வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஆனந்த சயனம்



subbu thathavukku
சுப்பு தாத்தா வுக்கு அதான் எனக்கு,
காலைலேந்து பொழுது போகவில்லை. ஷேர் மார்க்கெட் மேலும் கீழுமாக போய்க்கொண்டு இருந்தது.அதில் புகுந்து எதுவும் வாங்கி இல்லேன்னா வித்துப்புட்டு இன்னாடா இப்படி செஞ்சுட்டோம் அப்படின்னு வருத்தப்பட்டு பிரயோசனம் இல்லை. அதனால் அதை மூடி வெச்சேன்.

வலைப் பதிவாளர்கள் பதிவெல்லாம் கிருஷ்ணர் சர்வ வ்யாபியாக இருந்தார். பரிவை குமார் அவர்களோ உருகி உருகி போகிறார்.
கிருஷ்ணன்...கோபாலன்...கோபால கிருஷ்ணன்...கண்ணன்...மாயக்கண்ணன்...

 சிலர் ஜென்மாஷ்டமி அப்படின்னு சொல்லனுமா கோகுலாஷ்டமி அப்படின்னு சொல்லவா? எது ஸ்ரேஷ்டம் அப்படின்னு ஆராய்ச்சி  !

கீதா மேடம் வழக்கம் போல சீடை முறுக்கு தேன்குழல் இத்யாதி இத்யாதி.
என்னவோ அதை பண்றேன் இதை பண்றேன் அப்படின்னு வ்யாக்யானம். சொல்றாங்களே தவிர, இன்னாடா ஒரு ஏழை வயசான தம்பதி இருக்காங்களே ! அவங்களுக்கு இரண்டு முறுக்கு பார்சல் பண்ணுவாங்களா அப்படின்னு எதிர்ப்பார்த்து காலும் மனசும் நொந்து போனது தான் மிச்சம்.

வாசுதேவன் சார் பூணூல் போடும்போது, பயத்தங்காய் முடிச்சு எப்படி போடணும் அப்படின்னு விலா வாரியா வித் ட்ராயிங்ஸ் அதைப் பார்த்தப்புறம் தான், நினைவு வந்தது.

அடடா இன்னிக்கு கோகுலாஷ்டமி, ஒரு பாயசமாவது வைக்கணும் நெய்வேத்தியம் பண்ணனும். அடடா, பாசிப்பருப்பு வாங்க மறந்து போறோமே அப்படின்னு நினைப்பு வந்து, துண்டை உதறி தோள் லே போட்டுண்டு கிளம்பினேன்.

மெயின் ரோடு கிராஸ் செய்து தபால் அலுவலகம் பக்கத்தில் இருக்கிற மளிகை கடை லே சகலமும் மலிவா கிடைக்கும் அப்படின்னு மூளை லே உதிச்சது . இருந்தாலும் அந்த இடத்தில் ரோடை கிராஸ் செய்வது என்பது என்னைப்போல கிழங்களுக்கு முடியவே முடியாது. இருந்த சிக்னல் ஐயும் பிடுங்கி போட்டு விட்டார்கள்.

லாமேக் பள்ளி மாணவர்கள் மாலை  நேரத்துலே எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்று இரண்டு தடவை ஹிந்து பேப்பர்லே வாசகர் கடிதத்துலே எழுதியும் ஒன்னும் நடக்க வில்லை.  அந்த சாலை காலையிலும் மாலையிலும் ஜஸ்ட் கேயாஸ் என்று இங்கிலீஸ் லே சொல்றோமே அதுக்கு தமிழிலே என்ன சரியான வார்த்தை , ஜீவி சார் கிட்ட கேட்டால் சொல்வார், அது மாதிரி ஒரு சிச்சுவேஷன்.

ஒரு வழியா ரோடை க்ராஸ் செய்து அந்தப்பக்கம் போனபோது மிகவும் சோர்ந்து போய்விட்டேன். எங்கேயாவது இரண்டு நிமிஷம் உட்கார்ந்தால் தேவலாம் என்று பட்டது.  பக்கத்தில் ஊட்டி வெஜிடபிள்ஸ், கங்கா சுவீட்ஸ் கடை கண்ணில் பட்டது. நல்ல காபி கிடைக்கும். காபி சாப்பிடற நேரத்துலே கொஞ்சம் இளைப்பாறலாம் என்று நினைப்பு வர உள்ளே புகுந்தேன்.

அது ஒரு பிரி பைட் (pre-paid) ரெஸ்டாரண்ட். காபி மட்டும் குடிக்கலாம் என்று உள்ளே நுழைந்தவனுக்கு , நுழைந்த உடன் நாக்கு சபலம். ஒரு பாவ் பாஜ் கூட சாப்பிடலாம் என்று நினைத்து அதற்கான பில்லையும் வாங்கிக்கொண்டு ஒரு சீட்டுக்கு சென்றேன்.  அடுத்த 30 நிமிடம் ஏ.சி .லே உட்கார்ந்து இருக்கலாம்.
.
எதிரே என்னை விட இளையவராகத் தென்பட்ட ஒருவர் (64 முதல் 66 இருக்கலாம் எனக் கணித்தேன்.) வெகு சுவாரசியமாக ரவா கீ ரோஸ்ட் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். உருளைக்கிழங்கு மசாலா, தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி, சாம்பார் சைட் டிஷ்


பார்க்கும்போதே மூளையில் எச்சில் சுரந்தது. இதெல்லாம் நமக்கு சரிப்படாது, பாவ் பாஜே அதிகம் என்று வலது பக்க மூளையை இடப்பக்கத்து அறிவுப்பிரதேசத்தால் ஒரு குட்டு குட்டிக்கொண்டேன். குட்டினபோது தான், பார்த்தேன்.

சர்வர் இரண்டு பிளேட் கொண்டு வந்திருந்தார். என் முன்னே ஒரு பிளேட் சோழா பூரியை வைத்தார். அவர் முன்னே ஒன்று.

நான் கேட்கவில்லையே என்று என் வாய்  சொன்னது. கேட்காதது உன் குற்றம் என்று நாக்கு சொன்னது.

"அதுவும்  நான்தான்  கேட்டேன்" என்றார் எதிரில் இருந்தவர். என்னால் நம்ப முடியவில்லை. பார்ப்பதை நம்ப முடியவில்லை. இந்த வயதில் ஒரு 3 அடி நெய் ரவா வெங்காய மசாலா தோசை க்குப்பின் ஒரு சோழா பூரி அதுவும் இரண்டா !!

திகைத்துப்போய் நான் பார்த்தபோது இரண்டு பிளேட்டையும் அவர் தன்  முன்னே லாகவமாக நகர்த்திக் கொண்டார்.




"கொஞ்சம் வைட் பண்ணுங்க சார். பாவ் பாஜ 2 ஏ நிமிஷம் வந்துவிடும் !!"
என்றா ர் சர்வர்.  "மெதுவா வரட்டும். நோ அர்ஜன்சி" என்றேன். சுகமான ஏ சி. இன்னும் அரை மணி நேரம் கூட இருக்கலாம் .

எதிர்ப்பக்கம் கண் சென்றது. ஒரு இரண்டு பேர் உட்காரும் இடத்தை அவரே கஷ்டப்பட்டு ஆக்ரமித்துக்கொண்டு இருந்தார். ஒரு சேரிலா இத்தனை பெரிய உடம்பு உட்காரும் என்ற சந்தேகம் மனதில் தோன்றியதை அவரிடம்
கேட்கவில்லை. தர்ம அடி வாங்கும் வயது இல்லை.

அவரது பிளேட்டுகளுக்குப்  பக்கத்தில் ஒரு பெரிய பை . அப்பாலோ பாரமசி என்று போட்டு இருந்தது.  அதில் இருக்கும் மருந்துகள் என்னவாக இருக்கும் என்று மனசுக்குள் ஒரு ஆராய்சசி செய்தேன் . அவர் உடம்பைப் பார்த்தேன். மருந்தைப் பார்த்தேன். சரியான முடிவுக்கு வர முடியவில்லை. டயாபடீஸ், ருமாட்டிசம், ஹார்ட் எதற்கான மருந்துகளாகவும் இருக்கலாம்.

அவரிடம் ஏதாவது பேச்சுக்கொடுப்போமா என்ற நினைப்பு வந்தபோது எனக்கான பாவ் பாஜ் வந்தது.  ஒரு ஸ்பூன். இரண்டு பன் பீஸ். பாவ் பாஜ . ஒரு கால் எலுமிச்ச பழம். வெங்காயம் நறுக்கினது .

"என்ன ஸ்னாக்ஸ் இது போதுமா ?" என்றார் அவர் என் ப்லேட்டைப் பார்த்து.
சோழா பூரி முதல் பிளேட்டை முடிக்கும் தருவாயில்.

"இது ஸ்னேக்ஸ் இல்லை. இதை சாப்பிட்டு விட்டேன் என்றால், இன்னிக்கு அவ்வளவு தான், நோ டின்னர் ! " என்றேன்.

"வெரி சாரி டு ஹியர். " என்றார்.

"நீங்கள் ஏன் எதற்கு சாரி சொல்கிறீர்கள் ?" என்று வெகுளியாக கேட்டேன்.

"மனுஷ்யன் என்று ஏன் பெயர் தெரியமோ ?" என்றார்.

"தெரியாது."

"மனஸ் ஸு வைத்து சாப்பிடுவதால் மனுஷ்யன். மற்ற ஜீவ ராசிகள் எல்லாம்  கிடைப்பதை  சாப்பிடும். நம்ம மநுஷ்யர்கள் தான் யுனிக்.. வீ சூஸ் அண்ட் யீட் . "

"அபாரமாக இருக்கிறது உங்க எக்ஸ்ப்ளனேஷன் " என்று என் பாராட்டுதலைத் தெரிவிக்கும்போதே அவர் இடைமறித்தார்.

"இத்தனைக்கும் இந்த டாக்டர்ஸ் இருக்காங்களே அவங்க இத சாப்பிடு அத சாப்பிடு , இதை சாப்பிடாதே, அதை குடிக்காதே அப்படின்னு சொல்றாங்க.முடியற காரியமா அது ?"

"ஏன் , உங்க உடம்புக்கு என்ன ? நல்லாத்தானே இருக்கீங்க..நல்லாத்தானே சாப்பிடறீங்க..!!"

"டாக்டர்ஸ் இதைச் சாப்பிடாதே அதைச் சாப்பிடாதே அப்படின்னு சொன்னாகூட பரவா யில்ல . நோ ஸ்மோக்கிங் . அப்படின்னு சொன்னா எப்படி ?

"ஏன் சொல்றாங்க.."?

"அதான் எனக்கும் புரியல. நான் ஒரு அம்பத்தி ஒன்பது வருசமா, .....கரெக்ட்...
எட்டு வயசா இருக்கும்போதே சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன். "

"ம்....."

"ஆரம்பத்திலே ஒன்னு இரண்டு ன்னு ஆரம்பிச்சு அப்பறம் ஒன்னு இரண்டு அப்படின்னு ஒரு நாளைக்கு மூணு நாலு பேக்கட் வரைக்கும் பிடிச்சு இருக்கேன். "

"அப்படியா......!!!!"

"ஒரு நிமிஷம்" அப்படின்னு சொல்லிவிட்டு, பூரி இன்னும் இரண்டு கிள்ளு கிள்ளி சென்னா மசாலா வில் மொக்கி மூக்கு க்கும் மோவாக்கட்டைக்கும் நடுவே உள்ள மத்யப்ரதேசமான வாய்வாகாசத்தில் அதாவது வாய்க்குள் தள்ளினார்.

நான் வைட்டினேன்.

அவர் தொடர்ந்தார்.

"இரண்டு வருசத்துக்கு முன்னாடி மேல் வயற்றுளே நடுவா கொஞ்சம்
ஜாஸ்தியா கூட இல்ல. லேசா ஒரு வலி,  தானா சரியாகிடும் அப்படின்னு தான் இருந்தேன். "

"அப்பறம்...."

"பெட்டர் ஹாப் தொல்லை தாங்க முடியல்ல...டாக்டர் கிட்ட போ. போ அப்படின்னு உயிரை வாங்கிட்டா.....போதாக்குறைக்கு ஒரு நாளைக்கு
இராத்திரி இரண்டு மணிக்கு திடீர் னு ஒரு சுருக் சுருக் அப்படின்னு ஆரம்பிச்சது பளீர் பளீர் னு வலி,.... ஆ..ஊ அப்படின்னு சத்தம் போட்டுட்டேன். "

"அப்பறம் ??"

"பார்யா இனிமேயும்  பொறுக்க கூடாது அப்படின்னு அவளே முடிவு எடுத்து, அப்பல்லோவுக்கு போன் பண்ணி ஆம்புலன்ஸ் வந்துடுத்து. "

"அடடா..."

"அங்க போனா, எதுனாச்சும் மாத்திரை தந்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று பார்த்தால்,

பைன் கில்லர் இன்ஜக்ஷன் போட்டு இருக்கோம். ஒரு நாள் அப்சர்வேஷன் என்று ஆரம்பிச்சாங்க..."

அப்பறம் ?


"நெக்ஸ்ட் டே, ப்ளட் டெஸ்ட், ஸ்கான், எக்ஸ் ரே, அப்படின்னு வேற உயிரை எடுத்தாங்க..."

"அத எடுத்தா உயிர் எப்படி போகும்! "

"ஆஸ்பத்திரி லே சிகரெட் குடிக்க கூடாது அப்படின்னு 144. நான் என்ன பண்ணுவேன் !! எப்படா வீட்டுக்கு வருவோம் அப்படின்னு ஆகிடுத்து. !"

"நெக்ஸ்ட் ?"

"ஒரு மூணு நாளைக்கு அப்பறம், கிட்னி லே ஒரு சின்ன ஸ்டோன் இருக்கு. ஆனா அது ஒன்னும் பெரிசா தொல்லை கொடுக்கிற மாதிரி இல்லை.." அப்படின்னாங்க..

"பின்னே ஏதுவாம்."

"உங்க ப்ராப்ளம் வேற.. சோடியம் பொட்டாசியம் லெவல் டில்ட் ஆயிடுத்து. அதை முதல் லே சரிபடுத்தனும் " அப்படின்னு...

"என்ன செஞ்சாங்க...?"

"ஒன்னும் செய்யவேண்டாம். சிகரெட்டை நிறுத்தணும் அப்படின்னு .."

"சரின்னு சொல்லி நிறுத்த வேண்டியது தானே !"

"என்ன சுவாமி, நீரும் அந்த டாக்டர் மாதிரியே பேசறீர்கள் ?"

"சரி சொல்லுங்கோ. மேலே என்னாச்சு..?"

"நீங்க எந்த மருந்து, மாத்திரை இன்ஜக்ஷன் போடுங்க, கொடுங்க..ஓ.கே. "
ஆனா சிகரெட்டை மட்டும் நிறுத்த முடியாது அப்படின்னு தீர்மானமா சொல்லிட்டேன். "

"கொஞ்சம் குறைச்சுக்கலாமே ! " என்றேன்.

"எதுக்கு ? எதுக்குன்னு கேட்கறேன் ...தொடர்ந்துசிகரெட் பிடிச்சா செத்து போயிடுவே அப்படிங்கராக...."

"சரிதானே ! "

"என்ன சரிதானே !!....யார் செத்து போயிடுவார் ?

"நீங்க தான்..."

"நீங்கன்னு மொட்டையா சொன்னா எப்படி ? "

"வேற எப்படி சொல்றது ?"

"நீங்க அப்படின்னு சொல்றது இந்த உடலையா இல்ல இந்த உடல் லே இருக்கிற ஆத்மாவையா ?"

வசமா மாட்டிக்கிட்டோம் என்று நினைத்து, எழுந்து விடுவோமா என்று பார்த்தேன்.

"எங்கே போறீங்க...? என்னை வீட ஒரு பத்து வயசாவது பெரியவரா இருப்பீர்கள் இல்லையா..?"

"ஆமாம். எழுபத்தி அஞ்சாறது. "

"இன்னும் எத்தனை வருஷம் இருக்க முடியும் ?"

"நானா ?  நீங்களா ?"

"இரண்டு பேருக்குமே ..."

"அஞ்சுலேந்து அம்பது கூட முடியும். இருந்தாலும் சாகத்தானே வேண்டும்."

"எப்படியும் இந்த உடல் சாகப்போறது. தெரிஞ்ச விஷயம் தானே ! அத என்ன புதுசா இந்த டாக்டர் சொல்றது. ?"

"அவர்களுக்குத் தெரிஞ்சதை அவர்கள் சொல்கிறார்கள். !"

"நான் எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன். "

"என்ன ?"

"இந்த உடல் போனா இன்னொண்ணு ...உடல்....  ஆத்மா நிரந்தரம் இல்லையோ ?"

"அதுக்காக...!!"

"அது பேச்சு அல்ல. இருக்கறவரை அதாவது இந்த உடம்பு இருக்கறவரை, மனசுக்கேத்த சாப்பாடு, சிகரெட்...!!...இது இல்லாம, இருந்து என்ன இல்லாம போயி என்ன ?"

"இது தர்க்கம் வேற விதமா இருக்கே ! " அப்படின்னு சொல்லும்போதே அவர் அந்த பையை திறந்து பெரிய ஹார்லிக்ஸ் டப்பா சைசில் ஒரு மருந்து டப்பாவை காண்பித்தார்.

"பாருங்க...சோடியம் பாலிஸ்ரென் ஸல்பேட்  பவுடர் ..நாப்பது நாள் சாப்பிடுங்க பார்க்க்கலாம் அப்படின்னு அந்த டாக்டர் சொன்னாங்க..."

"சாப்ப்பிட்டீங்களா?"

"இன்னிக்கு திரும்பவும் ப்ளட் செக் பண்ணினப்ப பொட்டாசியம் இன்னமும் 7 லே தான்  இருக்காம். 5 க்கு வரணுமாம். இன்னும் 40 நாள் சாப்பிட்டு வாங்க அப்டின்னாக."

சரி என்று சொல்லிவிட்டு, டப்பாவைப் பார்த்தேன். என்ன விலை என்று கண்ணில் பட்டது. ரூ. 1950 . 200 கிராம்.  ஒரு நாளைக்கு 50 கிராம்.

(மனசு சொல்லித்தந்தது. 4 நாளைக்கு 2000 ரூபா. 30 நாளைக்கு கிட்டத்தட்ட 15000 க்கு மேலே ஆகிவிடும் . அதுவும் இந்த மருந்து அப்பைக்கப்ப பொட்டாசியம் லெவலை கண்ட்ரோல் பண்ணும். விட்டா திரும்பவும் அது எகிரிக்கும்.  என்ன போச்சு !! கையிலே காசு இருக்கு. வாங்கலாம் ) ஹைப்பர் கலீமியா என்று சொல்லப்படும் இந்த வியாதி இதை பற்றி மேலும் படிக்க இங்கே செல்லவும்.}

"என்னவா இருக்கீங்க? இல்ல இருந்தீங்க..?" என்றேன் பேச்சின் திசை திருப்ப எத்தனித்தேன்.

"நான் எங்க வேலை பார்த்தேன்.  அப்படி இப்படி அப்பப்ப ரியல் எஸ்டேட் பிசினஸ் கான்வாஸிங். இப்ப ஒன்னும் கிடையாது. சுக ஜீவனம்...." 

என்று சொல்லி அழகாக சிரித்தார். அந்தக் காலத்து ஜெமினி கணேசன் போன்ற ஒரு வசீகரித்த தோற்றம் இன்னமும் முகத்தில் ஒட்டிக்கொண்டு இருந்தது. அதே சமயம், பல் செட் பளிச் என்று க்ளார் அடித்தது.

வசீகரா என்று மயங்கி போன கேஸ் போல இருக்கு. அந்தக் காலத்திலேயும் !!

"அதுலே இன்கம் எல்லாம் எப்படி ?"

ஹா..ஹா அப்படின்னு சிரித்தார்.  இன்கம் அப்படின்னு பார்த்தா என் சிகரெட் செலவில் கால் பங்கு கூட வராது. வந்ததும் இல்ல.  பார்யாளோட தோப்பனார் தானே புரொப்ரைட்டர். !! சம்பளம் அப்படின்னு கிடையாது. என்ன வேணுமோ ....தந்துண்டு தான் இருந்தார். அவர் இருந்த வரைக்கும்..."

"பின்னே இப்ப இந்த சிகரெட் மருந்து டாக்டர் பீஸ் எல்லாம் ? இன்சூரன்ஸ் இருக்கா?"

திரும்பவும் ஹா ஹா ஹா என்றார். பக்கத்து பெஞ்சில் இருந்தவர்கள் கூட திரும்பி பார்த்தார்கள்.

"எல்லாம் பார்யாள் உபயம் . வாஸ்தவமா , கல்யாணம் முடிஞ்ச அடுத்த நிமிஷமே எனக்கு அவ அப்பா கம்பெனி லே ஒரு வேலையும் வாங்கித் தந்துட்டா.!! "

திகைத்து ப்பார்த்தேன். பொண்ணையும் கொடுத்து வேலையும் கொடுத்தாரா !! "ஹி இஸ் க்ரேட். "

"அவர் இருந்த வரைக்கும் வேலை இருந்தது. அவர் போனப்பறம் கம்பெனியும் இல்லை. வேலையும் இல்லை. "

"புரியல்லயே !"

"அதனாலே என்ன ? அவ பாங்கில் பெரிய ஆபீஸரா போயி, இருந்து ரிட்டையர் ஆயிருக்கா . ஸோ , பென்சன், இன்சூரன்ஸ் எல்லாம் கன்டின்யூ  ஆர்ரதே ! ......"  இரண்டு செகண்டு கழிந்த பின்னே தொடர்ந்து " எனக்கும் தான் .எனக்கு பாக்கெட் மணி அப்படின்னு நாளைக்கு 200 ரூபா. சம் டைம்ஸ் 500 ரூபா .மேற்கொண்டு நான் எப்பவுமே கேட்டது இல்ல. "

"லக்கி யூ ஆர்.  "  என்று பொறாமையுடன் சொன்னேன். அதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேணும்டா என்று மனசு சொல்லியது.

மனைவி அமைவதெல்லாம் .....
கண்ணதாசா யூ ஆர் க்ரேட் !!


என்று நினைத்துக்கொண்டேன்.

கைகளை கழுவிக்கொண்டு திரும்பி வந்தார்.

"நீங்க யாருன்னே தெரியாது.  இருந்தாலும் எடுத்த எடுப்பிலே உங்க கிட்ட நிறைய விஷயங்கள் சொல்லிட்டேன்.  ஒன்னும் தப்பு இல்லையே ..."

"இதுலே என்ன தப்பு இருக்கு ?"

"ஆத்மார்த்தமா யார் கிட்டயாவது மனசை கொட்டி பேசணும் இல்லையா..?"

"ம்..."

"சாப்பாடு கிடைச்சுடறது..மருந்து கிடைக்கிறது. நான் சொல்றதை கேட்கிறதுக்கு ஆள் கிடைக்கலையே ! மனசு திறக்கலேயே !!"

"புரிகிறது."

"ஒன்னும் மனசிலே வெச்சுகாதீ ங்க..."

நான் காப்பி சாப்பிட்டு முடித்து இருந்தேன். எழுந்தேன்.

" பில்லை நான் பே  பண்ணிடறேனே ..." கையை நீட்டினார்.

" பரவா இல்லை. நான் பில் வாங்கிண்டு தான் வந்தேன். "

"அடுத்த தரம் நீங்க வரும்போது நான்தான் கொடுப்பேன்.டுமாரோ பி ஸ்யூர் யூ ஆர் ஹியர். 
 அது சரி உங்க பெயர் ...?"

சொன்னேன்.

"என் பெயர் அனந்த சயனம் "

"ஆனந்த சயனம்  அப்படின்னு இருந்தா இன்னமும் பொருத்தம். .

என்னோட ஆசிர்வாதம் ப்ளஸ்ஸிங்ஸ். ' என்றேன்.