திங்கள், 7 மார்ச், 2016

கண் ஒன்றைத் திறவாயோ ?

எங்கே எந்நேரத்தில்
என்னை அழைப்பாயோ ?
புன்னைவனீச்வரா என்
முன்வினை தீராயோ

பாவைக்கு உயிர் கொடுத்தாய் -பூம்
பாவைக்கு உயிர் கொடுத்தாய்
புன்னை மரத் தலத்தானாய்
சம்பந்தன் பாடிய
மடமயிலைக் கோவில் கொண்டாய் .

காத்திருப்பேன் எக்காலம் ?
கபாலீச்வரா ?
கருணா சாகரா ! நின்
கருணை நான் வேண்டி நின்றேன்.
கண் மூன்றைத் திறவாவிடினும்
கண் ஒன்றைத் திறவாயோ  ?
.....
(எங்கே என் நேரத்தில்....)




கபாலீஸ்வரன் அமர்ந்த தலத்தில்
திருஞான ம்பந்தன் பாடிய பாடல் இதோ:




.
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
 கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் 
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
  கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். "






சனி, 5 மார்ச், 2016

மலர்க்கொத்து ஒன்று தருவேன்.

உலக அளவிலே 
பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் சாதனையாளர்களை 
புவி எங்கும் பாராட்டி ஒரு வாரம் முழுவதும் 
பெண்கள் தினம் எனக் கொண்டாடும் வேளையிலே 

நான் நமது தமிழ்ப் பதிவுலகத்தைத் திரும்பிப் பார்த்தேன். 
ஆஹா !!
இங்கே மட்டும் என்ன குறைச்சல் !!
பெண் சாதனையாளர்கள் நூற்றுக்கணக்கிலே இருக்கின்றனரே.
அவரை பாராட்டுவது நம் முதற்கடமை அல்லவோ என எண்ணி, 
அவருள் சிலரை நான் இங்கு 
வாருங்கள், வாருங்கள் 
எனக்கூவி அழைத்து 
இம்மலர்க்கொத்து ஒன்று தருவேன்.



வாருங்கள். நாம் எல்லோரும் அந்த கண்ணனின் புகழ் பாடும் கீதங்களைக் கேட்டுக்கொண்டே 

நம் இல்லத்துக்குள் செல்வோம்.

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்.அந்தக் கண்ணன். 
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா  கீதையின் நாயகனே 
அந்த கண்ணன்.

குறை ஒன்றும் இல்லை என்று இவர்கள் எல்லோருமே சொல்கிறார்கள்.சொன்னாலும் கொடுப்பான் 



வாங்க..வாங்க. 

புகைப்படம்.  நன்றி:  ரேவதி நரசிம்மன் 

உங்கள் வருகை எமது இல்லத்துக்கு பெருமை சேர்க்கிறது.  

108 திவ்ய தேசங்களையும் பார்த்து பரவசித்து, பரந்தாமனைத் தொழுது, பிரசாதத்தை உண்டு, பக்தர்களாகிய நமக்கும் தமது பிரயாண கட்டுரைகள் வாயிலாக வேங்கடவனின் அருளினைப் பெற்றுத்தரும் திருமதி துளசி கோபால் அவர்கள்.

கம்ப நாட்டானின் இராம காவியத்தை அவ்வப்போது நம் கண் முன்னே நிறுத்தி, நம்மை வியக்க வைப்பவர். திருவரங்கத்தில் பிறந்து தற்போது பெங்களூரில் வசிக்கும் ஷைலஜா அவர்கள். 


தமது காமிரா கண்களால் உலகின் அழகை பார்த்து ரசித்து வியந்து நமக்கும் அவ்வப்போது பிரமிக்கத்தக்க படங்களை வழங்கும் பெங்களூர் ராமலக்ஷ்மி அவர்களின் பதிவு தமிழமுதம் .ஆங்கில இலக்கியத்தில் இருந்து அவ்வப்போது கவிதைகளை மொழிபெயர்த்து இவர் இட்டப்போது நான் நினைத்தது உண்டு: இவை அசலையும் விஞ்சுகின்றனவே என்று.   

கடந்த 12 ஆண்டுகட்கு மேலாக ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் தவறாது அன்னை அபிராமி யை,  மதுரை மீனாட்சியை, காஞ்சி காமாட்சியை, புதுகை புவனேஸ்வரியை, திருவிடைமருதூர் தையல்நாயகியை, திருவேற்காடு கருமாரியை துதி பாடி இதுவரை 1500க்கும் மேல் பாடல்கள் இயற்றி இருக்கும் அமேரிக்கா வாழ் கவிநயா . இவரது பாடல்களிலே நானே இதுவரை 1000க்கு மேல் மெட்டமைத்து பாடி இருக்கிறேன். 

பற்பல வார இதழ்களில் தனது படைப்புகளை இட்டவர். சும்மா என்று தலைப்பிட்டாலும் 
சும்மா யிராது அவ்வப்போது ஆதி சங்கரரின் அற்புத படைப்புகளை தமிழில் மொழி பெயர்த்து ஆன்மீக உலகத்திலும் இடம் பிடித்தவர். திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள். இவர்கள் தமிழில் மொழி பெயர்த்து தனது தளத்திலே இட்ட  கணேச புஜங்கம் தான் என் கைப்பையில் எப்போதும் இருக்கிறது.  108 விநாயகன் போற்றி . 

வருடத்திலே வசந்தம் இரண்டு மாதம் தான். இவர் பதிவிலே வசந்தம் எப்பொழுமே வாசம் செய்யும்.  வீசு தென்றல் என்ற தலைப்பிலே இவர் கவிதைகள் சோர்ந்த உள்ளங்களையும் சுந்தரக் கனவுகள் பார்க்க ஈட்டுச் செல்கிறது. சசி கலா என்று பெயர் உடைத்த இவர் என்றுமே முழு நிலா.  


திருவரங்கத்தான் வாசலிலே  அரங்கனின் பெருமைகளை திருவரங்க க்ஷேத்திர சரித்திரங்களை நமக்கு அக்ஷர சுத்தமாக தந்து நம்மை அக்கரை சேர்க்க உதவும் இவர்  அக்கார வடிசல் செய்யவும் சொல்லிக்கொடுப்பவர் . கீதா சாம்பசிவம் அவர்கள். 

ஒவ்வொரு பண்டிகை போதும் வீடுகளில் போடும் கோலங்கள்  போட்டு நம் வீடுகள் எல்லாவற்றினையும் அழகுறச் செய்யும் வாணி முத்துகிருஷ்ணன் அவர்கள். 

நகைச்சுவை அரசி அனன்யா மகாதேவன் அவர்கள். இவர்கள் இப்போதெல்லாம் முகனூலில் முழுகி முத்தெடுத்துக் கொண்டு இருப்பதால் வலைப் பக்க வழியை மறந்துவிட்டார் போலும். 
கவலைகளை மறந்து வாய்விட்டு சிறிது சிறிது நேரமாவது சிரிக்க இவரது வலைக்கு அல்லது முகனூலுக்கு அவசியம் செல்லுங்கள்.


லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட் 
ஆரவாரமில்லா அமைதியின் இருப்பிடம் இவரது தளம். அதில் கிடைத்த ஒரு பூங்கொத்தை தான் பதிவின் துவக்கத்தில் (இரவலாக வாங்கி) இட்டு இருக்கிறேன்.  அது யார்?


வான் நக்ஷத்திரங்களில் கடைசி பெயரினை  தனது முதல் பெயராகக்கொண்டு இருக்கையில் 
தூணைப் பிளந்து வந்து பக்தனைக் காப்பாற்றியவர் இரண்டாவது பெயராக அமர்ந்தார்.


என்ன உங்கள் பட்டியல் முடிந்துவிட்டதா எனக் கேட்டு விடாதீர்கள். 
இன்னும் பல பெண்மணிகள் சாதனையாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் அவர்கள் பங்கு போற்றத்தக்கதாக இருக்கிறது. 

இன்னும் இருக்கும் 100 க்கும் மேற்பட்ட பெண் பதிவாளர்களில் சாதனையாளர்களில் பத்து பேரை அடுத்த ஆண்டு இதே நாளில் அழைப்பேன். 

அதுவரைக்கும் உங்களிடம் இருந்து விடை பெறுவது 

சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி.