சனி, 9 ஜூன், 2018

அப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு ?

அப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு ? இத்தனை அலுத்துக்கிறீக...என்று கேட்ட என்னை முறைத்துப் பார்த்தார்
நண்பர்.
இன்று மாலை பார்க்கில்.
என்ன சொல்லப்போகிறாரோ ? என்று திகைத்து இருந்தேன்.
"ஒரு கழுதை வயசு என்ன இருக்கும்?"
எங்க அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.
சாதாரணமா 12 1முதல் 15 வயசு இருக்கும் ...தயங்கிச் சொன்ன, என்னை ஒரு
அப்ப்ரூவல் செய்தமாதிரி முகத்தை வைத்துக்கொண்டு,
அப்படிப்பார்த்தால் 15 அஞ்சால் பெருக்கினால் 75 வர்றது. ஒன்னு கூட்டிக்கங்க.
76 வரது என்றேன்.old indian donkey க்கான பட முடிவு


இந்த அஞ்சு கழுதை வயசுக்கு என்ன ஹாப்பி பர்த் டே வேண்டி இருக்கு ? " படபடத்தார்.
நியாயம் தான். என்றேன்.
வருஷம் முழுக்க குறைச்சல் இல்ல, hurting, harassing, humiliating
அப்பறம் என்ன ஹாப்பி பர்த் டே ? கடுகடுத்தார். . அந்தப் பெரியவர்.


बालस्तावत्क्रीडासक्तः
तरुणस्तावत्तरुणीसक्तः ।
वृद्धस्तावच्चिन्तासक्तः
परमे ब्रह्मणि कोऽपि न सक्तः ॥ ७॥

வியாழன், 6 அக்டோபர், 2016

குருசாமி

                                                                            1


என்ன விஷயம் ! கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா பேசிக்கிண்டு இருக்கீங்க.. யாரோட..."

என்று நான் செல்லில் பேசிக்கொண்டே இருப்பதற்கு  144 போட்டாள் என் மனைவி.

சற்றே பொறு. என்று சைகை காட்டி விட்டு, நண்பருடன் பேச்சைத் தொடர்ந்தேன். எனது தஞ்சை நண்பர். இன்றல்ல, நேற்றல்ல, ஒரு அம்பது வருஷங்களுக்கும் மேலாக, ... எப்பவாவது ஒரு தரம் தான் பேசுவோம். இன்று அவராக பேசுகிறார். சென்னைக்கு வந்து இருக்கிறாராம்.

எல்லாம் பேசி முடித்தபின்னே,

"சரி. போயிட்டு வாங்க.. பத்திரமா திரும்பி வந்து எனக்கு போன் போட்டு சொல்லுங்க.. அப்படியே ஐயப்பன் சாமி பிரசாதம் எனக்கு அனுப்பி வையுங்க.." என்றேன்.. 

"கண்டிப்பா...உனக்கில்லாமையா ..! "

என்று சொல்லி அந்த குருசாமி நண்பர் செல் பேச்சை முடித்தார்.

யாருங்க..என்று திரும்ப தொடர்ந்தாள் தர்ம பத்னி.

என் பிரண்ட் கே.ஜி.கே. தெரியும் இல்லையா உனக்கு ?

"ஆமாம்.   வருசா வருஷம் ராதா கல்யாண நிகழ்ச்சி லே பிரமாதமா பாடுவாரே ...."

"அவரேதான்."

"இந்த வயசுலேயும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வருசா வருஷம் பால் குடம் எடுத்துண்டு பக்தர்களோட 12 கிலோ நடக்கிறாரே ...?'

"அவரேதான்..."

"எனக்குத் தெரிஞ்சு, 1970 லெந்து அவர் சபரி மலைக்கு மாலை போட்டுண்டு போறாரே ..."



"அவரேதான்..அவரேதான்...இப்ப அவர் குருசாமி ஆகியே 20 வருஷம் ஆகியிருக்கும் . இந்த வருசமும் அடுத்த வாரம் இருமுடி கட்டிண்டு கிளம்புகிறாராம்.

" ரிடையர் ஆகி கிட்டத்தட்ட 20 வருஷம் ஆகி இருக்குமே "

"ஆமா ...97 லே ரிடையர் ஆனார் . இப்ப 79 இல்லேன்னா 80 கூட ஆகியிருக்கும். "

"பின்னே எப்படி . எரிமலை லெந்து நடந்து போவேண்டாமோ ?'

"போறாரே ! அதான் அவரோட வில் பவர். "

எல்லாம் அந்த அய்யப்ப சாமி கொடுக்கிறது.."
"

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ..." அப்படின்னு தேவாரம் சொல்றதில்லையா ?" என்று எனது சமய இலக்கிய அறிவை சுட்டிக்காட்டு முன்னே...

"போதும். போதும். உங்க பெருமை எல்லாம் எங்க கிட்டே காட்ட வேண்டாம்.  இலை போட்டு நேரமாகி விட்டது. சாப்பிட்டு விட்டு..."

எதற்கு இழுக்கிறாள் என்று தெரியும்.  சாயந்திரம்  POTHYS  க்கு பக்கத்திலே போகணும் என்று சொல்லி இருக்கிறாள்.

கை கழுத்தில் இருக்கும் பவள மாலையை சுட்டி காட்டுகிறது.

பவளம் முத்து எல்லாம் அந்த மாலை லே நாளாவட்டத்தில் தேஞ்சு போயிடுத்தாம்.  புதுசா போட்டுண்டா அம்சமா இருக்குமே அப்படின்னு  கீழ் பிளோர் மாமி சொல்றாள் என்று கிசு கிசுத்தது நினைவுக்கு வந்தது.

*******************************************************************************
                                                                     2
செல் வைப்ரேட்டர் சத்தம் கேட்க, எடுத்துப் பார்த்தேன்.

ஆஹா.. எனது நண்பர் வானவில்லார் ன் மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.

என்ன வென்று பார்த்தேன்:

"எதோ இவரது ஒரு புத்தகம் அச்சில் இருந்து வெளி வருகிறதாம். முதல் பிரதி முக்கியமாக சிலருக்கு அனுப்ப வேண்டும் என்று இருக்கிறேன்.  உங்கள் விலாசத்தை எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று இருந்தது.

"நான் எழுதிய பதிவை,  நானும் பார்க்கிறேன். பத்து நாள் ஆகி விட்டது. அத்தனை பேர் படித்து கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இவர் மட்டும் படிக்கவில்லை கமெண்ட் போடவில்லை. என்ன நியாயம் ? "

  என்று மைண்ட் வாய்ஸ் சொல்ல,
நானும் அவருக்கு ஒரு பதில் மெசேஜ் அனுப்பினேன்.

"நீங்கள் என் பதிவுக்கு கமெண்ட் போடுங்கள். நான் உங்களுக்கு
விலாசம் அனுப்புகிறேன். " என்று மெசேஜிட்டேன்.  எனது நண்பர் எனது மெசேஜை ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்துக்கொள்வார் என்று  நூற்றுக்கு நூறு நிச்சயம் என தெரிந்துதான் . அட் லிஸ்ட் பொருட்படுத்த மாட்டார்.  இது சுப்பு தாத்தாவின் கோமாளித்தனம் என்று நினைத்துக் கொள்வார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
                                                                        3
இரண்டு நிகழ்ச்சிகளும் கடந்து போன வை என்று தான் சொல்ல வேண்டும். நான் மறந்தே போய் விட்டேன்.

 சென்ற 18ம் தேதி வரை.

மதியம்  ஒரு மணி. லன்ச் முடிந்து விட்டது.  வேலை எதுவும் இல்லை.
கொஞ்சம் அசதி யாக இருந்ததால் படுத்தேன். கண் அசத்தியது..தூக்கம் வருவதற்கான யுக்தி ஆக,
கைகளில் கிடைத்த அந்த ஹிந்து  பேப்பரைப் பிரித்தேன்.
பேப்பர் கைகளில் விரிந்தபோது !!
கண்களில் முதலில் பட்டது அந்த பெயரும் படமும் தான்.

OBITUARY 
என்ற தலைப்பின் கீழே 
எனது அருமை நண்பர் திரு கே.ஜி. கே என்று அழைக்கப்படும் 
திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் மலைக்குச் செல்லும்போது எடுத்த புகைப்படமும் 
அவர் மறைந்த செய்தியும் அவரது குடும்பத்தார் இரங்கல் 


திடுக்கிட்டு போனேன்.
என்ன ?  எப்படி ?
மலைக்கு போனவர் அல்லவா?

சம்பிரதாயமாக தஞ்சை அவர் வீட்டுக்கு லேண்ட் லைன் ல் கூப்பிட்டேன். யாரும் எடுக்கவில்லை. செல் யாரிடம் இருக்கும் ?
கூப்பிடுவோம் என்று செல் போட்டேன்.
அந்தப் பக்கம் எடுத்தது அவரது மகன் என்று தெரிந்தது.

என்னை நன்காகவே அடையாளம் கொண்டார். எனது அப்பாவின் நண்பர் அல்லவா நீங்கள் ! என்று சொல்லி நடந்த துக்க செய்தியை தெரிவித்தார்.

நன்றாக இருந்தவர் !! எப்படி ?
நான் கேட்டு முடியுமுன் அவர்  விம்மும்  சத்தம் என் மனதை அழுத்தியது. கண்களை நிறைத்தது.
மேற்கொண்டு விவரம் கேட்கும் நிலையில் அந்தப் பக்கம் இருந்தவர் இல்லை எனப் புரிந்தேன்.

காட் ப்ளஸ் யூ ஆல் என்று சொல்லி முடித்தேன்.

என்ன தான் இருந்தாலும் எப்படி இருந்திருப்பார் ? நல்ல திடகாத்திரமாகத் தானே இருந்தார் இந்த வயதிலும் ? என்று மனம் எண்ணிக்கொண்டே இருந்தது.

தஞ்சைக்கு வந்தபோது அவர் தான் எனது அறை நண்பர். துணிகளை மடித்து எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் , பல் தேய்த்த பின்பு, பேஸ்டை எப்படி மூடி வைக்கவேண்டும், என்பதில் இருந்து, நாங்கள் அந்தக் காலத்தில் படித்துக்கொண்டு இருந்த ப்ரோபாஷனல் பரீட்சைக்கு நேரத்திற்கு காலம் தப்பாமல் படிக்கச் சொல்லிக்கொடுத்தவர் அவர் தான். சிறந்த டென்னிஸ், காரம் போர்டு பிளேயர்.  வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் ஒரு ஒழுங்கினைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற ஒரு பாடம் அவரிடம் நான் கற்ற ஒன்றாகும். 

மதியத்திற்குப் பிறகு எனது ஆத்மார்த்த நண்பர் தஞ்சையைச் சேர்ந்த திருவேங்கடசாமி அவர்களுக்கு செல் அடித்தேன். என்ன விஷயம் என்பதற்குள் அவரே

நம்ம கேஜிகே இல்லைப்பா .. என்று ஆரம்பித்தார்.

தமது பக்தர் குழாத்துடன் எரிமலை யில் நடக்கும்போது திடீர் என்று உட்கார்ந்து விட்டாராம்.  என்னவோ செய்கிறது. என்னவென்று புரியவில்லை என்றாராம்.
ayyappa deotees from erimala to pampa க்கான பட முடிவு
From Erimala to Pampa Trekking



நண்பர்களும் அவருக்கு நீர் , மோர் கொடுத்து சில நிமிடங்கள் ஒய்வு எடுத்துக் கொள்ளச் சொன்னார்களாம்.

சில நிமிடங்களுக்குப் பின் , அவரே,  எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லி எழுந்து திரும்பவும் நடக்கத் துவங்கினாராம்.

ஒரு சில வினாடிகளில் அவர் உடல் தொய்ய கீழே விழ , கூட வந்த பக்தர்கள் அவரை தூக்கிக்கொண்டு பக்கத்திலேயே இருந்த சபரிமலை தேவஸ்தானம் நடத்தும் மருத்துவ விடுதி  சென்று இருக்கிறார்கள்.

அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , அவர் இறந்து போய் விட்டார் என்று சொல்லி BROUGHT DEAD என்று சொல்லி விட்டார்கள்.

எப்படி ஒரு இறப்பு !! என்று வியக்காமல் இருக்க இயலவில்லை.

சாஸ்தாவை வணங்கச் சென்றவரை சாஸ்தாவே வந்து அழைத்துக்கொண்டு போன கதை.

மனம் பலவிதமாக யோசித்தது.

அநாயாசேன மரணம்

 என்பார்கள். எந்த ஒரு வலியும் இல்லாத ஒரு இறப்பு ! கொடுத்து வைத்தவர் !



த்ரியம் பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்
உருவாரகம் இவ பந்தனாத் முக்ஷ்யோ முக்தி இவ மாம்ருதாத்.

என்று சொல்வது திரியம்பக மந்திரம்.

உயிர் உடலை விட்டு பிரியும்போது விளாம்பழ ஓடு பழத்தைவிட்டு பிரியும் வகையில், முழுமையாக, சட் என்று விலக வேண்டும் என்று அந்த திரியம்பகனான சிவபெருமானை வணங்கித் துதிக்கும் வரம் வேண்டிடும் ருத்ரத்தில் வரும் பதிகம்.

எப்படி எல்லாமோ மனம் அவரை மறுபடி மறுபடி அவர் வாழ்ந்த இறை வாழ்வினை நினைந்து கொண்டு இருந்தது.


கண் அசந்து விட்டேன்.

****************************************************************************
                                                                      4
காலிங் பெல் அடித்தது.

எழுந்து போய் கதவைத் திறந்தேன்.

கூரியர் ஒரு பார்சலை நீட்டினார்.

கையெழுத்து போட்டு சரிபார்த்த பின் தந்தார்.

யார் அனுப்பியது ? என்ன புத்தகம் !!

ஆஹா !

நமது நண்பர் மோகன்ஜி அல்லவா அனுப்பியிருக்கிறார் !!

அவர் அனுப்பிய மெசேஜ் நினைவுக்கு வந்தது.
எப்படியோ என் விலாசம் தெரிந்து கொண்டு அனுப்பியிருக்கிறார்.

மனசார அவருக்கு ஒரு நன்றி தெரிவித்தேன்.

என்ன புத்தகமாக இருக்கும் ?

பிரித்துப் பார்த்தேன்.

தொகுத்தவர் பெயர் : 
மோகன்ஜி குருசாமி. 

புத்தக தலைப்பு. 

சாஸ்தா கானாம்ருதம். 

புத்தகத்தில் சில பாடல்களைப்  படித்தேன். 
சில பாடல்களை பாடினேன். 

மற்றும் சில பாடல்களின் வரிகளில் 
லயித்தேன். 

அந்த சாஸ்தாவே வந்தது போல் இருந்தது 





கே.ஜி.கே சொல்லிய வார்த்தைகள் நினைவுக்கு வருவதை சொல்லாமல் இருக்க முடியாது.




"சரி. போயிட்டு வாங்க.. பத்திரமா திரும்பி வந்து எனக்கு போன் போட்டு சொல்லுங்க.. அப்படியே ஐயப்பன் சாமி பிரசாதம் எனக்கு அனுப்பி வையுங்க.." என்றேன்.. 

"கண்டிப்பா...உனக்கில்லாமையா ..! "


அந்த குருசாமி  சொன்னாரா ! 
சொல்ல 
இந்த குருசாமி செஞ்சாரா !!


சாமியே சரணம் ஐயப்பா 

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஆனந்த சயனம்



subbu thathavukku
சுப்பு தாத்தா வுக்கு அதான் எனக்கு,
காலைலேந்து பொழுது போகவில்லை. ஷேர் மார்க்கெட் மேலும் கீழுமாக போய்க்கொண்டு இருந்தது.அதில் புகுந்து எதுவும் வாங்கி இல்லேன்னா வித்துப்புட்டு இன்னாடா இப்படி செஞ்சுட்டோம் அப்படின்னு வருத்தப்பட்டு பிரயோசனம் இல்லை. அதனால் அதை மூடி வெச்சேன்.

வலைப் பதிவாளர்கள் பதிவெல்லாம் கிருஷ்ணர் சர்வ வ்யாபியாக இருந்தார். பரிவை குமார் அவர்களோ உருகி உருகி போகிறார்.
கிருஷ்ணன்...கோபாலன்...கோபால கிருஷ்ணன்...கண்ணன்...மாயக்கண்ணன்...

 சிலர் ஜென்மாஷ்டமி அப்படின்னு சொல்லனுமா கோகுலாஷ்டமி அப்படின்னு சொல்லவா? எது ஸ்ரேஷ்டம் அப்படின்னு ஆராய்ச்சி  !

கீதா மேடம் வழக்கம் போல சீடை முறுக்கு தேன்குழல் இத்யாதி இத்யாதி.
என்னவோ அதை பண்றேன் இதை பண்றேன் அப்படின்னு வ்யாக்யானம். சொல்றாங்களே தவிர, இன்னாடா ஒரு ஏழை வயசான தம்பதி இருக்காங்களே ! அவங்களுக்கு இரண்டு முறுக்கு பார்சல் பண்ணுவாங்களா அப்படின்னு எதிர்ப்பார்த்து காலும் மனசும் நொந்து போனது தான் மிச்சம்.

வாசுதேவன் சார் பூணூல் போடும்போது, பயத்தங்காய் முடிச்சு எப்படி போடணும் அப்படின்னு விலா வாரியா வித் ட்ராயிங்ஸ் அதைப் பார்த்தப்புறம் தான், நினைவு வந்தது.

அடடா இன்னிக்கு கோகுலாஷ்டமி, ஒரு பாயசமாவது வைக்கணும் நெய்வேத்தியம் பண்ணனும். அடடா, பாசிப்பருப்பு வாங்க மறந்து போறோமே அப்படின்னு நினைப்பு வந்து, துண்டை உதறி தோள் லே போட்டுண்டு கிளம்பினேன்.

மெயின் ரோடு கிராஸ் செய்து தபால் அலுவலகம் பக்கத்தில் இருக்கிற மளிகை கடை லே சகலமும் மலிவா கிடைக்கும் அப்படின்னு மூளை லே உதிச்சது . இருந்தாலும் அந்த இடத்தில் ரோடை கிராஸ் செய்வது என்பது என்னைப்போல கிழங்களுக்கு முடியவே முடியாது. இருந்த சிக்னல் ஐயும் பிடுங்கி போட்டு விட்டார்கள்.

லாமேக் பள்ளி மாணவர்கள் மாலை  நேரத்துலே எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்று இரண்டு தடவை ஹிந்து பேப்பர்லே வாசகர் கடிதத்துலே எழுதியும் ஒன்னும் நடக்க வில்லை.  அந்த சாலை காலையிலும் மாலையிலும் ஜஸ்ட் கேயாஸ் என்று இங்கிலீஸ் லே சொல்றோமே அதுக்கு தமிழிலே என்ன சரியான வார்த்தை , ஜீவி சார் கிட்ட கேட்டால் சொல்வார், அது மாதிரி ஒரு சிச்சுவேஷன்.

ஒரு வழியா ரோடை க்ராஸ் செய்து அந்தப்பக்கம் போனபோது மிகவும் சோர்ந்து போய்விட்டேன். எங்கேயாவது இரண்டு நிமிஷம் உட்கார்ந்தால் தேவலாம் என்று பட்டது.  பக்கத்தில் ஊட்டி வெஜிடபிள்ஸ், கங்கா சுவீட்ஸ் கடை கண்ணில் பட்டது. நல்ல காபி கிடைக்கும். காபி சாப்பிடற நேரத்துலே கொஞ்சம் இளைப்பாறலாம் என்று நினைப்பு வர உள்ளே புகுந்தேன்.

அது ஒரு பிரி பைட் (pre-paid) ரெஸ்டாரண்ட். காபி மட்டும் குடிக்கலாம் என்று உள்ளே நுழைந்தவனுக்கு , நுழைந்த உடன் நாக்கு சபலம். ஒரு பாவ் பாஜ் கூட சாப்பிடலாம் என்று நினைத்து அதற்கான பில்லையும் வாங்கிக்கொண்டு ஒரு சீட்டுக்கு சென்றேன்.  அடுத்த 30 நிமிடம் ஏ.சி .லே உட்கார்ந்து இருக்கலாம்.
.
எதிரே என்னை விட இளையவராகத் தென்பட்ட ஒருவர் (64 முதல் 66 இருக்கலாம் எனக் கணித்தேன்.) வெகு சுவாரசியமாக ரவா கீ ரோஸ்ட் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். உருளைக்கிழங்கு மசாலா, தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி, சாம்பார் சைட் டிஷ்


பார்க்கும்போதே மூளையில் எச்சில் சுரந்தது. இதெல்லாம் நமக்கு சரிப்படாது, பாவ் பாஜே அதிகம் என்று வலது பக்க மூளையை இடப்பக்கத்து அறிவுப்பிரதேசத்தால் ஒரு குட்டு குட்டிக்கொண்டேன். குட்டினபோது தான், பார்த்தேன்.

சர்வர் இரண்டு பிளேட் கொண்டு வந்திருந்தார். என் முன்னே ஒரு பிளேட் சோழா பூரியை வைத்தார். அவர் முன்னே ஒன்று.

நான் கேட்கவில்லையே என்று என் வாய்  சொன்னது. கேட்காதது உன் குற்றம் என்று நாக்கு சொன்னது.

"அதுவும்  நான்தான்  கேட்டேன்" என்றார் எதிரில் இருந்தவர். என்னால் நம்ப முடியவில்லை. பார்ப்பதை நம்ப முடியவில்லை. இந்த வயதில் ஒரு 3 அடி நெய் ரவா வெங்காய மசாலா தோசை க்குப்பின் ஒரு சோழா பூரி அதுவும் இரண்டா !!

திகைத்துப்போய் நான் பார்த்தபோது இரண்டு பிளேட்டையும் அவர் தன்  முன்னே லாகவமாக நகர்த்திக் கொண்டார்.




"கொஞ்சம் வைட் பண்ணுங்க சார். பாவ் பாஜ 2 ஏ நிமிஷம் வந்துவிடும் !!"
என்றா ர் சர்வர்.  "மெதுவா வரட்டும். நோ அர்ஜன்சி" என்றேன். சுகமான ஏ சி. இன்னும் அரை மணி நேரம் கூட இருக்கலாம் .

எதிர்ப்பக்கம் கண் சென்றது. ஒரு இரண்டு பேர் உட்காரும் இடத்தை அவரே கஷ்டப்பட்டு ஆக்ரமித்துக்கொண்டு இருந்தார். ஒரு சேரிலா இத்தனை பெரிய உடம்பு உட்காரும் என்ற சந்தேகம் மனதில் தோன்றியதை அவரிடம்
கேட்கவில்லை. தர்ம அடி வாங்கும் வயது இல்லை.

அவரது பிளேட்டுகளுக்குப்  பக்கத்தில் ஒரு பெரிய பை . அப்பாலோ பாரமசி என்று போட்டு இருந்தது.  அதில் இருக்கும் மருந்துகள் என்னவாக இருக்கும் என்று மனசுக்குள் ஒரு ஆராய்சசி செய்தேன் . அவர் உடம்பைப் பார்த்தேன். மருந்தைப் பார்த்தேன். சரியான முடிவுக்கு வர முடியவில்லை. டயாபடீஸ், ருமாட்டிசம், ஹார்ட் எதற்கான மருந்துகளாகவும் இருக்கலாம்.

அவரிடம் ஏதாவது பேச்சுக்கொடுப்போமா என்ற நினைப்பு வந்தபோது எனக்கான பாவ் பாஜ் வந்தது.  ஒரு ஸ்பூன். இரண்டு பன் பீஸ். பாவ் பாஜ . ஒரு கால் எலுமிச்ச பழம். வெங்காயம் நறுக்கினது .

"என்ன ஸ்னாக்ஸ் இது போதுமா ?" என்றார் அவர் என் ப்லேட்டைப் பார்த்து.
சோழா பூரி முதல் பிளேட்டை முடிக்கும் தருவாயில்.

"இது ஸ்னேக்ஸ் இல்லை. இதை சாப்பிட்டு விட்டேன் என்றால், இன்னிக்கு அவ்வளவு தான், நோ டின்னர் ! " என்றேன்.

"வெரி சாரி டு ஹியர். " என்றார்.

"நீங்கள் ஏன் எதற்கு சாரி சொல்கிறீர்கள் ?" என்று வெகுளியாக கேட்டேன்.

"மனுஷ்யன் என்று ஏன் பெயர் தெரியமோ ?" என்றார்.

"தெரியாது."

"மனஸ் ஸு வைத்து சாப்பிடுவதால் மனுஷ்யன். மற்ற ஜீவ ராசிகள் எல்லாம்  கிடைப்பதை  சாப்பிடும். நம்ம மநுஷ்யர்கள் தான் யுனிக்.. வீ சூஸ் அண்ட் யீட் . "

"அபாரமாக இருக்கிறது உங்க எக்ஸ்ப்ளனேஷன் " என்று என் பாராட்டுதலைத் தெரிவிக்கும்போதே அவர் இடைமறித்தார்.

"இத்தனைக்கும் இந்த டாக்டர்ஸ் இருக்காங்களே அவங்க இத சாப்பிடு அத சாப்பிடு , இதை சாப்பிடாதே, அதை குடிக்காதே அப்படின்னு சொல்றாங்க.முடியற காரியமா அது ?"

"ஏன் , உங்க உடம்புக்கு என்ன ? நல்லாத்தானே இருக்கீங்க..நல்லாத்தானே சாப்பிடறீங்க..!!"

"டாக்டர்ஸ் இதைச் சாப்பிடாதே அதைச் சாப்பிடாதே அப்படின்னு சொன்னாகூட பரவா யில்ல . நோ ஸ்மோக்கிங் . அப்படின்னு சொன்னா எப்படி ?

"ஏன் சொல்றாங்க.."?

"அதான் எனக்கும் புரியல. நான் ஒரு அம்பத்தி ஒன்பது வருசமா, .....கரெக்ட்...
எட்டு வயசா இருக்கும்போதே சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன். "

"ம்....."

"ஆரம்பத்திலே ஒன்னு இரண்டு ன்னு ஆரம்பிச்சு அப்பறம் ஒன்னு இரண்டு அப்படின்னு ஒரு நாளைக்கு மூணு நாலு பேக்கட் வரைக்கும் பிடிச்சு இருக்கேன். "

"அப்படியா......!!!!"

"ஒரு நிமிஷம்" அப்படின்னு சொல்லிவிட்டு, பூரி இன்னும் இரண்டு கிள்ளு கிள்ளி சென்னா மசாலா வில் மொக்கி மூக்கு க்கும் மோவாக்கட்டைக்கும் நடுவே உள்ள மத்யப்ரதேசமான வாய்வாகாசத்தில் அதாவது வாய்க்குள் தள்ளினார்.

நான் வைட்டினேன்.

அவர் தொடர்ந்தார்.

"இரண்டு வருசத்துக்கு முன்னாடி மேல் வயற்றுளே நடுவா கொஞ்சம்
ஜாஸ்தியா கூட இல்ல. லேசா ஒரு வலி,  தானா சரியாகிடும் அப்படின்னு தான் இருந்தேன். "

"அப்பறம்...."

"பெட்டர் ஹாப் தொல்லை தாங்க முடியல்ல...டாக்டர் கிட்ட போ. போ அப்படின்னு உயிரை வாங்கிட்டா.....போதாக்குறைக்கு ஒரு நாளைக்கு
இராத்திரி இரண்டு மணிக்கு திடீர் னு ஒரு சுருக் சுருக் அப்படின்னு ஆரம்பிச்சது பளீர் பளீர் னு வலி,.... ஆ..ஊ அப்படின்னு சத்தம் போட்டுட்டேன். "

"அப்பறம் ??"

"பார்யா இனிமேயும்  பொறுக்க கூடாது அப்படின்னு அவளே முடிவு எடுத்து, அப்பல்லோவுக்கு போன் பண்ணி ஆம்புலன்ஸ் வந்துடுத்து. "

"அடடா..."

"அங்க போனா, எதுனாச்சும் மாத்திரை தந்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று பார்த்தால்,

பைன் கில்லர் இன்ஜக்ஷன் போட்டு இருக்கோம். ஒரு நாள் அப்சர்வேஷன் என்று ஆரம்பிச்சாங்க..."

அப்பறம் ?


"நெக்ஸ்ட் டே, ப்ளட் டெஸ்ட், ஸ்கான், எக்ஸ் ரே, அப்படின்னு வேற உயிரை எடுத்தாங்க..."

"அத எடுத்தா உயிர் எப்படி போகும்! "

"ஆஸ்பத்திரி லே சிகரெட் குடிக்க கூடாது அப்படின்னு 144. நான் என்ன பண்ணுவேன் !! எப்படா வீட்டுக்கு வருவோம் அப்படின்னு ஆகிடுத்து. !"

"நெக்ஸ்ட் ?"

"ஒரு மூணு நாளைக்கு அப்பறம், கிட்னி லே ஒரு சின்ன ஸ்டோன் இருக்கு. ஆனா அது ஒன்னும் பெரிசா தொல்லை கொடுக்கிற மாதிரி இல்லை.." அப்படின்னாங்க..

"பின்னே ஏதுவாம்."

"உங்க ப்ராப்ளம் வேற.. சோடியம் பொட்டாசியம் லெவல் டில்ட் ஆயிடுத்து. அதை முதல் லே சரிபடுத்தனும் " அப்படின்னு...

"என்ன செஞ்சாங்க...?"

"ஒன்னும் செய்யவேண்டாம். சிகரெட்டை நிறுத்தணும் அப்படின்னு .."

"சரின்னு சொல்லி நிறுத்த வேண்டியது தானே !"

"என்ன சுவாமி, நீரும் அந்த டாக்டர் மாதிரியே பேசறீர்கள் ?"

"சரி சொல்லுங்கோ. மேலே என்னாச்சு..?"

"நீங்க எந்த மருந்து, மாத்திரை இன்ஜக்ஷன் போடுங்க, கொடுங்க..ஓ.கே. "
ஆனா சிகரெட்டை மட்டும் நிறுத்த முடியாது அப்படின்னு தீர்மானமா சொல்லிட்டேன். "

"கொஞ்சம் குறைச்சுக்கலாமே ! " என்றேன்.

"எதுக்கு ? எதுக்குன்னு கேட்கறேன் ...தொடர்ந்துசிகரெட் பிடிச்சா செத்து போயிடுவே அப்படிங்கராக...."

"சரிதானே ! "

"என்ன சரிதானே !!....யார் செத்து போயிடுவார் ?

"நீங்க தான்..."

"நீங்கன்னு மொட்டையா சொன்னா எப்படி ? "

"வேற எப்படி சொல்றது ?"

"நீங்க அப்படின்னு சொல்றது இந்த உடலையா இல்ல இந்த உடல் லே இருக்கிற ஆத்மாவையா ?"

வசமா மாட்டிக்கிட்டோம் என்று நினைத்து, எழுந்து விடுவோமா என்று பார்த்தேன்.

"எங்கே போறீங்க...? என்னை வீட ஒரு பத்து வயசாவது பெரியவரா இருப்பீர்கள் இல்லையா..?"

"ஆமாம். எழுபத்தி அஞ்சாறது. "

"இன்னும் எத்தனை வருஷம் இருக்க முடியும் ?"

"நானா ?  நீங்களா ?"

"இரண்டு பேருக்குமே ..."

"அஞ்சுலேந்து அம்பது கூட முடியும். இருந்தாலும் சாகத்தானே வேண்டும்."

"எப்படியும் இந்த உடல் சாகப்போறது. தெரிஞ்ச விஷயம் தானே ! அத என்ன புதுசா இந்த டாக்டர் சொல்றது. ?"

"அவர்களுக்குத் தெரிஞ்சதை அவர்கள் சொல்கிறார்கள். !"

"நான் எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன். "

"என்ன ?"

"இந்த உடல் போனா இன்னொண்ணு ...உடல்....  ஆத்மா நிரந்தரம் இல்லையோ ?"

"அதுக்காக...!!"

"அது பேச்சு அல்ல. இருக்கறவரை அதாவது இந்த உடம்பு இருக்கறவரை, மனசுக்கேத்த சாப்பாடு, சிகரெட்...!!...இது இல்லாம, இருந்து என்ன இல்லாம போயி என்ன ?"

"இது தர்க்கம் வேற விதமா இருக்கே ! " அப்படின்னு சொல்லும்போதே அவர் அந்த பையை திறந்து பெரிய ஹார்லிக்ஸ் டப்பா சைசில் ஒரு மருந்து டப்பாவை காண்பித்தார்.

"பாருங்க...சோடியம் பாலிஸ்ரென் ஸல்பேட்  பவுடர் ..நாப்பது நாள் சாப்பிடுங்க பார்க்க்கலாம் அப்படின்னு அந்த டாக்டர் சொன்னாங்க..."

"சாப்ப்பிட்டீங்களா?"

"இன்னிக்கு திரும்பவும் ப்ளட் செக் பண்ணினப்ப பொட்டாசியம் இன்னமும் 7 லே தான்  இருக்காம். 5 க்கு வரணுமாம். இன்னும் 40 நாள் சாப்பிட்டு வாங்க அப்டின்னாக."

சரி என்று சொல்லிவிட்டு, டப்பாவைப் பார்த்தேன். என்ன விலை என்று கண்ணில் பட்டது. ரூ. 1950 . 200 கிராம்.  ஒரு நாளைக்கு 50 கிராம்.

(மனசு சொல்லித்தந்தது. 4 நாளைக்கு 2000 ரூபா. 30 நாளைக்கு கிட்டத்தட்ட 15000 க்கு மேலே ஆகிவிடும் . அதுவும் இந்த மருந்து அப்பைக்கப்ப பொட்டாசியம் லெவலை கண்ட்ரோல் பண்ணும். விட்டா திரும்பவும் அது எகிரிக்கும்.  என்ன போச்சு !! கையிலே காசு இருக்கு. வாங்கலாம் ) ஹைப்பர் கலீமியா என்று சொல்லப்படும் இந்த வியாதி இதை பற்றி மேலும் படிக்க இங்கே செல்லவும்.}

"என்னவா இருக்கீங்க? இல்ல இருந்தீங்க..?" என்றேன் பேச்சின் திசை திருப்ப எத்தனித்தேன்.

"நான் எங்க வேலை பார்த்தேன்.  அப்படி இப்படி அப்பப்ப ரியல் எஸ்டேட் பிசினஸ் கான்வாஸிங். இப்ப ஒன்னும் கிடையாது. சுக ஜீவனம்...." 

என்று சொல்லி அழகாக சிரித்தார். அந்தக் காலத்து ஜெமினி கணேசன் போன்ற ஒரு வசீகரித்த தோற்றம் இன்னமும் முகத்தில் ஒட்டிக்கொண்டு இருந்தது. அதே சமயம், பல் செட் பளிச் என்று க்ளார் அடித்தது.

வசீகரா என்று மயங்கி போன கேஸ் போல இருக்கு. அந்தக் காலத்திலேயும் !!

"அதுலே இன்கம் எல்லாம் எப்படி ?"

ஹா..ஹா அப்படின்னு சிரித்தார்.  இன்கம் அப்படின்னு பார்த்தா என் சிகரெட் செலவில் கால் பங்கு கூட வராது. வந்ததும் இல்ல.  பார்யாளோட தோப்பனார் தானே புரொப்ரைட்டர். !! சம்பளம் அப்படின்னு கிடையாது. என்ன வேணுமோ ....தந்துண்டு தான் இருந்தார். அவர் இருந்த வரைக்கும்..."

"பின்னே இப்ப இந்த சிகரெட் மருந்து டாக்டர் பீஸ் எல்லாம் ? இன்சூரன்ஸ் இருக்கா?"

திரும்பவும் ஹா ஹா ஹா என்றார். பக்கத்து பெஞ்சில் இருந்தவர்கள் கூட திரும்பி பார்த்தார்கள்.

"எல்லாம் பார்யாள் உபயம் . வாஸ்தவமா , கல்யாணம் முடிஞ்ச அடுத்த நிமிஷமே எனக்கு அவ அப்பா கம்பெனி லே ஒரு வேலையும் வாங்கித் தந்துட்டா.!! "

திகைத்து ப்பார்த்தேன். பொண்ணையும் கொடுத்து வேலையும் கொடுத்தாரா !! "ஹி இஸ் க்ரேட். "

"அவர் இருந்த வரைக்கும் வேலை இருந்தது. அவர் போனப்பறம் கம்பெனியும் இல்லை. வேலையும் இல்லை. "

"புரியல்லயே !"

"அதனாலே என்ன ? அவ பாங்கில் பெரிய ஆபீஸரா போயி, இருந்து ரிட்டையர் ஆயிருக்கா . ஸோ , பென்சன், இன்சூரன்ஸ் எல்லாம் கன்டின்யூ  ஆர்ரதே ! ......"  இரண்டு செகண்டு கழிந்த பின்னே தொடர்ந்து " எனக்கும் தான் .எனக்கு பாக்கெட் மணி அப்படின்னு நாளைக்கு 200 ரூபா. சம் டைம்ஸ் 500 ரூபா .மேற்கொண்டு நான் எப்பவுமே கேட்டது இல்ல. "

"லக்கி யூ ஆர்.  "  என்று பொறாமையுடன் சொன்னேன். அதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேணும்டா என்று மனசு சொல்லியது.

மனைவி அமைவதெல்லாம் .....
கண்ணதாசா யூ ஆர் க்ரேட் !!


என்று நினைத்துக்கொண்டேன்.

கைகளை கழுவிக்கொண்டு திரும்பி வந்தார்.

"நீங்க யாருன்னே தெரியாது.  இருந்தாலும் எடுத்த எடுப்பிலே உங்க கிட்ட நிறைய விஷயங்கள் சொல்லிட்டேன்.  ஒன்னும் தப்பு இல்லையே ..."

"இதுலே என்ன தப்பு இருக்கு ?"

"ஆத்மார்த்தமா யார் கிட்டயாவது மனசை கொட்டி பேசணும் இல்லையா..?"

"ம்..."

"சாப்பாடு கிடைச்சுடறது..மருந்து கிடைக்கிறது. நான் சொல்றதை கேட்கிறதுக்கு ஆள் கிடைக்கலையே ! மனசு திறக்கலேயே !!"

"புரிகிறது."

"ஒன்னும் மனசிலே வெச்சுகாதீ ங்க..."

நான் காப்பி சாப்பிட்டு முடித்து இருந்தேன். எழுந்தேன்.

" பில்லை நான் பே  பண்ணிடறேனே ..." கையை நீட்டினார்.

" பரவா இல்லை. நான் பில் வாங்கிண்டு தான் வந்தேன். "

"அடுத்த தரம் நீங்க வரும்போது நான்தான் கொடுப்பேன்.டுமாரோ பி ஸ்யூர் யூ ஆர் ஹியர். 
 அது சரி உங்க பெயர் ...?"

சொன்னேன்.

"என் பெயர் அனந்த சயனம் "

"ஆனந்த சயனம்  அப்படின்னு இருந்தா இன்னமும் பொருத்தம். .

என்னோட ஆசிர்வாதம் ப்ளஸ்ஸிங்ஸ். ' என்றேன்.


சனி, 18 ஜூன், 2016

முட்டாள்


கோபம் வந்தால் மற்றவர்களை முட்டாள் என்று திட்டுவதை பார்க்கிறோம்..

தம்முடைய கருத்துக்களை ஒத்துப்போக முடியாதவர், புரிந்து நடக்காதவர் எல்லாருமே முட்டாள் என்று தான் பலர் நினைக்கின்றனர் போலும்.

உலகத்தோடு ஒத்துப்போகாதவனைச் சில சமயம் முட்டாள். சரா சரி பொது அறிவு இல்லாதவனையும் அறிவிலி என்று சொல்கிறோம்.

நேற்று, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலே அறிவு பூர்வமான ஒரு கேள்வி கேட்டார்கள். நான்கு படங்கள் விஜய் நடித்ததாம் . எந்த வருஷத்தில் வெளியிடப்பட்டது என்று பழைய படம் முதல் கூறு.

இந்த சினிமா பற்றிய அறிவில் நான் சுத்தம். இது கூடவா தெரியல்ல என்னும் விதமாய் என் மனைவி என்னைப் பார்ப்பது போல் தோன்றியது.

முட்டாள்தனம் என்பதை அறிவு என்பதற்கு எதிர்ப்பதம் என்று எடுத்துக்கொண்டால், அறிவு என்பதற்கு ஆயிரம் இலக்கணங்கள் இருக்கின்றன.ஆக,  அதை விட முட்டாள் தனத்தை விளக்குவதே அறிவு என்று நினைத்தேன்.

முட்டாள்தனம் என்பது ஒரு குறிப்பிட்டு எக்ஸ் என்று சொல்ல இயலாது.
ஏன் எனின் அது ஒரு ஸ்பெக்ட்ரம்.

0 லெந்து 100 வரை ஒரு  வானவில் மாதிரி ஒன்று வரைந்தால், நாம் எல்லோருமே ஏதாவது ஒரு புள்ளியில் இருக்கத்தான் செய்வோம் என்று தோன்றுகிறது.

என்ன ! நான் கொஞ்சம் நூற்றுக்குப் பக்கத்திலே இருப்பேன். இருந்தாலும் செண்டம் இல்லை.



கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட ஒரு  நிகழ்வு நேற்று.

நான் வங்கியில் இருந்து வந்து கொண்டு இருந்தேன். என்னை அதி வேகத்தில் க்ராஸ் செய்த ஒரு மினி மாருதி கார் திடீர் என்று பிரேக் அடித்து க்ரீஈச் என்ற சத்தத்துடன் நிற்க,

அந்த கார் முன்னே ஒரு மூன்று வயதுக்குழந்தை ஏதும் அடிபடாமல் தப்பியது ஆச்சரியமாக இருந்தது. ஆண்டவன் கருணை .

அந்தச் சிறுவன் வெகு அழகாக டிரஸ் செய்து கொண்டு, வீதியின் ஒரு  சாரி யில்  இருக்கும் மினி ஹாலில் இருந்து எதிரில் இருக்கும் கல்யாண மண்டபத்திற்கு அப்பா கையை விட்டு விட்டு ஓடி இருக்கிறான்.

அவனது அப்பா அவனைப் பிடிக்க வருமுன் சாலையில் இந்த அமக்களம் நடந்து விட்டது.

எல்லோரும் அந்த அப்பாவை முட்டாள் என திட்டாத குறை.

****

நீதானே ஏமாந்து போனாய் !!

சின்ன வயதில் நாம் எல்லோரும் கேட்ட சிங்கம் நரி, கதை. சிங்கத்தை கிணற்றுக்குள் இன்னொரு சிங்கம் இருக்கிறது என்று பார்க்கச் சொல்லிக் குதிக்க வைத்த நரி, சிங்கம் கதை.
சிங்கம் முட்டாளா ? குள்ள நரி புத்திசாலி யா ?

******

இதை  பாருங்க.. இப்படி ஸ்கூல் பசங்க அபாயகரமா புட் போர்டில் பிரயாணம் செய்வது எவ்வளவு முட்டாள் தனமாக இருக்கிறது !
வாயை தொறந்து எதுவும் சொல்லிடாதீங்க. வி ளையாட்டுப்புள்ளைங்களா  இருக்கிறார்களே என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.
ஆனால்,முட்டாள்தனம் என்று சொல்லி  அடி வாங்க வேண்டாம்.

அவசர அவசரமாக அமேசான், பிலிப் காரட்டில் வணிகம் செய்து, பின் பொருள் வந்த பின்னே பிரித்து பார்த்தால், நாம் எதிர்பார்த்தது இல்லையே என்று நாமே நம்மை கடிந்து கொள்வதும் ஒருவகை மு............தனமோ ?
வாக்யூம கிளீனர் ரூ 300 தானே என வாங்கிவிட்டு, அந்த பார்சலை உடைத்துப் பார்த்தால் வெறும்  பொம்மை டாய். அகத்துக்காரி வந்து  பார்க்குமுன் அதை பரணியில் வைத்தது என் புத்திசாலித்தனம்.  சரிதானே !

முகநூல் இன்று முழுக்க முழுக்க மூழ்கடித்துக்கொண்டு இருக்கிறது.
அதை அரசாங்கம் சொல்லி  அந்த முக நூல் நிறுவனமும் மூடி விட்டால் ஐம்பது விழுக்காடு இளைஞருக்கு  பைத்தியம் தெளிந்து விடும் என்று சொல்கிறார்கள். ஆனால், அதே சமயம் மிச்சம் ஐம்பது விழுக்காடு நபர்களுக்கு   பைத்தியம் பிடித்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.


முக நூலில் தம் முகத்தையே காட்டாது வேறு யாரோ ஒருவர் முகத்தை பார்த்து அவர் சொல்வதெல்லாவற்றையும் நம்பி பின் மோசம் போன கதைகள் கேட்கக் கேட்க பரிதாமாக இருக்கின்றன.அவர்களை மோசம் போனவர்கள், நம்பி ஏமாந்தவர் என்பதா? இல்லை மு.............என்பதா?

எனக்குத் தெரிந்த ஒருவர், அமெரிக்க வாழ் நண்பி  கடந்த 8 ஆண்டுகளாக, தினம் தனது  செலஃபீ புதிய படத்தைப் போடுகிறார்.

அதற்கு நான் லைக்ஸ் போட வில்லை என்றால் நான் மு......   !!!!

"ஏண்டா ! இது வரைக்கும், 238 பேர் லைக்ஸ் போட்டு இருக்காங்களே ! அவங்க எல்லாம் மு......?"

என்று கேட்டாலும் கேட்பார்கள்.
எதற்கு வம்பு என்று நான் லைக்ஸ் போட்டு விடுவது வழக்கம்.



மாறி வரும் உலகத்தில் மாறாது இருப்பது மு.........  ?

பார்க்கப்போனால், நேரத்தில் காட்ட வேண்டிய சுறுசுறுப்பை வெளிப்படுத்தாது இருப்பதும் முட்டாள் தனம்  ?


எனக்கு ஒரு நேரம் என்று பதிவு செய்து விட்டு, நான் வர இயலவில்லை என்றும் தகவல் சொல்லவில்லை என்று என் மேல் கோபம் கொண்டு என்னை மேலதிகாரி முட்டாள் என நேரடியாகச் சொல்லாமல்,  முட்டாள் தனமாக இருக்கிறாயே என்று கடிந்து கொண்ட காலம் இருந்திருக்கிறது. 


தேவ காந்தாரி ராகத்தை ஆரபி என்று சொல்லப்போய், ஞான சூன்யம் என்று பெயர் வாங்கினது இன்னும் நினைவை விட்டுப்போகவில்லை. பாட்டு என்ன கேட்கறீர்களா? கேளுங்கள்.: ஏரிக்கரையில் போறவளே பெண் மயிலே 


ஒவ்வொரு வீட்டுக் குடும்ப வாழ்க்கையிலும் வெளியிலே சொல்ல முடியாத பல முட்டாள் தனமான செயல்கள் நடக்கத்தான் செய்கின்றன.

சிலவற்றை மட்டும் சொல்லலாம். 

வீட்டுக்கு மளிகை பொருட்களே வாங்காத அந்தப் பழக்கம் இல்லாத ஒரு நண்பருடன் மளிகை  கடைக்குச் சென்று இருந்தேன். அவர் , கடைக்காரரிடம் கடுகு வேண்டும் என கேட்க, அவர் எத்தனை என்று கேட்டார். இவருக்கு அதற்கு பதில் தெரிய வில்லை.  ஒரு கிலோ கொடுங்கள் என்று சொல்ல, அந்த கடைக்காரர் அவரை பார்த்த விதம் ரசிக்கும்படியாக இருந்தது. 

என்ன கடுகு ஒரு கிலோ வாங்கி இருக்கிறீர்கள் என்று போகும்போது கேட்டு விட்டேன். அதற்கு அவர், நேற்று நான் அரிசி அரைக்கிலோ வாங்கி சென்றேன். என்ன இது அரைக்கிலோ ? இனிமேல் எல்லாமே ஒரு கிலோ வாங்கி வாருங்கள் என்று என் மனைவி சொல்லி இருக்கிறாள் என்றார். 

நிற்க.  

1977 லே ஒரு பெரிய சூறாவளி நாகையில். கடல் நீர் உள்ளே புகுந்தது. மின் கம்பங்கள் எல்லாம் சூறைக்காற்றால் உருக்குலைந்து போன  நேரம்.15 நாட்களுக்குப் பின் தான் மின்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. எங்கள் அலுவலகத்திற்கு மட்டும் வரவில்லை. போன் செய்தால் அதை எடுக்க அந்த அலுவலகத்தில் ஆட்கள் இல்லை போலும். நேரே செல்வோம் என்று சென்று, 
அந்த அலுவலகத்துள் சட் என்று உள்ளே நுழைந்து பெரிய அதிகாரியிடம் ஒரு கால் மணி நேரத்திற்கு எப்படி மின்சாரம் இல்லாததால், எங்கள் தினசரி அலுவல் வீணாகிறது என்று விளக்கியபோது, அந்த அலுவலர் எங்களையே பார்த்துக்கொண்டு இருந்தார். ஒன்றுமே பேசவில்லை. 
அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் கடைசியில் சொல்கிறார். : 
சார் ! இது மின் துறை இல்லை. மீன் துறை. போர்டை படிக்காமல் வந்து விட்டீர்களா ?

இன்னொரு பக்கம் பார்த்தால், அந்த காலம் முதல் இன்றும்,

ஜோதிடம் என்ற பெயரிலே நல்ல இடங்களைத் தொலைத்து தனது பெண்ணின் வாழ்வையும் தொலைக்கும் பெற்றோர் பலரை நான் பார்க்கிறேன். இவர்கள் செய்வது என்ன? 

அந்தக் காலத்துலே "நான் ஒரு முட்டாளுங்க.." என்று சந்திர பாபு பாடல் இன்றும் பிரசித்தம்.

பல கணவர்கள் தமது இல்லாளை முட்டாள் என்று மனசுக்குள் திட்டுவது இல்லவே இல்லை என்று சத்யம் செய்ய முடியாது. 

அதே சமயம் இல்லாள் ஒளிவு மறைவு இல்லாது நேரடியாகவே தனது கரம் பிடித்தவனை, என்ன இப்படி முட்டாள்தனமா செஞ்சுட்டீக என்று சொல்வது வெள்ளிடை மலை. 

என்ன இப்படி எல்லோருக்கும் முன்னாடி ? என்று ஒரு தரம் என்னோட பாஸ் அவரோட சம்சாரத்தை,  (அவளும் அதே ஆபீஸ் லே ஒரு சீனியர் ) கேட்டுட்டார்.  அதற்கு உடனே கொஞ்சம் கூட தயங்காது, அந்த இல்லாள் "நீங்க தானே சத்யம் வத " அப்படின்னு சொன்னீங்க...." அதுனாலே தானே சொன்னேன். என்றாள் . 
மேலும், என்ன,  "அப்ப நீங்க ஒத்துக்கிறீங்களா ?" என்று கேட்கறா . 

"நான் முட்டாள் அப்படிங்கறது தான் நான் உன்னைக் கல்யாணம் பண்னினப்பவே தெரிஞ்சுடுத்தே...அதுலே புதுசா கண்டுபிடிக்க என்ன இருக்கு ?" அப்படி சமாளிக்கிறார் என் பாஸ்.

சமூகப் பார்வையிலே பார்த்தால், 


நாத்திகனுக்கு ஆத்திகன் முட்டாள்.  
ஒரு கருத்தில் முடிவாக இருக்கிறார்கள். 

ஆனால்,
அந்த ஆத்திகர்களுக்குள்ளே பாருங்கள் !!
ஒருவரை இன்னொருவர்  முட்டாள் என்று சொல்லாமல் அநேக வார்த்தைகளில் அலங்கரித்துச் சொல்லும்  உபன்யாச கர்த்தாக்கள் அநேகம். 

அவன் ஒருவனே  ( ஸ    ஏகஹ பிரணவ )என்று வாக்கியம் இருக்கிறதே என்றேன். 
அந்த ஏகம் வேற . எங்க ப்ரணவம் வேற. என்றார்கள். 






  கோவில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்று சுப்ரீம் கோர்ட் வரை சென்ற வாதங்கள் எல்லாமே எல்லோருக்கும் அறிவு பூர்வமாக இருக்கிறதா என்று தெரியவில்லை

யார் அறிவு ஜீவி, யார் முட்டாள் என்ற வாதத்திற்கு எல்லை இல்லை. அறிவை அந்தக் காலத்தில் எடை போட ஐ.க்யூ என்று ஒன்று. அதன் படி பார்த்தால், 150 ஐ.க்யூ வாங்கினவன் 50 ஐ.க்யூ இருப்பவனிடம் வேலை பார்க்கிறான். எமோஷனல் இன்டலிஜென்ஸ் அப்படின்னு நோயல் கார்டனர் கருத்துப்படி பார்த்தால், வாழ்க்கையில் வெற்றி பெற்றவருக்கும் மற்றவருக்கும்  உள்ள வித்தியாசம் அறிவு, முட்டாள் தனத்தை மீறி ஏதோ ஒன்று இருக்கிறது. 

பல சந்தர்ப்பங்களில் கேள்வி கேட்பவன் முட்டாளாகிறான். கேள்வி கேட்பவனைப் புரிந்து கொள்ளாது பதில் அளிக்கும் பலரும் முட்டாள் ஆகின்றனர்.

உலகின் முதல் நம்பர் முட்டாள் இவர்கள் தான் என்று இந்த வலை சொல்கிறது. நல்ல வேளை .. முட்டாள் தனத்தைப் பற்றி எழுவதே முட்டாள் தனம் என்று இவர்கள் சொல்லவில்லை.

முட்டாள், முட்டாள் தனம் இரண்டும் வெவ்வேறு. முட்டாள் என்று பார்லிமெண்டில் சொல்வது தவறு. ஆனால், முட்டாள்தனம் என்று சொல்வது தவறல்ல. இது மக்கள் அவை சட்டத்தின் ஒரு வியாக்கியானம்

நேற்று வங்கியில் ஒரு பெண்மணி அந்த ஊழியரிடம் இரைந்து பேசிக்கொண்டு இருந்தார்.  நான் கவனித்தேன். 
"எப்ப ஏ.டி. எம். லே  கார்டை  சொருகி என்னுடைய பின் போட்டால், என்னை "அலுவலகத்தை அணுகுங்கள் " என்று சொல்கிறது. எனக்கு உயிரே போய் விட்ட்து. " என்றாள் .
"நீங்கள் வரவேண்டியது தானே " என்று அந்த ஊழியர் கேட்கிறார்.
"என்றைக்காவது காரணம் சொல்லும் என்று எதிர்பார்த்தேன் " என்கிறார் அந்த கஸ்டமர். 
பாவம். பொறுமையுடன் அந்த ஊழியர் கணினியைப் பார்த்தார். அவரே சிரித்து விட்டார். "மேடம், ஜீரோ பாலன்ஸ் மேடம் . அதான்.அப்படி சொல்லியிருக்கிறது " என்றார். 

வீட்டுக்கு சென்ற மனைவி கணவனிடம் என்னை ஏன் இப்படி அவமானப் படுத்தி விட்டீர்கள் ? பணம் இல்லாத வங்கியின் ஏ.டி.எம். கார்டை என்னிடம் கொடுத்து என்னை முட்டாள் ஆக்கி விட்டீர்கள் என்றாராம். அதற்கு அவர் கணவர், "உனக்கு ஏ.டி. எம் கார்டு பயன்படுத்துவது என்பது நன்கு புரியும் வரை பொறுத்திருந்தேன். அவ்வளவு தான் " என்றாராம். 

வங்கிகளின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு எல்லையே இல்லை. ஜீரோ பாலன்சில் ஒரு கணக்கு துவங்கலாம் என்று சொன்னவர்கள் அதில் பணம் போடவேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை.  என் நண்பர் ஒருவருக்கு சராசரி யாக கணக்கில் இருக்கவேண்டிய தொகை இல்லை. அதனால், அபராத தொகை ரூ. .....உடன் செலுத்தவும். என்ற ஈ மெயில் .
பாவம். நூறு ரூபாய் செலுத்திய பின்னும் பாலன்ஸ் 0. 

ஒரு நாற்பது வருடம் முன்னாடி எனது நண்பர் ஒருவர் ஒரு ஆங்கில படத்திற்கு அடிக்கடி போய்க்கொண்டு இருந்தார். திருச்சி பிளாசா தியேட்டர் . 
"என்ன அப்படி என்ன இருக்கிறது அந்த படத்தில், வாரத்திற்கு இரு தடவை போய் பார்க்கிறாய்" என்று ஒரு நாள் கேட்டு விட்டேன். 
"உனக்குத் தெரியாது. நீ ஒரு அம்மாஞ்சி.  அதில் ஒரு நிர்வாணக் காட்சி வருகிறது " என்றார்.
"அப்படி ஒன்றும் இல்லையே...ஒரு பெண்  ஆற்றில் இறங்கி விட்டு, தன் 
எல்லா உடைகளையும் தண்ணிக்குள் இருந்த படியே கரைக்கு விட்டி எறிகிறாள் . "
"அங்கே தான் சுவாரசியம் " என்றார் நண்பர். 
"என்ன சுவாரசியம் ? அவள் கரைக்கு வரும்போது தான் நடுவில் பாலத்தில் ஒரு டிரைன் வருகிறது. அவள் வரும் வ்யூவை மறைத்து விடுகிறதே !"

"அதே தான். நீ சொல்றது சரிதான். ஆனால், 
என்னிக்காவது ஒரு நாளைக்காவது அந்த டிரைன் லேட்டா வரும் இல்லையா ? அதனால் தான்...."  
சொல்லி சிரிக்கிறார் நண்பர். 



பார்க்கப்போனால் ஒரு கால கட்டத்தில் நாம் செய்வதெல்லாம் பிற்காலத்தில் முட்டாள் தனமோ என்று தோன்றுவதில் வியப்பில்லை.

உலகத்திலே முதல் ஐந்து முட்டாள்கள் யார் யார்  என்று ஒரு வலை தளம் சொல்லிற்று. அங்கு நான் போய் பார்த்து......நான் எதற்கு சொல்ல...நீங்களே பாருங்கள். 

இதெல்லாம்

இன்று காலை எனது வலை நண்பர் திரு சசி ராமா அவர்கள்
மகாபாரதத்தில் விதுரர் கூறிய மூடர்களின் லக்ஷணங்கள் படித்தது தான். 


பதினேழு (17) வகையான மூடர்கள் யார் யார் என்பதை ஒரு பட்டியல் இட்டு இருக்கிறார். 
இந்த பட்டியலில் நம்மில் கிட்டத்தட்ட எல்லோருமே ஓரிரு இடத்தில் மாட்டுவோம் . அதற்காக நாம் நம்மை முட்டாள் என்று சொல்ல அனுமதிக்க முடியுமா ?





விதுரர் சொன்ன முட்டாள் பட்டியல். 

1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி யடைபவன்.
2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்ப‍வன்.
3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்ப‍வன்.
4)உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.
5) தானத்தைக் கேட்கக் கூடாதவனிடம் கேட்பவன்.
6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டிருப்ப‍வன்.
7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம், பொருளைக் கொண்டு பிழைப்பவன்.
8) பலமில்லாத‌வனாக இருந்துகொண்டு, பலமுள்ள‍வனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.
9) பிறரிடம் இருந்து உதவியோ அல்ல‍து பொருளையோ எதுவாகினும் அதைப் பெற்றுக்கொண்டு, பின் அது தனது 'நினைவில் இல்லையே...' என்று சொல்பவன்.
10) தனது விந்தினை வேறு நிலத்தில் சிதற விடுபவன்... அதாவது பிறர் மனைவியரை அடைபவன்.
11) தனது மனைவியைக் குறித்து அவனே பிறரிடம் தவறாகப் பேசுபவன்.
12) தனது அச்சங்கள் அனைத்தும் தனது மருமகளால் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.
13) மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிட ம் கேலி செய்பவன்.
14) அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.
15) தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.
16) புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அதைத்தானே சொல்லித் தற்பெருமை பேசுபவன்.
17) எதிரிகளிடம் சரணடைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.
ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர் என்று விதுரர் கூறியுள்ளார்.
மகாபாரதத்தில் கௌரவ, பாண்டவர்களின் சித்தப்பா விதுரர் ஆவார். இவர் மதிநுட்பம் மிகுந்த அமைச்சராக தனது அண்ண‍ன் திருதராஷ்டர‌ரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாவார்.
இந்த பட்டியல் இந்த காலத்திற்கு அப்படியே பொருந்துமா ?


வெள்ளி, 10 ஜூன், 2016

இந்த வைரத்தைப் பார்ப்பதே ஒரு வரம்.



இன்னிக்கு காலைலே கணினியைத் திறந்தால் ,
கூகிள் காரர் ஹாப்பி பர்த் டே சொல்றார்.



அதுக்கப்புறம்,
ஹெச்.டி.எப்.சி.
ஐசி ஐசி ஐ மாதிரி கார்பொரேட் 
ஒவ்வொருவரும் 
மேசேஜ் அனுப்பி இருக்காங்க.

இங்கன வந்து பார்த்தா,
நான் எப்பவோ 1987 லே போய் தர்சனம் செய்ஞ்ச 
ஏரி காத்த ராமர் வந்து 
தர்சனம் தரர்றார்.

அது என்ன வால் பைண்டிங் ஆ ? சுவர்லே !!
அற்புதம். 
துளசி கோபால் வலையில் இருந்த படம்.
நன்றி மேடம்.


வாழ் நாள் முழுவதும் மனசிலே 
வச்சிருக்கவேண்டிய சித்திரம்.

தாங்க்ஸ் துளசி மேடம்.



ஸ்ரீ ராம சீதா லக்ஷ்மண அனுமான் கி 
ஜெய் போலோ ஹனுமான் கி. 


இது கூகிள் லேந்து எடுத்த படம்.
ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே
ரகுநாதாய நாதாய சீதாயா பதயே நமஹ. 





அது சரி. இன்னிக்கு 74 முடிஞ்சு 75 துவங்குது. 
யோவ் பெருசு ! உன் வயசு என்ன அப்படின்னு 
யாருனாச்சும் இளவட்டம் கேட்டது அப்படின்னா 
74 சொல்லனுமா 75ன்னு சொல்லணுமா ?

வலை உலகப் பிதாமகராக நான் கருதும் 
புலவர் இராமானுசம் அவர்களை மானசீகமாக 
இங்கிருந்தே வணங்கி அவரது 
ஆசிகளைப் பெற்றுக்கொள்கிறேன். 

நேற்று எனது நண்பர் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த தமிழ் வலை உலக எழுத்தாளர் திரு மோகன்ஜி அவர்கள் என்னைப் பார்க்க  வந்து இருந்தார்.
நேரம் போனதே தெரியவில்லை. ஒரு 2 மணி நேரம்.

+mohan gurumurthy
தன்னைப் பற்றி தன தந்தை என்றோ கூறியதை இன்னமும் நினைவில்
கொண்டு உள்ளார்.

"மோகன் ஒண்ணு பூவோட இருப்பான், இல்லை,  புஸ்தகத்தோடு  இருப்பான்" என்று அவர் அப்பா சொல்வாராம் அவரைப் பார்க்க வரும் நண்பர்கள் அவர் எங்கே எனக்கேட்கும்போது.

உண்மை தான்.

மோகன்ஜி பூவாக மணக்கிறார்.
புத்தகமாக விரிகிறார். மலர்கிறார். மனத்தைக் கவர்கிறார்.
இவரது பெரும் ஆற்றல் தமிழ் வலை உலக ஆழ் கடலுள் அமிழ்ந்து இருக்கும் விலை மதிப்பற்ற முத்து.

இன்னொரு கோணத்தில் இவர் வைரக்கல். பட்டை தீட்ட தீட்டததான் பிரகாசம் எனச் சொல்வர்.
இவரோ பட்டை திட்டப்படாத வைரக்கல். இருந்தும்  இவர் பிரகாசத்திற்கு
ஒரு அளவில்லை.

நல்முத்தை நாடுபவர்க்குத்தானே அதன் பெருமை அருமை தெரிய வரும்.!
இந்த வைரத்தைப் பார்ப்பதே ஒரு வரம்.  

அந்த ஏரி காத்த ராமர் தந்த வரமோ !

இவரை நான் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பே சந்தித்திருந்தால் இலக்கிய உலகில் நான் சென்ற வழி வேறு மாதிரி இருந்திருக்குமோ ?

அவர் விடை பெற்று சென்ற பின்
ஜெயமோகன் அவர்களே என் வீடு தேடி வந்தாரோ என்ற ஒரு பிரமை.

உண்மை.

நான் பெரிதும் விரும்பிப் படிக்கும் வலைத் தளங்கள் சிலவற்றில் சுந்தர்ஜி பிரகாஷ் இவரது சிஷ்யராம். திவாஜி (அதான் ஆன்மீக பதிவாளர்) இவருக்கு சின்ன வயதிலேந்து தெரிந்தவராம்.


புத்தக கண்காட்சியைப் பார்த்துவிட்டு அவரது கருத்துக்களைச் சொன்னார்.





அவர் சென்ற பின்பு தான் நினைவு வந்தது.
எனது மருத்துவர் அவர்களைச் சந்திக்கவேண்டும் என்று.

அவசர அவசரமாக ஓலா டாக்சி க்கு புக் செய்தேன்.
ஷார் டாக்சி தான் கிடைத்தது.

அதில் எனக்கு முன்பேயே ஒரு நபர்.
நானும் அவர் செல்லும் வழியிலே .அதனால் என்னையும் எற்றிக்கொண்டனர்.

ஏறும்போதே கார் வாடகையைத் தரவேண்டுமாம்.
ரூபாய் 114 தான். தனி மினி எடுத்தால் 300 ஆகும்.

வழி நெடுக ஒரு நடந்த கதையைச் சொல்லிக்கொண்டு வந்தார்
கூட வந்தவர்.

தொடரும்.