வியாழன், 12 செப்டம்பர், 2013

நான் சொல்ற துர்க்கை வன துர்க்கை. வெரி பவர்புல்.

ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்.... ( இன்னிக்கு தேதியிலே அறுநூற்று நாற்பது ஆகியிருக்கலாம்.)

என்று உலகத்திலே  எத்தனை தினுசு தினுசான ஆர்ட்ஸ் சைன்ஸ் விஷயங்கள் இருக்கின்றன .  நாமும் கொஞ்சம் கொஞ்சம் எல்லாத்துலேயும் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு ,  ஒவ்வொண்ணா பார்க்க படிக்க,துவங்கினா , தலை சுத்தறது.

அதிக விசயங்களைப் படிக்க, படிக்க, குறிப்பிட்ட விசயத்திலே இருக்கிற நமது அறிவு குறைஞ்சுண்டே போகறது என்பதையும், எந்த ஒரு விஷயத்திலும் அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழு என்று சொன்னது போல, நிறைவாகத் தெரிந்துகொள்வது தான் சிறந்தது என்று இந்த கால கட்டத்தில் என்னை மாதிரி கிழம் கட்டைகள் புரிந்துகொண்டாலும் நன்மை ஒன்றும் ஏற்படப்போவதில்லை.

என்னைப்போல நிறைய பேரு , நுனிப்புல்லை மேயற மனுசங்க, அன்னிலேந்து இன்னி வரை அவனிலே அதிகம்மாத்தான் இருக்கானுக.

எனக்கு அது தெரியும், இது தெரியும்  ஒரு அம்பது விஷயங்களைப் பத்தி மேலோட்டமாய்த் தெரியும்,  அரிஸ்டாட்டில் லேந்து ஆகாசத்துலேஅண்டத்துலே  ப்ளாக் ஹோல் வரை தெரியும்  , இசை வழியா ஈசனை புடிக்கறது எப்படி ன்னும்  தெரியும் அப்படின்னு சொல்றவங்க பக்கத்திலே நெருங்கிப்போய்,

எத்தனை தெரியும் அப்படின்னு ஒரு பத்து நிமிஷம் அவங்க பக்கத்திலே உட்கார்ந்து அவுக சொல்றத தொடர்ந்து கேட்டுப்பார்த்தா,

தெரியும் என்று அவர்கள் சொல்லும் வார்த்தை  ஒன்று தான் அவர்களுக்குத் தெரியும்  என்றும் தெரிகிறது.

நிறைய பேர் இன்றைக்கு புதுசு புதுசா அது தெரியும் இது தெரியும் என்று சொல்லும்போது நான் மட்டும் ஒண்ணுமே சொல்லாது இருப்பதும் சரியல்ல என்று நினைத்து பலர் இன்றைக்கு பல விதமா பேசுகிறார்கள்.

உலகத்துலே பொதுவாக நாம்  நினைத்துக்கொண்டிருந்த நாலு விதமான மனிதர்களை விட ஒரு ஐந்தாவது ரகமும் இருப்பது  போலத்தான் இருக்கிறது.

அது என்ன நாலு விதம் ?  இது என்ன ஐந்தாவது ரகம் ?

இந்த நாலு வித மனிதர்களைப் பற்றி முன்னமேயே சொல்லி இருந்தாலும் இன்னும் ஒரு தரம் சொல்லறது சரிதான்.

முதலாவது , தெரிஞ்சவங்க, அதாவது ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக படிச்சு புரிஞ்சுசுண்டு, மற்றவர்களுக்கும் முறையாக, எடுத்து சொல்லக்கூடயவர்கள்.

இரண்டாவது, தெரியாதவங்க
.எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் முழுமையாத் தெரியாதது  மட்டுமல்ல,தனக்குத் தெரியாது என ஒப்புக்கொள்பவர்கள்.

இந்த இரண்டு வித மனிதர்களைப் பற்றியும் ஏதும் பிரச்னை கிடையாது.

மூன்றாது விதம்.
தெரிஞ்சிருக்கு..ஆனா  தெரிஞ்சிருக்கா அப்படின்னு தனக்கே சரியா தெரியாதவங்க..

நான்காவது விதம்.
தெரியாத விஷயத்தையும் தெரிஞ்சது போலப் பேசி மற்றவர்களையும் குழப்பும் மனிதர்கள்.

இந்த நாலாவது வித மனிதர்களிடம் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் . இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்ல
முடிந்தாலும் தற்போதைக்கு நான் சொல்லப்போற ஐந்தாவது ரகம் தான் இந்த பதிவின் கதா நாயகன் .

இவர் கிட்டே என்ன புதுமை ?

அப்படின்னு கேட்பீக இல்லையா...

சொல்றேன்.

இவங்ககிட்ட இருக்கிற ஒரு self belief system அதாவது தான் ஏதோ ஒன்றை புதுசா கண்டு பிடித்து விட்டது போன்ற மாயத்தோற்றத்தில் தமது திறமை மேல் கொண்டுள்ள இவர்களது அசாத்திய நம்பிக்கை.

இவர்கள் உண்மையில் ஏமாற்றுபவர்களாக இருப்பார்களா என்றால், இல்லை. மற்றவர்களை ஏமாற்றுபவர்களுக்கு, தான் சொல்வது பொய் என்று அவர்கள் உள் மனதுக்குள் தெரியும், தெரிந்தே தான் சொல்கிறார்கள், செய்கிறார்கள், மற்றவர்களை நம்பச்செய்து அவர்களை அல்லல் பட வைக்கிறார்கள்.

ஆனால், நான் சொல்லும் ரகம் கொஞ்சம் என்ன, நிறையாகவே  வித்தியாசம்.
இவர்கள்,  தான் சொல்வது உண்மை என்று மனமார நம்புகிறார்கள். அதனால் இவர்களுக்கு பிற்காலத்தில் எந்த ஒரு சமயத்திலும் ஒரு தவறு செய்துவிட்டோம் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. There is no sense of guilt at any point of time in their career as well.

இப்படி யாரு என்று நீங்கள் கேட்கலாம்  ?


ஒரு வேளை மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்துவிட்டேன். என்று நம்மை எல்லாம் நம்ப வைத்தாரே ஒரு புண்ணியவான்..அவரா ?  கண்டிப்பாக இல்லை. அவர் இந்த ரகத்திலே இல்லை. அவர் பாடும் ராகமே வேறு.

ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன், என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பொது பூங்காவில் அமர்ந்துகொண்டு இருந்தேன்.

என்னைப்போல கிழங்கள் சில பேர் என்னுடன் எப்பவுமே வெட்டி அரட்டை அடிக்க தயாராகத் தான் இருக்கிறார்கள்.

ஒன்றிரண்டு நாட்கள் ஏதேனும் புதிய நபர் வருவார்.

ஒன்று என்னிடம் அவர் மாட்டி, நான்  விட்டா போதும் என்ற நிலையில் ஓடிப்போவார்.

இன்னொரு தினுசோ,  நான் அந்த புது நபரிடம் மாட்டி லோகத்துலே இன்னமும் நான் கத்துக்கவேண்டியது எவ்வளவோ இருக்கு அப்படின்னு தெரிஞ்சுப்பேன்.

சில சமயம். அஷ்டமத்துச்சனி எப்படி படுத்தும் என்றும்  அனுபவிப்பேன்.

இது என்ன ரகம் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

 Go to ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன், என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பொது பூங்காவில் அமர்ந்துகொண்டு இருந்தேன்.


முன் பின் பார்த்திராத ஒருவரை இன்னொரு  பெரியவர்  இவர் ஒரு பெரிய நேமாலஜிஸ்ட் . இவரிடம் கொஞ்சம் பேசுங்கள். என்று அறிமுகம் செய்துவிட்டு அவர்  காணாமல் போய்விட்டார்.

புதிதாய் வந்தவருக்கு சதாப்தி ஆகியிருக்கலாம். பையன் மனசு வச்சு இருந்தால்.   சாந்தமான தோற்றம். எப்படியும் ரிடையர் ஆகி பதினைந்து முதல்  இருபது வருடங்கள் போல் இருக்கும் எனத் தோன்றியது.  கல்கத்தா வாசியாக இருந்தாராம். காளி உபாசனையாம். முகத்தில் முக்காவாசி நெத்தியில் நடுவாந்திரத்தில் என்னைப்போல அவரும் ஒரு குங்குமப் போட்டுக்காரர் . மெலிந்த சரீரம். ஒரு ஆர்த்தடாக்ஸ் அப்பியரன்ஸ்.

கொஞ்சம் மரியாதை உணர்வுடன் தள்ளி உட்கார்ந்து கொண்டேன்.

என்ன பேசுவது ? எப்படி துவங்குவது என்று ஒரு பத்து வினாடிகள் கழிந்தன.

இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது வீட்டுக்குபோக.  கிழவி மண் வாசனை முடிச்சபின் தான் எனக்கு மோர் சாத வாசனை யை காண்பிப்பாள்.

ஸோ , தொண்டையை ஒரு கணைப்பு கனைத்துக்கொண்டே

 சார் ..என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள். எப்படி பொழுதைக் கழிக்கிறீர்கள் என்று ஸ்டார்ட்டினேன் .

ஒன்லி பப்ளிக் சர்விஸ். அதுதான் மனசுக்கு நிம்மதி தருகிறது. என்றார்.

அடடா. எப்பேர்ப்பட்ட புண்ணியவானை இத்தனை நாட்கள் பார்க்காது இங்கே வெட்டியா ப்ளாகிட்டுண்டு போதாக்குறைக்கு அப்பாதுரைகிட்டே திட்டு வேற வாங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம் ?

 என நினைத்துக்கொண்டு ,

 என்ன பப்ளிக் சர்வீஸ் ?கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் என்றேன்.

உங்கள் கையெழுத்து, பிறந்த தேதி மட்டும் வைத்துக்கொண்டு, உங்களது பாஸ்ட், ப்யூச்சர் என்னால் சொல்ல முடியும் , என்று அவர் தன்னை இன்ட்ரொடுய்ஸ் செய்துகொண்டார்.

கையெழுத்து என்றால் நீங்கள் சொல்வது என் ஹாண்ட் ரைடிங் ஆ? என்று விகல்பமில்லாமல் கேட்டுவிட்டேன்.எங்கேயே ஒருவனது கையெழுத்துக்கும் அவன் தலை எழுத்துக்கும் சம்பந்தம் உண்டு என்று படித்த ஞாபகம் .

நோ.. கையெழுத்து என்றால் உங்கள் சிக்னேசர். செக்கிலே கையெழுத்து போடுவீர்கள் அல்லவா, அதைச்சொன்னேன். என்றார்.

கையெழுத்தையும் பிறந்த தேதியையும் மட்டும் வச்சுண்டு ...  என்னது ?
அதைபார்த்தா என் இறந்தகால நிகழ்வுகள், எதிர்கால நிகழ்வுகள் உங்களால் சொல்ல முடியும் ?

ஆமாம்.

அப்படி என்றால், நேமாலஜிச்ட் என்று சொன்னீர்களே ? நான் பிறந்த குழந்தைகளுக்கு பெயர் செலக்ட் பண்ணி கொடுப்பவர் என்று நினைத்தேன்.

என்னோட லைன் வேற . நான் உங்கள் நேமுக்குத் தகுந்தபடி உங்கள் கையெழுத்தை மாற்றிக்கொண்டால், உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய நான் வழி சொல்கிறேன்.

இது யாரிடம் இந்த சாத்திரம் கற்றுக்கொண்டீர்கள்? ஏதேனும் புத்தகங்கள் பழைய ஓலைச்சுவடிகள் கிரந்தங்கள், ப்ருஹத் ஜாதகம், கால பிரகாசிக, மாதிரி, ப்ருகு ரிஷி வாக்யங்கள், அப்படி எதுவாச்சும் இருக்கின்றனவா ? 

இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் இது மாதிரி ஒரு சாத்திரம் இருக்கிறதா ?

புத்தகம் ஒன்றும் எனக்குத் தெரிந்து இல்லை.  நான் ஒருவன் தான் இந்த சயின்ஸை சிருஷ்டி பண்ணியிருக்கேன். இது ஒரு அப்ளைடு சயின்ஸ்.   இது வரை ஒரு ஆயிரம் பேருக்கு மேல், கல்காத்தாவிளிருந்து கன்யா குமாரி வரை சொல்லி இருக்கிறேன். பலித்து இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள். ஒருவர் கையெழுத்து போடுவதை வைத்துக்கொண்டு அவரது இறந்த காலத்தை எப்படி சொல்ல முடியும் ?

முடியும்.

அது தான் எப்படி என்று கேட்கிறேன்.

நான் சொன்னால் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும்.  எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கை ஏற்பட்டால் தான் அடுத்த படிக்கே போகமுடியும்.

சரி. சொல்லுங்கள்.

உங்கள் பெயர்.ஒரு உதாரணத்துக்கு செல்வகுமார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

செல்வகுமார் தனது கையெழுத்தை ஒரே ஸ்ட்ரோக்கில் போடுகிறாரா, விட்டு விட்டு போடுகிறாரா, எந்த இடத்தில் விடுகிறார், அடுத்த எழுத்து துவங்கும்போது அதற்கும் முந்திய எழுத்துக்கும் எத்தனை இடைவேளை இருக்கிறது.  அந்த இரண்டாவது தடவை துவங்கிய இடம், முதல் சிலபிள் முடிந்த இடத்தை விட மேல இருக்கிறதா, கீழே இருக்கிறதா எனபதெல்லாம்.
இந்த சயின்ஸில் இருக்கிறது.  டூ டெக்னிகல் இன் நேசர். ஐ ஆம் நாட் ஸ்யூர் வெதர் யூ வில் அண்டர்ஸ்டாண்ட்.

 வெரி இன்டரஸ்டிங். மேலே சொல்லுங்க. 

செ  தனியா ல் தனியா தனியா கு தனியா அப்படின்னு ஒவ்வொரு எழுத்தையும் கையெழுத்திலே போடறவர் எதுலேயும் தொடர்ந்து இருக்கமாட்டார்.

மனசுக்குள்ளே என் கையெழுத்தை ஒரு தரம் போட்டுப் பார்த்துக்கொண்டேன்.
அந்த மனிதரை இப்போது ஒரு சந்தேகத்துடன் பார்ப்பதை விட்டு ஒரு பக்தி இல்லை அப்படின்னாலும் ஒரு ஆர்வத்துடன்  பார்த்தேன்.

என்னோட கையெழுத்திலே ஒரு எழுத்து கூட சரியா இன்னதுன்னே தெரியாதே.  வெறும் கிறுக்கல் மாதிரி தானே இருக்கு. அதைப் பார்த்து என்ன சொல்ல முடியும் ? என்றேன்.

உங்கள் கையெழுத்தில் எத்தனை கிறுக்கல்கள் இருக்கின்றன என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. அதை அப்ளை செய்து, உங்கள் வாழ்க்கையில் எத்தனை சருக்கல் இருந்திருக்கிறது என்று சொல்வேன்.

சருக்கல் அப்படின்னா அன் சக்சஸ்புல் அப்படியா ?

சுவாமி .. கூட்டலும் பெருக்கலும் ஒரு வகை. கழித்தலும் வகுத்தலும் இன்னொரு வகை.

நீங்க சொல்றது ந்யூமராலஜியோ ? ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் கொடுத்து கூட்டச் சொல்றாகளே..அது போலவா..

அது வேற .  ஜோதிஷம், ஞுமராலஜி எல்லாமே பூரணமா தெரிஞ்சவங்க யாருமே இல்ல.  எல்லாரும் பணம் பண்றாங்க...அவ்வளவு தான் சொல்ல முடியும்.  என்னோடது இண்டிபெண்டண்ட் சயின்ஸ்.

 இதை யாராவது வெரிபை பண்ணி இருக்காங்களா...நீங்க சொல்றது சரி என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா. ?

இத பாருங்க.. உங்களுக்கு ஆதாரம் காட்டணும் அப்படின்னு எனக்கு ஒரு முடை கிடையாது.  தினம் எங்க வீட்டுக்கு ஒரு அஞ்சு பேர் வராங்க அப்படின்னு சொல்றேன்.  அந்த ஒரு ஆதாரம் போதாதா. ?

இருந்தாலும் சொல்ரேன். லண்டன்லேந்து நாலு பேர் வந்து ஒரு மணி நேரம் என்னை இண்டர்வ்யூ பண்ணி குறிப்பு எடுத்துண்டு போயிருக்காங்க..

என்ன சொன்னர்கள் ?

இதுவரைக்கும் ஒண்ணும் பதில் போடல்ல. பார்க்கணும்.

கையில் பையில் இருந்து ஒரு பழைய பாதி மக்கிப்போன நோட் புத்தகத்தை எடுத்தார்.  ஆங்காங்கே பல கையெழுத்துக்கள், எண்கள். இத்யாதி நூற்றுக்கணக்கில்.    அதில் இருந்து ஏதேனும் எடுத்துச் சொல்லப்போகிறார் என நினைத்த போது அதை மூடி திரும்பவும் பைக்குள்ளே வைத்துவிட்டார்.

உங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. இருந்தாலும், சொல்கிறேன்.  தூபாய் தெரியுமா ?

தெரியும். உலக மேப்புலே பார்த்திருக்கேன்.

அங்கே இருக்கிற ஒருவரின் சம்சாரம் என்னிடம் வந்து சொன்னார்: எனக்கு என் கணவர் மாதா மாதம் அனுப்புகிற பணம் இந்த மாதம் அனுப்ப வில்லை. நீங்கள் என்ன காரணம் என்று பார்த்து சொல்லுங்கள் என்றார்.

உடனே அவர் கையெழுத்தைப் பார்த்தேன். அவரது பிறந்த தேதியைப் பார்த்தேன். உங்க  கணவர் போட்ட லெட்டர் எதுனாச்சும் கொடுங்க. அப்படின்னேன். கொடுத்தார்.

அதிலே காரணம் இருந்ததா ? என்று வெகுளித்தனமாக நான் கேட்டேன்.

மூச். நடுவிலே பேசக்கூடாது. அந்தக் கடுதாசிலே அவர் புருஷனோட கையெழுத்து இருக்கும். அது தானே முக்கியம். அதையும் பார்த்தேன். புரிஞ்சு போச்சு.
உங்கள் கணவருக்கு இந்த மாதம்  ஷேர் மார்க்கெட் டிலே பெரிய நஷ்டம் ஆகிவிட்டது. அதனால் அனுப்பவில்லை. என்றேன்.

 நீங்கள் நம்ப மாட்டீர்கள். அடுத்த நாள் வந்த பெண்மணி தன கணவன் போன் செய்து இதே காரணம் தான் சொன்னதாக சொன்னாள்.

ஒரு இண்டூயிஷன்லே சொன்னது மாதிரி தானே படுகிறது ? என்று கேட்டு விட்டேன்.

யூ ஆர் பார்ஷலி கரெக்ட் என்று ஒரு குண்டை போட்டார்.

இது டிவைன் இன்டூயிஷன்.

அப்படின்னா ?

உங்களுக்கு துர்க்கை யாரு அப்படின்னு தெரிஞ்சுருக்கும்.

ஆ...ஆமாம். சிவன் கோவில்லே சுத்தி வரும்போது துர்க்கை அம்மன் எலுமிச்ச பழ  மாலை எல்லாம் போட்டுண்டு ஏகப்பட்ட குங்குமம் பூசிண்டு, போதாதைக்கு கையில் ஒரு ஆயுதம் வேல் மாதிரி  ஒன்னு வச்சுண்டு ...
நான் கூட பார்த்தாலே கண்ணை மூடிண்டு..
சுதா சிந்தோர் மத்யே..அப்படின்னு சொல்வேன்  ...

அவளே தான்.  ஆனா நான் சொல்ற துர்க்கை வன துர்க்கை. வெரி பவர்புல்.

நான் பிராக் மாதிரி முழித்தேன். வனம் அப்படின்னா பாரஸ்டா ?

நீங்க சரி, தப்பு இரண்டுமே. உங்களுக்குத் தெரியாது அப்படிங்கறது எனக்குத் தெரியறது.

நிஜமாவே எனக்குத் தெரியாது.


உங்களுக்குத் தெரியாதது தப்பில்லை. எனக்கு
அந்த துர்க்கை கிட்டேந்து எனக்கு இன்ஸ்பிரேஷன்  கேட்கறவங்க கையெழுத்தை பார்த்த உடனே ஒரு தரம் கண்ணை மூடிண்டு அவளை நினைச்சுப்பேன். கண் முன்னே ஆன்சர் தெரியும்.

ஒரு பயத்துடன் ஆஹா.. என க்ரீச்சிட்டேன்.  அப்ப அந்த கையெழுத்து, பிறந்த தேதி எல்லாம் துர்க்கை கிட்டே எப்படி சொல்வீர்கள் ?

தொழில் சம்பந்தப்பட்ட எதையுமே முழுசா சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. தெய்வ குற்றமாயிடும். 

எனக்கு அப்படின்னா சொல்லவே வேண்டாம். 

முன்னமே சொன்னா மாதிரி இது ஒரு பப்ளிக் சர்வீஸ். நோ சார்ஜ். இருந்தாலும், கூட்டம் ஜாஸ்தியாகி விடுகிறதே அப்படிங்கரதாலே ஒரு நூறு ரூபாய் உண்டியல்லே போடச்சொல்லுவேன்.

எந்த கோவில் உண்டியல் லே ?

எந்த கோவில் உண்டியலும் இல்லை.  நான் உட்கார்ந்து இருக்கும் பட்டுப்பாயிலே இருக்கிற உண்டியல்லே போட்டுட்டு, நான் கொடுக்கும் வெள்ளை காகிதத்தில் கையெழுத்தையும் பிறந்த தேதியும் போடணும்.

மழை தூறல் கொஞ்சம் அதிகமானது.  எழுந்துகொண்டேன்.

நாளைக்கு வந்து பேசறேன்.  என்றேன்.

எதற்கும் என் செல் நம்பர் தர்றேன். ஒரு அபாயிண்ட்மெண்ட் வாங்கிண்டு வாங்க. என் வீட்டுக்கு..உங்களை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்க கூடாது இல்லையா. அதுக்காகத்தான் அப்பாயிண்ட்மெண்ட். இல்லன்னா பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வ்டு .

என்று அவர் எதோ ஒரு நம்பரை கிறுக்கினார். நாளைக்கு வாங்க. என்றார். மழை அதிகமாகும் போல் இருந்தது.

(மனசுக்குள்ளே விட்டு விட்டு ஒரு குரல் கேட்டது. இந்த மாச பென்சனில் பாக்கி ஒன்றும் இல்லை. இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. இது வேறயா..ஏற்கனவே டி.வி. ரிபேர்காரன் எத்தனை கேட்கப்போகிறானோ தெரியல்ல. )



எழுந்து, அந்த  பார்க்கின் வாசற்பக்கம் போகும்போது....

அவசர அவசரமாக வந்த இன்னொரு முதியவர் மேல் கிட்டத்தட்ட மோதி பின் சுதாரித்துக்கொண்டேன்.

சாரி சார். நான்தான் அவசரப்பட்டு மோதிவிட்டேன். அது சரி,
பரந்தாமன் சார் கிட்டே பேசிக்கொண்டிருந்தீர்கள் போல் இருக்கிறது..என்றார்.

அவர் பெயர் பரந்தாமனா.. எனக்கு தெரியாது என்றேன்.

பாவம். ரிடையர் ஆன பிறகு . வந்த பணத்தையெல்லாம் பசங்க கிட்டே குடுத்து விட்டார்.    பார்யாளும் போய்ச் சேர்ந்துட்டாள்.

இப்ப ?

ஏதோ ஒரு குறி மாதிரி சொல்றார் அப்படின்னு பக்கத்துலே எல்லாரும் சொல்றாங்க.  அது சரியோ தப்போ..

அப்படின்னா..  உங்களுக்கு அவர் சொல்றதில்லே நம்பிக்கை இல்லையா ?

ஸ்வாமி .. இந்த வயசான காலத்துலே பெத்த புள்ள அடுத்த வேளைக்கு சோரு போடுவானான்னு சொல்ல முடியல்லே...

மழை வலுத்தது. மனசு  கனத்தது.









4 கருத்துகள்:

  1. ஸ்வாமி .. இந்த வயசான காலத்துலே பெத்த புள்ள அடுத்த வேளைக்கு சோறு போடுவானான்னு சொல்ல முடியல்லே...

    மழை வலுத்தது. மனசு கனத்தது.

    நிதர்சனமான உண்மை!..

    பதிலளிநீக்கு
  2. //தெரியும் என்று அவர்கள் சொல்லும் வார்த்தை ஒன்று தான் அவர்களுக்குத் தெரியும் என்றும் தெரிகிறது.//

    ஹாஹா ஹாஹா.


    //ஸ்வாமி .. இந்த வயசான காலத்துலே பெத்த புள்ள அடுத்த வேளைக்கு சோரு போடுவானான்னு சொல்ல முடியல்லே...//

    உண்மை:(

    பதிலளிநீக்கு
  3. //ஸ்வாமி .. இந்த வயசான காலத்துலே பெத்த புள்ள அடுத்த வேளைக்கு சோரு போடுவானான்னு சொல்ல முடியல்லே...//

    படித்த எனக்கும் மனசு கனத்து தான் போனது. ரொம்பவும் பரிதாபம் இந்த மாதிரி மனிதர்கள் .அதுவும் பணமும் இல்லாமல் ,துணையும் இல்லாமல் ஜோதிடம் சொல்லி சாப்பிடும் பெரியவர் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடமே!

    பதிலளிநீக்கு
  4. கலங்க வைத்தது ஐயா...

    ஆனால் இன்றைக்கு உண்மை...

    பதிலளிநீக்கு