சனி, 19 ஜூலை, 2014

ப்ளீஸ் பார்டன் மீ. மன்னிச்சுடுங்க சாரே

அந்த பெரியவர் சாலை ஓரமாக நடந்து கொண்டு இருந்தார்.

பாட்டா கடை தாண்டி ஒரே சாக்கடை . அதில் நடக்க முடியாது. ஒரு நாலு வருடம் முன்பு லெப்டோ வந்து நாலு மாசம் கஷ்டப்பட்டது நினைவுக்கு வந்தது.

கையில் வழக்கமான பை. அதில் ஒரு சென்சிடைசர், பேஸ் மாஸ்க் . ஒரு சின்ன பாட்டிலில் வாட்டர். அதைத் தவிர ஐ. டி. கார்டு. கந்தர் சட்டி கவசம், இத்யாதி.

நெஞ்சிலோ ஏகத்துக்கு சுமை. இந்த புள்ளை இப்படி புறக்கணுமா ? அம்மா அப்பாவுக்கு இந்த தீராத மன வேதனை தரணுமா ? ஊருக்கே சோதிடம் பார்க்கும் உனக்கு இதற்கு என்ன தீர்வு என சொல்லத்தெரியல்லையே !!

இறைவா !!! இது என்ன உனது விபரீத விளையாட்டு !!

பல பல எண்ணங்கள் ,

குறுக்கும் நெடுக்குமாக, சிக்னல் இல்லாத சந்திப்பில் ஆட்டோக்கள், ஆம்னி பஸ்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு முந்துவது போல

இனி இருக்கப்போகும் கொஞ்ச நாட்களும் இந்த ரோடு போலத்தான் .

எப்பவுமே இந்த கிழவன் மனசு
ஒரு டிராபிக் ஜாம்.

சிக்கல்.

இதில் இருந்து வெளிலே வரணும்னா ஒரே வழி.

அதுதான்.. கந்தன் கண் முன்னே காட்சி தரணும். வா நீ என்னோட அப்படின்னு என்னை கூட்டிக்கினு போகணும்.

அப்படின்னு நினைக்கும்போதே  ...

அந்தப் பெரியவரின் வலது கை முட்டியில் ஒரு பைக் ஹாண்ட் பார் வேகமாக
இடி போலத் தாக்குகிறது.இடிக்கிறது.

வலியினால் அவர் துடிக்கிறார். அவர் கையில் இருக்கும் பை நழுவி கீழே விழுகிறது.

இடித்த பைக் காரர், சற்று தூரம் சென்று பைக்கை நிறுத்தி, திரும்பி வருகிறார்.

இந்த பெரியவர் வந்தவனைப் பார்த்கிறார்.
முகத்தை கூட சரியாக  கவனிக்க வில்லை. இருந்தாலும்
அவன் சட்டையை பிடித்து " உன்னிடம் லைசன்ஸ் இருக்கிறதா ? என்ற வகையில் சத்தம் போடுகிறார்.

பைக் காரர் " லைசன்ஸ் எல்லாம் இருக்கிறது. முதலில் உங்கள் கை எப்படி இருக்கிறது. ?  அடி ஒன்றும் இல்லையே ?" என்கிறார்.

பெரியவருக்கு இப்போது வலி அதிகம் தெரிகிறது. பைக் காரர் சட்டையை விட்டு விட்டு, அவர் கைகளை பிடித்துக்கொண்டு, என்னை டாக்டரிடம் கூட்டி செல்லுங்கள் என்கிறார். ரோடு என்றும் பாராது கதறுகிறார்.

இந்த நிகழ்வுகளை பார்க்கும் , டாஸ்மாக் கடையில் வாசலில் இருந்த ஒரு நடுத்தர குடி மகன் ஒருவர், ஏன்யா, பெரிசு, வீட்டுக்குள்ளே கிடக்காம, வீதிலே வரவங்க உசிரை எடுக்கிற.!!
சாவேன்யா!! என்று கத்துகிறார்.

பைக் ஒட்டி வந்த வாலிபர், பெரியவர் கைகளை உதறிவிட்டு, தன் பைக்கை நோக்கி சென்று, அதை ஸ்டார்ட் செய்து புறப்படுகிறார்.  பெரியதாக ஒன்றும் அடி இல்லை. என்ற நம்பிக்கை போலும்.

திரும்பிச் செல்லும் அவர் நடையில் ஒரு மிடுக்கு தெரிகிறது.ஆயினும் யதார்த்தமும் தெரிகிறது.

அடி பட்ட பெரியவர் வலியினால் சற்று நேரம் துடிக்கிறார். அந்த வலி இன்னமும் அடங்காத நிலையிலேயே அவர் மனதில் இன்னொரு வலி ஜனனம் ஆகிறது. .

என்ன தான் அடிபட்டாலும், வலி இருந்தாலும், ஒரு கணம் தான் தனது வயதிற்கு ஏற்ப  நிதானத்தை இழந்து, பைக்கில்  வந்த வாலிபனின் சட்டையைப் பிடித்தது தவறு என்று அந்தப் பெரியவருக்குத் தோன்றுகிறது.

இரண்டு சொற்கள் என்றாலும் தாம்  பேசிய சுடு சொற்கள்  தவறு என்றும் தோன்றுகிறது...

கை முட்டி வலி அடங்கும். ஆனால் எனது செய்கையால் தான் ஏற்படுத்திய வலி அடங்காதே !!

அவருடைய மனசின் இன்னொரு பக்கம் இப்போது ஸ்டார்ட் ஆகிறது.

யாகாவாராயினும் நா காக்க. காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு.

எனும் வள்ளுவன் வாக்கினை நீ மறந்ததும் சரியோ !! வயசாச்சே தவிர உனக்கு விவேகம் வல்லையே ??

பாவம். அந்த வாலிபர் மனம்,,அவர் சட்டையை பிடித்ததில் எந்த அளவுக்கு புண் பட்டு இருக்கும்.

மனசுக்கும் உடலுக்கும் ஒரு போராட்டம்.
மனசு இல்லை, மனசாட்சி ஜெயிக்கிறது.

செல். அவரிடம் சாரி சொல்லுங்கள் என்கிறது.

அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இரவு முழுவதும் இதே நினைப்பு.

சார். எக்ஸ்க்யூஸ் மீ. என்று சத்தமாக சொல்கிறார். .

நீங்கள் யாராக  இருந்தாலும், எங்கு இருந்தாலும், என்னை மன்னித்து விடுங்கள்.

என் செயல் என் வலியின் காரணமாக இருந்தாலும், நான் உங்கள் சட்டையைப் பிடித்தது தவறு தான்.

உங்களுக்குபைக்  லைசன்ஸ் இருக்கிறதா என்று கேட்டேன். தவறு.
எனக்கு அது மாதிரி கேட்பதற்கும்  லைசன்ஸ் இல்லை.

நடந்தது நடந்து விட்டது.
வேண்டுமென்றே நீங்கள் என்னை இடிக்கவில்லை.
என் உள் மனம் சொல்கிறது.

ஐ ஆம் வெரி சாரி .
ப்ளீஸ் பார்டன் மீ.

மன்னிச்சுடுங்க சாரே.






8 கருத்துகள்:

  1. //பல பல எண்ணங்கள் ,

    குறுக்கும் நெடுக்குமாக, சிக்னல் இல்லாத சந்திப்பில் ஆட்டோக்கள், ஆம்னி பஸ்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு முந்துவது போல//
    அட்டகாசமான ஒப்பீடு!!
    பெரியவர் பெரியவர் தான்!!

    பதிலளிநீக்கு
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா

    வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று

    பதிலளிநீக்கு
  3. ஆமாம், நம் மனசு சும்மா இருக்காது !

    பதிலளிநீக்கு
  4. மன்னிப்பு கேட்கவும் நல்ல மனம் வேண்டும்..

    பதிலளிநீக்கு
  5. இன்று வலைச்சரத்தில் உங்களுடையத் தளம் பாராட்டப்பட்டுள்ளது.
    இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/6.html
    வாழ்த்துக்கள் ஐயா.........

    பதிலளிநீக்கு