சனி, 18 ஜூன், 2016

முட்டாள்


கோபம் வந்தால் மற்றவர்களை முட்டாள் என்று திட்டுவதை பார்க்கிறோம்..

தம்முடைய கருத்துக்களை ஒத்துப்போக முடியாதவர், புரிந்து நடக்காதவர் எல்லாருமே முட்டாள் என்று தான் பலர் நினைக்கின்றனர் போலும்.

உலகத்தோடு ஒத்துப்போகாதவனைச் சில சமயம் முட்டாள். சரா சரி பொது அறிவு இல்லாதவனையும் அறிவிலி என்று சொல்கிறோம்.

நேற்று, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலே அறிவு பூர்வமான ஒரு கேள்வி கேட்டார்கள். நான்கு படங்கள் விஜய் நடித்ததாம் . எந்த வருஷத்தில் வெளியிடப்பட்டது என்று பழைய படம் முதல் கூறு.

இந்த சினிமா பற்றிய அறிவில் நான் சுத்தம். இது கூடவா தெரியல்ல என்னும் விதமாய் என் மனைவி என்னைப் பார்ப்பது போல் தோன்றியது.

முட்டாள்தனம் என்பதை அறிவு என்பதற்கு எதிர்ப்பதம் என்று எடுத்துக்கொண்டால், அறிவு என்பதற்கு ஆயிரம் இலக்கணங்கள் இருக்கின்றன.ஆக,  அதை விட முட்டாள் தனத்தை விளக்குவதே அறிவு என்று நினைத்தேன்.

முட்டாள்தனம் என்பது ஒரு குறிப்பிட்டு எக்ஸ் என்று சொல்ல இயலாது.
ஏன் எனின் அது ஒரு ஸ்பெக்ட்ரம்.

0 லெந்து 100 வரை ஒரு  வானவில் மாதிரி ஒன்று வரைந்தால், நாம் எல்லோருமே ஏதாவது ஒரு புள்ளியில் இருக்கத்தான் செய்வோம் என்று தோன்றுகிறது.

என்ன ! நான் கொஞ்சம் நூற்றுக்குப் பக்கத்திலே இருப்பேன். இருந்தாலும் செண்டம் இல்லை.



கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட ஒரு  நிகழ்வு நேற்று.

நான் வங்கியில் இருந்து வந்து கொண்டு இருந்தேன். என்னை அதி வேகத்தில் க்ராஸ் செய்த ஒரு மினி மாருதி கார் திடீர் என்று பிரேக் அடித்து க்ரீஈச் என்ற சத்தத்துடன் நிற்க,

அந்த கார் முன்னே ஒரு மூன்று வயதுக்குழந்தை ஏதும் அடிபடாமல் தப்பியது ஆச்சரியமாக இருந்தது. ஆண்டவன் கருணை .

அந்தச் சிறுவன் வெகு அழகாக டிரஸ் செய்து கொண்டு, வீதியின் ஒரு  சாரி யில்  இருக்கும் மினி ஹாலில் இருந்து எதிரில் இருக்கும் கல்யாண மண்டபத்திற்கு அப்பா கையை விட்டு விட்டு ஓடி இருக்கிறான்.

அவனது அப்பா அவனைப் பிடிக்க வருமுன் சாலையில் இந்த அமக்களம் நடந்து விட்டது.

எல்லோரும் அந்த அப்பாவை முட்டாள் என திட்டாத குறை.

****

நீதானே ஏமாந்து போனாய் !!

சின்ன வயதில் நாம் எல்லோரும் கேட்ட சிங்கம் நரி, கதை. சிங்கத்தை கிணற்றுக்குள் இன்னொரு சிங்கம் இருக்கிறது என்று பார்க்கச் சொல்லிக் குதிக்க வைத்த நரி, சிங்கம் கதை.
சிங்கம் முட்டாளா ? குள்ள நரி புத்திசாலி யா ?

******

இதை  பாருங்க.. இப்படி ஸ்கூல் பசங்க அபாயகரமா புட் போர்டில் பிரயாணம் செய்வது எவ்வளவு முட்டாள் தனமாக இருக்கிறது !
வாயை தொறந்து எதுவும் சொல்லிடாதீங்க. வி ளையாட்டுப்புள்ளைங்களா  இருக்கிறார்களே என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.
ஆனால்,முட்டாள்தனம் என்று சொல்லி  அடி வாங்க வேண்டாம்.

அவசர அவசரமாக அமேசான், பிலிப் காரட்டில் வணிகம் செய்து, பின் பொருள் வந்த பின்னே பிரித்து பார்த்தால், நாம் எதிர்பார்த்தது இல்லையே என்று நாமே நம்மை கடிந்து கொள்வதும் ஒருவகை மு............தனமோ ?
வாக்யூம கிளீனர் ரூ 300 தானே என வாங்கிவிட்டு, அந்த பார்சலை உடைத்துப் பார்த்தால் வெறும்  பொம்மை டாய். அகத்துக்காரி வந்து  பார்க்குமுன் அதை பரணியில் வைத்தது என் புத்திசாலித்தனம்.  சரிதானே !

முகநூல் இன்று முழுக்க முழுக்க மூழ்கடித்துக்கொண்டு இருக்கிறது.
அதை அரசாங்கம் சொல்லி  அந்த முக நூல் நிறுவனமும் மூடி விட்டால் ஐம்பது விழுக்காடு இளைஞருக்கு  பைத்தியம் தெளிந்து விடும் என்று சொல்கிறார்கள். ஆனால், அதே சமயம் மிச்சம் ஐம்பது விழுக்காடு நபர்களுக்கு   பைத்தியம் பிடித்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.


முக நூலில் தம் முகத்தையே காட்டாது வேறு யாரோ ஒருவர் முகத்தை பார்த்து அவர் சொல்வதெல்லாவற்றையும் நம்பி பின் மோசம் போன கதைகள் கேட்கக் கேட்க பரிதாமாக இருக்கின்றன.அவர்களை மோசம் போனவர்கள், நம்பி ஏமாந்தவர் என்பதா? இல்லை மு.............என்பதா?

எனக்குத் தெரிந்த ஒருவர், அமெரிக்க வாழ் நண்பி  கடந்த 8 ஆண்டுகளாக, தினம் தனது  செலஃபீ புதிய படத்தைப் போடுகிறார்.

அதற்கு நான் லைக்ஸ் போட வில்லை என்றால் நான் மு......   !!!!

"ஏண்டா ! இது வரைக்கும், 238 பேர் லைக்ஸ் போட்டு இருக்காங்களே ! அவங்க எல்லாம் மு......?"

என்று கேட்டாலும் கேட்பார்கள்.
எதற்கு வம்பு என்று நான் லைக்ஸ் போட்டு விடுவது வழக்கம்.



மாறி வரும் உலகத்தில் மாறாது இருப்பது மு.........  ?

பார்க்கப்போனால், நேரத்தில் காட்ட வேண்டிய சுறுசுறுப்பை வெளிப்படுத்தாது இருப்பதும் முட்டாள் தனம்  ?


எனக்கு ஒரு நேரம் என்று பதிவு செய்து விட்டு, நான் வர இயலவில்லை என்றும் தகவல் சொல்லவில்லை என்று என் மேல் கோபம் கொண்டு என்னை மேலதிகாரி முட்டாள் என நேரடியாகச் சொல்லாமல்,  முட்டாள் தனமாக இருக்கிறாயே என்று கடிந்து கொண்ட காலம் இருந்திருக்கிறது. 


தேவ காந்தாரி ராகத்தை ஆரபி என்று சொல்லப்போய், ஞான சூன்யம் என்று பெயர் வாங்கினது இன்னும் நினைவை விட்டுப்போகவில்லை. பாட்டு என்ன கேட்கறீர்களா? கேளுங்கள்.: ஏரிக்கரையில் போறவளே பெண் மயிலே 


ஒவ்வொரு வீட்டுக் குடும்ப வாழ்க்கையிலும் வெளியிலே சொல்ல முடியாத பல முட்டாள் தனமான செயல்கள் நடக்கத்தான் செய்கின்றன.

சிலவற்றை மட்டும் சொல்லலாம். 

வீட்டுக்கு மளிகை பொருட்களே வாங்காத அந்தப் பழக்கம் இல்லாத ஒரு நண்பருடன் மளிகை  கடைக்குச் சென்று இருந்தேன். அவர் , கடைக்காரரிடம் கடுகு வேண்டும் என கேட்க, அவர் எத்தனை என்று கேட்டார். இவருக்கு அதற்கு பதில் தெரிய வில்லை.  ஒரு கிலோ கொடுங்கள் என்று சொல்ல, அந்த கடைக்காரர் அவரை பார்த்த விதம் ரசிக்கும்படியாக இருந்தது. 

என்ன கடுகு ஒரு கிலோ வாங்கி இருக்கிறீர்கள் என்று போகும்போது கேட்டு விட்டேன். அதற்கு அவர், நேற்று நான் அரிசி அரைக்கிலோ வாங்கி சென்றேன். என்ன இது அரைக்கிலோ ? இனிமேல் எல்லாமே ஒரு கிலோ வாங்கி வாருங்கள் என்று என் மனைவி சொல்லி இருக்கிறாள் என்றார். 

நிற்க.  

1977 லே ஒரு பெரிய சூறாவளி நாகையில். கடல் நீர் உள்ளே புகுந்தது. மின் கம்பங்கள் எல்லாம் சூறைக்காற்றால் உருக்குலைந்து போன  நேரம்.15 நாட்களுக்குப் பின் தான் மின்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. எங்கள் அலுவலகத்திற்கு மட்டும் வரவில்லை. போன் செய்தால் அதை எடுக்க அந்த அலுவலகத்தில் ஆட்கள் இல்லை போலும். நேரே செல்வோம் என்று சென்று, 
அந்த அலுவலகத்துள் சட் என்று உள்ளே நுழைந்து பெரிய அதிகாரியிடம் ஒரு கால் மணி நேரத்திற்கு எப்படி மின்சாரம் இல்லாததால், எங்கள் தினசரி அலுவல் வீணாகிறது என்று விளக்கியபோது, அந்த அலுவலர் எங்களையே பார்த்துக்கொண்டு இருந்தார். ஒன்றுமே பேசவில்லை. 
அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் கடைசியில் சொல்கிறார். : 
சார் ! இது மின் துறை இல்லை. மீன் துறை. போர்டை படிக்காமல் வந்து விட்டீர்களா ?

இன்னொரு பக்கம் பார்த்தால், அந்த காலம் முதல் இன்றும்,

ஜோதிடம் என்ற பெயரிலே நல்ல இடங்களைத் தொலைத்து தனது பெண்ணின் வாழ்வையும் தொலைக்கும் பெற்றோர் பலரை நான் பார்க்கிறேன். இவர்கள் செய்வது என்ன? 

அந்தக் காலத்துலே "நான் ஒரு முட்டாளுங்க.." என்று சந்திர பாபு பாடல் இன்றும் பிரசித்தம்.

பல கணவர்கள் தமது இல்லாளை முட்டாள் என்று மனசுக்குள் திட்டுவது இல்லவே இல்லை என்று சத்யம் செய்ய முடியாது. 

அதே சமயம் இல்லாள் ஒளிவு மறைவு இல்லாது நேரடியாகவே தனது கரம் பிடித்தவனை, என்ன இப்படி முட்டாள்தனமா செஞ்சுட்டீக என்று சொல்வது வெள்ளிடை மலை. 

என்ன இப்படி எல்லோருக்கும் முன்னாடி ? என்று ஒரு தரம் என்னோட பாஸ் அவரோட சம்சாரத்தை,  (அவளும் அதே ஆபீஸ் லே ஒரு சீனியர் ) கேட்டுட்டார்.  அதற்கு உடனே கொஞ்சம் கூட தயங்காது, அந்த இல்லாள் "நீங்க தானே சத்யம் வத " அப்படின்னு சொன்னீங்க...." அதுனாலே தானே சொன்னேன். என்றாள் . 
மேலும், என்ன,  "அப்ப நீங்க ஒத்துக்கிறீங்களா ?" என்று கேட்கறா . 

"நான் முட்டாள் அப்படிங்கறது தான் நான் உன்னைக் கல்யாணம் பண்னினப்பவே தெரிஞ்சுடுத்தே...அதுலே புதுசா கண்டுபிடிக்க என்ன இருக்கு ?" அப்படி சமாளிக்கிறார் என் பாஸ்.

சமூகப் பார்வையிலே பார்த்தால், 


நாத்திகனுக்கு ஆத்திகன் முட்டாள்.  
ஒரு கருத்தில் முடிவாக இருக்கிறார்கள். 

ஆனால்,
அந்த ஆத்திகர்களுக்குள்ளே பாருங்கள் !!
ஒருவரை இன்னொருவர்  முட்டாள் என்று சொல்லாமல் அநேக வார்த்தைகளில் அலங்கரித்துச் சொல்லும்  உபன்யாச கர்த்தாக்கள் அநேகம். 

அவன் ஒருவனே  ( ஸ    ஏகஹ பிரணவ )என்று வாக்கியம் இருக்கிறதே என்றேன். 
அந்த ஏகம் வேற . எங்க ப்ரணவம் வேற. என்றார்கள். 






  கோவில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்று சுப்ரீம் கோர்ட் வரை சென்ற வாதங்கள் எல்லாமே எல்லோருக்கும் அறிவு பூர்வமாக இருக்கிறதா என்று தெரியவில்லை

யார் அறிவு ஜீவி, யார் முட்டாள் என்ற வாதத்திற்கு எல்லை இல்லை. அறிவை அந்தக் காலத்தில் எடை போட ஐ.க்யூ என்று ஒன்று. அதன் படி பார்த்தால், 150 ஐ.க்யூ வாங்கினவன் 50 ஐ.க்யூ இருப்பவனிடம் வேலை பார்க்கிறான். எமோஷனல் இன்டலிஜென்ஸ் அப்படின்னு நோயல் கார்டனர் கருத்துப்படி பார்த்தால், வாழ்க்கையில் வெற்றி பெற்றவருக்கும் மற்றவருக்கும்  உள்ள வித்தியாசம் அறிவு, முட்டாள் தனத்தை மீறி ஏதோ ஒன்று இருக்கிறது. 

பல சந்தர்ப்பங்களில் கேள்வி கேட்பவன் முட்டாளாகிறான். கேள்வி கேட்பவனைப் புரிந்து கொள்ளாது பதில் அளிக்கும் பலரும் முட்டாள் ஆகின்றனர்.

உலகின் முதல் நம்பர் முட்டாள் இவர்கள் தான் என்று இந்த வலை சொல்கிறது. நல்ல வேளை .. முட்டாள் தனத்தைப் பற்றி எழுவதே முட்டாள் தனம் என்று இவர்கள் சொல்லவில்லை.

முட்டாள், முட்டாள் தனம் இரண்டும் வெவ்வேறு. முட்டாள் என்று பார்லிமெண்டில் சொல்வது தவறு. ஆனால், முட்டாள்தனம் என்று சொல்வது தவறல்ல. இது மக்கள் அவை சட்டத்தின் ஒரு வியாக்கியானம்

நேற்று வங்கியில் ஒரு பெண்மணி அந்த ஊழியரிடம் இரைந்து பேசிக்கொண்டு இருந்தார்.  நான் கவனித்தேன். 
"எப்ப ஏ.டி. எம். லே  கார்டை  சொருகி என்னுடைய பின் போட்டால், என்னை "அலுவலகத்தை அணுகுங்கள் " என்று சொல்கிறது. எனக்கு உயிரே போய் விட்ட்து. " என்றாள் .
"நீங்கள் வரவேண்டியது தானே " என்று அந்த ஊழியர் கேட்கிறார்.
"என்றைக்காவது காரணம் சொல்லும் என்று எதிர்பார்த்தேன் " என்கிறார் அந்த கஸ்டமர். 
பாவம். பொறுமையுடன் அந்த ஊழியர் கணினியைப் பார்த்தார். அவரே சிரித்து விட்டார். "மேடம், ஜீரோ பாலன்ஸ் மேடம் . அதான்.அப்படி சொல்லியிருக்கிறது " என்றார். 

வீட்டுக்கு சென்ற மனைவி கணவனிடம் என்னை ஏன் இப்படி அவமானப் படுத்தி விட்டீர்கள் ? பணம் இல்லாத வங்கியின் ஏ.டி.எம். கார்டை என்னிடம் கொடுத்து என்னை முட்டாள் ஆக்கி விட்டீர்கள் என்றாராம். அதற்கு அவர் கணவர், "உனக்கு ஏ.டி. எம் கார்டு பயன்படுத்துவது என்பது நன்கு புரியும் வரை பொறுத்திருந்தேன். அவ்வளவு தான் " என்றாராம். 

வங்கிகளின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு எல்லையே இல்லை. ஜீரோ பாலன்சில் ஒரு கணக்கு துவங்கலாம் என்று சொன்னவர்கள் அதில் பணம் போடவேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை.  என் நண்பர் ஒருவருக்கு சராசரி யாக கணக்கில் இருக்கவேண்டிய தொகை இல்லை. அதனால், அபராத தொகை ரூ. .....உடன் செலுத்தவும். என்ற ஈ மெயில் .
பாவம். நூறு ரூபாய் செலுத்திய பின்னும் பாலன்ஸ் 0. 

ஒரு நாற்பது வருடம் முன்னாடி எனது நண்பர் ஒருவர் ஒரு ஆங்கில படத்திற்கு அடிக்கடி போய்க்கொண்டு இருந்தார். திருச்சி பிளாசா தியேட்டர் . 
"என்ன அப்படி என்ன இருக்கிறது அந்த படத்தில், வாரத்திற்கு இரு தடவை போய் பார்க்கிறாய்" என்று ஒரு நாள் கேட்டு விட்டேன். 
"உனக்குத் தெரியாது. நீ ஒரு அம்மாஞ்சி.  அதில் ஒரு நிர்வாணக் காட்சி வருகிறது " என்றார்.
"அப்படி ஒன்றும் இல்லையே...ஒரு பெண்  ஆற்றில் இறங்கி விட்டு, தன் 
எல்லா உடைகளையும் தண்ணிக்குள் இருந்த படியே கரைக்கு விட்டி எறிகிறாள் . "
"அங்கே தான் சுவாரசியம் " என்றார் நண்பர். 
"என்ன சுவாரசியம் ? அவள் கரைக்கு வரும்போது தான் நடுவில் பாலத்தில் ஒரு டிரைன் வருகிறது. அவள் வரும் வ்யூவை மறைத்து விடுகிறதே !"

"அதே தான். நீ சொல்றது சரிதான். ஆனால், 
என்னிக்காவது ஒரு நாளைக்காவது அந்த டிரைன் லேட்டா வரும் இல்லையா ? அதனால் தான்...."  
சொல்லி சிரிக்கிறார் நண்பர். 



பார்க்கப்போனால் ஒரு கால கட்டத்தில் நாம் செய்வதெல்லாம் பிற்காலத்தில் முட்டாள் தனமோ என்று தோன்றுவதில் வியப்பில்லை.

உலகத்திலே முதல் ஐந்து முட்டாள்கள் யார் யார்  என்று ஒரு வலை தளம் சொல்லிற்று. அங்கு நான் போய் பார்த்து......நான் எதற்கு சொல்ல...நீங்களே பாருங்கள். 

இதெல்லாம்

இன்று காலை எனது வலை நண்பர் திரு சசி ராமா அவர்கள்
மகாபாரதத்தில் விதுரர் கூறிய மூடர்களின் லக்ஷணங்கள் படித்தது தான். 


பதினேழு (17) வகையான மூடர்கள் யார் யார் என்பதை ஒரு பட்டியல் இட்டு இருக்கிறார். 
இந்த பட்டியலில் நம்மில் கிட்டத்தட்ட எல்லோருமே ஓரிரு இடத்தில் மாட்டுவோம் . அதற்காக நாம் நம்மை முட்டாள் என்று சொல்ல அனுமதிக்க முடியுமா ?





விதுரர் சொன்ன முட்டாள் பட்டியல். 

1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி யடைபவன்.
2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்ப‍வன்.
3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்ப‍வன்.
4)உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.
5) தானத்தைக் கேட்கக் கூடாதவனிடம் கேட்பவன்.
6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டிருப்ப‍வன்.
7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம், பொருளைக் கொண்டு பிழைப்பவன்.
8) பலமில்லாத‌வனாக இருந்துகொண்டு, பலமுள்ள‍வனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.
9) பிறரிடம் இருந்து உதவியோ அல்ல‍து பொருளையோ எதுவாகினும் அதைப் பெற்றுக்கொண்டு, பின் அது தனது 'நினைவில் இல்லையே...' என்று சொல்பவன்.
10) தனது விந்தினை வேறு நிலத்தில் சிதற விடுபவன்... அதாவது பிறர் மனைவியரை அடைபவன்.
11) தனது மனைவியைக் குறித்து அவனே பிறரிடம் தவறாகப் பேசுபவன்.
12) தனது அச்சங்கள் அனைத்தும் தனது மருமகளால் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.
13) மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிட ம் கேலி செய்பவன்.
14) அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.
15) தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.
16) புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அதைத்தானே சொல்லித் தற்பெருமை பேசுபவன்.
17) எதிரிகளிடம் சரணடைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.
ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர் என்று விதுரர் கூறியுள்ளார்.
மகாபாரதத்தில் கௌரவ, பாண்டவர்களின் சித்தப்பா விதுரர் ஆவார். இவர் மதிநுட்பம் மிகுந்த அமைச்சராக தனது அண்ண‍ன் திருதராஷ்டர‌ரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாவார்.
இந்த பட்டியல் இந்த காலத்திற்கு அப்படியே பொருந்துமா ?


வெள்ளி, 10 ஜூன், 2016

இந்த வைரத்தைப் பார்ப்பதே ஒரு வரம்.



இன்னிக்கு காலைலே கணினியைத் திறந்தால் ,
கூகிள் காரர் ஹாப்பி பர்த் டே சொல்றார்.



அதுக்கப்புறம்,
ஹெச்.டி.எப்.சி.
ஐசி ஐசி ஐ மாதிரி கார்பொரேட் 
ஒவ்வொருவரும் 
மேசேஜ் அனுப்பி இருக்காங்க.

இங்கன வந்து பார்த்தா,
நான் எப்பவோ 1987 லே போய் தர்சனம் செய்ஞ்ச 
ஏரி காத்த ராமர் வந்து 
தர்சனம் தரர்றார்.

அது என்ன வால் பைண்டிங் ஆ ? சுவர்லே !!
அற்புதம். 
துளசி கோபால் வலையில் இருந்த படம்.
நன்றி மேடம்.


வாழ் நாள் முழுவதும் மனசிலே 
வச்சிருக்கவேண்டிய சித்திரம்.

தாங்க்ஸ் துளசி மேடம்.



ஸ்ரீ ராம சீதா லக்ஷ்மண அனுமான் கி 
ஜெய் போலோ ஹனுமான் கி. 


இது கூகிள் லேந்து எடுத்த படம்.
ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே
ரகுநாதாய நாதாய சீதாயா பதயே நமஹ. 





அது சரி. இன்னிக்கு 74 முடிஞ்சு 75 துவங்குது. 
யோவ் பெருசு ! உன் வயசு என்ன அப்படின்னு 
யாருனாச்சும் இளவட்டம் கேட்டது அப்படின்னா 
74 சொல்லனுமா 75ன்னு சொல்லணுமா ?

வலை உலகப் பிதாமகராக நான் கருதும் 
புலவர் இராமானுசம் அவர்களை மானசீகமாக 
இங்கிருந்தே வணங்கி அவரது 
ஆசிகளைப் பெற்றுக்கொள்கிறேன். 

நேற்று எனது நண்பர் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த தமிழ் வலை உலக எழுத்தாளர் திரு மோகன்ஜி அவர்கள் என்னைப் பார்க்க  வந்து இருந்தார்.
நேரம் போனதே தெரியவில்லை. ஒரு 2 மணி நேரம்.

+mohan gurumurthy
தன்னைப் பற்றி தன தந்தை என்றோ கூறியதை இன்னமும் நினைவில்
கொண்டு உள்ளார்.

"மோகன் ஒண்ணு பூவோட இருப்பான், இல்லை,  புஸ்தகத்தோடு  இருப்பான்" என்று அவர் அப்பா சொல்வாராம் அவரைப் பார்க்க வரும் நண்பர்கள் அவர் எங்கே எனக்கேட்கும்போது.

உண்மை தான்.

மோகன்ஜி பூவாக மணக்கிறார்.
புத்தகமாக விரிகிறார். மலர்கிறார். மனத்தைக் கவர்கிறார்.
இவரது பெரும் ஆற்றல் தமிழ் வலை உலக ஆழ் கடலுள் அமிழ்ந்து இருக்கும் விலை மதிப்பற்ற முத்து.

இன்னொரு கோணத்தில் இவர் வைரக்கல். பட்டை தீட்ட தீட்டததான் பிரகாசம் எனச் சொல்வர்.
இவரோ பட்டை திட்டப்படாத வைரக்கல். இருந்தும்  இவர் பிரகாசத்திற்கு
ஒரு அளவில்லை.

நல்முத்தை நாடுபவர்க்குத்தானே அதன் பெருமை அருமை தெரிய வரும்.!
இந்த வைரத்தைப் பார்ப்பதே ஒரு வரம்.  

அந்த ஏரி காத்த ராமர் தந்த வரமோ !

இவரை நான் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பே சந்தித்திருந்தால் இலக்கிய உலகில் நான் சென்ற வழி வேறு மாதிரி இருந்திருக்குமோ ?

அவர் விடை பெற்று சென்ற பின்
ஜெயமோகன் அவர்களே என் வீடு தேடி வந்தாரோ என்ற ஒரு பிரமை.

உண்மை.

நான் பெரிதும் விரும்பிப் படிக்கும் வலைத் தளங்கள் சிலவற்றில் சுந்தர்ஜி பிரகாஷ் இவரது சிஷ்யராம். திவாஜி (அதான் ஆன்மீக பதிவாளர்) இவருக்கு சின்ன வயதிலேந்து தெரிந்தவராம்.


புத்தக கண்காட்சியைப் பார்த்துவிட்டு அவரது கருத்துக்களைச் சொன்னார்.





அவர் சென்ற பின்பு தான் நினைவு வந்தது.
எனது மருத்துவர் அவர்களைச் சந்திக்கவேண்டும் என்று.

அவசர அவசரமாக ஓலா டாக்சி க்கு புக் செய்தேன்.
ஷார் டாக்சி தான் கிடைத்தது.

அதில் எனக்கு முன்பேயே ஒரு நபர்.
நானும் அவர் செல்லும் வழியிலே .அதனால் என்னையும் எற்றிக்கொண்டனர்.

ஏறும்போதே கார் வாடகையைத் தரவேண்டுமாம்.
ரூபாய் 114 தான். தனி மினி எடுத்தால் 300 ஆகும்.

வழி நெடுக ஒரு நடந்த கதையைச் சொல்லிக்கொண்டு வந்தார்
கூட வந்தவர்.

தொடரும்.