கொண்டு பொறுமையுடன் இருந்த பெண்மணி.

கணவன் இறப்பும் அவருக்கு இனி வரும் வாழ்க்கையில் ஒரு நிம்மதி தருமோ என்னவோ !!!




***************************************************************************

பின் குறிப்பு: 

மூன்று நிகழ்வுகள்.உண்மை தான். ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை தான்.  இருந்தாலும் அவற்றினை ஒன்றாக எழுதினால் ஒரு நீதிக் கதை உதயமாகிறதே !! 







4 கருத்துகள்:

  1. உண்மைதான் ஐயா
    தொடர்பில்லாத மூன்று நிகழ்ச்சிகள்
    அழகாய் பொருந்துகின்றன
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. நல்ல தொடர்புகள் கொண்ட நிகழ்வுகள்.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் பொருத்தம். கோர்வை பிரமாதம். நன்றிகள்.

    பதிலளிநீக்கு