Thursday, September 5, 2013

நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீக.

சார் !!!

 என்று யாரோ பின் பக்கத்திலிருந்து கூப்பிடுவது போல் இருந்தது.

ன் னே பி ம் ரு தி

(திரும்பினேன்.)

ஒரு அறுபத்தி எட்டு  முதல் எழுபத்தி இரண்டு  வரை மதிக்கும்படியான உருவ அமைப்பில் ஒருவர் என்னை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.வந்தார்.

என்னைத்தான் கூப்பிட்டு இருக்கிறார் .

  ஆனால், இவர் யாரென்று தெரியவில்லையே ...ஒரு வேளை பதிவர் மாநாட்டில் என்னை பார்த்து இருப்பவரோ ?    சந்தேகக் கண்களால் அவரை சுரண்டினேன்.

நீங்க ...  செல்வராஜ் தானே...என்றார்...

இல்லயே. 

அப்ப ஆனந்த ராஜ்..

இல்ல.

என்ன ஞாபக மறதி எனக்கு பாருங்க... நீங்க..பாக்ய ராஜ். ஆம் ஐ ரைட்..?

நோ.நோ..நோ..நான் எந்த ராஜும் இல்ல.

அப்ப நீங்க அந்த ராஜா இல்லையா...?

எந்த ராஜா? எனக் கேட்கலாம் என நினைத்தேன். ஆனால், அடுத்த நிமிஷம் 

இந்த ஆளை விட்டு கழண்டால் போதும் என்ற நினைப்பில்,

 ராஜா, ராணி, மந்திரி, யானை, குதிரை, பிஷப், சிப்பாய் யாருமே நான் இல்லை

.என ஹாஸ்யினேன்.

கரெக்ட்.  நான் அப்பவே நினைச்சேன்.  நான் நினைச்சது சரிதான்.

என்ன சரி. ?

நீங்க செஸ் விஸ்வநாதன்...

அப்படின்னு  அவர்  இழுத்தார். அதற்குள் , இடை மறித்து,

ஐயா ... நீங்க யாருன்னே எனக்குத் தெரியல்ல... நான் விஸ்வநாதனும் இல்ல.

சார், கோவிச்சுக்கக்கூடாது... நீங்க விஸ்வநாதன் அப்படின்னு நான் சொல்லலையே..
உங்களுக்கு விஸ்வனாதன் சாரைத் தெரியும் இல்லையா..?

என் மூளையின் ஏதோ ஒரு இருட்டு  மூலையில் மின்னல் வேகத்தில் முப்பத்தி இரண்டு விஸ்வனாதன் கள் பிரவேசித்தார்கள்.

இவர் எந்த விச்வனாதனைச் சொல்கிறார் , தெரியல்லையே...விசாரிப்போம். நமக்கும் தான் பொழுது போகணும். வீட்டுக்குப்போனா இருக்கவே இருக்கு கிழவியுடன் வாதம். அதுக்கு இது பெட்டர்.  

சார். எனக்கு காசி விஸ்வநாதரை மட்டும் தான் தெரியும்.  அவர் கூப்பிட்டுண்டு இருக்கார். எனக்கு தான் டைம் கிடைக்க மாட்டேன் அப்படிங்கறது.  என்று கிண்டலாக வாய்சினேன்.


இப்ப கிடைச்சுடுத்தே ...   அதுக்காகத்தானே நான் வந்திருக்கேன் என்றார்.

என்னடா இது. வம்பிலே மாட்டிட்டோம் போல இருக்கே

{என்று என் அவசர புத்திக்கு ஒரு சென்ஷர் மெமோ இஸ்யூ   பண்ணிக்கொண்டே,}

சார், ஒரு தமாஷுக்காக சொன்னேன் .. சார், எனக்கு எந்த விஸ்வனாதரையுமே தெரியாது.

நீங்க இப்ப சொல்றது தான் தமாஷ்.  உங்களுக்கு அந்த விஸ்வநாதரை நன்னாவே தெரியும்...  இது அந்த விடாக்கண்டன். 

எப்படி..?

உங்க கையில் வச்சிருக்கிற பையிலே தான் விஸ்வநாதன் & கோமளவல்லி தாங்க் யூ பார் யுவர் பிரசன்ஸ். அப்படின்னு போட்டிருக்கே...

அப்ப தான் கையில் இருக்கும் பையை கவனித்தேன்.  யாரோ ஒருவரின் திருமணத்திற்கு, எப்போதோ நானோ அல்லது என் தர்ம பத்னி சென்றபோதோ என் கைகளில் திணிக்கப்பட்ட தாம்பூலப்பை.

அதைப் பார்த்துவிட்டுத் தான் இவர் சொல்கிறார் போலும்.

சார். எனக்கும் இந்த விஸ்வநாதன் பாமிலிக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை. இன் பாக்ட் , இந்த பை எப்படி என் கையிலே வந்ததுன்னே எனக்கு ஞாபகம் இல்ல.

எக்சாக்ட்லி  ரைட்.  உங்களுக்கு எப்படி விஸ்வநாதன் யாருன்னு மறந்து போச்சோ அப்படி எனக்கும் உங்க பேரு மறந்து போகல்ல.. ஆனா, கரெக்டா நினைவுக்கு வரல...

அதுனாலே என்ன ?

என்னவா ?  உங்களைப் பார்த்தா காலம் காலமா கூட என்னோட  ஒர்க் பண்ணினவர் போல இருக்கு. 

 எனக்கு ஒரு கஷ்டம் அப்படின்னா உங்க கிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்றது ?

{பாவமாக இருந்தது எனக்கு. உண்மையிலே இவர் யாரென்றே தெரியவில்லை. ஆனா இவருக்கு ஏதோ கஷ்டம். அப்படின்னு மட்டும் தெரியறது. நம்மால் முடிந்தால் கஷ்டத்தை தீர்த்து வைக்க முடியுமா அப்படின்னு பார்ப்போம். இல்லைன்னாலும் என்னன்னு கேட்கறதுல்லே தப்பு ஒண்ணும் இல்லையே..}

அப்படி என்ன சார் உங்களுக்கு கஷ்டம் ?

பென்சன் வல்லையா.. பேத்திக்கு பத்மா சேஷாத்ரிலே அட்மிஷன் கிடைக்கலையா ? இல்ல, உங்க சகலை பொண்ணுக்கு வரன் கிடைக்கலையா.?
மாட்டுப்பொண் கொடுமையா ?  ஒரு வேளை  ஆதார் கார்டு வல்லையா ?

 {சமகாலத்திய சீனியர் சிடிசன்ஸ் பிரச்னைகளை லிஸ்டினேன். }

அதெல்லாமே இல்லை.

அப்படின்னா, காலைலே பக்கத்து வீட்டுக்காரன் ஹிந்து பேப்பர் ஓசி தரலையா
? ( கொஞ்சம் எரிச்சல் வந்தது வாஸ்தவம் தான் )

இல்லை.

பெட்டர் ஹாப் திட்டினாளா ?

இல்ல.


நீங்க அவளை திட்டிட்டு திட்டிட்டோமோ வருத்தப்படறேளா ?

அதுவும் இல்ல. அவ என்ன திட்ட விட்டாதானே அந்த பிரச்னை.


{ஓஹோ !! வீட்டுக்கு வீடு வாசற்படி.  எனக்கு மூச்சு வாங்கியது. }

அப்ப என்னதான் சார் கஷ்டம்.?

கஷ்டம் இல்ல சார். கொடுமை ஸார் .. தூக்கமே வல்ல.


அப்படியா.?

ஒரு நாள் இரண்டு நாள் இல்ல சார்.  இரண்டு மாசம் ஆயிடுத்து.


அல்ப்ராக்ஸ் சாப்பிடவேண்டியது தானே...  எந்த டாக்டர் கிட்ட போனாலும் தூக்கம் வல்லே அப்படின்னு சொன்னாலே அது தானே தர்றாங்க..

(எனக்கு இந்த ட்ரக்ஸ் பத்தி இருக்கற நாலட்ஜ் , அத நானே அப்பப்ப பெருமையா சொல்லிக்கரதுலே ஒரு இன்பம். )

அதெல்லாம் எனக்கு தெரியாது. சாப்பிடலாம். சாப்பிட்டுண்டும் இருக்கலாம். என் .. பிரச்னை அது இல்லை. விஸ்வநாதன் சார்...

நான் விச்ஸ்வனாதன் இல்லை சார் ...  அழுத்திச்சொன்னேன். 

சரி.. ஏதோ நாதன்..      .....            ராம நாதனா இருக்குமோ...?

என்னோட பேர் இருக்கட்டும். உங்க கஷ்டத்தை சொல்லுங்கோ.

  (ஒரு பதிவுக்கு நல்ல விஷயம் கிடைச்சுடுத்து போல  இருக்கிறது.)

நீங்க நல்லா இருப்பீர்கள். பிறத்தியார் கஷ்டத்தை பார்த்து, இப்படி ஒரு நிமிஷம் சொல்லுங்கோ அப்படின்னு யார் கேட்கறா இப்ப எல்லாம்... லோகம் ரொம்ப மாறிப்போயிடுத்து.  இல்லையா.

ஆமாம்.
அது கிடக்கட்டும்.  சார் முதல்லே  உங்க கஷ்டம். என்னன்னு?

( எனக்கு அவர் தன கஷ்டத்தை சொல்லாமல், போய்விட்டால், எனக்கு இன்றைக்கு தூக்கம் போய்விடுமே என்ற கவலை வந்துவிட்டது.)

அந்த வெங்கடராமன் தெரியுமோன்னோ உங்களுக்கு ?

அந்த பழைய ஜனாதிபதியா ?  அவர் செத்துப்போய் ரொம்ப நாளாயிடுத்தே...

இல்ல.

பின்ன யாரு ?

என் பிரண்டு சார்.

அவரை எனக்கு எப்படி தெரியும் ? உங்களையே எனக்குத் தெரியல்லையே..

இது மாதிரி ஜோக் அடிக்க கூடாது. என் பிரண்டை எப்படி சார் தெரியாமா போகும் ?  சகல வேதத்தையும் கரைச்சு குடிச்சவர் ஆச்சே.


எனக்குத் தெரியாதே...

நீங்க அந்த நோச்சூர் வெங்கடராமன் பாகவதம்  கேட்டு இருப்பீர்கள் இல்லையா ? .

அவரா உங்களுக்கு கஷ்டம் கொடுத்தது ?

{எனக்கு வியப்பு.  அந்த தர்மாத்மா இவருக்கு எப்படி ?}

நான் அவரை சொல்ல இல்லை. இந்த வெங்கடராமன் அந்த வெங்கடராமன் விசிறி. அதாவது பான். இங்க்லீஷ் Fan .

சரி. அதனாலே.

(பதிவர் மாநாட்டு அரங்கின் உஷ்ணத்துக்கு மேல் என் பொறுமை கடந்து விட்டது. )


அன்னிக்கு போன்லே பேசினார். பேசினா மணிக்கணக்கா பேசுவார் . நானும் கேட்டுகிண்டே சில சமயம் தூங்கிக்கூட போயிடுவேன்.

சரி. இப்ப நான் தூங்கினாலும் தூங்கிடுவேன்.

 ( என் காதுக்கு காசுவல் லீவ் கொடுக்கவேண்டிய டயம் வந்து விட்டது  போல தோன்றியது.)

எகைன் ஜோக்கா,வேண்டாம் சார். 
சரி,

ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி, ஒரு கேள்வியைக் கேட்டுட்டு, அதுக்கு பதில் எங்கே கண்டு பிடிங்க... அப்படின்னு சொல்லிட்டார்னா பாருங்க..

சூர்யா ஒரு கோடி லே கேட்கறாமாதிரியா ?

சூர்யாவா ?  யாரு அது ?

சூர்யா யாருன்னா கேட்கறேள்  ? சிவகுமார் பையன். மாற்றான் நடிச்சாரே !!அகரம் பவுன்டேஷன். அப்படின்னு எல்லாமே உங்களுக்கு தெரியாதா  ?

அகரமா? எனக்கு ஆத்துக்காரி தர்ற ஆகாரம் ஒன்னு தான் தெரியும்..

சரி. நீங்க அந்த கேள்வி என்னன்னு சொல்லுங்க...

கேள்வியா ? என்ன கேள்வி ?


என்ன சார் நீங்க தானே வெங்கடராமன் ஒரு கேள்வி கேட்டார் அப்படின்னு சொன்னீர்களே.

வேங்கடராமனா ?  யாரு அது ?

என் மர மண்டையிலே அப்பத்தான் திடீர்னு உரைக்கிறது.

 திஸ் மேன் இஸ் ரியல்லி இன் ட்ரபிள் .  


நான் திரும்பவும் பேச  ஆரம்பிப்பதற்குள், ஒரு அறுபது அறுபத்தி அஞ்சு  வயசு   ஒரு அம்மா,  பாட்டி ன்னு கூட சொன்னா தப்பா இருக்காது.  ஓட்டமும் நடையுமா என்னை நோக்கி வந்தார்.  

உங்களை எங்கே எல்லாம் தேடறது ?  எனக்கு மானம் போறது.  மூணு மணி நேரமா, பக்கத்து, எதித்த, வூட்டுக்காரங்க அத்தனை பேரும் எல்லாரும் தேடு தேடு அப்படின்னு தேடிட்டு இருக்கோம். பேப்பர்லயும் போலீசுலேயும் தான் சொல்லவேண்டியது பாக்கி.           நீங்க இங்க எப்படி இத்தனை தூரம் வந்து விட்டீங்க..கொட்டம் அடிச்சுண்டு இருக்கீக.. ..

 மூச்சு விடாம அந்த அம்மா கத்தாம சத்தறாள்.  

மாமி, அவருக்கு ஏதோ  கஷ்டம் அப்படின்னு சொன்னாரே...

ஒரு கஷ்டமும் இல்ல.இவரோட ஜன்ம ஜன்மாந்திர பாபம்   படர கஷ்டம் எல்லாம் நான்தான். பெருமாள் என்னிக்கு வழி காட்டாப்போறாரோ தெரியல்ல. 

உங்களை எங்கேயோ பார்த்தாமாதிரி இருக்கு, நீங்க எதுக்கு என் கையை பிடிச்சுண்டு இழுக்கறேள் ? 

 என்று கையைப் பிடித்த அந்த பெண்மணியை இவர் பணிவாகவே வினவ,

சன்னமான குரலில்  என் காது பக்கம் வந்து ,

 நீங்க ப்ளீஸ்  ஒன்னும் தப்பா எடுத்துக்காதீக.  அவருக்கு அல்ஜிமீர்  நாட் fully blown however. 

அவரை தர தர என்று இழுத்துக்கொண்டு போன அந்த மாமி  சீக்கிரமே என் கண்களை விட்டு மறைந்து போனாள்.

அல்சமீர் ??