ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

மயக்கமா வருதோ !!

ஒரு இரண்டு மணி நேரம் மனசுக்கு ஒய்வு கொடுக்கணும், உபயோகமா எதுனாச்சும் கத்துக்கணும் அப்படின்னு நினைத்த உடனே எனக்கு ஸ்வாமினி சொற்பொழிவு இன்று தான் என்று ஞாபகம் வந்தது.

அவசர அவசரமாக ஆடோ பிடித்துக்கொண்டு சரியான நேரத்துக்கு போய் சேர்ந்து விட்டேன்.

ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா அவர்களின் உபன்யாசம் நடந்து கொண்டு இருந்தது.  இடம்; பாண்டி பஜார் கேசரி பள்ளி.

உபதேச சஹஸ்ரீ என்னும் ஆதி சங்கரரின் அற்புத இலக்கிய படைப்பில் இருந்து மக்கள் உள நலம் அடைய , உள்ள அமைதி பெற என்ன வழி என்பதை சொல்லும் சொற்பொழிவு.

"ஆன்மா சூட்சுமம் ஆனது. ஆகையால் அது மனதுக்கும் சொல்லுக்கும்  அப்பாற்ப்பட்டது"

sookshmaikaagocharebhyascha na lipyatha ithi sruthe:(16-58)

உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த போது ,
பூஜை வேளையில் கரடி போல, செல் பெல் அடித்தது.
செல்லை ஆப் பண்ணி வைக்க மறந்து போய் விட்டேனே என்று என்னை நானே நொந்து கொண்டு
யார் எனப் பார்த்தால் என் இல்லத்தரசி தான்.

என்ன இருக்கும்? சாதராணமாக, நான் வெளியில் சென்றால், திரும்பி எப்போது வருவேன் என்றோ, சென்ற பின், எங்கே இருக்கிறீர்கள், எப்ப வருவீர்கள் என்று என்றுமே செல் அடித்து பேசாதவள்,

இப்போது செல் அடிக்கிறாள் என்றால் ஏதாவது மிக முக்கியமாக இருக்கும் என்று செல்லை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு  வெளியே சென்று,

என்ன விஷயம் !! என்று சன்னமா கேட்டேன்.

பெரிசா ஒண்ணும் இல்ல. நான் இப்ப சாப்பிடவேண்டிய பிளட் ப்ளசர் மாத்திரை ஒண்ணு கூட இல்ல. தீர்ந்து போச்சு. வாங்கிண்டு வாங்க..

சரி.. என்ன பேரு ?

தெரியாதே !

அந்த டாக்டர் சீட்ட எடுத்துப் பாரேன்.

டாக்டர் சீட்டா ? அப்படி ஒன்னு நான் பார்க்கவே இல்லையே...

எந்த டாக்டர் ன்னாவது நினைவு இருக்கா?

தெரியலையே !!  சித்ராவா, ஜெயச்சந்திரனா, ரங்கராஜனா ???

சரியாப்போச்சு.. உனக்கு இதெல்லாம் ஞாபகம் வெச்சுக்க முடியாதா ?
என்ன தான் அப்ப உனக்கு ஞாபகம் இருக்கு. சொல்லு..

நிசமாவே, எதோ நீங்க கொடுக்கறீங்க..நான் சாப்பிடறேன். அதத் தவித்து
மத்த எதுவுமே எனக்குத் தெரியாது.

அப்ப உனக்கு எது தான் நினைவு இருக்கு ?

தெரியல்லே..

நான் கேட்கறேன். சொல்லு.

சரி.

சூப்பர் சிங்கர்லே வைல்ட் கார்டு லே யாருக்கு ஒட் போட்டே ?


சௌம்யா, லதா, ஆனந்த், அரவிந்த், லக்ஷ்மி,

மண் வாசனை லே யாரு முதல் ஹீரோயின் ? கதா நாயகி ?

ஆனந்தி.

சரவணன் மீனாச்சி லே மீனாச்சி யா நடிக்கிறது யார்?

ரக்ஷிதா மகாலட்சுமி தினேஷ்.    இப்பதாங்க அவங்களுக்கு ரியல் லைப் லேயும் கல்யாணம் நடந்துச்சாம்.

விஜய் சேதுபதி நடிச்ச லேட்டஸ்ட் படம் என்ன ?

சேதுபதி.  

நயனதாரா, த்ரிஷா இப்ப வயசுலே  யாரு மூத்தவரு?

த்ரிஷா தான். 32 . சந்தேகம் இருந்துச்சுன்னா இங்கே பாருங்க. 

விஜய் டி.வி லே இப்ப ஒரு ஆங்கர் நடிகர் ஆராரு . அது யாரு ?

என்னங்க..இது கூட தெரியாதா...ம.க.ப .  நவரச திலகம் அப்படின்னு ஒரு படத்துலே . இங்கே பாருங்க.



6  மணிலேந்து 11 மணி வரைக்கும் இந்த டி வில் அப்படி என்ன தான் சீரியல் பார்க்கிறே?

முதல்லே மண் வாசனை. அப்பப்ப பூவிழி வாசலிலே. அப்பறம் கல்யாணம் முதல் காதல் வரை. பின்னே சரவணன் மீனாக்ஷி, அதுக்குப்பறம் சூப்பர் சிங்கர்.
அதுக்கப்பறம் சீதையின் ராமன்.  

நடு நடுவே அட்வர்டைஸ்மென்ட் வருதே !!

அது வரும்போது தான் நான் பூஜை அறைக்கு போயி, ஸ்ரீ ராம ஜெயம் சாமிக்கு மணி அடிக்கிறது, 

மாத்திரை சாப்பிடறது,     ராத்திரி இட்லி, இல்லேன்னா  சப்பாத்தி அதெல்லாம்.நீங்க செஞ்சு கொடுக்கறது தானே !!

இதெல்லாம் தெரியுது. நீ சாப்பிடற B,P  மாத்திரை என்னனு தெரியாதா ?

அது உங்களுக்குத் தானே நினைவு இருக்கணும் !! உங்க டிபார்ட்மெண்ட் வேலைய என் தலைலே எதுக்காவ கட்டரீங்க...???

தலை சுற்றியது. கீழே விழுந்துவுடுவோமோ...!!
பக்கத்தில் இருந்த ஒருவர் பிடித்துக்கொண்டார்.

"உட்கார்ந்து பேசுங்க சார் ! மயக்கமா வருதோ !!" என்றார்.

மயக்கம் வந்தது.  ஆனால் இப்போ, தெளிந்து விட்டது 
கணவனின் கடமை என்ன என்று புரிந்தது.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் அளித்த வரம்.

கண்ணதாசன் எழுதிய அர்த்தம் புரிந்தது.
கண்ணதாசா !  யூ ஆர் ரியலி க்ரேட்.
****************************
************************
*****************
திடீர் என்று ஆஹா ! உபன்யாசம் கேட்க வந்ததை மறந்து போனோமே ! என்று ஹாலுக்கு உள்ளே நுழைந்தேன்.

ஸ்வாமினி அதே ஸ்லோகத்தில் தான் இன்னமும் வியாக்யானம் அளித்துக் கொண்டு இருக்கிரார்கள்.

:எது பரிசுத்த ஆன்மா வோ அது மனம், சொல், இவற்றிக்கெல்லாம் அப்பாற்பட்டது "என சொல்வதை 

மறுத்துப் பேசும் தர்க்க வாதிகள்  சொல்வர்: 

அப்படியானால், தளை என்று ஒன்றுமே இல்லாதபோது ஆன்மாவுக்கு விடுதலை என்பதே பொருள் அற்றுப்போகிறதே !!

அதற்கு பதில் சொல்லும் ஆதி சங்கரர்: 
"இந்த தளை என்பதே புத்தியின் பிரமை தான். இந்த பிரமை தனை விட்டு விலகுவதே ஆன்மாவுக்கு விடுதலை. 

saasthraanarthakyameva syanna budhdha bhranthirishyathe 
bandho mOkshas cha thannaasaha sa yathokthO na chaanyathaa. (16-59)

யூரேகா ! யூரேகா என்று சத்தம் போட்டுவிடுவேனோ என்று நினைத்தேன்.

அதற்குள் சொற்பொழிவு முடிந்து போக, எல்லோரும் கலைந்து போகத் துவங்கினர்.

எனது அருகில் ஒரு பெரியவர் இன்னொருவரிடம் சத்தமாக பேசிக்கொண்டு செல்கிறார்.

அசரீரி போல என் காதுகளில் பளிச் என்று விழுகிறது.

இந்த உடம்பு, வூடு, எல்லாமே தளை  அல்லது பிரமை என்று நிதர்சனமா தெரிந்தபின்னும் அது நோக்கித் தானே போய்க்கொண்டு இருக்கிறோம்.
இல்ல, அதுக்குள்ளே தானே உழன்று கொண்டு இருக்கிறோம் !!!

செல் அடித்தது.

வந்துகிட்டே இருக்கேன் என்றேன் சகதர்மிணியிடம்.

பந்தம், தளை இவற்றில் இருந்தெல்லாம்  விடுதலை ஆவது என்பதெல்லாம் !!! ஊஹூம். சான்சே இல்லை.



    







புதன், 17 பிப்ரவரி, 2016

சர்வ ரோக நிவாரணி

லொக் , லொக் என்ற இருமல் சத்தம் .

எங்கள் ஊர் பெரியார்  பூங்காவில் மாலை நேரத்தில்  வழக்கமாக நான் உட்காரும் என்  பெஞ்சுக்கு சற்று தூரத்தில் நான் வரும்போதே  கேட்டது. 

அந்த தொண்ணூறை த்தாண்டியவர் தான் வந்திருப்பார் என்று நினைத்தேன். 
சரிதான் ! அவர்தான். 

என்னைப் பார்த்த உடனே, இருமலைக் கட்டுப்படுத்திக்கொண்டு, 
"உங்களைத் தான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்" என்றார்.


"எதற்கு? இருமல் வைத்தியத்திற்கா ? " என்று கேள்வி கேட்க, 

"அதற்கும் தான்." என்று அவர் தொடருமுன், இன்னொரு நண்பர் எண்பதைக்  கடந்தவர், 

"உங்க வீட்டு எதிரிலேயே ஆயுர்வேத எக்ஸ்பர்ட் ஒருவர் இருக்கிறாரே " என்றார்.

"நான் அவர்கிட்டே கடந்த ஆறு மாசமா, தாளிசாதி, கதிராதி குடிகா, பங்கஜ கஸ்தூரி, ச்யவனப்ரகசாம் என்று பலதினுசா சாப்பிட்டு விட்டேன். இன்னும் தீர்ந்த பாடில்லை. ராத்திரி வந்தா ரொம்ப சிரமப் படுத்துறது !"

"ராத்திரி லே ஸ்ரமப்படுத்தறது வேற விஷயம் இல்லயோ ? !" என்றது பக்கத்தில், அறுபதை எட்டிப் பார்க்கும் இளவயசு .

"நீரும் உம ஜோக்கும் ! சற்று சும்மா கிடும். நீங்கள் சொல்லுங்கள் சார் " என்று என்னிடம் அவர் பிரார்த்திக்க, 

"சார் ! நீங்கள் எதற்கும் என் நண்பர் டாக்டர் விஸ்வநாதா அவர்களிடம் காண்பிக்கலாம். அவர் செஸ்ட் சம்பந்தமான் எல்லாத்துக்கும் அவர் அதாரிட்டி." 

"போன மாசம் அவர் கிட்ட போனேனே ! கொஞ்சம் சரியானப் போல இருந்த உடனே அவர் கொடுத்த மருந்தை எல்லாம் நிறுத்திட்டேன். "

"ஏன் நிறுத்தினீங்க?"

"முழங்கால் லே வலி . அதுக்காவ டாக்டர் ராமமூர்த்தி சார் கிட்ட போனேன்."

" போய் ?"

" அவரும் எக்ஸ் ரே.ப்ளட் ரிபோர்ட் எல்லாம் எடுத்தப்பறம் உங்களுக்கு ஆஸ்டியோ போரோசிஸ் மாதிரி . வைட்டமின் டி கால்சியம் குறைவா இருக்கு. அதுக்கு டாப்லெட் தர்றேன். ஒரு மாசம் சாப்பிட்டு பாருங்கோ என்றார்."

"சரியாச்சா? "

"சரியானப் போல தான் இருந்தது. அதுக்குள்ளே பாருங்க.?

" என்னாச்சு !"

"என்னையே அறியாம, ஒரு நாளைக்கு லேசா மயக்கமா வந்துடுத்து. என்னெனே புரியல்லே. எல்லோரும் என்னை தூக்காத குறையா விஜயா ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போனாக.அங்கே..."

"அங்கே?"

"நாலு நாளைக்கு அது இது அப்படின்னு பதினெட்டு டெஸ்டு பண்ணிட்டு ஒரு லட்ச ரூபாய் பிடிங்கிட்டு பின்னே சொல்றாங்க:   பெரிய ப்ராப்ளம் ஒன்னும் இல்ல. மைல்ட் டயாபிடிஸ். அதுவும் டயாபெடிக் ஆவர அறிகுறி தான். டயட் லே அரிசி வேண்டாம். கோதுமை சாப்பிடுங்கோ சரியா ஆகிடும் அப்படின்னாங்க.."

"கரெக்ட் அட்வைஸ் தானே தந்தாங்க.."

"அன்னிலேந்து..சப்பாத்தி."

"சப்பாத்தியோட தொட்டுகரதுக்கு..?

"அதான் க்ராண்ட் ஸ்வீட்ஸ் லே தாரானே. குருமா.."

"என்னமா ரோல் பண்ணித் தரான் !! தினம் முப்பது சாப்பிடலாம். அத்தனை ருசி. அதைப் போல வருமா" என்றார் விட்டல் .

"காலைலே, 2 நடுப்பகல்லே 4, ராத்திரி 3 எல்லாமே சப்பாத்தி தான். குருமா, வெங்காயம், பச்சடி, கொஞ்சமா தயிர். அவ்வ்வளவு தான். 

"பேஷ்..சூப்பர் சார். "

"திடிர்னு ஒரு நாளைக்கு கடமுடா, கடமுடா அப்படின்னு வயிறு ட்ரபிள் பண்றது !. இத்தனைக்கும் டயரியா இல்லை, மலச்சிக்கல் இல்ல. வாயுத் தொந்தரவு ...!!"

"வாயுபுத்திரன் அனுமாரைப் பாத்துட்டு வந்திருக்கலாமே !! வேலூர் பக்கம். பஞ்ச முக அனுமான் " என்றார் பக்கத்தில் இருந்த பார்ட் டைம் பட்டாச்சாரியார். 

"பார்க்கணும் தான். ஆசைதான். ஆனா, அதுக்கெல்லாம் டயம் இல்ல சுவாமி."

"அப்ப என்ன செஞ்சீங்க..ஜெலூசில் .மாதிரி எதுனாச்சும் ...?"

"நான் டாக்டரைக் கேட்காம எதுவுமே ரிஸ்க் எடுத்துக்க மாட்டேன்.  அதுனாலே 
உங்க ப்ரெண்ட் டாக்டர் சீனிவாசன் கிட்ட தான் போனேன்."

"அவர் ரொம்ப சின்சியர் கேஸ்ட்ரோ என்டேராலஜிஸ்ட்  சர்ஜன் டாக்டர் ஆச்சே ! என்ன சொன்னார் ?"

" ஒன்னும் பெரிசா இல்ல. இது ஐ.பி. எஸ்." என்றார்.

"ஐ. பி.எஸ்.அப்படின்னா?"

"இரிடேடிங்க் பவல் சின்றோம் என்றார். ஸ்ட்ரெஸ் உள்ளவாளுக்கு எல்லோருக்கும் வரும் என்கிறார்."

"உமக்கென்ன ஸ்ட்ரெஸ் ? உம்மாலே தான் மத்தவர்களுக்கெல்லாம் ஸ்ட்ரெஸ்! "
என்று சொல்லி சிரித்தார் மாதவன் . 

"அதான் எனக்கும் தெரியல. சரின்னு, ஸ்ட்ரெஸ் கண்ட்ரோல் பண்ணனும் எப்படின்னு தெரிஞ்சுக்க, .....

ஆர்ட் ஆப் லிவிங் கிளாஸ் போங்க அப்படின்னு வூட்டிலே சொன்னாங்க..நான் தான் டாக்டர் கிட்டே போவோம் அப்படின்னு சொன்னேன். 

யார் டாக்டர் ? 

"அதான். டி.நகர் லே இருக்கார். டாக்டர் ரங்கராஜன் சைகையாற்றிஸ்ட் ஆம். சரின்னு அங்கே போய் பார்த்தா...

என்ன ஆச்சு..!!

என்னைப்போல ஒரு இருபது பேர் க்யூ விலே எனக்கு முன்னாலே . என் டர்ன் வரதுக்கு சாயந்திரம் நாலு மணி ஆயிடும் என்றார் அந்த ரிசப்நிஸ்ட் ."

"லோகத்துலே பாதி  பேர்  இன்னிக்கு சைகயாற்றிஸ்ட் கிளினிக் லே இருக்காங்க. இந்த செல்பீயும் ஸ்மார்ட் போனும் வந்ததுலே அடிக்ஷன் ரொம்பவே ஜாஸ்தி ஆகிடுத்து. " ரிடயர்டு மெடிகல் டிபார்ட்மெண்ட் காரர் இடை மறித்தார் . 

அதுலேந்து வெளிலே வர முடியல்லயே !! எத்தனை அப்பா அம்மா கதர றாங்க பாக்கறோமே !" என்றேன் நான். 

"கரண்ட் வேற இல்ல. காத்துண்டு இருந்தேன். " தொடர்ந்தார் தொன்பதைத் தாண்டியவர். 

"வேற வழி !! . நமக்கும் குணமாகணும் . அவருக்கும் வருமானம் வரணும்."

"கரெக்டா எனக்கு 5 மணி நேரம் கழிச்சு 5.20க்கு அவரைப் பார்க்க பேச என்னோட உபாதைய சொல்ல முடிஞ்சது. "

"மருந்தெல்லாம் வாங்கிட்டீகளா?"

"அதான் ப்யூட்டி.."

"ப்யூட்டியா ? அங்க அவர் ப்யூட்டி பார்லர் கா போகச் சொன்னா ?"

"கிண்டல் பண்ணக் கூடாது. " 

" பின்னே என்ன?"

"உங்களுக்கு ஒரு சைக்கிக் ப்ராப்ளம் கூட கிடையாது. லேசா கொஞ்சம் ஹியரிங் ப்ராப்ளம் இருக்கு. அதுவும் மோஸ்ட் லி நியூராலஜிகல் " அதுனாலே நீங்க எதுக்கும் என்னோட பிரான்ட் டாக்டர் சீனிவாசன் சார் இருக்கார் அவரை கன்சல்ட் செய்யுங்க..என்றார்."

யாரு சீனிவாசன். ? சாயி பக்தராச்சே ! வியாழக்கிழமை எல்லாம் ப்ரீயா வைத்தியம் பார்ப்பாரே அவரா ?

ஆமாம். சாதாரண நாட்கள் லே அவர் பீஸ் ரூபா 300. ஆனா வியாழக்கிழமை அன்னிக்கு வைத்தியம் ப்ரீ. மருந்தெல்லாம் ப்ரீ. 

"அது மட்டும் இல்ல, பக்கத்திலே இருக்கிறவா, சாய் பாபா போடோ விபூதி எல்லாமே தர்ரா அதெல்லாம் ப்ரீ. "

"அவரேதான். நான் போய் பார்த்து என் கஷ்டத்தை எல்லாம் சொன்னேன். 

"அவர் என்ன சொன்னார்."

"உங்களுக்கு மேஜர் ஆ ஒரு கம்ப்ளைண்டும் இல்ல." எல்லாமே வயசாயிகிட்டு இல்லையா. ஒரிஸ் தான் " என்கிறார்.

"எதுனாச்சும் மருந்து ????"

"எதுவும்  வேண்டாம். தூங்க படுத்துக்கும்போது நமச்சிவாய  ..ஓம் என்று கண் களுக்குள்ளே முழிகளைச் சுற்றி சொல்லுங்கள் " என்கிறார்.

"கண் முழிகளைச் சுற்றியா?"

"ஆமாம். அது ஒரு நியூராலஜிகல் எக்சர்சைஸ் . ஓம் என்று கண்களாலே முழிகளுக்குள்ளே  ஒரு 25 தரம் போட்டுக்கொண்டு இருங்கள். அதற்குள்ளே , தானே தூக்கம் வரும் "
என்கிறார். 

" ஓம் போட்டால் தூக்கம் வருமா ? அப்பறம்?" என்றேன் ஒரு ஆச்சரியத்துடன். 

(எனக்குத் தெரிந்த பயிற்ச்சிகள் எல்லாம் இவைகள் தான். )

"எனக்கு வந்ததே !! ஆனால் தூங்கும்போது  இந்த  தொந்தரவு இருமல் திரும்பவும் வந்துடுத்து."'

"இப்ப என்ன செய்யப்போகிறீர்கள் ?" 

"அதானே உங்க கிட்ட கேட்கிறேன் "

"நான் ஒன்று சொல்வேன். கேட்பீர்களா என்றேன். "

"நீங்க எந்த மருந்து சொன்னாலும் சாப்பிடுகிறேன். சாப்பாட்டுக்கு முன்னாலா, பின்னாடியா என்று மட்டும் சொல்லி விடுங்கள் " 

"முன்னாடி, பின்னாடி என்றெல்லாம் இல்லை."

"பின்னே !"

"சாப்பாடே அதுதான்."

ஓ ஆர் எஸ் மாதிரி இருக்குமோ ! சரி சொல்லுங்கள் "


இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே


" என்னது ! நான் மருந்து கேட்டால் , திருப்புகழ் மாதிரி ஏதோன்னு சொல்லறீக..?"

"மாதிரி இல்ல. திருப்புகழே தான். அருணகிரிநாதர் அருளியது. 

"படிச்சா சரியா ஆகிடுமா?

"ஒரு 48 நாள் படிச்சுப்பாரும். செலவில்லாத மருந்து." என்றேன். 



***************************************************************************************************************************
****************************************************************************************************************************

இன்று காலை 
எனது வலை நண்பர் திரு ஜி.ராகவன் அவர்கள் தளத்தில் படித்த பதிகம். 
அங்கே சென்று முழுவதும் படிக்க இங்கே  திருப்புகழை க்ளிக்கவும்.
இந்த பதிகத்தில்  இல்லாத வியாதியே இல்லை போலும் !!
அத்தனைக்கும் இந்த திருப்புகழ் ஒரு 
சர்வ ரோக நிவாரணி போலும். !!! 

மருந்து தருவது மருத்துவன் தொழில் 
ஆரோக்கியம் தருவது ஆண்டவன் அருள் 

நன்றி: 
gragavanblog.wordpress.com/2016/02/16/irumalu-roga-muyalagan/யா !!!















சனி, 23 ஜனவரி, 2016

17 ந் தேதி நடந்த விசயம்

17 ந் தேதி நடந்த விசயம் 

இன்னா ஆச்சு உங்களுக்கு, இன்னும் நாலு நாள் லே நாப்பத்தி எட்டு வருஷம் ஆவப்போவுது நம்ம கலியாணம் ஆகி, ......
இறைந்து சொன்னாள் இவள்.

(கொ ஞ்சம் விட்டு விட்டு....மெதுவாக)

இன்னும் எத்தனை வருஷம் தான் இந்த மனுஷனுக்கு புத்தி சொல்லனும்னு தெரியல்லையே மாந்துரையானே !! என்று

முணுமுணுத்தாள் .

காலு...காலு....இடுப்பு, எலும்பு , துடை எலும்பு என்று முனகினேன்.

நான் வேதனைப்படுவதைப் பார்த்து பரிதாபம் கொண்டு என் பக்கத்தில் வந்த என் பிரிய சகி ,

எதுக்காவ அலைஞ்சு திரிஞ்சிட்டு வேதனையை விலை குடுத்து வாங்கிகினு இருக்கீக...   இப்ப தான் பத்து நாள் முன்னாடி பத்து நிமிசத்திலே வந்துடறேன் அப்படின்னு சொல்லிப்போய்......

அத எதுக்காவடி இப்ப நியாபகபடுத்தறே !! அதான் முடிஞ்சு போச்சே...

முடிஞ்சு போச்சு. ஆனால் மூக்கை உடைச்சுண்டு அல்லவா வந்தீங்க..

நான் என் மூக்கை தொட்டுப்பார்த்தேன்.  இருக்கவேண்டிய இடத்தில் தான் இருந்தது.  அன்னிக்கு, லேசா தலைலே விழுந்த தட்டுலே கொஞ்ச நிலை குலைஞ்சு போனது வாஸ்தவம் தான். ஆனா,  அன்னிக்கே அத காம்பன்சேட் பண்ற மாதிரி ஒரு ப்ரைஸ் கிடைச்சதே அத மறக்கலாமா? மறக்கத்தான் முடியுமா என்று என்னை ஆசுவாசப்படுத்தினேன்.

அது கிடக்கட்டும். இன்னிக்கு என்னாச்சு ?  கண்ணோடு கண் இணைத்தாள் என் காரிகை.

ஒன்னும் பெரிசா இல்ல. ஒரு சிம் கார்டு வாங்கலாம் அப்படின்னு ரோடுக்குப்போனேனா ....

சரி.

அவன் உங்களுக்குத் தேவையான வோடாபோன் கார்டு தாரேன். என்று சொல்லும்போதே இடைமறித்தாள்.

அது என்ன ஓடா  போன் ? மத்ததெல்லாம் பி.எஸ்.என்.எல். , ஏர் டெல் எல்லாம் ஓடிப் போயிடுச்சா ?

அது பேருடி அந்த செல்லு கம்பெனிக்கி. விசயத்த கேளு.

சொல்லுங்க..

அங்கன போயி, ஒரு செல்லு புதுசா கொடு அப்படின்னா ரேசன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ் போர்ட்டு , பான் கார்டு எல்லாத்துக்கும் ஜெராக்ஸ் கொடுத்தேன். இருந்தாலும் ஒரு போடோ வேணும் அப்படின்னு சொன்னான்.

நியாயம் தானே...புத்சா எதேனும் வருதுனா, போட்டாவாச்சும் பாக்கணும் கொடுக்கணும் இல்லையா..?

சரிதான். எங்கட்ட இல்ல. கொண்டு போக மறந்துட்டேன். இதான் என்னோட செல் போன் போட்டோ லே இருந்துச்சு.  இத காம்பிச்சா ....

இன்னா பெரிசு, விளையாடுறியா ? அப்படின்னு சொல்றான்.

யோவ்..இது என் மூஞ்சி தான்யா...அந்த மைலாபூர் ஈ. என்.டி. லே மூக்கு ஒழுவறது அப்படின்னு சொன்னதுக்கு எக்ஸ் ரே எடுன்னு ரூபா 400 கொடுத்து எடுத்த போடோ அப்படின்னேன்.

அவன் சிரிக்கிறான். பெரிசு..நீங்க ரோடை கிராஸ் பண்ணினா ஒரு ஸ்டூடியோ இருக்கு. அங்கன பத்தே நிமிசத்திலே போடோ எடுத்து தந்துடுவாங்கா. ஒரு எட்டு காபி கிடைக்கும். எண்பது ரூபாய்லே . ஒன்னு கொண்டாங்க. அதுக்குள்ளே உங்க சிம்மை ரெடி பண்ணி வைக்கிறேன் என்றான்.

அப்பறம்..

நான் ரோடை  கிராஸ் பண்ணினேனா ...

அந்த லாமேக் ஸ்கூல் இடத்துலே ரோடை கிராஸ் செய்யாதீங்க அப்படின்னு எத்தனை தரம் உங்களுக்கு புத்தி சொல்றது ?

அது சரிதான். நானும் மூணு தரம் ஹிந்துவுக்கு லெட்டர்ஸ் டு த எடிடர் எழுதிட்டேன். இரண்டு தரம் போலிஸ் கமிஷனருக்கும் பேசிட்டேன். இன்னமும் ஒரு பெடஸ்ரியன் கிராசிங் போட மாட்டேன் அப்படிங்கராக..

இன்னாச்சு அதச் சொல்லுங்க...

இன்னிக்கு ரோடை கிராஸ் பண்ணும்போது கவனிச்சேன். ஒரு பெரிய துணி லே ஒரு நோட்டிஸ் எழுதி இருந்தது.

CHENNAI TRAFFIC POLICE. 

ZEEBROS CROSSING FOR PEDASTRIANS ONLY.

RESPECT PEDASTRIANS !!

STOP BEFORE STOP-LINE. 

ஆமா... எல்லா கிராசிங் லேயும் அத பார்த்தேன்.

நான் சும்மா பார்த்துட்டு போய் இருக்கலாம்.

அதான் எப்பவுமே கிடையாதே !!

அந்த பெடச்டிரியன் கிராசிங் எங்கேன்னு பார்க்கலாம் அப்படின்னு குனிஞ்சு அந்த ரோடு புல்லாவும் தேடினேன்..

அப்படியா...

அங்கன ஒரு போலீஸ் காரரு வேறு என்னைக் கேட்டாரு. " என்ன பெரிசு ! குனிஞ்சுகிட்டு எதைத் தேடற ! எதுனாச்சும் கெட்டு ப்போக்கிட்டியா ? " அப்படின்னு.  நான் விசயத்த சொன்ன உடனே...

ஒரே முறைப்புலே குச்சியை எடுத்துட்டாரு... ஊட்டுக்கு ஓடு பெரிசு..இல்ல எதுனாச்சும் வண்டிலே அடிபட்டே காலி ஆயிடுவே அப்படின்னு சத்தம் போட்டாரு.

நானும் சரி, நமக்கெத்துக்கு வம்பு, நம்ம என்ன டிராபிக் ராமசாமி ஆ, !! எப்ப அந்த நடைபாதை போடராங்களோ போடட்டும் அப்படின்னு, திரும்பினேன் பாரு.....

அதுக்குள்ளே ஒரு பையன் தன பைக் வந்து இடிச்சுட்டான்.

அப்பாடி...இன்னா வலி வலிக்குது...

அப்படியே மல்லாக்க படுத்துக்கங்க. வெந்நீர் ஒத்தடம் கொடுக்கறேன். அப்படியே அயோடெக்ஸ் தடவிக்கிட்டு படுங்க. என்கிறாள் கிழவி.



அதெல்லாம் இருக்கட்டும். இன்னிக்கு 48 ம்வருட  ஹாப்பி வெட்டிங் டே  இல்லையா.
இந்தா உனக்கு ஒரு ரோசாப்பூ..




வியாழன், 14 ஜனவரி, 2016

பச்சையா சொல்லட்டுமா ?

தமிழர் திருநாளாம் பொங்கல் இன்று .
தமிழ் உள்ளங்கள் கொண்ட அனைவரையும்
தமிழ்ப் பண்பு நிறைந்த அனைவரையும்
யாம் வாழ்த்தி மகிழ்வோம்.

இந்த நன்னாளில், எனது இதயத்தில் இணைந்தவரை
 என் மனக்கண் முன் நிறுத்தாது இருக்க இயலாது.

நான் இதுவரை இவரை நேரில் பார்த்ததில்லை. 

தாகம் கொண்டு
தவிக்கும் தமிழ்  நெஞ்சங்களுக்கு  இவர் 
தாமிரவரணி நீர். 

தன்னை ஒரு குயில் என்பார் இவர்.

"கவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்...."

என் எண்ண அலைகள் வரிசைகளில் அவற்றின் நீள அகலங்களில்   (wave length ) இவர் என்னுள் அல்லது மிக்க அருகில் இருக்கிறார். , அவருள் நானும் இருந்தால் அது நான் செய்த புண்ணியமே. . இவர் மரபுசாரா கவிதைகளில்  நான் உருகி உறைந்து போன நாட்களும் பல உண்டு.
+mohan gurumurthy

வானவில்லை தொட்டுப் பார்த்ததில்லை  யாரும். அதனால், வானவில்லை யாரும் தெரியாது என்று சொல்வார்களோ ! அது போலத்தான், இவரது வலைத் தளமும். இவரது உள்ளம் இவரது எழுத்துக்களிலே தெரிகிறது.

 இந்த வான வில்லார் தான் இப்புவியில் பிறந்து அறுபது ஆண்டுகள் முடிவடைந்ததை  இன்னும் சில நாட்களில் சென்னையில்  கொண்டாட இருக்கிறார். 

இந்தக் கிழவனுக்கும் ஒரு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார். அது இந்தக் கிழவனின் பாக்கியம். 

சுப்பு தாத்தா  இன்னும் ஏழு  ஜன்மங்கள்  ஏழு வண்ணங்களில்  எடுத்தாலும் வான வில்லார் போல  எழுத இயலுமோ ? ஊஹூம்.. இயலாது. 

வானவில் மனிதன் எனப் பெயர் கொண்ட இவர் வலைத்தளம் 
எனக்கு ஒரு தலம் . சிவஸ்தலம். 

 பல நேரங்களில் அத்தளம்  எனது அகக் கண்களைத் திறந்து இருக்கிறது என்றால் உண்மை.

நிற்க.



அண்மையிலே இவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமது சுற்றம், உற்றம் யாவருக்கும் சொல்லும் தருணத்தில், புத்தாண்டு உறுதிகள் என்றும் சொல்லி, அதில் மனப்பக்குவம் பற்றி எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதே சமயம் பல ஐயப்பாடுகளையும் கிளப்பி இருக்கிறார்.

அது என்ன ஆங்கிலப் புது வருட முதல் நாளன்று தான் உறுதிப்பாடுகள் எடுக்க வேண்டுமா என்ன?  தமிழ்த் திருநாள் பொங்கல் தமிழ் மக்களின் புத்தாண்டாகவும் பலரால் கொண்டாடப்படுகிறதே !! 

ஆக, நான் இந்த பொங்கல் திரு நாளன்று அதே உறுதிகள் அடங்கிய மனப்பக்குவத்தை அடையலாம் என்று நினைத்தேன். அந்த உறுதிகளை எடுத்துக்கொள்வோமே என நினைத்தேன்.

அதற்கு முன் அதை இன்னும் ஒரு முறை படித்து உள்வாங்கிக்கொள்வோம் என நினைத்தேன்.

பின்னே வருவது நீல நிறத்தில் அவர் கருத்து.
கருப்பில் இருப்பது எனது உரத்த சிந்தனைகள் அல்லது மன ஓட்டங்கள்.(loud thinking)


மனப்பக்குவம் என்பது....
1.. பிறரை மாற்றும் முயற்சிகளைக் கைவிட்டு, தன்னை
      சூழலுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்ள முயலுதல்....
.

   (  அந்த "பிறர்" குறித்த நமக்கு  கடமைகள் எதுவும் இல்லாத போது இவ்வாறு நினைப்பது சரியே எனத்தோன்றினாலும் , தன்னைச் சார்ந்த சமூகம் அல்லது உற்றம் தவறான பாதையில் செல்கிறது என்பதைப் புரிந்தும் அதைக்கண்டு கொள்ளாது இருத்தல் தகுமோ தகுமோ ? என்று ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது.

    இரண்டாவது, சூழலுக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொண்டால், நம்மை சந்தர்ப்பவாதி என்று சொல்ல இடம் தராதா ?

        ஒரு பேச்சுக்கு வேண்டுமானால், ஒரு நண்பர் வீட்டுக்குச் செல்கிறோம். அவர்கள் "நாங்கள் காபி, டீ அருந்துவது இல்லை. ஆகவே, உங்களுக்கு மோர் தருகிறோம் என்றால், சாப்பிடலாம். "

        அதற்கு மேலே.....    கடைப்பிடிப்பது சந்தேகம் தான்.

என்னைப் பொருத்தவரை.  
            நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் 
            மேற்சென்று இடித்து விடல் 

      நான் இடிக்க மட்டும் இல்லை. சில சமயம் என்னையே அறியாமல், கடித்தும் விடுகிறேன். 
2.  பிறரை அவர்கள் உள்ளபடியே ஏற்றுக் கொள்ளுதல்.....

    ஏற்றுக்கொள்ளுதல் முடியாவிடினும், பொறுத்துக்கொள்ளுதல் முடியும் என நினைக்கிறேன். வாள் கொண்டு தாக்கவேண்டும் என்று சூழ்நிலை சொல்லினும் வாளா இருப்பது கடினம் தான். முயன்று பார்க்கவேண்டும்.

3.
அவரவர் நோக்கில் அவரவர் சரியே எனும் நிதர்சனத்தை புரிந்து

  கொள்ளுதல்......
 
       "இன்னாயா இந்த தண்ணி போடுறியே, உடம்புக்கு ஒத்துக்காதையா..லீவர் டாமேஜ் ஆகிடும்." என்றேன் என்னோடு வேலை செய்பவர் ஒருவரிடம் (ஒரு 30 வருடத்துக்கு முன்பு. ) 

"நீ என்னாத்தே சொல்றே !! உனக்கு என் மாதிரி ஒரு வைப் இருந்தா இது மாதிரி சொல்வியா? என்று எதிர்க்கேள்வி போட்டார் அவர்.

" இன்னாயா அவ செஞ்சா இப்படி நீ குடிலேயே பாதி சம்பளத்தை செல்வளிக்கிறே ? "

என்றதற்கு, ஒரு போடு போட்டார்:  

"சீட்டாடினா, வீட்டுக்கு வராதே அப்படின்னு சொல்லிட்டாடா அப்பவும் சரி பாதி சம்பளம் சீட்டிலே சிலவாயிட்டு தான் இருந்துச்சு." 

 என்று அழுதார். 

       அவரவர் நோக்கில் அவரவர் சரிதான் எனும் நிதர்சனம் எனக்கு அன்னிக்கே புரிஞ்சு போச்சு.  
 
4.
நிகழ்ந்ததை அதன் போக்கில்விட கற்றுக் கொள்ளுதல்....


        சில சந்தர்ப்பங்களில் வேறு வழியே இல்லை என்பது உண்மை தான். நாம்  விரும்புகிறோமோ இல்லையோ, சில விஷயங்கள் go to their logical end, whatever we feel notwithstanding. அவிஸ் விஸ்வநாதன் அவர்கள் வலைத் தளம் இது பற்றி அலை அலையாக அளித்திடும் அறிவுரைகள் இன்னமும் இந்த வயதிலும் நான் படிக்கவேண்டும்.  தொடர்ந்து.

 5 .உறவுகளில் எதிர்பார்ப்புகளை ஒதுக்கி, நாம் அளிப்பதை 
   அளித்தல் தரும் ஆனந்தத்துக்காகவே அளித்தல்.....

 
   சூப்பர் சஜஷன் இது. நமக்கு எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாது. Unconditional Love is the spring board of all happiness . வாஸ்தவம். அதே சமயம், அதற்காக, நமது உறவினருக்கு எதிர்பார்ப்புகள் இருந்தால், நாம் தரும் எதுவும் அவர்களுக்கு ஆனந்தமோ திருப்தியோ ஏற்படாது என்பதும் வாஸ்தவம் தானே. 
       
     

6. நாம் எதைச் செய்தாலும் அதை நம் திருப்திக்காகவே செய்தல்....
 
    செய்தாலும் அல்லது செய்யாது இருந்தாலும் என்று சொன்னாலும் இது சரி என்றே தோன்றுகிறது .   svaanthas sukaaya எனும் இந்த கன்செப்ட் பற்றி பன்முறை நான் எண்ணியது தான். சொன்னது தான்.  இதை அடைய ஆனால் ஒரு nobility or magnanimity தேவை.  துளசிதாசர் ராமசரித மானஸ் எழுதியபோது , எல்லோரும் கேட்டார்களாம்: ஏற்கனவே, வால்மீகி ஒரு 24000 க்கு மேலே ஸ்லோகங்கள் இருக்கும் காவியம் இருக்கிறதே. இன்னுமொரு காவியம் எதற்கு என்ற பொழுது, அவர் சொன்னாராம்:  இது எனது திருப்திக்காக, ஆத்ம திருப்திக்காக செய்கிறேன் என்றாராம்.  Detatchment from the result and equally attachment to the process that leads to the result is what is needed. ஹூம்... முடியுமா தெரியல்ல..

 7. நாம் எவ்வளவு திறமையானவர்கள் என்று உலகத்திற்கு நிறுவ

  முயல்வதை விடுத்தல்....
   இது ரொம்ப ப்ராக்டிகல் தான். ஆனால் , செய்வன திருந்தச் செய் என்று சொல்லித்தான் கேள்விப்பட்டு இருக்கிறேன். பல நேரங்களில், திருப்பிச் செய் என்று பல முறை சொல்லப்பட்டும் இருக்கிறேன். இருக்கட்டும். ஆனால், 6ம் எண் விதியில் இது அடங்கிப்போய் விடுமே !!
 
8.
பிறரோடு நம்மை எப்போதும் ஒப்பீடு செய்யும் வீண்செயலை

  நிறுத்தல்....
   நிறுத்தினாலும் நிறுத்தாவிட்டாலும்  இந்த உலகத்திலே ஒவ்வொருவருமே யுனீக் . ஒரு மரத்திலே லட்சக்கணக்கான இலைகள் பார்ப்பதற்கு ஒன்று போல தோற்றமளித்தாலும், எந்த ஒரு இலையும் இன்னொரு எந்த ஒரு இலையின் பரிதி அல்லது பரப்பளவுடன்   ஒன்று படாது. They look alike, albeit never congruent. அது போல் தான் மனிதராகிய நாமும்.   ஒப்பிட்டு பார்த்து என்ன செய்யப்போறோம் ? எது முடியும் ? எது முடியாது ? எதை மாற்ற இயலும் ? எதை நம்மால் மாற்ற இயலாது ? இந்த இரண்டுக்குள் என்ன வித்தியாசம் கீது ? இதை புரிஞ்சுகிட்டாலே போதும்.  கலாம் சார் படிச்ச காலேஜ் லே தான் நான் படிச்சேன். அவரு படிச்ச சப்ஜெக்ட் தான் நானும் படிச்சேன். அதுக்காவ், நான் என்னை கலாம் சாரோடு  ஒப்பிட முடியுமா? அவருக்கு சலாம் போடக்கூட எனக்குத் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை.
வொண்டர்புல். ஸோ நோ கம்பாரிசன் . 
நம்ம நாமாகவே இருப்போம்.  Be yourself. 
And that is fine. 
 
9.
நம் தனிமையான கணங்களில் நம்முடனே நாம் அமைதியாய்

  இருக்க முற்படுதல்.....

      நூற்றுக்கு நூறு செயல்படுத்த முடியும்.

 ( கிழவி  காலைலேந்து காபி தண்ணி குடிக்கலையே..!! என்னனு பார்க்கணும்.  )



    To be peace with oneself is the Greatest Gift of God. It is time we understand the underlying Truth in this Statement. 
 
10.
நம் சந்தோஷத்தை பொருட்களுடன்பொருத்திக்

  கொள்ளுவதை அறவே நீக்குதல் ...

     சந்தோஷத்திற்கும் பொருட்களுக்கும் இடையே உள்ளது அட்டாச்மென்ட் .
நான் வேறு, இந்தப் பொருள் வேறு என்ற பாவம் வருமா ?? !!! சந்தேகம் தான். இதுலே என்ன கஷ்டம் என்பவர்க்கு ஒரு டெஸ்ட். உங்கள் பெயர் என்ன? என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பதில் வரும்.  அந்தப் பெயர் உங்கள் உடலுக்கா, உடலில் உள்ள உயிருக்கா? என்று கேளுங்கள். இது என்ன அபத்தமான கேள்வி என்று கேட்கக் கூடாது. உண்மையிலே இது ஒரு ஆபத்தான கேள்வி.  நமது உயிர் போன பின், நமது உடல் எரிக்கப்படுகிறது அல்லது புதைக்கப்படுகிறது. இல்லையா. !! உடல் அழிந்தபின்பும் நாம் உலகத்தாரால் அறியப்படுகிறோம். அந்த வகையில் நாம் தொடர்ந்து இருக்கிறோம். அப்படி அந்த நிலையில் நாம் இருக்கும் சாத்தியம் தெரியும் போது , அதாவது உடல் உணர்வு நீங்கிய நிலையில் இருக்க இயலும் என உளமார உணர்ந்து,  மரிக்க இருக்கும்  இந்த உடலுக்கு சந்தோஷத்தைத் தரும் பொருட்களை நாம் தவிர்க்க இயலும். அதுவும் சாத்தியம் என்று தான் தோன்றுகிறது. 

இது என்ன பெரிய விஷயம் என்பவர்க்கு, 
காலைலே காபி சாப்பிடுவதை இன்னிலேந்து வேண்டாம் என்று முடிவு எடுங்கள் பார்ப்போம்.


 
11.
தேவைக்கும் நம் விருப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை
   உணர்ந்து விருப்பங்களின் மேல் பற்றை ஒழித்தல்.,

      சைகாலஜி லே இது அடிப்படைலே இரண்டாவது அத்தியாயப் பாடம். Basic Difference Between Need and Want.  ஒரு நாள் என் வகுப்பிலே ஏகப்பட்ட உதாரணம். சொன்னேன்.  ஊஹூம். ஆடியன்ஸ் மூஞ்சி சொல்லிச்சு. ஒண்ணும் புரியல்லையே..!!

. இன்னாதான்யா சொல்றே அப்படின்னு ஒத்தர் எழுந்து நின்னு கேட்கறாரு. 

பச்சையா சொல்லட்டுமா என்றேன்.

 பச்சை, சிவப்பு, ஊதா,மஞ்சள்  , நீலம் எந்தக் கலர் வேணுமானாலும் சொல்லுங்க என்றார். 
.
     சொன்னேன். 

     அடே ..  ஆமாம் சார். என்றார். 

     உங்களுக்குத் தெரியணுமா.  எனக்கு செல் அடிங்க. சொல்றேன்.


*********************************************************************************
                                           
      இந்த 
பொங்கல் தினத்தன்று நான்  எடுக்கப்போகும் ,
      இந்த பதினொன்று உறுதிப்பாடுகளில்  அஞ்சு ஆறுன்னாச்சும் அடுத்த பொங்கல் வரை தேறுமோ ?? தெரியவில்லை. 
   
    இந்த உறுதிப்பாடுகளை ஈந்த வள்ளல் 

வானவில்லாரை யாம் வாழ்த்துவோம்.
வாழ்வுக்கு ஒரு பொருள் தேடுவோம்.



பொங்கும் பால்  எங்கும் மங்களம் தருக.
என வாழ்த்தி மகிழ்வோம்.