திங்கள், 11 ஜனவரி, 2016

சிரிக்கிறாள்.

கண்ணை விழித்துப்பார்த்தால் மணி 5.30 ஆகியிருந்தது.
எங்கேயோ இருப்பது போன்ற ஒரு பீலிங் .
இடது பக்கத்தில் ஒரு படுக்கையில் என் பையனும்
வலது பக்கத்து படுக்கையில் என் மனைவியும் இன்னும்
உறங்கிக் கொண்டு இருந்தார்கள்.

என்னது ! ஒரு புதிய சூழ்நிலை  ! புது இருப்பிடம் !
ஒரு நிமிஷம் ஒன்னுமே புரியல்ல.
 திடிரென நினைவுக்கு வந்தது.
ஆஹா..நம்ம இருப்பது திருச்சி மாயவரம் லாட்ஜ் அல்லவா . நேற்று தானே சென்னையில் இருந்து மாலை நேரத்தில் புறப்பட்டு இன்னோவா காரில் இரவு 11 மணிக்குத்  திருச்சி வந்து சேர்ந்தோம்.
வசந்த பவனில் தோசை சாப்பிட்டது லாட்ஜுக்கு வந்தது. படுத்தது தான்.
அடுத்த செகண்டே தூங்கி விட்டோம் போல இருக்கிறது. 

மனோ வேகம் வாயு வேகம் என்பார்கள் இல்லையா. அதான், மனசு டக் என்று அடுத்தது என்ன செய்யவேணும் என்பதை பட்டியல் இட்டது.

7.30 க்கு திருச்சியை விட்டு கிளம்பினால் தான் மாந்துரையை 9 மணி அளவில் அடைய இயலும். போகும் வழியில் நடுவில் வேறு, வயிறுக்கு சிறிது எதாவது தீனி போடவேண்டும்,

குல தெய்வக் கோவிலுக்கு ,

அது தான்
 மாந்துரையான்
பாலாம்பிகா சமேத ஸ்ரீ ஆம்ரவநேச்வர சுவாமி , அதன் அருகே எங்கள் குலத்தாரைக்  காக்கும் கருப்பன் சாமி

அபிஷேகம் , பொங்கல் வைக்க, சாமான்கள் வாங்கியாகவேண்டும்.

எழுந்து கதவை திறந்து பார்த்தேன். குளிர் காற்று ஜில் என்று அடித்தது.
தூரத்தில் காண்டீன் திறந்து விட்டது தெரிந்தாது.

கேண்டீன் ல் காபி ரெடியாகி இருக்கும்.

 அவசர அவசரமாக கோல்கேட்  மவுத் வாஷர் கொண்டு வாய் வாஷ் செய்தேன்.அம்பதே செகண்டில் காண்டீனை அடைந்தேன்.

 காபி ரெடியாகி  இருந்தது.

சுகர் ...??   கண்களால் கேட்டார்.

பாதி என்று செய்கை செய்தேன்.

"இன்னும் இரண்டு காபி கப் ரூம் 134க்கு அனுப்புங்களேன்". என்றேன்.

"பேஷா"  என்றார் மாயவரம் லாட்ஜ் கேண்டீன் ஓனர்  .

"பத்து நிமிஷம் கழிச்சு அனுப்புங்கோ..பார்யாளை ஏளப்பண்ணிட்டு செல் அடிக்கிறேன்."
"சரி. "
"ஹாட் வாடர் வல்லையே...?"
இதோ..இரண்டு பக்கெட் இரண்டே நிமிஷத்தில் அனுப்பறேன் .
அனுப்பவும் செய்தார்.
ஆஹா குளிச்சாச்சு.
இவர்கள் இரண்டு போரும் எழுந்துண்டு இத்யாதி இத்யாதி எல்லாம் முடிச்சுட்டு, ரெடி ஆவதற்கு இன்னும் ஒன அவர் ஆகும். அதற்குள், என் பிரண்டை பார்த்து விட்டு வந்து விடலாம்.  டிரைவர் எப்படியும் 7.30 க்கு கிளம்ப தயாராக இருப்பார்.

கிளம்பி செருப்பை போட்டுக்கொண்டவன் திடிரென்று ஞாபகம் வந்தாற்போல், கையில் இருக்கும் பையில், கோவிலுக்காக வாங்கி வைத்திருந்த பழங்களில் இரண்டு ஆப்பிள், இரண்டு மாதுளை எடுத்து வைத்தேன். வயசாகிப்போய் விட்டது இல்லையா, அதனால், பை கை நழுவி கீழே விழ, சத்தத்தில் கிழவி எழுந்து விட்டாள்.

என்ன சத்தம். ?

ஒண்ணுமில்ல.. மணி 6 ஆயிடுத்து. நீங்க காபி வந்துடும். வெந்நீர்  வந்துவிடும்.குளிச்சு ரெடி பண்ணிக்கோங்க.

அது நாங்க செய்யறோம்..நீங்க எங்க கிளம்பறீங்க..?

நான் அந்த கருப்பண்ண சாமியைப் பாத்துட்டு,
 கன்னத்திலே போட்டுண்டு, அரசரமரத்தடி புள்ளையாரைப் பார்த்து,
அஷ்டோத்தரம் சொல்லிட்டு....

அதற்கப்பறம் ..சொல்லுங்க....

அதான்....

என்ன அதான்...

நேத்திக்கே சொன்னேன் இல்லையா.  நம்ம ஆண்டார் தெருவிலே வலை மூலமா தெரிஞ்ச ஒரு ப்ளாகர் எழுதறவர்  இருக்கார். பழய நாராயண ஸ்டோர் இருந்த இடத்திலே...

அவர் செல் நம்பர் நேத்திக்கு இன்னொரு ப்ரண்ட் +தி தமிழ் இளங்கோ   மெசேஜ் வழியா கொடுத்தார். வீடு சரியா எங்கே அப்படின்னு தெரியல்ல.  பக்கத்திலே அங்கே போய்  செல் அடிச்சா அவர் என்னை வந்து அழைச்சுண்டு போவார். அவரோட பத்து நிமிஷம் பேசிட்டு வரேன். தூரத்து உறவா கூட இருப்பார் போல இருக்கு.

உங்க தங்கை சொன்னாளே ..அவரா..?

அவரே தான்.

சீக்கிரம் வந்துடுங்க..கரெக்டா கிளம்பி ஆகணும்.

சரி.

அதற்குள், 
கையில் பையில் பழங்கள் இருப்பதைப் பார்த்த பார்யாள்,

அதெல்லாம் அம்மனுக்கு அபிஷேகத்துக்கு, அர்ச்சனைக்கு, நைவேய்த்யத்துக்கு வாங்கினது. பரவாயில்லை. பெரியவர்களைப் பார்க்கப்போகும்போது, வெறுங்கையோடு போகக் கூடாது.  ஆனா ,
 நியாபகமா, கோவிலுக்கு போகும்போது, திரும்பவும் வாங்கணும் 

என்று முணு முணுத்தாள்.

வாணப்பட்டறை தெரு  முழுக்கா, குப்பை கந்தல் ஆங்காங்கே.  சாக்கடை நீர் தேங்கி எந்த நிமிஷமும் ரோடில் வழிந்து ஓடும் நிலை.
பத்தே அடி நடக்குமுன்பு ஒரு டீ கடை.

ரோடு முதல் கடை லே டீ சூடா வியாபாரம்..அந்த நேரத்துலேயே சூடு பிடித்து
இருந்தது.
அடுத்த அஞ்சு தப்படியில் வந்தது.
 வடக்கு ஆண்டார் தெரு முனை.

வடக்கு ஆண்டார் தெரு மேற்கு  திசை துவங்கி .கிழக்கு திசை நோக்கி செல்கிறது.
திரும்பினேன்.
கருப்பண்ண சாமி கண் முன்னே வந்தார்.
வேலுக்கு மாலை சாத்திக்கொண்டு இருந்தார்கள்.
கருப்பா, காப்பாத்துடா..என்று கன்னத்திலே போட்டுக்கொண்டேன்.

 180 டிகிரி திரும்பினேன்.

அரச மரத்தடி பிள்ளையார் அன்னிக்கு 1942 லே எப்படி இருந்தாரோ அதே மாதிரி இன்னிக்கும் உட்கார்ந்து இருந்தார். நமக்குத்தான் விடிஞ்சா பில்டர் காபி வேணும்.  அவருக்கோ அருகம்புல் ஜலம் போதும்.

 வருவோர் போவோரில் யார் தேங்காய் உடைப்பார் என்று கவனித்துக்கொண்டு இருந்தார்.

சுமுகாய நமஹ, ஏக தந்தாய நமஹ, கபிலாய நமஹ, கஜ கர்ணகாய நமஹ, லம்போதரயா நமஹ விகடாய நமஹா, விக்னராஜாய நமஹா, என்று சொல்லும்போதே...
+Thenammai Lakshmanan 
தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் எழுதிய தமிழ் மொழி பெயர்ப்பு ஸ்லோகம் நினைவுக்கு வந்தது.
இனிமே எப்பவுமே
அதைச் சொல்லவேண்டும்  என்று அதை எழுதி வெச்சு இருந்த கடுதாசியை தேட துவங்கிய போது, யாரோ  சூடம் ஏற்ற    ஓடிப்போய் அதை சீக்கிரம் ஒத்திக்கொண்டேன் .
கற்பூரம்  கைக்குத் தந்த சூடு மனசுக்கும்  இதமாக இருந்தது.

அங்கேயே ஒரு கணம் நினைச்சு பார்க்கிறேன். அப்பாடி...   1942 முதல் 1962 வரை இந்த பிள்ளையாருக்கு மொத்தம் எத்தனை தோப்புக்கரணம் போட்டு இருப்பேன். கணக்குப் பண்ணிப் பார்க்கவேண்டும்.


இன்னும் ஒரு தரம் அபௌட் டர்ன் பண்ணினேன்.
ராமா கபே
நினைக்கும்போதே அந்த நாள் 
அதான் கல்யாணம் ஆகி 1968 லே வந்த போது, அம்மாவுக்குத் தெரியாம, ஆத்துக்காரியை கூட்டிக்கொண்டு போய் அந்த ஹோட்டல் லே ஆளுக்கு பாதி சாப்பிட்ட நெய் ரவா வெங்காய ஸ்பெசல் மசாலா ரோஸ்ட் ஞாபகம் வந்தது. இன்னைக்கும் அந்த வாசம் மூக்குக்கு வந்தடைந்தது.
ஹோட்டல்இன்னும் சரியாக திறக்கவில்லை.
காபி டிபன் ரெடியாக ஒரு அஞ்சு நிமிஷம் ஆகும் என்றார் ஒருவர்.

வரேன்  என்று சொல்லி விட்டு மேலும் நடந்தேன்.
இல்லை. நின்றேன்.
திக் என்றது.
அடுத்த ஐந்தே காலடியில் இருந்த , நாங்கள் குடி இருந்த எங்கள் வீட்டைக்காணோம் . நாக நாத சுவாமி கோவிலுக்குச் சொந்தமான அந்த வீடு இருந்த இடத்தில் ஏதோ டிபன் சென்டர் என்று புதிய கட்டடம் ஒன்று.. ஆனால் , அதற்குப் பக்கத்திலேயே இருந்த அந்த ரங்கசாமி அய்யர், அவர் பையன் பாலு (செயின்ட் ஜோசப் காலேஜ் ட்யூடர்) வீடு கண்ணில் பட்டது. உடைஞ்சு போன கொலு குடிசை  பொம்மை மாதிரி இருந்த அந்த வீட்டில் இன்னமும் அவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ..தெரியவில்லை.

அவர்களை அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப அந்த நாராயண ஸ்டோர் பிரண்டை பார்த்து, யார் என்று தெரிஞ்சுண்டு ஒரு ஹலோ சொல்லிட்டு வரணும்.. அதுக்கு மேலே டயம் இல்லை என்று எண்ணிக்கொண்டு  மேலே நடந்தேன்.

மதுரா லாட்ஜ். பூட்டி இருந்தது. 
வாசலில் இரண்டு பேர் த்வார பாலக மாதிரி உட்கார்ந்து இருந்தனர்.
நான் பக்கத்தில் போனதும் , "இன்னிக்கு லீவ் சார். ஞாயிரு இல்லையா" என்றனர்.
ஆமாம் என்று நடந்தேன். 

அடுத்த இருபது நொடிகளில் நாகநாத சுவாமி கோவில் சந்து ரைட்டில் தெரிந்தது.
ஆனால், லப்டில்  இருந்த, நாராயண ஸ்டோரை காணோமே...!!

நாராயனா..நாராயணா ..என்றேன்..பக்கத்தில் எதிர்ப்பட்டவரை பார்த்துக்கொண்டே.

என் பேரு கோவிந்தன் என்றார்.

எல்லாமே ஒன்று தான். ஆனால் நான் சொன்னது நாராயண ஸ்டோர் இங்கே இருந்ததே..அதைத்தான் எங்கே அப்படின்னு  கேட்டென்.

நீங்க இந்த வீதிக்கு வந்து ஒரு பத்து பதினைஞ்சு வருஷம் இருக்குமா ?

என்று என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார்.

இருக்கும் இருக்காது. அதெல்லாம் அப்பறம் சொல்றேன். .  இங்க இருந்த நாராயண ஸ்டோர் எங்கே ? அத சொல்லுங்க..

அங்கே தானே நான் நின்னுண்டு இருக்கேன் ..

என்று ஒரு பீமேல் வாய்ஸ் கேட்டது.  உடனே,  விஜய் டி.வி.   டி.டி. நினைவுக்கு வந்தார் என்று சொன்னால் பொய் இல்லை.

திரும்பினால், மடிசார் கட்டின ஒரு மாமி. மங்களகரமா நின்று கொண்டு இருந்தார்.

சென்னையில் புடவை கட்டின மாமிகளைப் பார்ப்பதே அபூர்வம்.
நவராத்திரி, தீபாவளி சமயத்தில் தான் புடவை அப்படின்னு ஒரு க்ளோதிங் மெடீரியல் இருக்கிறது என்று சென்னை வாசினிகளுக்குத் தெரியும். ஆனா, சும்மா சொல்லகூடாது. கோவில் லே மட்டும் அம்பாள் எல்லாருக்கும் புடவை தான். எல்லா சீசன் லேயும்.

இந்த மார்கழி மாதத்தில் வேளுக்குடி உபன்யாசம் நடக்கும்போது சிலர் காஞ்சிபுரம் பட்டுப்புடவை லே வருவார்கள்.. இல்லேன்னு சொல்ல முடியாது. அதோட மதிப்பு மரியாதை யே தனி.

அப்படியே இன்றைய சென்னை கல்சரையே பார்த்துப் பார்த்து பழகிப்போன  எனக்கு,  நம்ம சம்பிரதாயம் , நம்ம மரபு எல்லாமே இன்னும் நம்ம ஊர்லே அப்படியே இருக்கு அதை  கண் கூடா பார்க்கிறது எல்லாம் ....!!!
மனசுக்குள்ளே பெருமை 1000 வாட் ஆக ஜொலித்தது.
சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர் போல வருமா !!!

"மாமி ! நாராயண ஸ்டோர் இதுவா.."

"ஆமாம். ஆனா ஸ்டோர் இல்லை. பிளாட்டா ஆகி ஏகப்பட்ட வருஷம் ஆயிடுத்தே... "
"அப்படியா..!!! "

அது இருக்கட்டும். 

நீங்க யாரு ? பெரியவாளா இருக்கேள். கையிலே பாத்திரம் வேற இருக்கு.
உஞ்ச விருத்தி எடுத்துண்டு வரேளோ..? கொஞ்சம் வைட் பண்ணிணேள் அப்படின்னா ஆத்துலே ந்து பிக்ஷைக்கு அரிசி பருப்பு எடுத்துண்டு வரேன்.
என்று நான்-ஸ்டாப்பா பேசின  மாமியை

மாமி ஸ்டாப்,ஸ்டாப்.  நான் அதுக்கு வல்லே.. என்னோட பிரண்டு  ஒருவரை பார்க்கணும்
அப்படின்னு அவர் பேரைச் சொன்னேன்.

அவர் இங்கே தானே இருக்கார். எந்த ப்ளோர் அப்படின்னு தெரியல... லிப்ட் கூட வொர்க் பண்றதா அப்படின்னு தெரியல்ல..  ரிபேர் பண்ணினப்பரம் கரண்ட் இருக்காது. கரண்ட் இருந்தா லிப்ட் ரிப்பேர் ஆகிடும்.

மாமி ஜோக்கை ஜீரணம் பண்ணிண்டே அந்த காலனி உள்ளே போனேன். பெரிய போர்டிலே சொந்தக்காரர் பேர் எல்லாம். .ப்ளோர் வாரியா.. இருக்குமே !!

போர்டு இருந்தது. ஆனா தலையை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. தலைய கொஞ்சம் தூக்கினா கூட தலை சுத்தும். சுற்றியது. வர்டிகோ நாட் சீரியஸ் இது நியூசன்ஸ் வால்யூ தான். பயப்படாதீங்கோ அப்படின்னு டாக்டர் சொல்லி இருப்பதை நினைவுக்கு சிரமப்பட்டு கொண்டு வந்தேன். எஸ்.ஓ.எஸ். ஆக பாக்கெட் லே இருந்த ச்டுஜெறான் மாத்திரை ஒன்றை எடுத்து முழுங்கினேன். 


செல் அடிச்சு பார்க்கலாம் என்று அடித்தேன்.
ரொம்ப நேரம் அடித்துக்கொண்டே இருந்தது.

"நீங்கள் அழைத்த எங்கள் வாடிக்கையாளர் உங்கள் அழைப்பை ஏற்க வில்லை," என்றது.,

நான் விடாமல் இன்னொரு தரம் அடித்தேன்.
இப்போது செல் எடுக்கப்பட்டது.
யார் என்று அப்போது தான் தூக்கத்தில் எழுந்தவர் குரல் போல் ஒன்று ஒலிக்க,

நான் என்னை யார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். 

நீங்களா...  !  என்று இழுத்தார்.

"எந்த பிளாட் நீங்க?" என்றேன்.

அதற்கு அவர்,
"நீங்க கொஞ்சம் இன்னிக்கு சாயந்திரம் ஒரு நாலு மணிக்கு வர முடியுமா ? "என்றார்

நான் உங்கள் வீட்டு வாசல் லே தான் நின்னுண்டு இருக்கேன். ஜஸ்ட் பாத்துட்டு போகலாம்னு தான்"
 என்றேன்.

"நீங்க சாயந்திரம் வாங்க..பார்ப்போம் "

என்று
செல்லை வைத்துவிட்டார்

நான் யாரைப் பார்க்கவேண்டும் என்று ஒரு உற்சாகத்துடன்  வந்தேனோ அவருக்கு  என்னைப் பார்க்க அவ்வளவு உற்சாகம் இல்லை என்பது நிதர்சனமாகத் தெரிந்தது.  அப்படி இல்லை என்றால் அதை விட முக்கியமான நிகழ்வு ஒன்றில் அவர் பங்கு எடுத்துக் கொண்டு இருக்கணும்.

மனசு குரங்கு . அது இன்னொரு மரத்தில் ஏறிக்கொண்டு சொன்னது.

நீ என்ன இன்னுமா உன்னை டெபுடி ஜோனல் மானேஜர் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாய் ! உன்னை ஏற் போர்டிலே வந்து பிக் அப் பண்ணிக்கொள்ள வந்திருப்பார் என்று நினைப்பு உனக்கு !!  ரிடையர் ஆகி 15 வருசமானாலும் ஜம்பம் மட்டும் போகல்ல...!!

இன்னொரு காட்சி ப்ளாஷ் பாக் மாதிரி..

பவதி பிக்ஷாம் தேஹி . காசி பிராம்மணா பிக்ஷான்னம்.
என்று அந்தக் காலத்திலே வாசல்லே குரல் கேட்கும்.
கேட்ட உடனே க்ரஹ லக்ஷ்மிகள் ஓடி வந்தது பணிவா பிஷை போட்டது ஒரு காலம்.
வரேன். செத்த இருங்கோ என்று சொன்னது ஒரு காலம்.
டேய். ! நாராயணா ! வாசல் லே பிக்ஷை வந்து இருக்கு. அரை ஆழாக்கு அரிசி போட்டுட்டு வா, என்று சொன்னது ஒரு காலம்.
தொல்லை தாங்க முடியல்ல என்று சொன்னதும் ஒரு காலம்.

காலம்பர கார்த்தாலே நம்ம உயிரை எடுக்கறது என்ன ஜன்மங்களோ !! அசோசியேஷன் லே சொல்லித்தான் இதுக்கு ஒரு முடிவு எடுக்கணும். அப்படின்னு நினைக்கிறது இந்தக் காலம்.

எவரி திங் சேஞ்சஸ் . திஸ் இஸ் ஜஸ்ட் எவலூஷநரி ப்ராசஸ். அப்படின்னு சொல்றது மனுஷ்ய விவேகம்.

ஒரு எழுபத்தி அஞ்சு வயசுக் கியவன் வாசல்லே வந்து இருக்கேன் அப்படின்னு சொன்னாலும் அவனை, வாங்க, ஒரு வாய் தீர்த்தம் சாப்பிடுங்கோ என்று சொல்லும் மினிமம் கர்டிசி கூட அற்றுப்போய் விட்டதே இந்த நாட்களில் என்று நினைப்பு வந்தது என் குற்றமில்லை.வயசுக் குற்றம். 
எனி  வே, 
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.  
+Dindigul Dhanabalan 
திண்டுக்கல் தனபாலன் கிட்ட சொல்லி இந்த தலைப்பிலே ஒரு பெரிய வியாசம் எழுதச் சொல்லணும். 


இல்வாழ்வான் என்பார் இயல்பிடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

 அந்தக் காலத்து குறள்,( கி.மு வா. கி.பி. யா தெரியல்ல). தேவையில்லாத நேரத்திலே நினைவுக்கு வந்து சிரமப் படுத்தியது.

அந்தக் குரல் இந்தக் காலத்துலேயும் ஒலிக்கும் என்று எதிர்பார்த்தது என் தப்பு தான். சந்தேகம் இல்லை.
 
நம்ம செஞ்சது தான் மிஸ்டேக்.
இதுவரைக்கும் பார்த்திராத ஒரு புது  நபரை அதுவும் ஒரு பெரிய பப்ளிக் பிகர் அவரைப்  பார்க்கவேண்டுமானால், . ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு வந்திருக்கணும் என்று கூட தெரியாத அளவுக்கு
என்னடா நீ இத்தனை வருஷம் ஏழு கழுதை வருஷம்
ஒரு பப்ளிக் செக்டார்லே ஆடிட் ஆபீசரா, ஹெச் ஆர் மானேஜரா, ஒரு கல்லூரிலே பிரின்சிபாலா குப்பை கொட்டி இருக்கே என்று பொல்லாத
மைண்ட் வாய்ஸ் (நன்றி: அனன்யா மகாதேவன்) இடது பக்கத்துலேந்து வலது பக்கத்தை இடித்தது.
+Ananya Mahadevan

பையில் பழங்கள் கனத்தன.
எதிர்பாராதவை எதிர்பாரா நேரத்தில் எதிர்பாரா நபர்களுக்கு நடப்பது  நிஜம்.

திரும்பினேன்.
சரி. லாட்ஜுக்குத் திரும்பி விடலாம்.

 இத்தனை நேரம், கிழவி எழுந்துகொண்டு இருப்பாள்.  பையன் எழுந்து  இருந்தால், அவன் வேற தூம் தாம் என்று லேட் ஆகி விட்டது என்று குதிப்பான்.இங்க்லீஷ் லே திட்டுவான்.
பெட்டர் அபௌட் டர்ன் .

திரும்பி எங்கள் பழைய வீட்டு பக்கமா ரோடிலே  நடந்தேன். ப்ளாக் ஆவது ப்ரண்ட் ஆவது !! எல்லாம் மாயை. !!


பத்து அடி நடந்திருப்பேன்.
அங்கே, அதே ரோடில்,
என்னை கூர்ந்து பார்த்த ஒருவர்,
வைத்த பார்வையை எடுக்காம,

நீங்க  யாரு? உங்களைப் பார்த்தால் பரிச்சயமானவர் போல இருக்கே என்று கேட்டார்

அவர் வயது நாற்பத்து ஐந்து இல்ல, அம்பது கூட இருக்கலாம்.

எனக்கோ அவர் முகம் பரிச்சயமாக இல்லை.


அதற்குள் நான் முன்னே சொன்ன, அந்த பழைய உடைந்து போன குடிசை பொம்மை மாதிரி இருந்த அந்த வீட்டுக்குள் இருந்து யதேச்சையாக,வெளி வந்த ஒரு அறுபது அறுபத்தி வயது பெண்மணி என்னை உற்றுப் பார்த்து,


சேகர் !! இது சூரிடா... எனச் சத்தமிட்டாள் .

தொடர்ந்து,
மாமா..வாங்கோ...எப்ப வந்தேள்..  என்றாள் .

வாயெல்லாம் எகிறு மட்டும்   தான் இருந்ததோ !!  . ஒன்னோ இரண்டோ பல் மேல் வரிசைலே ..அதுவும் பாதி.


இந்தக் கிழவி யாருன்னே தெரியல்லையே என்று நான் நினைப்பதற்குள், அந்த குடிசைக்கு உள்ளே இருந்து வந்தவர் இன்னொருவர் முகத்தை என்னால் நினைவுக்கு கொண்டு வர முடிந்தது.


நான் ராஜா என்றார் அவர்.

 பாருங்க..லோகத்திலே பலருக்கு பேருக்கும் பெயருக்கும் சம்பந்தம் இருக்காது இல்லையா.. என்னுடைய சிநேகிதன் ஒருவன் அநியாயத்துக்கு ஒல்லிப்பிச்சான். பேரு என்னவோ பீமன். அது மாதிரி இவரும் போல .

புரிகிறது. சரி.  பாலு இருக்கிறாரா என்றேன்.


நான் பாலு என்றவர் தான் என் பக்கத்து வீட்டில் இருந்தவர் நிரந்தர வேலை என்று ஒன்றும் அவருக்கு என்றுமே இருந்ததாக தெரியவில்லை. செயின்ட் ஜோசெப் கல்லூரியில் ட்யூடர் ஆக பணி புரிந்தவர்.  மாணவர்களுக்கு ட்யூஷன் எடுத்துக்கொண்டு  இருந்தார். க்ஷேக்ச்பியர் லே எக்ஸ்பர்ட் என்பார்கள் அவரை. இப்போது அவருக்கு 80 வயது இருக்கலாம்.

அவருடைய கடமை, கண்ணிய உணர்வுகளுக்கு ஒரு மதிப்பு கொடுப்பது என்பது சூரியனுக்கு இத்தனை வாட்ஸ் சக்தி என்று சொல்வது போலத்தான். 
தியாகம் ஒன்றே அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பாதை.

இருக்காரே...உள்ளே வாங்கோ.. என்று என் கையைப் பிடித்து இழுத்துச் செல்லாத குறையாக உள்ளே அழைத்துக் கொண்டு போனாள் அந்த மூதாட்டி
.


வீடு எனச் சொல்ல முடியாத ஒரு  இடம். 
அந்த அறையின்  கூரை  எப்போ  கீழே விழும் என்று சொல்ல முடியாத நிலை.

உள்ளேஇடது பக்க அறையில், திருவானைக்கோவில்
அகிலாண்டேஸ்வரி அம்மன் பெரிய படம் . 6 அடிக்கு 4 அடி இருக்கும். கவிநயா பார்த்தார்கள் என்றால் உடனே ஒரு காவியமே எழுதிவிடுவார்.
அந்த படத்தின் முன்னே ஒரு தள்ளாத வயதில் ஒரு பெரியவர்

 உட்கார்ந்து ஏதோ புஷ்பம் போட்டுண்டு, ஜபம் பண்ணிக்கொண்டு இருந்தவர்,

சூரியா ! எப்படி இருக்கே.. ...?
எழுந்து வந்தார்.

அதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் எப்படி இருக்கீங்க சொல்லுங்கள் என்றேன்.

இரண்டு கைகளாலும் அந்த அம்மனைக் காண்பித்தார்.
அவ அனுக்ரஹத்திலே இருக்கோம். என்றார்.

நமஸ்காரம் உங்களைப் பார்ப்பேன் என்று எண்ணவே இல்லை.
அப்படின்னு சொல்லிட்டு, அவர் கால்களில் விழுந்து அபிவாதயே என்று ஆரம்பித்தேன்.
 அப்போது,
பக்கத்தில் இருந்த மூதாட்டி,
அகிலாண்டேஸ்வரி அம்மனின் முன் வைக்கப்பட்டு இருந்த
பெஞ்சில் இருந்த ஏதோ ஒன்றைக் காண்பித்து,

பெரியவா பாதம் என்றாள் .

அங்கே நமஸ்காரம் பண்ணுங்கோ போதும்
என்றாள்.

என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இவர் பெரியவர். அவர் மஹா பெரியவா.

மாதா பிதா குரு தெய்வம் என்போமே !
குருவை தரிசிக்காம தெய்வத்தை பார்க்க லாமோ!! பார்க்கத்தான் முடியுமோ !!
பெரியவாளே !! உங்களை தரிசனம் செய்யணும், 
உங்கள் பாதங்கள் லே என் சிரசை வெச்சு 
குருவே சர்வ லோகானாம், பிஷஜே பவ ரோகினாம் என்று 
சொல்லணும் அப்படின்னு நீங்களே சித்திச்சு இருக்கேள். 
 அப்படி இருக்கும்போது, 
நான் வேற யாரைப் போய் பார்க்க பிளான் பண்ண முடியுமா?

எது எது எப்ப எப்ப எப்படி எப்படி நடக்கணுமோ 
அது அது அப்ப அப்ப அப்படி அப்படி தான் நடக்கும். 


என் கண்களில் செம்பரவாக்கம் ஏரி உடைத்துக்கொண்டு முகத்தை மட்டும் அல்ல, உடலை முழுக்கியது, உண்மை.

இரண்டு கைகளையும் மேலே தூக்கியபோது கையில் இருந்த பை கனத்தது. தொப் என கீழே விழுந்தது.

அந்த பையில் கொண்டு வந்திருந்த பழங்களை  அந்தப் புனித  பாதங்கள் முன் வைத்தேன்.

கண்களை மூடி, குருப்யோ நமஹ என்று
அந்த மகா பெரியவாளை மனசார ஸ்துதி செய்துவிட்டு,

கண்களைத் திறந்தேன்.


அகிலாண்டேஸ்வரி
சிரிக்கிறாள்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக