புதன், 13 மே, 2015

ஆதார் கார்டுக்கு இப்படியும் ஒரு உபயோகம்

ஓம் கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே ...

என்று சத்தமாக மைக்கில் அந்த அர்ச்சகர்
வினாயகப்பெருமானுக்கு

சங்கட ஹர சதுர்த்தி அன்று



 அந்த வக்கிர துண்டனுக்கு
அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார்.
எனக்கோ அந்த சங்கர் மகாதேவன் பாட்டு பாடி அர்ச்சனை செய்தால் என்ன என்று தோன்றியது.  நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

+Thenammai Lakshmanan
மனதின் இன்னொரு பக்கமோ திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் பதிவில் வெளி வந்த விநாயகனின் 108 தமிழ்ப் பெயர்களை உச்சரித்துக்கொண்டே இருந்தது.
ஓம் சக்திவிநாயகா போற்றி

ஓம் சிவனார் தவப்புதல்வா போற்றி

ஓம் முழுமுதற் பொருளே போற்றி

ஓம் மூலாதார மூர்த்தியே போற்றி

ஓம் உமையவள் மதலாய் போற்றி

ஓம் உத்தமர் உள்ளத்தாய் போற்றி

ஓம் மாங்கனி பெற்றாய் போற்றி

ஓம் அவ்வைக்கருளினாய் போற்றி

ஓம் கந்தனுக்கு மூத்தோய் போற்றி

ஓம் சித்தி புத்தி நாதனே போற்றி


கோவிலில் சரியான பக்தர் கூட்டம்.
ஒவ்வொருவரும் முந்திக்கொண்டு தனது நக்ஷத்திரம், ராசி, பெயரைச் சொல்லிக்கொண்டு வர,
நானும், அந்த கூட்டத்தில், நூறோடு ஒன்றாக,

கோத்திரம், ராசி, நக்ஷத்திரம், பெயர் சொன்னேன்.

பக்கத்தில் நின்று கொண்டு இருந்த கிழவருக்குத் தாங்க முடியாத ஆச்சரியம்..

என்ன சார் அதிசயமா இருக்கு !
 என்றார் .

இன்னிக்கு பால் கொழுக்கட்டை நைவேத்யம். அதிலே என்ன ஆச்சரியம் !! என்றேன்.

அது இல்லே
என்றார்.

பின் என்ன கொண்டக்காய் சுண்டலிலா ..?  தேங்காய் போட்டு இருக்கும். உங்களுக்கு டயாபெடிஸ் என்றால் என்னிடம் அதை கொடுத்து விட்டு...என்று இழுத்தேன்.

அதெல்லாம் இல்லை
என்றார்.

பின் என்ன ?

அது எப்படி நீங்களும் அதே கோத்திரம் . அதே ராசி, அதே நக்ஷத்திரம், அது மட்டும் இல்லாம் அதே பெயர்...!!

அதுனாலே என்ன ஆச்சரியம் !!

இல்ல, கொஞ்ச நேரம் முன்னாடி தான் நானும் கௌசிக கோத்ரம், கும்ப ராசி, அவிட்டம் நக்ஷத்ரம், நாராயணன் அப்படின்னு என் பெயருக்கு அர்ச்சனை செய்தேன்.  இப்ப நீங்களும்..... ??

அது பேரு நான் இல்ல... அது என் பேரன் பெயர்.

அது சரி.. என் பெயரோட மட்டும் இல்லை, எல்லாமே ஒண்ணா இருக்கே...!!

நான் அப்படி இருப்பது சாத்தியம் தான். என்று சொல்லி கேட்பதற்கு அவருக்கு அவ்வளவு பொறுமை இல்லை.

நான் 50 வருஷமா அர்ச்சனை பண்ணிண்டு இருக்கேன். என்றார். தொடர்ந்து எல்லாம் அந்த பகவத் சங்கல்பம் என்றார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்குச் சரியாக புரியவில்லை.
இருந்தாலும், அதற்குள், பிரசாதங்கள் கையில் விழுந்த படியால், அந்த
சக்கரை பொங்கல்,பால்  கொழுக்கட்டை சுவையில் மனதை செலுத்தினேன்.
சாப்பிட்டு விட்டு தான் அவர் நினைவு வந்தது.

பக்கத்தில் ஒரு பாட்டி ஸ்ரத்தையா பாடிக்கொண்டு இருப்பதை ரெகார்டு போட்டார்கள். ஏதோ கேட்ட குரல் போல இருக்கே என்று கேட்டென்.

அடடா !! இது என் அகத்துக்காரி குரல் அல்லவா !!
இதுவரை யூ ட்யூபில் 2,35,988 பேர் கேட்டு இருக்கிறார்கள் என்றதில் இருந்தே விநாயகன் மேல் எத்தனை பக்தி எத்தனை பக்தி மக்களுக்கு என்றும் நினைத்தேன்.



அவரைக் காணோம்.

எத்தனையோ பக்தர்கள் விநாயகருக்கு.. லட்சக்கணக்கில், ஏன் .? கோடிக்கணக்கில்.!  அதில் ஏதாவது பத்து பேருக்கு எல்லாம் ஒன்றாக இருப்பதில் என்ன ஆச்சரியம் ! என்று நினைத்துக்கொண்டேன்.

இந்த நிகழ்வையும் சில நாட்களில் மறந்தே போய்விட்டேன். அதை மறக்க முடியாமல்,

நேற்று முன் தினம் ,

அந்த பிளாட்பாரம் விநாயகரை தரிசித்தவாறு செல்கையில்,
 சார் ! 
என்று
யாரோ கூப்பிட நிமிர்ந்தேன்.

இவரை நான்  எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே என்று நினைவில்லையே என்று என்னையே நான் கேட்டுக்கொண்டு இருக்கும்போது,

சார் !! என்னை நினைவில்லையா...

நினைவு இல்லை என்று சொல்ல முடியவில்லை. இருந்தாலும் சரியாக நினைவு இல்லை. முகம் பார்த்தால் போல் தான் இருக்கிறது என்று நெளிந்தேன்.

நான் தான் சார் ...  அவிட்ட நக்ஷத்திரம். கும்ப ராசி.. .
 என்றார்.

சட் என்று நினைவுக்கு வந்தது. அந்த சங்கட ஹர சதுர்த்தி நாள்.

ஆமாம். அன்று சதுர்த்தி அன்று அந்த தன்வந்திரி கணபதி கோவிலில் சந்தித்தோம் இல்லையா...

ஆமாம்.  நானும் நாராயணன். நீங்களும்.....
என்று தொடர்கையில் அவரை வெட்டி,

சார்..அந்த நாராயணன் என் பேரன். என்றேன்.

அது சரி. நீங்கள் போன சதுர்த்திக்கு கோவிலுக்கு வரவில்லையோ !!

ஆமாம். மறந்து விட்டது.

அது எப்படி. சதுர்த்தி மறந்து போகும்.  முக்கியம் இல்லயோ ..

ஆமாம். ஆனால் மறந்து போயிடுத்து.  என்றேன்  அபாலஜெடிக்கா,

பரவா இல்லை. எனக்கும் சௌகரியமா போய்விட்டது.

என்ன சௌகரியம். !!

நீங்கள் வந்திருந்தீர்கள் என்றால் இரண்டு பேரும் திரும்பவும், அதே கோத்திரம், அதே ராசி, அதே நக்ஷத்திரம், அதே பெயர் ..நல்ல வேளை நீங்கள் வரவில்லை.

நான் வந்தால் என்ன அசௌகரியம் என்று அப்பாவியா கேட்டேன்.

எனக்கில்லை...

பின் யாருக்கு ?

புள்ளையாருக்கு ஸ்வாமி..!! யார் அர்ச்சனை பண்றாங்க என்று சரியா தெரியாம போயிடுச்சுன்னா ??

ஓஹோ...

அப்ப நான் வந்திருந்தா என்ன செய்து இருப்பீர்கள் என்றேன்.

எதற்கும் இருக்கட்டும் என்று தான் கொண்டு போய் இருந்தேன்.

எதை ?

ஆதார் கார்டு.

ஆதார் கார்டா !! அதற்கும் அர்ச்சனைக்கும் என்ன சம்பந்தம் ??? !!!!

ஆமாம். ஆதார் கார்டு தான். 
அர்ச்சகர் தான் சொன்னார். 
என்னோட சந்தேகத்தை அவர்கிட்டே சொன்னப்ப, 

அவர், 

எதுக்கு உங்களுக்கு சம்சயம் !! கோத்ரம் ப்ரவரம் சொல்லும்போது, ஆதார் கார்டு நம்பரையும் சேர்த்து சொல்லிட்டா போச்சு...
என்றார்.
 நீங்களே சொல்லுங்க...

கோத்ரம், ராசி, நக்ஷத்ரம், பெயரோட, அந்த நம்பரையும் சேர்த்து அர்ச்சகர் படிச்சா நல்லதில்லையா..  நம்மதான் அர்ச்சனை செய்யறோம் என்பது துல்லியமா தெரிந்துவிடும் இல்லையா...

ஆஹா !!

ஆதார் கார்டுக்கு இப்படியும் ஒரு உபயோகம் இருக்கிறதா !!!
மன்மோகன் சிங் வாழ்க.
நிலேகாணி வாழ்க.

4 கருத்துகள்: