ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

மயக்கமா வருதோ !!

ஒரு இரண்டு மணி நேரம் மனசுக்கு ஒய்வு கொடுக்கணும், உபயோகமா எதுனாச்சும் கத்துக்கணும் அப்படின்னு நினைத்த உடனே எனக்கு ஸ்வாமினி சொற்பொழிவு இன்று தான் என்று ஞாபகம் வந்தது.

அவசர அவசரமாக ஆடோ பிடித்துக்கொண்டு சரியான நேரத்துக்கு போய் சேர்ந்து விட்டேன்.

ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா அவர்களின் உபன்யாசம் நடந்து கொண்டு இருந்தது.  இடம்; பாண்டி பஜார் கேசரி பள்ளி.

உபதேச சஹஸ்ரீ என்னும் ஆதி சங்கரரின் அற்புத இலக்கிய படைப்பில் இருந்து மக்கள் உள நலம் அடைய , உள்ள அமைதி பெற என்ன வழி என்பதை சொல்லும் சொற்பொழிவு.

"ஆன்மா சூட்சுமம் ஆனது. ஆகையால் அது மனதுக்கும் சொல்லுக்கும்  அப்பாற்ப்பட்டது"

sookshmaikaagocharebhyascha na lipyatha ithi sruthe:(16-58)

உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த போது ,
பூஜை வேளையில் கரடி போல, செல் பெல் அடித்தது.
செல்லை ஆப் பண்ணி வைக்க மறந்து போய் விட்டேனே என்று என்னை நானே நொந்து கொண்டு
யார் எனப் பார்த்தால் என் இல்லத்தரசி தான்.

என்ன இருக்கும்? சாதராணமாக, நான் வெளியில் சென்றால், திரும்பி எப்போது வருவேன் என்றோ, சென்ற பின், எங்கே இருக்கிறீர்கள், எப்ப வருவீர்கள் என்று என்றுமே செல் அடித்து பேசாதவள்,

இப்போது செல் அடிக்கிறாள் என்றால் ஏதாவது மிக முக்கியமாக இருக்கும் என்று செல்லை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு  வெளியே சென்று,

என்ன விஷயம் !! என்று சன்னமா கேட்டேன்.

பெரிசா ஒண்ணும் இல்ல. நான் இப்ப சாப்பிடவேண்டிய பிளட் ப்ளசர் மாத்திரை ஒண்ணு கூட இல்ல. தீர்ந்து போச்சு. வாங்கிண்டு வாங்க..

சரி.. என்ன பேரு ?

தெரியாதே !

அந்த டாக்டர் சீட்ட எடுத்துப் பாரேன்.

டாக்டர் சீட்டா ? அப்படி ஒன்னு நான் பார்க்கவே இல்லையே...

எந்த டாக்டர் ன்னாவது நினைவு இருக்கா?

தெரியலையே !!  சித்ராவா, ஜெயச்சந்திரனா, ரங்கராஜனா ???

சரியாப்போச்சு.. உனக்கு இதெல்லாம் ஞாபகம் வெச்சுக்க முடியாதா ?
என்ன தான் அப்ப உனக்கு ஞாபகம் இருக்கு. சொல்லு..

நிசமாவே, எதோ நீங்க கொடுக்கறீங்க..நான் சாப்பிடறேன். அதத் தவித்து
மத்த எதுவுமே எனக்குத் தெரியாது.

அப்ப உனக்கு எது தான் நினைவு இருக்கு ?

தெரியல்லே..

நான் கேட்கறேன். சொல்லு.

சரி.

சூப்பர் சிங்கர்லே வைல்ட் கார்டு லே யாருக்கு ஒட் போட்டே ?


சௌம்யா, லதா, ஆனந்த், அரவிந்த், லக்ஷ்மி,

மண் வாசனை லே யாரு முதல் ஹீரோயின் ? கதா நாயகி ?

ஆனந்தி.

சரவணன் மீனாச்சி லே மீனாச்சி யா நடிக்கிறது யார்?

ரக்ஷிதா மகாலட்சுமி தினேஷ்.    இப்பதாங்க அவங்களுக்கு ரியல் லைப் லேயும் கல்யாணம் நடந்துச்சாம்.

விஜய் சேதுபதி நடிச்ச லேட்டஸ்ட் படம் என்ன ?

சேதுபதி.  

நயனதாரா, த்ரிஷா இப்ப வயசுலே  யாரு மூத்தவரு?

த்ரிஷா தான். 32 . சந்தேகம் இருந்துச்சுன்னா இங்கே பாருங்க. 

விஜய் டி.வி லே இப்ப ஒரு ஆங்கர் நடிகர் ஆராரு . அது யாரு ?

என்னங்க..இது கூட தெரியாதா...ம.க.ப .  நவரச திலகம் அப்படின்னு ஒரு படத்துலே . இங்கே பாருங்க.



6  மணிலேந்து 11 மணி வரைக்கும் இந்த டி வில் அப்படி என்ன தான் சீரியல் பார்க்கிறே?

முதல்லே மண் வாசனை. அப்பப்ப பூவிழி வாசலிலே. அப்பறம் கல்யாணம் முதல் காதல் வரை. பின்னே சரவணன் மீனாக்ஷி, அதுக்குப்பறம் சூப்பர் சிங்கர்.
அதுக்கப்பறம் சீதையின் ராமன்.  

நடு நடுவே அட்வர்டைஸ்மென்ட் வருதே !!

அது வரும்போது தான் நான் பூஜை அறைக்கு போயி, ஸ்ரீ ராம ஜெயம் சாமிக்கு மணி அடிக்கிறது, 

மாத்திரை சாப்பிடறது,     ராத்திரி இட்லி, இல்லேன்னா  சப்பாத்தி அதெல்லாம்.நீங்க செஞ்சு கொடுக்கறது தானே !!

இதெல்லாம் தெரியுது. நீ சாப்பிடற B,P  மாத்திரை என்னனு தெரியாதா ?

அது உங்களுக்குத் தானே நினைவு இருக்கணும் !! உங்க டிபார்ட்மெண்ட் வேலைய என் தலைலே எதுக்காவ கட்டரீங்க...???

தலை சுற்றியது. கீழே விழுந்துவுடுவோமோ...!!
பக்கத்தில் இருந்த ஒருவர் பிடித்துக்கொண்டார்.

"உட்கார்ந்து பேசுங்க சார் ! மயக்கமா வருதோ !!" என்றார்.

மயக்கம் வந்தது.  ஆனால் இப்போ, தெளிந்து விட்டது 
கணவனின் கடமை என்ன என்று புரிந்தது.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் அளித்த வரம்.

கண்ணதாசன் எழுதிய அர்த்தம் புரிந்தது.
கண்ணதாசா !  யூ ஆர் ரியலி க்ரேட்.
****************************
************************
*****************
திடீர் என்று ஆஹா ! உபன்யாசம் கேட்க வந்ததை மறந்து போனோமே ! என்று ஹாலுக்கு உள்ளே நுழைந்தேன்.

ஸ்வாமினி அதே ஸ்லோகத்தில் தான் இன்னமும் வியாக்யானம் அளித்துக் கொண்டு இருக்கிரார்கள்.

:எது பரிசுத்த ஆன்மா வோ அது மனம், சொல், இவற்றிக்கெல்லாம் அப்பாற்பட்டது "என சொல்வதை 

மறுத்துப் பேசும் தர்க்க வாதிகள்  சொல்வர்: 

அப்படியானால், தளை என்று ஒன்றுமே இல்லாதபோது ஆன்மாவுக்கு விடுதலை என்பதே பொருள் அற்றுப்போகிறதே !!

அதற்கு பதில் சொல்லும் ஆதி சங்கரர்: 
"இந்த தளை என்பதே புத்தியின் பிரமை தான். இந்த பிரமை தனை விட்டு விலகுவதே ஆன்மாவுக்கு விடுதலை. 

saasthraanarthakyameva syanna budhdha bhranthirishyathe 
bandho mOkshas cha thannaasaha sa yathokthO na chaanyathaa. (16-59)

யூரேகா ! யூரேகா என்று சத்தம் போட்டுவிடுவேனோ என்று நினைத்தேன்.

அதற்குள் சொற்பொழிவு முடிந்து போக, எல்லோரும் கலைந்து போகத் துவங்கினர்.

எனது அருகில் ஒரு பெரியவர் இன்னொருவரிடம் சத்தமாக பேசிக்கொண்டு செல்கிறார்.

அசரீரி போல என் காதுகளில் பளிச் என்று விழுகிறது.

இந்த உடம்பு, வூடு, எல்லாமே தளை  அல்லது பிரமை என்று நிதர்சனமா தெரிந்தபின்னும் அது நோக்கித் தானே போய்க்கொண்டு இருக்கிறோம்.
இல்ல, அதுக்குள்ளே தானே உழன்று கொண்டு இருக்கிறோம் !!!

செல் அடித்தது.

வந்துகிட்டே இருக்கேன் என்றேன் சகதர்மிணியிடம்.

பந்தம், தளை இவற்றில் இருந்தெல்லாம்  விடுதலை ஆவது என்பதெல்லாம் !!! ஊஹூம். சான்சே இல்லை.



    







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக