திங்கள், 11 ஆகஸ்ட், 2014

தருமம் தானோ !!!!!!

ஒரு பத்து நாட்கள் முன்பு தான் அறிமுகமான ஒரு  நபர்   வீட்டுக்கு சென்று அங்கு வாசலில் இருக்கும் காலிங் பெல் அடித்தால் என்ன நடக்கும் என்று ...

நீங்கள் அனைவரும் எதிர்பார்ப்பீர்களோ ....

அது தான் நடக்கும் என்று சுப்பு தாத்தா நம்பினார்.  .

காலிங் பெல்லை அழுத்தினார் ..

ட்ரிங் ..  ட்ரிங் ...

வயதான கிழவி ஒருவர் வந்து கதவைத் திறந்து வெளியே வந்தார்கள்.

நீங்கள் அழைக்கும் நபர் உள்ளே  .இருக்கிறார். உறங்கி கொண்டு இருக்கிறார்.
இன்னமும் ஒரு தரம் பெல்லை அடியுங்கள் என்று சொல்லி சென்று விட்டார்.

வீடு வாசல் கதவு திறந்து இருந்தது. இருந்தாலும் சுப்பு தாத்தாவுக்கு வீட்டுக்குள்ளே சுதந்திரமாக நுழையும் அளவுக்கு பரிச்சயம் ஆகாத வீடு. ஆதலால், மறுமுறை பெல் அடித்தார்.

அடுத்த  கணம் ஒரு விபரீதம்.!!!

ஒரு குட்டி நாய் பாய்ந்து வந்தது.

சுப்பு தாத்தா மேல் பாய்ந்து குதறி விட்டது.

அய்யோ..அம்மா.. என்று சத்தம் போட்டார் சுப்பு தாத்தா.

 ஓடவும் விடவில்லை அந்த பாமநேரியன் நாய்க்குட்டி. சுற்றி சுற்றி இரு கால்களையும் பிராண்டியது.

அந்த குறுகிய இடை வெளியில், அவர் ஓட யத்தனித்த  போது, பக்கத்தில் இருந்த பூச்சட்டி இரண்டு சுப்பு தாத்தா கால்களில் விழுந்தது.

சுப்பு தாத்தா வலியினால் துடித்தார்.

அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த பெரியவர் வந்தார்.  அதே வீட்டில் இருந்த ஒரு வாலிபர் வந்தார்.

ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.

நாய் ஸ்டெரிலைஸ் செய்த நாய் தான். ஊசி போட்டு இருக்கிறது. என்றார் அந்த பெரியவர்.  பெடடின் ஆயிண்ட்மெண்ட் போட்டு விடட்டுமா ? அது போதும் என்றார் அவர்.

வாலிபர் சமயோசிதமாக வீட்டுக்குள் சென்று தண்ணீர் பஞ்சு கொண்டு வந்து ரத்தத்தை துடைத்து எடுத்தார்.

அதற்குள் நான் செல்லடிக்க, எனது மகன்  பைக்கில் வந்து " வா, பக்கத்தில் இருக்கும் ஹாசிபிடல் எதுக்காவது செல்வோம் என்று  சொல்ல,நாங்கள், பைக்கில் புறப்பட இருந்த போது,

நான் அழைத்த நபர் வந்தார்.

மாமா, கவலைபடாதீர்கள். வளர்ப்பு நாய் தான். பெடடின் ஆயிண்ட்மெண்ட் இருந்தால் போடுங்கள் , போதும் என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

ரத்தம் வழிவதையோ   நான் துடிப்பதையோ அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

நானும் என் பையனும் பக்கத்தில் இருந்த ராயல் ஹாஸ்பிடல் சென்றோம்.

காயத்தை சுத்தம் செய்தார்கள்.
டெட்டனஸ் டாக்சைடு ஊசி போட்டார்கள்.
நாய் பிராண்டியது போலும் இருக்கிறது. கடித்தது போலும் இருக்கிறது.
 எதற்கும் தற்காப்பாக ஆண்டி ரேபீஸ் ஊசி ரேபி பூர் போடவேண்டும். 24 மணி நேரத்திற்குள். என்று அட்வைஸ் செய்தார் டாக்டர்.

எதற்கும் எனக்கு பழக்கமான டாக்டர் வீ. ஆர். கணேசன் அவர்களிடம் சென்றேன்.

அவரது கிளினிக்கில் ரிசப்ஷன் ஹாலில் பிரும்மாண்டமான சாயி பாபா படம்.
என்னை ஆசிர்வதித்தது. வொய் பியர் வென் ஐ ஆம் ஹியர் என்று சொன்னது.

டாக்டர் பார்த்தார். என்னைக் கேட்டார்.

கடித்திருக்கிறதா இல்லை பிராண்டி மட்டும் இருக்கிறதா என்று சொல்ல இயலாத நிலையில்,

அவரும் ஊசி போடவேண்டும் என்று சொல்லி எஸ் 2 ரேபி வாக்ஸ் ஊசி போட்டு விட்டு, இன்னும் இரண்டு 7 வது நாள், 30 வது நாள் போடவேண்டும் என்று
.சொல்லி,

காயம் ஆற, ஆண்டி பயாடிக் மருந்துகள், வலி வீக்கத்துக்கான மருந்துகள்,
ஆண்டி பயாடிக் மருந்து சைடு எபக்ட் வராமல் இருக்க ப்ரோ பயாடிக் மருந்துகள் தந்து, அடுத்த மூன்று நாட்கள் கழித்து திரும்பவும் வரச்சொன்னார்.

நாய் எப்படி இருக்கிறது என்று கவனித்து வாருங்கள். பத்து நாட்களுக்குள் நாய் எப்படி இருக்கிறது என்று என்னிடம் சொல்லுங்கள். நாய்க்கு ஏதேனும் ஏற்பட்டால், உங்களுக்கு இன்னமும் இரண்டு ஊசிகள் தேவையாக இருக்கும் என்றார்.

என் தலை விதியை, அஷ்டமத்து சனியை ஐம்பது தடவை என் கோபம் தீர திட்டி வீடு திரும்பினேன்.

ஒரு நாலைந்து நாலைந்து நாட்கள் மனசு திக் திக் என்று இருந்தது. எப்போது கடுமையான ஜுரம் வரும் ? எப்போது நான் லொள் லொள் என்று குலைப்பேனோ என்று காத்து இருப்பது போலும் தோன்றியது.

கீழாத்து  மாமி, நாய் கடித்து அவர்  அப்பா இறந்த விவரம் சொன்னார்.

ஐம்பது வருஷம் முன்னாடியாம்.  

 என்னை பார்க்க வந்த சிலர் நாய்க்கடி பட்டவர்கள் என்னதான் ஊசி போட்டாலும் பிழைப்பது சிரமம் என்று பயமுறுத்தினார்கள். சிலர் ஒன்றுமே இல்லை தேவை இல்லாமல் பயப்படவேண்டாம் என்றார்கள்.  தேங்காய் எண்ணை தடவு போதும் என்றார் சிலர். 

அடுத்த வாரம் திரும்பவும் அதே  வீட்டுக்கு சென்றேன். மனசிலே ஒரு வேகம்.
நாய் எப்படி இருக்கிறதோ என்ற பயமும் ஒரு ஐம்பது பர்சென்ட்.

என்னதான் இருந்தாலும், ஒரு முதல் உதவி செய்யக்கூட அவருக்குத் தோன்ற வில்லையே என்ற வருத்தம் , கோபம் என்று சொல்லமுடியாது.

அந்த வீட்டு கதவில் ஒரு போர்டு இருக்கக் கூடாதா...!!!
நாய் ஜாக்கிரதை என்று போட்டு இருந்தால் இது நடந்து இருக்காது.

நான் அங்கு போய் இருக்கவேண்டியதே இல்லை.

அது இருக்கட்டும், நாய் கடித்து விட்டது, என்று பார்த்தும், ஒரு முதல் உதவி செய்ய அவர்களிடம் முதல் உதவி மருந்து இல்லை.

எது எப்படி இருப்பினும்,
நாய் எப்படி இருக்கிறது என்று  .பார்க்கவேண்டும்.

அந்த நாய் சொந்தக்காரர் பற்றி இப்பொழுது கொஞ்சம் சொல்லவேண்டும்.
அவர் நாய் மட்டும் அல்ல, கிளி, குயில்,என்று பலதை வளர்த்துக்கொண்டு இருப்பவர்.

சிறிய அளவில் காட்டரிங் தொழில். ஒரு நாற்பது பேருக்கு தினம் லஞ்ச், இரவு டிபன் தோசை, இட்லி, சப்பாத்தி தருகிறார்.

ஒரு இருபது வருசமாக செய்கிறார். அது தான் அவர்களுக்கு ஜீவனம்.  அந்த வருமானத்தில் தனது இரு பிள்ளைகளையும் படிக்க வைத்து, முதல் பையன் ஸீ ஏ பைனல் செய்ய, இரண்டாவது பெண் பி.காம் முடித்து விட்டு ஏதேனும் வேலை தேடிக்கொண்டு இருக்கிறாள்>

பிள்ளைகளும், தாய் தந்தை வருத்தம் தெரிந்து படிப்பது மட்டும் அல்லாமல், அம்மா அப்பா குக் செய்த உணவுகளை ஹோம் டெலிவரி செய்கிரார்கள்.

நடுத்தர குடும்ப சூழ்நிலை இருந்தாலும், பாமநேரியன் நாய் வளர்ப்பதன் காரணம் புதிராக இருந்தது.

Pomanerian dogs are highly unpredictable. Beautiful they are no doubt but bite their own masters.
என் வீட்டுக்காரி ஞாபகம் ஏனோ வந்தது.


நாயை காண்பியுங்கள், நான் பார்க்கவேண்டும் என்று என் பையன் சொல்ல அதை மறுபடியும் அவர்கள் காட்டினார்கள்.   அது நன்றாகத்தான் இருந்தது.

அப்பாடி. ஒரு பேரு மூச்சு விட்டேன். அந்த நாய் நன்றாக இருக்க ,
தன்வந்திரி பகவானிடம் ஒரு ப்ரேயர் மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்.
என் நண்பர் சக்ரபாணியிடம் பாதுகா சஹாஸ்ரத்தில் இதுக்கென்று விஷ ஜந்துக்களிடம் இருந்து தப்புவதற்கு ஏதாவது ஸ்லோகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொண்டு அடுத்த 48 நாட்கள்  பாராயணம் பண்ணவேண்டும். .

லோகாஸ் சமஸ்தா சுகினோ பவந்து.என்பது வாக்கியம்.
லோகத்திலே மற்றவர்கள் நன்றாக இருந்தால் தான் நாமும் நன்றாக இருக்க முடியும் என்று என் அம்மா சொல்வாள்.

அந்த " மற்றவர்கள் " என்ற சொல்லில் ஒரு நாயும் இருக்கும் என்று இத்தனை வருஷம் எனக்குத் தெரியவில்லையே !! மண்டுடா நீ சுப்பு தாத்தா என்று என்னையே கடிந்து கொண்டேன்.

இன்னமும் நாலு நாட்கள் ஆகின.

ஆண்டி பயாடிக் மருந்துகளால், காயம் சற்று ஆறி விட்டது எனினும் மனதில் பயம் இருந்தது.   உடல் தொய்ந்து போய் விட்டது. நடமாட தெம்பு அதிகம் இல்லை.

அமெரிக்காவில் இருந்து வந்திருந்த என் மகளோ தன் மச்சினனை அவங்க வீட்டு நாய் , அதுவும் பாமநேரியன், இது வரைக்கும் ஏழு தரம் கடிச்சிருக்கு. ஒன்னும் ஆகவில்லை. என்றாள்.

மாப்பிள்ளையும் ஆமா ஆமா என்று வழக்கம் போல் தலை ஆட்டினார்.

மகனும், மருமகளும் லீவ் முடிந்து திரும்பவும் வெளி நாடு செல்லும் நாள் வந்தது.

" அந்த ஆத்திலேந்து ஒன்னும் வாங்க வேண்டாம் அப்பா " என்று திடீர் என்று மருமகள் சொன்னாள்.

என்ன காரணம் என்று கேட்காமல் அவளை கூர்ந்து பார்த்தேன்.
சாப்பாடு நல்ல ருசியாத்தானே இருக்கு என்று சொல்லவும் செய்தேன்.

அதுக்கு, அவளோ, நம்ம ஆத்து பன்க்சன் நடந்த அன்றே பார்த்தேன். அந்த நாய் வீடு முழுக்க ஒடி ஒடி
சாப்பாடு செய்து வைத்து இருக்கும் எல்லா பாத்திரங்களையும்  அசிங்கபடுத்துகிறது.

எனக்கு ருசிக்கல்ல. என்றாள்

இதை முன்னமே சொல்லி இருக்க கூடாதோ !! என்று நான் நினைக்கத்தான் செய்தேன். சட் என்று வாய் விட்டு சொல்ல  .இயலவில்லை.

என்னதான் இருந்தாலும், அப்பா அப்பா தான், மாமனார் மாமனார் தான்.

எதுக்கும் நாமே சென்று  அந்த வீட்டு சூழ்நிலையை நேரடியாக பார்த்து விடுவோம் என்று தைரியத்தை வர வழைத்து கொண்டுசென்றேன்.  நானே பார்த்தேன்.

 பக்கத்து வீட்டுக்காரரும் அதையே தான் சொல்கிறார்.  ஆனா அவரோட  நோக்கு வேற மாதிரி இருந்தது.

நீங்க சொல்வது கரெக்ட் தான் அந்த நாய் வீடு முழுக்கா அசிங்கம் பண்றது. ஆனால், . நம்ம  மாதிரி கிழங்களுக்கு இது மாதிரி வேளா வேளைக்கு யார் சாப்பாடு வீட்டுக்கு கொண்டு வந்து தருவார்கள் இந்த காலத்துலே !!

சுத்தம் கித்தம் என்று குத்தம் சொன்னால் நாம  பட்டினி கிடக்க வேண்டியது தான் என்று நகைத்தார்.

இந்த உணவையா என்னைப்போன்ற எட்டு பத்து கிழங்கள் எங்கள் காலனியில் தினமும் வாங்கி சாப்பிடுகிறார்கள் ?

பார்த்த காட்சி என்னை திடுக்கிட வைத்தது.

எங்கள் காலனியில் இருக்கும் பெரிசுகள் மேலே எனக்கு பரிதாபம் தோன்றியது.

அதே சமயம் இந்த தொழிலையே நம்பி இருக்கும் காடரிங் நண்பர் மேலே ஒரு இரக்கமும் இருந்தது.

காலனியில் நிறையா பெரிசுகள், என்னை மாதிரி , வாடகை கொடுக்காத டெனன்ட் .

தாராள மனசு கொண்ட தமது மகன் மருமகள் பெருந்தன்மையில் குடி இருப்பவர்கள்.

ஒரு சமூக பார்வை எப்போதுமே சுப்பு தாத்தாவுக்கு உண்டு.

இந்த  பொல்யுடட் சுத்தமற்ற உணவை தடுக்க வேண்டும். என்ற நினைப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது.

தனக்கு இருக்கும், அல்லது இருப்பதாக நினைக்கும் அதிகாரத்தை பயன் படுத்தி செக்யூரிடி இடம்  சொல்லி,

அந்த உணவு வழங்க வரும் நபரை இரண்டு நாள் முன்னாடி நிறுத்தி விட்டார்.
 தாம் செய்ததை, மற்ற யாரிடமும். சொல்லவில்லை.

நல்லது தானே  செய்கிறோம்.அதைக்கூட சொல்லிட்டுத் தான் செய்யனுமா என்ன !! என்ற எண்ணம் அவருக்கு.

நேற்று மாலை. வழக்கம் போல காலனி பெஞ்சில் அவர் .
அஞ்சாறு பேரு   கூட சுற்றி இருந்தனர்.

எங்கே அந்த சுப்பையாவா ராமையா வா ,  அவரைக் காணோம் என்றார் ஒருவர்.

பாவம் ராமையா . ஹை டயாபெடிக். தெரியுமோ சேதி ..என்றார் ஒருவர்.

தெரியுமே என்றார்.
தனியா இருக்கார். வீட்டுக்காரி அமெரிக்கா போய் இருக்கிறார்.
 காலையும் மாலையும்  சாப்பாடு கொண்டு வருபவரை
நம்பித்தான் இருக்கார்.

அதுனாலே என்ன ? என்று அப்பாவித்தனமாக இன்னொருவர் கேட்டார்.

நேற்று சாப்பாடு  வரவில்லை.வரும் வரும் என்று காத்திருந்து,சாப்பாடு வரவில்லை. ஹைபோ க்லீசிமியா வந்து விட்டது. மயக்கமாயிட்டார்.

நான்தான் அவரை ஹாஸ்பிடல் லே அட்மிட் பண்ணி இருக்கேன்.ஹி இஸ் ஆல்மோஸ்ட்ஓகே.  நாளைக்கு வந்து விடுவார் என்றார்.

சுப்பு தாத்தா
மனசு இருக்கே

அது ஒரு விபரீத பிராணி.

 தேவை இல்லாதபோது தான் அது பேச ஆரம்பிக்கும்.
சுப்பு தாத்தா !!! இதெல்லாம் நீ செய்யனுமா ?

உன்னை அந்த நாய் கடிச்சு இருக்கலாம். அதனாலே உனக்கு மனசு, உடம்பு பாதிச்சு இருக்கலாம். 2000 3000 நீ செலவளிச்சு இருக்கலாம்.

அந்த வீடும் சுத்தமா இல்லாம இருக்கலாம்.

ஆனா, அதனால, நல்லது அப்படின்னு நினைச்சு, நீ செஞ்சது
எப்படி முடிஞ்சு இருக்கு பார்த்தாயா !!

மனசு இடிச்சுண்டு இருக்கிறது.

யாராவது சுப்பு தாத்தாவுக்கு நியாயம்தான் நீ செஞ்சது
இது
 செஞ்சது  தருமந்தான் அப்படின்னு

சொல்லுங்க.

சொல்லுவாங்களா ????


*****************************************************************************************************

( ஒரு எழுபது பர்சென்ட் உண்மை, பின் வரும் முப்பது பர்சென்ட் கற்பனை கலந்த நிகழ்ச்சி )

8 கருத்துகள்:

 1. இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் சார்? நலம் தானே. அது தான் உங்களை வலைப் பக்கம் காணோம்! உங்கல் தளம் பற்றி வலைச்சரத்தில் பாராட்டியிருந்தேன்.இணைப்பு இதோ http://blogintamil.blogspot.in/2014/08/6.html முடிந்த போது படியுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. நியாயம்தான். சுத்தமில்லாத உணவு தேவை இல்லை. வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் எழுதியிருப்பது படித்தவுடன் மனசு ரொம்பவும் பதறிவிட்டது. என்னவோ போதாத வேளை. ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவும். நீங்கள் பூரண குணம் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ பெருமாளையும், தாயாரையும் பிரார்த்திக்கிறேன்.
  அன்புடன்,
  ரஞ்சனி

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கு இப்படி ஒரு சோதனையா? மனம் தைரியமாக இருக்கவும். நாய்க்கடி பற்றிய கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நன்கு குணம் அடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. அன்பின் ஐயா..
  நேரம் சரியில்லை எனில் எதுவும் நடக்கும்.. எப்படியும் நடக்கும்.. விநாயக வழிபாடு கை கொடுக்கும். தங்களின் நலத்திற்கு வேண்டிக் கொள்கின்றேன்..

  பதிலளிநீக்கு
 6. அன்பினிய தாத்தா, யாருக்காவது ஏதாவது பிரச்சனை வரும் போது அவற்றின் worst case scenarios-ஐச் சொல்லிப் பயமுறுத்துவது மிகவும் தவறு என்று பலருக்கும் ஏனோ புரியவில்லை. நம்பிக்கை தரும் வார்த்தைகளை அல்லவா சொல்ல வேண்டும்? இறையருளால் உங்களுக்கு விரைவில் பூரண நலம் கிடைக்கும். வருத்தப்படாதீர்கள்.

  //அந்த " மற்றவர்கள் " என்ற சொல்லில் ஒரு நாயும் இருக்கும் என்று இத்தனை வருஷம் எனக்குத் தெரியவில்லையே !! மண்டுடா நீ சுப்பு தாத்தா என்று என்னையே கடிந்து கொண்டேன்.//

  ரசித்தேன் :)

  பதிலளிநீக்கு
 7. சுப்பு தாத்தா அவர்களுக்கு வணக்கம்! இப்போது எப்படி இருக்கிறீர்கள்? தைரியமாக இருக்கவும். நீங்கள் கும்பிடும் தெய்வம் உங்களை கை விடாது.

  பதிலளிநீக்கு